உச்சநீதிமன்றம் என்றைக்கும் கார்ப்பரேட் கம்பெனிக்கு ஆதரவாகத்தான் நிற்கும் ஸ்டெர்லைட் வழக்கிலும் அதுதான் நடந்திருக்கிறது!

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க பசுமைத் தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை அன்மையில் தடை விதித்தது. அதற்கு உச்சநீதிமன்றம் இன்று தடை விதித்துள்ளது. பசுமைத் தீர்ப்பாயம் விதித்த உத்திரவிற்கு தடை விதிக்க கோரிய தமிழக அரசின் கோரிக்கையை மறுத்து விட்டது. இதனால் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கலாம் என்ற நிலை உருவாகி உள்ளது. அதை ஒரு போதும் அனுமதிக்கக் கூடாது.

ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்து தனிச்சட்டம் இயற்றுவதை தவிர வேறு வழியில்லை. கார்ப்பரேட்டுக்கு எதிராக அடிமை எடப்பாடி அரசாங்கம் அதைச் செய்ய வேண்டுமென்றால் மீண்டும் மக்கள் போராடுவதை தவிர வேறு வழியில்லை.

எதிர்ப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை சுட்டுக் கொல்லு!
செத்தவன் குடும்பத்திற்கு சில இலட்சங்களை வீசி எறி!
இதுதான் வேதாந்தா முதலாளி அனில் அகர்வாலின் முடிவு.

நிராயுதபாணியான பொதுமக்களை, பெண்களை தலையில் துப்பாக்கியால் அருகிலிருந்து சுட்டுக் கொன்ற கொடூரம் உலகில் வேறு எங்கும் நடக்கவில்லை. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்காக தமிழக போலீசார் கூலிப்படையைப் போல் செயல்பட்டு பச்சைப் படுகொலையை செய்து முடித்தனர்.

மொத்த தமிழகமே ஸ்டெர்லைட் வேண்டாம் என சொல்லும் போது அனில் அகர்வாலின் இலாபத்திற்காக அது மீண்டும் திறக்கப்படும் என்றால் சட்டங்களும் தீர்ப்புகளும் வாதங்களால் மாறாது, போராட்டங்களால்தான் மாற்றியமைக்க முடியும். கார்ப்பரேட்டுகளை பாதுகாக்கின்ற அதிகார வர்க்கத்தை மக்கள் போராட்டத்தின் மூலமே பணிய வைக்க முடியும்.

தமிழகத்தில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தமிழக மக்கள் அனுமதிக்கக் கூடாது. 14 பேரின் உயிர்த்தியாகம் வீண்போகக் கூடாது.

வழக்கறிஞர் சி.ராஜு,
மாநில ஒருங்கிணைப்பாளர்.



 

இந்த கவுர்மென்டு, கோர்ட்டு எல்லாமே ஸ்டெர்லைட்டோட பங்காளிகள்…
திருச்சி பெரியார் ஈ.வெ.ரா கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!

ஸ்டெர்லைட் செயல்பட விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்த உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பைக் கண்டித்து பெரியார் ஈ.வெ.ரா கல்லூரி மாணவர்கள் கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

”இந்த கவுர்மென்டு, கோர்ட்டு எல்லாமே ஸ்டெர்லைட்டோட பங்காளிகள்… 14 பேரை கொன்றுவிட்டு அதற்கு விசாரணை நடத்தாமல், உயர்நீதி மன்ற மதுரை கிளை உத்தரவை துளியும் கூட மதிக்காமல்  மீண்டும் திறக்க உத்தரவிட்டுள்ளது உச்சநீதிமன்றம். 2 வருடத்திற்கு முன்னால் இன்று தான் தொடங்கியது ஜல்லிகட்டு… அத நினைச்சுட்டு மீண்டும் தமிழகத்தை காக்க ஸ்டெர்லைட்டை விரட்ட தொடங்குவோம்  ஒரு டெல்லிகட்டு.

அரசு ஸ்டெர்லைட்டை மூடாது. ஏனெனில் அது ஸ்டெர்லைட்டின் அடியாள். நாம்தான் மூட வேண்டும். இல்லையனில் அரசை  மூட வைக்க வேண்டும்.” என்ற அறைகூவலோடு இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தகவல்:
ஈ.வெ.ரா. கல்லூரி மாணவர்கள்,
திருச்சி.
9943176246.