புதிய கலாச்சாரம் வெளியீடாக இதுவரை 25-க்கும் மேற்பட்ட நூல்கள் வெளிவந்திருக்கின்றன. இந்த நூல்கள் குறித்து ஏற்கெனவே வினவு தளத்தில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. எனினும், புதிய வாசகர்கள் பயன்பெறும் பொருட்டு அந்நூல்களை மீண்டுமொருமுறை சுருக்கமாக அறிமுகம் செய்கிறோம். இந்நூல்கள் அனைத்தும் சென்னை புத்தகக் காட்சியில் கீழைக்காற்று அரங்கில் (அரங்கு எண்: 147, 148) கிடைக்கும்.

இசை போதை பொழுதுபோக்கு போராட்டம்

நாட்டுப்புற இசையைப் பயன்படுத்திப் புரட்சிகர அரசியலைக் கொண்டு செல்வது. என்ற அளவில்தான் எமது துவக்ககால இசை முயற்சிகள் அமைந்திருந்தன. புதிய முயற்சிகள் ஒவ்வொன்றும் புதிதாய்க் கற்றுக் கொள்ள வேண்டியதன் தேவையை நடைமுறையிலிருந்து எமக்கு உணர்த்தின. புரட்சி செய்வதற்கு இசையறிவு ஒரு கட்டாயமான முன்நிபந்தனை அல்லவெனினும், மக்களை மயக்கத்திலாழ்த்தும் ஒரு போதைப் பொருளாக ஆளும் வர்க்கம் இசையைப் பயன்படுத்தும்போது அதை நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது.

காதலைப் பாலியல் வெறியாகவும், மகிழ்ச்சியைக் களிவெறியாட்டமாகவும் துயரத்தை விரக்தியாகவும் மடைமாற்றி விடுவதன் மூலம் மக்களின் இசைரசனையையும் வாழ்வியல் மதிப்பீடுகளையும், அதனூடாகச் சமூக உணர்வையும் சிதைப்பதில் திரையிசை வெற்றி பெற்றுள்ளது. இன்னொருபுறம் காலாவதியாகிப் போன மன உணர்வுகளை வெளியிடும் தியாகய்யர் போன்றோரின் இசை, காலத்தை வென்ற இசையாகவும், திரையிசைக்கு மாற்றாகவும் முன் நிறுத்தப்படுகிறது.

களவாடிய இசையே கர்நாடக இசை என்பதை நாம் புரிந்து கொண்டால் மட்டும் போதாது.

நம் மரபில் எதைக் கொள்வது – எதைத் தள்ளுவது, பிற நாட்டு இசை மரபுகளில் எவற்றைச் செரித்துக் கொண்டு நமது விடுதலைக்கான இசையைப்படைப்பது என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

இந்தப் புரிதலின் அடிப்படையில் எழுதப்பட்டவைதான் புதிய கலாச்சாரத்தில் வெளிவந்த இசை விமர்சனக் கட்டுரைகள். அக்கட்டுரைகள் இங்கே நூலாகத் தொகுக்கப்பட்டுள்ளன. கட்டுரையாளர்கள் முறையாக இசை பயின்றவர்கள் இல்லை என்றாலும், அறியாமையிலிருந்து விடுபடும் தம் சொந்த முயற்சியையே வாசகர்கள் அனைவரின் அனுபவமாக மாற்றியுள்ளனர் என்று கூறலாம்.

நுகர்வோனை ரசிகனாக மாற்றுவதும் அடிமையைச் சுதந்திர மனிதனாக மாற்றுவதுமே நமது இலட்சியம். இதை சாதிக்க வேண்டுமெனில் வெகுசன அடிமைத்தனத்தின் ஆன்மாவையும், விடுதலை வேட்கையை வெளிப்படுத்தும் அதன் மொழியையும் நாம் அறிந்திருக்க வேண்டும். அறிந்து கொள்ள முயல்வோம். (மேலும் படிக்க)

பக்கங்கள்: 112
விலை: ரூ.40.00 (அக்-2002 பதிப்பு)

♦ ♦ ♦ 

மும்பை 26/11: விளக்கமும் விவாதமும்

வினவுத் தளத்தில் மும்பைத் தாக்குதல் குறித்து ஆறு பாகங்களாக வெளிவந்த தொடர் கட்டுரை ம.க.இ.க சார்பில் இப்போது நூலாக வெளிவந்திருக்கிறது. மேலும் இதற்கு வந்த மறுமொழிகளும் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. ஆங்கிலத்தில் வந்த பின்னூட்டங்களை தமிழில் மொழிபெயர்த்து சேர்க்கப்பட்டுள்ளன.

… இசுலாமிய சர்வதேசியம் என்பது நிறைவேறவே முடியாத ஒரு அபத்தம். அன்று அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் உருவாக்கப்பட்டு, இன்று அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பை திசைதிருப்புவதற்கும், இசுலாமிய நாடுகளின் மக்களை அடிமைப்படுத்துவதற்கும் பயன்பட்டு வரும் ஒரு கருவி. அவ்வளவே. ஆனால், மூலதனத்தின் சர்வதேசியமும், அதனை முன் தள்ளும் அமெரிக்காவின் உலக மேலாதிக்கமும் நாம் எதிர்கொண்டிருக்கும் உண்மைகள். உலக மக்களால் எதிர்க்கப்பட வேண்டிய உண்மையான எதிரிகள். பயங்கரவாத எதிர்ப்பு என்ற பெயரில் இந்த உண்மையான எதிரிகளைத் தப்பவிடுவதுடன், அவர்களுடைய கையாளாகவே நமது நாடு மாறிவிடக்கூடாது என்று எச்சரிப்பதே இக்கட்டுரைகளின் நோக்கம். (மேலும் படிக்க)

பக்கம் – 88
விலை ரூ.35

♦ ♦ ♦ 

ஜீன்ஸ் பேண்ட்டும் பாலியல் வன்முறையும்

ஒரு குக்கிராமத்தில் நடக்கும் சம்பவம் கூட செய்தியாக உடனுக்குடன் ஊடகங்களில் இடம் பெறும் வண்ணம் தொழில் நுட்பமும், செய்திகளுக்கான வலைப் பின்னலும் அபாரமாக வளர்ந்துள்ளது. ஆனால் தமக்கு வெளியே உள்ள வாழ்க்கையைப் பற்றி மக்கள் தெரிந்து கொண்டு சமூக மனிதனாக பரிணமிப்பதற்கு இந்த வளர்ச்சியே உதவிவிடுவதில்லை. காதல், தற்கொலை, கொலை குறித்த செய்திகள் எல்லாம் மலிவான ரசனையைக் கருத்தில் கொண்டு பரபரப்பிற்காகவே வெளியிடப்படுகின்றன. நவீன வாழ்க்கையின் சீரழிவுகள் மற்றும் தோற்றுப் போன உறவுகளின் சாட்சியங்களாக  வெளிப்படும் இத்தகைய சம்பவங்கள் எதுவும் அதற்குரிய கவலையுடனோ அக்கறையுடனோ ஊடகங்களால் வெளியிடப்படுவதில்லை. இதன் விளைவாக, ஒரு கள்ளக்காதல் கொலை கூட அதிர்ச்சியை ஏற்படுத்துவதற்குப் பதிலாக,  தானும்  அத்தகையதொரு முயற்சியில் இரகசியமாய் இறங்கலாமென்ற  திருட்டுத்தனமான ஆசையை வாசகனின் மனதில் ஏற்படுத்துகின்றது.  அதிர்ச்சியின் இடத்தை ஆசை நிரப்புகிறது. விளைவு என்னவென்றால் ஏற்கனவே போலியான உறவுகளால் நீர்த்துப் போயிருக்கும் வாழ்க்கை உறவுகள் தம்மைப் பற்றிய சுய விமரிசனமின்றி காரியவாதத்தையும், பிழைப்பு வாதத்தையும் மாற்றாகத் தேடிக் கொள்கின்றன. (மேலும் படிக்க)

பக்கம் – 48
விலை ரூ.25

♦ ♦ ♦

ஐ.டி துறை நண்பா …

ஐ.டி என்று பரவலாக அறியப்படும் தகவல் தொழில் நுட்பத் துறை சமீபத்திய ஆண்டுகளில் வளர்ந்திருப்பது அனைவரும் அறிந்ததே. வீட்டு வாடகை உயர்ந்தது முதல் நட்சத்திர விடுதிகளின் வார விடுமுறைக் கொண்டாட்டம் வரை பல்வேறு விசயங்களில் இந்தத் துறையின் செல்வாக்கும் நமக்கு தெரிந்த விசயம்தான். தீடீரென்று பலரது வாழ்க்கையை ஜாக்கி வைத்து தூக்கிய பெருமையும் இத்துறைக்கு உண்டு. ஒரு காவியம் போல வியந்தோதப்படும் இந்தத் துறையின் இன்றைய நிலை என்ன?….

அமெரிக்கா திவாலின் பிரதிபலிப்பாக இந்தியாவில் ஏற்படக்கூடிய பாதிப்புகளையும், ஐ.டி ஊழியர்கள் தமது எதிர்காலத்தை பாதுகாப்பதற்காக தொழிற்சங்கங்களில் திரளவேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தியிருந்தார்கள். ஆனால் பல வாசகர்கள்- இத்துறையில் பணியாற்றுபவர்கள்- அவற்றை அலட்சியமாக மறுத்தார்கள். தங்களுக்கொன்றும் பாதிப்பில்லை எனவும் ஆக்ரோஷமாக தெரிவித்தார்கள். சில வாசகர்கள் அந்தக் கட்டுரையின் சாரத்தை ஏற்றுக் கொண்டதோடு ஐ.டி துறையின் ஆட்குறைப்பு நடவடிக்கைகளைப் பற்றிஆதாரங்களுடன் தெரிவித்தார்கள். இங்கே அந்தக் கட்டுரையும் அதற்கான மறுமொழிகளையும் வெளியிட்டுள்ளோம்….

முதலாளித்துவத்தின் அநீதியான உலகமயம் எப்படிப் பார்ததாலும் இப்படித்தான் ஒரு அழிவை மக்களுக்கு தர முடியும். இதை அரசியல் ரீதியாக புரிந்து கொள்வதும், அதற்கெதிராய் செயல் படுவதும் காலம் நம்மிடம் கோரும் கடமையாகும். அந்த கடமைக்கு வாசகரை தயார் செய்யும் பணியில் இந்த நூலும் ஒரு பங்காற்றும் என்ற நம்பிக்கையுடன் உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறோம். (மேலும் படிக்க)

பக்கம் – 72
விலை ரூ.35

♦ ♦ ♦

செயற்கை நுண்ணறிவு : நவீன அடிமை யுகம்

செயற்கை நுண்ணறிவு : நவீன அடிமை யுகம். நான்காம் தொழிற்புரட்சியைப் பற்றியும், நாளை உலகை ஆளப்போவது மக்களா, முதலாளித்துவத்தின் எந்திரங்களா? என்பதன் அறிவியல் விளக்கத்தையும், அதன் சமூகவியல் நடைமுறையையும் எளிய முறையில் விளக்குகிறது இந்நூல். “செயற்கை நுண்ணறிவு : நவீன அடிமை யுகம்”  எனும் இந்த நூல் இத்தகைய துறையில் அநேகமாக தமிழில் வெளிவரும் முதல் நூல் என்று நம்புகிறோம். இதன் சிறப்பு முதல் நூல் என்பதல்ல, நிகழ்கால – எதிர்கால உலகை தீர்மானிப்பதாக இருக்கும் ஒரு நவீன அறிவியல் மற்றும் அரசியல் துறை குறித்து வாசகர்களுக்கு ஆரம்ப அறிமுகத்தை செய்கிறது. (மேலும் படிக்க)

பக்கம்: 80
விலை : ரூ.60

சென்னையில் 42-வது புத்தகக் கண்காட்சியில் குடும்பத்துடன் பங்கேற்று நூல்களை வாங்குங்கள் !

நாள் : 04-01-2019 முதல் 20-01-2019 வரை
நேரம்: வேலை நாட்கள் : மதியம் 2 – இரவு 9 மணி
விடுமுறை நாட்கள் : முற்பகல் 11 – இரவு 9 மணி

இடம் : ஒய்.எம்.சி.ஏ. உடற்கல்வியியல் கல்லூரி மைதானம், நந்தனம், சென்னை – 35

அனைத்து முற்போக்கு நூல்களையும் ஒரே இடத்தில் உங்களுக்கு வழங்கக் காத்திருக்கிறது…

சென்னை புத்தகக் காட்சியில் நூல் வாங்க…

கீழைக்காற்று வெளியீட்டகம்

கடை எண் : 147, 148

கீழைக்காற்று அலுவலக முகவரி:
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
அலைபேசி: 99623 90277


இதையும் பாருங்க…

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க