பிரெக்சிட் – ஒரு சொதப்பலான கேரியர் (பணி வாழ்வு) நகர்வு

ரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பான 2 கட்டுரைகளின் மொழிபெயர்ப்பை ஏற்கனவே வெளியிட்டிருக்கிறோம்.

  1. ஐரோப்பாவிலிருந்து விலகல் : ஆப்பசைத்த பிரிட்டன்
  2. நெருங்கும் பொருளாதாரம், பிரியும் அரசியல் : முதலாளித்துவ திண்டாட்டம்

மேலே சொன்ன கட்டுரைகளை எழுதிய அதே கட்டுரையாளர் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறிய பிறகு இரு தரப்புக்கும் இடையே சுங்க மற்றும் ஒற்றைச் சந்தை தொடர்பாக எத்தகைய உடன்பாடு இருக்க வேண்டும் என்பதில தொடரும் இழுபறி குறித்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

இந்தக் கட்டுரையில் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதை ஒரு கார்ப்பரேட் கம்பெனியில் உயர் பதவியில், செல்வாக்குடன் பணி புரிந்த ஒரு மேனேஜர் அந்த வேலையை ராஜினாமா செய்வதாக அறிவித்து விட்ட பிறகு, வெளியில் அதற்கு இணையான செல்வாக்குடனும், வசதிகளுடனும் வேறு வேலை கிடைக்காமல் தவிப்பதுடன் ஒப்பிட்டு எழுதியுள்ளார். கட்டுரையின் மொழிபெயர்ப்பு கீழே.

கடந்த 25 ஆண்டுகளாக அமல்படுத்தப்பட்டு வரும் கார்ப்பரேட் உலகமயமாக்கலின் விளைவான வேலை வாய்ப்பின்மை, வேலை இழப்புகள், பொது சேவைகள் ரத்து இவற்றை எதிர்த்து உழைக்கும் வர்க்கம் போராடுகிறது. அதற்கு தீர்வாக இனவாத, மதவாத அரசியலை முன் வைக்கும் கட்சிகள் உழைக்கும் மக்கள் மத்தியில் செல்வாக்கு ஈட்டுகின்றன. அத்தகைய ஒரு நிகழ்வில், 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் 23-ம் தேதி நடைபெற்ற ஒரு கருத்துக் கணிப்பில் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவது 51.9% வாக்குகளை பெற்றது.

ஆனால், ஸ்காட்லாந்தில் 62% வாக்காளர்கள் வெளியேறுவதை எதிர்த்தனர், வட அயர்லாந்தில் 55.8% எதிர்த்து வாக்களித்தனர். கார்ப்பரேட்டுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பெரிய கட்சிகளோ தொடர்ந்து உலகமயமாக்கல் கொள்கைகளை ஆதரிக்கின்றன. ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்வதை உறுதி செய்ய விரும்புகின்றன. இந்த இழுபறியின் ஒரு வெளிப்பாடாக பிரெக்சிட் தொடர்பான நாடகங்கள் அரங்கேறி வருகின்றன.

அட்லாண்டிக் பெருங்கடலின் மறு பக்கத்தில் அமெரிக்க முதலாளித்துவத்தின் பிரதிநிதியாக டிரம்ப் கார்ப்பரேட் உலக மயமாக்கலை கேலிக் கூத்தாக்கி வருகிறார். உலக வங்கி, ஐ.எம்.எஃப், உலக வர்த்தகக் கழகம் வழிகாட்டலில் அமல்படுத்தப்பட்ட உலகமயமாக்கல் தீர்க்க முடியாத முரண்பாடுகளில் சிக்கி, முதலாளித்துவம் நெருக்கடியை எதிர்கொண்டிருப்பதை இவை காட்டுகின்றன.

முதலாளித்துவ உலகம் இதை விவாதிக்க மட்டும் செய்கிறது. இதற்கான தீர்வு பாட்டாளி வர்க்க சித்தாந்தத்திலும், பாட்டாளி வர்க்க அரசியலிலும்தான் உள்ளது.

பிரெக்சிட் – ஒரு சொதப்பலான கேரியர் (பணி வாழ்வு) நகர்வு

ஐரோப்பிய ஒன்றியம் (EU) பிரிட்டனைக் கொடுமைப்படுத்துவதாகவும் தண்டிப்பதாகவும் மிக அதிகமாக கூச்சலிடுபவர்கள் மத்தியில் சுதந்திர சந்தையை ஆதரிப்பதாக சொல்லிக் கொள்பவர்களும் உள்ளனர். இது கொஞ்சம் வேடிக்கையானதுதான். ஏனெனில், பிரெக்சிட் என்பதே பிரிட்டன் தனது சந்தை வலிமையையும் செல்வாக்கையும் நடைமுறையில் சோதித்து பார்ப்பதற்கான நடவடிக்கைதான். அந்த சோதனையின் விளைவாக ஐரோப்பிய ஒன்றியம் நம்மை அலட்சியப்படுத்துகிறது என்றால் சுதந்திர சந்தை விதிப்படி அதை அவர்கள் ஏற்றுக் கொள்ளத்தானே வேண்டும்

பிரெக்சிட்-ஐ நோக்கி நம்மை வழிநடத்திச் சென்றவர்கள், “பிரிட்டன் ஒரு பெரிய சக்தி, உலகின் மிகப்பெரிய வர்த்தக கூட்டமைப்பை விட்டு வெளியேறுவது உண்மையில் நமக்கு இன்னும் அதிக நன்மைகளை கொண்டு வரும்” என்று உறுதி அளித்தனர். அதாவது, “நமக்கு ஏற்கனவே கிடைத்து வரும் நன்மைகளை தொடர்ந்து பெறுவோம்; ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வெளியில் உள்ள மற்ற நாடுகள் நம்முடன் வர்த்தக உடன்படிக்கைகள் செய்து கொள்ள அதிக ஆர்வம் காட்டும்; ஐரோப்பிய ஒன்றியமோ தனது மிகப்பெரிய உறுப்பினர்களில் ஒன்றான பிரிட்டன் வெளியேறுவதைக் கண்டு அஞ்சி, பிரிட்டனுக்கு மிகச் சாதகமான ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டி வரும்” என்றெல்லாம் ஆசை காட்டினார்கள்.

ஆனால், இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர், நடப்பவை அவர்கள் எதிர்பார்த்தது போல இல்லை. இந்த வாரம் அடுத்தடுத்த வெளிவந்த செய்தி அறிக்கைகள் கூறுவது போல, பிரெக்சிட் எந்த வழியில் அமல்படுத்தப்பட்டாலும் அது ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்தபோது இருந்ததை விட மோசமான நிலைக்குத்தான் பிரிட்டனைத் தள்ளும்.

பிரெக்சிட்-டுக்கு பிறகு பிற நாடுகளுடன் போட்டுக் கொள்ளும் புதிய வர்த்தக ஒப்பந்தங்கள் பிரிட்டனின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) மிகச் சிறிய அளவு மாற்றத்தையே கொண்டு வரும் என்று பிரிட்டன் கருவூலத்துறையின் (Treasury) பிரெக்சிட் பற்றிய பகுப்பாய்வில் மிக வெளிப்படையாகவே காட்டப்பட்டுள்ளது. நாம் வர்த்தக ஒப்பந்தங்கள் செய்து கொள்வதற்கு சாத்தியமான நாடுகள் பற்றிய மிகச் சாதகமான அனுமானங்களின்படியே கூட அவை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஏற்படுத்தப் போகும் அதிகரிப்பு 0.2 சதவீதம் மட்டுமே ஆகும். இந்த அதிகரிப்பு ஐரோப்பிய ஒன்றியத்துடனான வர்த்தக உராய்வுகளினால் ஏற்படவிருக்கும் இழப்புக்களை சிறிதளவு கூட ஈடுகட்டப் போவதில்லை.

பிரெக்சிட்டுக்கான அனைத்து பாதைகளும் மோசமாக இருக்கின்றன; ஐரோப்பிய ஒற்றை சந்தையிலிருந்தும் சுங்க ஒன்றியத்திலிருந்தும் நாம் எவ்வளவு தூரம் விலகிப் போகிறோமோ அவ்வளவு தூரம் நிலைமை மோசமாக இருக்கும். பிரெக்சிட் ஆதரவாளர்கள் நம்மிடம் பிரச்சாரம் செய்து நம்ப வைத்ததை விட வெளியுலகம் சிக்கல் நிறைந்ததாகவே இருக்கிறது.

“இது நியாயமில்லை, ஐரோப்பிய ஒன்றியம் நாஜிகளைப் போல நடந்து கொள்வதோடு, ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்காக பிரிட்டனை தண்டிக்கிறது” என்றெல்லாம் பேசுபவர்கள், தனக்கு இதைவிட நல்ல வேலை கிடைப்பதற்கான வாய்ப்பிருக்கிறது என்று நினைத்துக்கொண்டு, வேலையை ராஜினாமா செய்த ஒருவர் தான் எதிர்பார்த்த, தனக்குக் கிடைத்தே ஆக வேண்டும் என்று விரும்பிய, நல்ல வேலை கிடைக்கா விட்டால் குழந்தைத்தனமாக புலம்புவதை போல நடந்து கொள்கின்றனர்.

என்னுடைய அனுபவத்தில் இத்தகைய நபர்கள் பலரை நான் அறிவேன். வேலையை விடும் அவர்களின் முடிவு பெரும்பாலும் சொதப்பலாகவே முடிகிறது. பெரும்பாலானவர்கள் புற உலக யதார்த்தத்தை பார்த்து பெரும் அதிர்ச்சியடைகிறார்கள்.

அவர்கள் புரிந்து கொள்ள மறுப்பது என்னவென்றால், அவர்கள் வாங்கி வந்த சம்பளத்தின் ஒரு பகுதி ஒரு பெருநிறுவன (கார்ப்பரேட்) அமைப்பின் ஒரு பகுதியாக செயல்படுவதற்கானதாகும். ஒரே நிறுவனத்தில் சிறிது காலமாக வேலை செய்தால், அவர்களின் வளர்ச்சியின் ஒரு பகுதி அந்த நிறுவன நடைமுறைகளைப் பற்றிய அவர்களது அறிவையும் அதற்குள் வேலை செய்வதற்கான அவர்களின் திறமையையும் அடிப்படையாகக் கொண்டது.

மற்றவர்கள் அவர்ளுக்கு கொடுக்கும் மதிப்பும் மரியாதையும் அவர்களின் கார்ப்பரேட் பதவியை அடிப்படையாகக் கொண்டது. பிற நிறுவனங்களின் உயர் பதவி வகிப்பவர்கள் அவர்களை சந்திக்க நேரம் ஒதுக்குகின்றனர்; அவர்கள் விமானத்தில் முதல் வகுப்பில் பயணம் செய்கிறார்கள்; கருத்தரங்குகளில் எல்லோரும் அவர்களுடன் பேச முயற்சிக்கிறார்கள். இவை எல்லாம் “ஆள் திறமையானவர்” என்பதால் இல்லை, மாறாக அவர்கள் வேலை செய்யும் நிறுவனத்தின் செல்வாக்கினால் கிடைப்பவை.

கார்ப்பரேட் வேலையை ராஜினாமா செய்து விட்டு தனிப்பட்ட முறையில் வேலை செய்ய போகிறவர்கள் அடிக்கடி இந்த அதிர்ச்சியை சந்திக்கிறார்கள். “பெரிய கார்ப்பரேட்” நிறுவனத்தின் உயர் அதிகாரியாக இருக்கும் போது உங்களோடு தொடர்பை பராமரிக்க எல்லோரும் விரும்புகிறார்கள். “நானும் நண்பர்களும்” நிறுவனத்தின் எம்.டியாகவே நீங்கள் இருந்தாலும் அதே அளவிலான அங்கீகாரத்தை பெறுவது மிகவும் கடினம்.

எனவே, கார்ப்பரேட் நிறுவனத்தில் வேலை செய்து விட்டு வெளியேறிய நமது நிர்வாகி அவர் நினைத்தது போன்ற அதிக சம்பளத்தில் வேலை கிடைப்பது புற உலகில் கடினமாக இருப்பதை எதிர்கொள்கிறார்.

ஆனால், அவர் அந்த நிதர்சனத்தை உடனே ஏற்றுக் கொள்வதில்லை. தனது தகுதிக்கு பொருத்தமில்லாத வேலை வாய்ப்புகள் வழங்கும் முட்டாள்களை பற்றி அவர் குடித்து விட்டு புலம்புவதை நீங்கள் கேட்டிருக்கலாம். “என்னுடைய மதிப்பு இதை விட அதிகம்” என்று அவர் உளறுகிறார். “எனக்கு என் மதிப்பு என்னவென்று தெரியும். அதற்கு தகுந்த வேலை கிடைப்பது வரை நான் காத்திருப்பேன்.”

நாம் ஒப்புக் கொண்டாலும் ஒப்புக் கொள்ளா விட்டாலும் பிரிட்டனின் இன்றைய மதிப்பு ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்திருப்பதோடு தொடர்புடையது என்பதை பிரெக்சிட் முயற்சி வெளிப்படுத்தியிருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வெளியில் இருக்கும் நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்துடனான வர்த்தகத்துக்குத்தான் முன்னுரிமை அளிக்கின்றன. காமன்வெல்த் நாடுகள் கூட, பிரிட்டன் உடனான வர்த்தக உறவுகளை விட ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தக உறவுகளை வளர்ப்பதிலேயே ஆர்வம் காட்டுகின்றன. அதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. ஏனென்றால், பொருளாதார ரீதியாக ஐரோப்பிய ஒன்றியம் பிரிட்டனை விட மிகப்பெரியது.

“நீங்கள் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறினால் உங்களது செல்வாக்கை இழக்க நேரிடும்” என்ற அவர்கள் நம்மை எச்சரிக்கத்தான் செய்தார்கள்.. ஆனால், அவர்களின் எச்சரிக்கையை நாம் புறக்கணிக்க முடிவு செய்தோம்.

இன்றும் பிரிட்டன் உலகின் மிகப் பெரிய பொருளாதாரங்களில் ஒன்று என்பது உண்மைதான், ஆனால், அதன் மதிப்புக்கும் செல்வாக்கும் மேற்கத்திய இராணுவ கூட்டணி, ஆங்கிலம் பேசும் நாடுகள், ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றை இணைக்கும் புள்ளியில் நாம் இருப்பது பெரும்பகுதி காரணமாக உள்ளது. இவற்றில் முக்கியமான ஒரு இடத்தை கைவிடுவது பிறருக்கு நம்முடனான உறவில் இருக்கும் அக்கறையை குறைப்பதில்தான் முடியும்.

பிரெக்சிட்டை வேலையை ராஜினாமா செய்து விட்டு புதிய வாய்ப்பை தேடுபவருடன் ஒப்பிடுவதை மேலும் தொடர்ந்தால் , இதுவரையில் கிடைத்த அனைத்து புதிய வாய்ப்புகளும் பழைய பதவியை விட மோசமாக இருக்கின்றன. எல்லாவற்றிலும் ஏற்கனவே இருந்த வேலையை விட குறைந்த ஊதியம், குறைந்த பாதுகாப்பு மட்டுமே கிடைக்கிறது.

படிக்க:
உங்கள் விருப்பம் | கொஞ்சம் நிமிரு தல | வாசகர் புகைப்படங்கள்
ஆந்திரா – காக்கிநாடா : இயற்கை பேரிடர் ஆபத்தும் அரசின் அலட்சியமும் !

தற்போது உள்ளதில் சிறந்த வழி பழைய முதலாளியிடமே திரும்பிச் சென்று, முன்பு வாங்கியதை விட குறைந்த ஊதியத்தில், காண்டிராக்டராக சேருவதுதான். மேல்மட்ட நிர்வாகக் குழுவில் ஏற்கனவே வகித்த இடம் கிடைக்காது. இன்னும் மோசமான நிலை என்னவென்றால், முன்பு தன்னை விட ஜூனியர் என்று கருதிய நபர்களின் உத்தரவுகளை ஏற்று செயல்பட வேண்டிய நிலையும் ஏற்படும்.

ஆனால், அந்த அளவு கூட நிலைமை மோசம் இல்லை. ஆச்சரியம் என்னவென்றால், அவருடைய பழைய நிறுவனம் இன்னும் அவர் வேலைவாய்ப்பை அப்படியே வைத்திருக்கிறது. அதே ஊதியம், பிற சலுகைகள், நிர்வாகக் குழுவில் இடம் ஆகியவற்றுடன் எப்போது வேண்டுமானாலும் திரும்பிச் செல்லலாம்.

ஆனால், அவர் திரும்பிச்செல்ல மாட்டார், ஏனெனில் அது அவரை ஒரு முட்டாளாகக் காட்டும். அவர் இன்னும் மதுக்கடையில் அமர்ந்திருக்கிறார். இன்னும் கொஞ்சம் தன்னம்பிக்கையையும், பேரம் பேசும் திறமையையும் வளர்த்துக் கொண்டால் அந்த மதிப்புமிக்க பெரும் வாய்ப்பு கூடிய விரைவில் தன்னை வந்தடையும் என்று அடித்து பேசிக் கொண்டிருக்கிறார்.

அவரது நண்பர்கள் அவரது பேச்சுக்களை அனுதாபத்தோடு கேட்டு விட்டு அவருக்குப் பின்னல் கேலி செய்து விட்டு கடந்து போகிறார்கள்.


ஆதாரம் :
Brexit as a bad career move
தமிழாக்கம் : மணி
நன்றி : new-democrats

1 மறுமொழி

  1. இது தமிழகத்திற்கும் பொருந்தும்… தேவையே இல்லாமல் தமிழகத்தில் பிரிவினையை தூண்டிவிடுபவர்களின் பேச்சை நம்ப கூடாது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க