விவசாயக் கடன் தள்ளுபடி – இந்த மூன்று சொற்களும் ஆளும் பா.ஜ.க.வை அச்சுறுத்தும் பூதமாக இன்று உருமாறி நிற்கின்றன. ம.பி., இராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களில் காங்கிரசு அரசால் அறிவிக்கப்பட்டிருக்கும் விவசாயக் கடன் தள்ளுபடியை எதிர்கொள்ளும் முகமாக, பா.ஜ.க. ஆளும் குஜராத்தில் விவசாயிகள் செலுத்த வேண்டிய மின் கட்டணம் ரத்து செய்யப்படுகிறது.

விவசாயக் கடன்களை ரத்து செய்யவுள்ளதாக அறிவிக்கிறார், அசாம் மாநில பா.ஜ.க. முதல்வர். தவணை தவறாமல் கடன்களைத் திருப்பிச் செலுத்தும் விவசாயிகளின் விவசாயக் கடன்களுக்கான வட்டியையும் பயிர்க் காப்பீடிற்கு விவசாயிகள் செலுத்திவரும் காப்பீடு கட்டணத்தையும் தள்ளுபடி செய்ய மைய அரசு திட்டமிடுவதாகச் செய்திகள் வெளிவருகின்றன.

எதைத் தின்றால் பித்து தெளியும் என்பது போல, எந்தச் சலுகையை அளித்தால் விவசாயிகளின் ஓட்டுக்களைப் பெறமுடியும் என அல்லாடி நிற்கிறது, பா.ஜ.க.

1991 தொடங்கி 2015 வரையிலான கடந்த 25 ஆண்டுகளில், நாடெங்கும் ஏறத்தாழ 3 இலட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டு மாண்டுபோனதையும் இதற்கு விவசாயிகள் தலையில் ஏறிவரும் கடன் சுமைதான் காரணமென்பதையும் இன்று ஆளுங்கும்பலால்கூட மறுக்கவியவில்லை.

இந்தக் கணக்கில் நிலப்பட்டா தமது பெயரில் இல்லாத குத்தகை விவசாயிகள், பெண் விவசாயிகள், விவசாயக் கூலித் தொழிலாளர்கள் மாண்டுபோனதெல்லாம் சேரவில்லை என்பதையும், 2015-க்குப் பிறகு விவசாயிகளின் தற்கொலைகளைப் பதிவு செய்வதை மோடி அரசு கைவிட்டுவிட்டது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

1991-க்குப் பிறகு அமல்படுத்தப்பட்டுவரும் தனியார்மய – தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகள், மற்றெல்லா துறைகளையும்விட, விவசாயத்தைத்தான் கடுமையான நெருக்கடியில் தள்ளி நாசப்படுத்தியிருக்கிறது. குறிப்பாக, நரேந்திர மோடி அரசு, பாசிஸ்டுகளுக்கே உரிய அதிகாரத் திமிரோடும் முட்டாள்தனத்தோடும் அமல்படுத்திய பணமதிப்பழிப்பு நடவடிக்கையும், ஜி.எஸ்.டி. வரிவிதிப்பும் எரிகிற கொள்ளியில் எண்ணெயை ஊற்றியது போல, விவசாய நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்திவிட்டதை மைய அரசின் விவசாயத் துறையே ஒத்துக்கொண்டு அறிக்கை அளித்துப் பின்னர் அதனைத் திரும்பப் பெற்றுக் கொண்டது.

தம் மீது சுமத்தப்படும் இந்த நெருக்கடிகளை விவசாயிகள் முன்னைப் போல பொறுத்துக்கொண்டு போகத் தயாராக இல்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாகவே நாடெங்கும் தொடர்ச்சியாக நடந்துவரும் விவசாயிகளின் போராட்டங்கள், விவசாய நெருக்கடிக்கு ஏதாவதொரு தீர்வைப் பேசாமல், எந்தவொரு ஓட்டுக்கட்சியும் அவர்களின் வாக்குகளைப் பெற முடியாது என்ற நிலையை ஏற்படுத்தியிருக்கிறது.

விவசாயிகளின் டெல்லி பேரணியில் வெளியிடப்பட்ட அறிக்கையில், விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்வது, குறைந்தபட்ச ஆதார விலையைக் கூட்டித் தருவது மட்டுமின்றி, விவசாயத்தைத் தனியார்மயத்துக்கு ஏற்றபடி சீர்திருத்தும் நடவடிக்கைகளைக் கைவிட்டு, சிறு, குறு, நடுத்தர விவசாயிகள் மற்றும் விவசாயக் கூலித் தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாக்கக்கூடிய கோரிக்கைகளும் கட்டுமானச் சீர்திருத்தங்களும் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. (Manifesto of Indian Farmers, AIKS., Dec.4, 2018)

ஆனால், விவசாயிகளை ஆதரிப்பதாகத் தம்பட்டம் அடித்துவரும் காங்கிரசு உள்ளிட்ட முதலாளித்துவக் கட்சிகள் கடன் தள்ளுபடி என்ற கோரிக்கைக்கு அப்பால் செல்ல மறுக்கின்றன. மோடியின் தலைமையில் உள்ள ஆளுங்கூட்டணியோ எம்.எஸ்.சுவாமிநாதன் குழு அளித்த பரிந்துரையின்படி குறைந்தபட்ச ஆதார விலையைக் கூட்டி, விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் முயற்சிகளைத் தொடங்கிவிட்டதாகத் தம்பட்டம் அடித்துவருகிறது.

*****

குறைந்தபட்ச இலாபம் என்ற அடிப்படையில் பார்த்தால்கூட, நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை ரூ.2,671/- என நிர்ணயித்திருக்க வேண்டும். ஆனால், மைய அரசு நிர்ணயித்திருக்கும் ஆதார விலையோ ரூ.1,770/-தான். நெல்லின் உற்பத்திச் செலவைக்கூட இந்த விலை ஈடுகட்டப் போவது கிடையாது. (தமிழ் இந்து, 05.07.2018)

சோயாபீன்ஸ்க்கு ரூ.3,399/- ஆதார விலையாக நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், சந்தையில் அதிகபட்சமாக ரூ.3,100/-க்குத்தான் விற்க முடிவதாகக் கூறுகிறார்கள், ம.பி. விவசாயிகள். ரூ.4,200/- என ஆதார விலை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கும் ஆமணக்கை, சந்தையில் 1,000/- ரூபாய் குறைவாக ரூ.3,200/-க்குத்தான் விற்க முடிகிறது என்கிறார்கள், இராசஸ்தான் விவசாயிகள். (The Hindu, 08.12.2018)

அரசால் அறிவிக்கப்படும் ஆதார விலையின் பலன்கள் வெறும் 6 சதவீத விவசாயிகளைத்தான் சென்றடைவதாகக் குறிப்பிடுகிறது, தேசிய மாதிரிக் கணக்கெடுப்பு நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கை. இதனைத் திருப்பிப் போட்டால், 94 சதவீத விவசாயிகள் மண்டி வியாபாரிகளின் இலாப வேட்டைக்குத் தொடர்ந்து பலியாகிவருகிறார்கள் என்ற உண்மை அம்பலமாகிறது.

மைய அரசால் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்யப்படும் 23 விளைபொருட்களின் நிலையே இதுதான் எனில், அதற்கு அப்பாலுள்ள விளைபொருட்களின் சந்தை விலை நிலவரம் குறித்துச் சொல்லவும் வேண்டுமா?

சமீபத்தில் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை ஒரு ரூபாயாகச் சரிந்து போனதால், மகாராஷ்டிராவில் நாசிக் பகுதியைச் சேர்ந்த இரண்டு வெங்காய விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டு மாண்டுபோனார்கள். வெங்காயத்தின் விலை மட்டுமல்ல, பெரும்பாலான உணவுப் பொருட்களின் விலைகள் கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்த ஆண்டில் 7 சதவீதம் வரை சரிந்துவிட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன (The Hindu, 15.12.2018). இந்தச் சரிவு விவசாயிகளின் கடன் சுமையை மேலும் அதிகரிக்கும் என்பதைப் புரிந்துகொள்ள பெரிய பொருளாதார அறிவெல்லாம் தேவையில்லை.

அதேசமயம், இந்தச் சரிவிலிருந்து விவசாயிகளைக் காக்க வேண்டிய மோடி அரசோ, அது பற்றி அக்கறையின்றி, வெந்தப் புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போலத் தமது ஆட்சியில் பணவீக்கம் சரிந்துவருவதாகத் தம்பட்டம் அடித்துவருகிறது.

விவசாயிகளைப் பலியிட்டுத்தான் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த முடியும் என்றால், இந்த அரசை ஆட்கொல்லி மிருகம் என்றுதான் கூறவேண்டும். உணவுப் பொருள் விலை சரிவை அனுபவிக்கும் நகர்ப்புற நடுத்தர வர்க்கமும் அதன் பின்னுள்ள விவசாயிகளின் துயரத்தைக் காண மறுக்கிறது.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தொள்ளாயிரம் ரூபாயாக இருந்த 50 கிலோ டி.ஏ.பி. உரமூட்டையின் விலை இன்று (45 கிலோ) ரூ.1,440/- என ஏறத்தாழ இரண்டு மடங்கு அதிகரித்துவிட்டது. பொட்டாஷ் உரமூட்டையின் விலையும் ரூ.450/-லிருந்து ரூ.900/- என அதிகரித்திருக்கிறது. ஜி.எஸ்.டி.க்குப் பிறகு பூச்சிமருந்துகளின் மீதான வரி 4 சதவீதத்திலிருந்து 28 சதவீதமாகவும்; நீர் இறவை மோட்டார்களின் மீதான வரி 6 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாகவும்; பைப்களின் மீதான வரி 0 சதவீதத்திலிருந்து 18 சதவீதம் வரையிலும் அதிகரித்திருக்கிறது. டீசல் விலை உயர்வு பாசனச் செலவை மட்டுமல்ல, உழவுக்குப் பயன்படுத்தும் டிராக்டர் வாடகைக் கட்டணத்தையும் ரூ.500/-லிருந்து ரூ.700/-ஆக அதிகரிக்கச் செய்துவிட்டது. (The Hindu, 08.12.2018)

உற்பத்திச் செலவு இரண்டு மடங்கு அதிகரித்துள்ள நிலையில், குறைந்தபட்ச ஆதார விலையும், சந்தை விலையும் அச்செலவை ஈடுகட்டக்கூடிய வகையில் கிடைக்காதபோது விவசாயிகள் கடனில் சிக்குவது தவிர்க்கமுடியாதது. அதிகரிக்கும் உற்பத்திச் செலவு, சரிந்துவிழும் விலை என்ற கிடுக்கிப்பிடியிலிருந்து விவசாயிகளை விடுதலை செய்யாதவரை, அவர்களைக் கடன் சுமை என்ற விஷச்சுழல் வாழ்நாளெல்லாம் துரத்திக்கொண்டேதான் இருக்கும். ஆனால், காங்கிரசு உள்ளிட்ட முதலாளித்துவக் கட்சிகளால் தீர்வாக வைக்கப்படும் கடன் தள்ளுபடியோ புண்ணுக்குப் புனுகு தடவும் வேலையைத்தான் செய்கிறது.

*****

2016-17 ஆம் ஆண்டில் பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் ஆகியவற்றின் வழியாக வழங்கப்பட்ட வேளாண் கடன்களில் 42.2 சதவீதம்தான் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்குச் சென்றிருக்கிறது என நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் அறிக்கை அளித்திருக்கிறது, ரிசர்வ் வங்கி (தமிழ் இந்து, 23.05.2018).

இந்த 42 சதவீத வங்கிக் கடனும் குறு, சிறு விவசாயிகள் அனைவருக்கும் கிடைப்பதில்லை; அவர்களுள் 48 சதவீதம் பேருக்கு வங்கிக் கடன் கிடைப்பதில்லை என்பது இன்னொரு உண்மை. கிடைக்கும் வங்கிக் கடனும் உற்பத்திச் செலவை ஈடுகட்டக்கூடியதாக இல்லை என்பதும், அதனை ஈடுகட்ட சாதாரண விவசாயிகள் வங்கிக்கு வெளியே கடன் வாங்கித்தான் பயிர் செய்கிறார்கள் என்பதும் மற்றொரு உண்மை.

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுள் 12 சதவீதம் பேர் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்வதாகக் குறிப்பிடுகிறது, நிதி ஆயோக். இக்குத்தகை விவசாயிகளுக்கு வங்கிக் கடன் கிடைப்பதே குதிரைக் கொம்பு. அப்படியே கிடைத்தாலும், இவர்களுக்குக் கடன் தள்ளுபடி கிடைப்பதில்லை என்ற உண்மையைக் குறிப்பிடும் நிதி ஆயோக், இதற்கு ஆதாரமாக பஞ்சாப் மற்றும் உ.பி. மாநிலங்களில் அறிவிக்கப்பட்ட கடன் தள்ளுபடிகளைச் சுட்டிக் காட்டியிருக்கிறது. (தினமணி, 2.12.2018)

எத்துணை இலட்சம் கோடி விவசாயக் கடன் கொடுக்கப்பட்டாலும், எத்துணை ஆயிரம் கோடி விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டாலும், அவற்றால் விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்கு எந்தவொரு பயனும் இல்லை. கடன் தள்ளுபடி கிடைத்த சிறு விவசாயிகளுக்கு ஒரு பைசா, நாற்பது பைசா தள்ளுபடியான குரூரத்தையும் நாடே கண்டு அதிர்ந்து போனது.

எனில், இந்தச் சலுகைகளை முழுமையாக அனுபவிப்பவர்கள் யார்?

ஐந்து ஏக்கருக்கு மேல் நிலமுள்ள நிலவுடமையாளர்கள்தான் வங்கிக் கடன் மற்றும் கடன் தள்ளுபடியின் பலன்களை அறுவடை செய்வதாகக் குறிப்படுகிறது, எக்கானமிக் அண்ட் பொலிடிக்கல் வீக்லி இதழில் (டிச.1, 2018) வெளிவந்துள்ள ஓர் ஆய்வு.

தனியார்மயம் – தாராளமயத்தின் பின் விவசாயக் கடன் என்பது விவசாயத்தில் நேரடியாக முதலீடு செய்வதிலிருந்து அரசு விலகி வருவதை இட்டு நிரப்பும் பொருளாதாரக் கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது.

2004-05 ஆம் ஆண்டில் 1,25,309 கோடியாக இருந்த விவசாய வங்கிக் கடன், 2016-17 ஆம் ஆண்டுகளில் 10,65,756 கோடியாக அதிகரித்திருக்கும்போது, 2013-14 தொடங்கி 2016-17 முடியவுள்ள நான்கு ஆண்டுகளில் விவசாயத்தில் அரசின் நேரடி முதலீடு ஆண்டுக்கு 2.3 சதவீதம் எனப் படிப்படியாகக் குறைக்கப்பட்டிருக்கிறது. விவசாயத்தில் முதலீடு செய்வதைத் தனிப்பட்ட விவசாயிகளின் பொறுப்பாக அரசு மாற்றிவிட்டது என்பதைத்தான் இப்புள்ளிவிவரங்கள் எடுத்துக்காட்டுகின்றன. (EPW, 03 March 2018)

படிக்க:
♦ அயோத்தி வேண்டாம் : கடனை தள்ளுபடி செய் ! டெல்லியில் விவசாயிகளின் போர்க்குரல்
♦ விவசாயிகளின் போராட்டமும் அண்டப் புளுகு அர்னாப் வகை ஊடகங்களின் கூவலும் !

தேசிய மாதிரிக் கணக்கெடுப்பு நிறுவனம் 2014-ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில், கிராமப்புறங்களிலுள்ள 15.61 கோடி குடும்பங்களில் 9.02 கோடி குடும்பங்கள் வேளாண்மையைச் சார்ந்திருப்பதாகவும், அவற்றுள் 3.79 கோடி குடும்பங்களுக்கு நிலமே இல்லை என்றும் குறிப்பிட்டிருக்கிறது. நிலமுள்ள 5.23 குடும்பங்களிடமும் நிலவுடமை சொல்லிக்கொள்ளும்படி இல்லை. (தினமணி, 19.09.2018)

2011-12 ஆம் நிதியாண்டில் வெளியிடப்பட்ட புள்ளிவிவரத்தின்படி, நாடெங்கும் 9.4 கோடி ஹெக்டேர் நிலம் விவசாயப் பயன்பாட்டில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. இம்மொத்த நிலப்பரப்பில் 47 சதவீதத்தை 7 சதவீதக் குடும்பங்களும், மீதமுள்ள 53 சதவீதத்தை 93 சதவீத விவசாயக் குடும்பங்களும் உடமையாகக் கொண்டுள்ளன (EPW, 22 Dec.2018).

விவசாய நிலவுடமை ஆகப் பெரும்பாலும் சிதறுண்டு கிடக்கும் நிலையில் விவசாய முதலீட்டை விவசாயிகளின் தலையில் சுமத்துவது, சிறு, குறு விவசாயிகள் மீது நடத்தப்படும் பொருளாதாரத் தாக்குதல் தவிர வேறல்ல. இப்படிப்பட்ட நிலையில் விவசாய வங்கிக் கடனை அதிகரிக்கச் சொல்லுவதோ, அதனைத் தள்ளுபடி செய்யக் கோருவதோ குரூர நகைச்சுவையாக முடியுமே தவிர, தற்காலிகத் தீர்வாகக்கூட அமையாது.

பாம்பும் சாகக்கூடாது தடியும் நோகக் கூடாது என்பார்களே, அது போல, விவசாயத் துறையில் புகுத்தப்பட்டு வரும் தனியார்மயத்தைப் பாதிக்காத அதேசமயம், விவசாயிகளின் வாக்குகளைக் கவரும் கவர்ச்சிகரமான பொறியாகவே விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்யும் வாக்குறுதிகள் அளிக்கப்படுகின்றன.

– திப்பு

மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

புதிய ஜனநாயகம் நவம்பர் 2018

15.00Add to cart

புதிய ஜனநாயகம்

15.00Add to cart

புதிய ஜனநாயகம்

15.00Add to cart

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க