மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – பகுதி – 53 (தொடர்ச்சி பாகம் 2)

மாக்சிம் கார்க்கி
”இதுதான் அதிசயம்!” என்று தன் தாடியைப் பிடித்துக் கொண்டும், தரைமீது பார்வையை ஊன்றிப் பதித்துக்கொண்டும் பேசத் தொடங்கினான் சமோய்லின் தந்தை. ”இவர்களை, இந்தப் பயல்களைப் பார்க்கும்போது, இவர்கள் இந்த மாதிரியான சங்கடத்துக்குள் போய் மாட்டிக்கொண்டதையெண்ணி நம்மால் அனுதாபப்படாமலிருக்க முடியவில்லை. உடனே திடீரென்று நமக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. ஒருவேளை இந்தப் பயல்கள் சொல்வதுதான் சரியான உண்மையோ என்று நினைக்கத் தோன்றுகிறது! அதிலும் நாளுக்கு நாள் தொழிற்சாலையில் இவர்கள் கூட்டம் பெருத்து வருவதைக் கண்டால் . இப்படித்தான் நினைக்கத் தோன்றுகிறது. போலீசாரோ அவர்களைப் பிடித்துக்கொண்டு போன வண்ணமாயிருக்கிறார்கள்; அவர்களோ ஆற்று மீன்களைப் போல் பெருகிக்கொண்டிருக்கிறார்கள். இவர்களிடம்தான் சக்தி இருக்கிறதோ என்று நினைக்கத் தோன்றுகிறது.”

“ஸ்திபான் பெத்ரோவின் இந்த விவரத்தைப் புரிந்து கொள்வது நம் போன்றவர்களுக்கு முடியாத காரியம்!” என்றான் சிஸோவ்.

”ஆமாம், சிரமமானதுதான்” என்று ஆமோதித்தான் சமோய்லாவின் தந்தை.

“போக்கிரிகள் – இவர்களுக்குத்தான் எவ்வளவு சக்தி’’ என்று பலத்துச் சிணுங்கிக்கொண்டே கூறினாள் அவனது மனைவி.

பிறகு அவள் தாயின் பக்கம் திரும்பி, தனது தொள தொளத்த அகன்ற முகத்தில் புன்னகை அரும்பப் பேசினாள்.

“நீலவ்னா, என் மீது கோபம் கொள்ளாதே. கொஞ்ச நேரத்துக்கு முன்னால் நான் தான் உன் மகனைக் குறைகூறினேன். ஆனால், யார் குற்றம் அதிகம் என்று எவர் கூறமுடியும்? எங்கள் கிரிகோரியைப் பற்றிப் போலீஸ்காரர்களும், உளவாளிகளும் என்ன சொன்னார்கள் பார்த்தாயா? அவனும் இந்த விவகாரத்தில் தன்னாலானதைச் செய்திருக்கிறான், செந்தலைப் பிசாசு”

தனது உணர்ச்சியை அவள் உணர்ந்து கொள்ளாவிட்டாலும் அவள் தன் மகனை எண்ணிப் பெருமை கொள்வதாகவே தோன்றியது. எனினும் தாய் அவள் கூறியதைக் கேட்டு மெச்சிக்கொண்டாள். அன்பான புன்னகை ததும்ப உள்ளத்திலிருந்து பிறந்த வார்த்தைகளோடு பதில் சொன்னாள் தாய்.

“இளம் இதயங்கள்தான் உண்மையைச் சட்டென்று எட்டிப்பிடித்துக்கொள்கின்றன…”

ஜனங்கள் வராந்தாவில் நடமாடினார்கள். கூட்டம் கூட்டமாகக் கூடி நின்று உள்ளடங்கிப்போன குரல்களோடும் ஆர்வத்தோடும் பேசிக்கொண்டிருந்தார்கள். யாருமே தன்னந்தனியாய் ஒதுங்கி நிற்கவில்லை. எல்லோரது முகங்களிலுமே, பேசவேண்டும். கேள்வி கேட்கவேண்டும், பதில் தெரிய வேண்டும் என்ற ஆசையுணர்ச்சிகள் பிரதிபலித்தன. சுவர்களுக்கு இடையேயுள்ள நடைபாதைகளில் அவர்கள் ஓரிடத்திலும் கால் தரிக்காமல் முன்னும் பின்னும் காற்றினால் அலைக்கழிக்கப்பட்ட மாதிரி நடமாடினார்கள்; எதையோ தேடித் திரிவது போலவும் அதைக் கண்டுபிடித்துவிட்டால், நிம்மதியாக இருக்கலாம் என்று எண்ணி உறுதியோடும் பலத்தோடும் பரபரத்துத் திரிவதைப் போலவுமே அவர்கள் காணப்பட்டார்கள்.

புகினின் மூத்த சகோதரன் – புகினைப் போலவே, நிறமற்ற அந்த நெட்டைச் சகோதரன் – தன் கைகளை ஆட்டிக்கொண்டும் எதையோ நிரூபணம் செய்யப் போகிறவன் மாதிரி நாலா திசைகளிலும் திரும்பிப் பார்த்துக்கொண்டும் வந்து சேர்ந்தான்.

“அந்த கிளெபானவ் — அவன் தான் அந்த ஜில்லா அதிகாரி – அவனுக்கு இங்கு என்ன வேலை…”

”கான்ஸ்தந்தீன்! உன் வாயைக் கொஞ்சம் மூடு!” என்று அவனது தந்தையான ஒரு குட்டைக் கிழவன் அங்குமிங்கும் ஜாக்கிரதையாகப் பார்த்துக்கொண்டே எச்சரிக்கை செய்தான்.

‘முடியாது. என்னால் முடியாது. போன வருஷம் அவன் ஒரு குமாஸ்தாவின் மனைவியை அடைவதற்காக, அந்த குமாஸ்தாவையே கொன்று தீர்த்துவிட்டான் என்று ஊரில் பேசிக்கொள்கிறார்கள். இப்போது இவன் அவளோடுதான் வாழ்கிறான். இதைப் பற்றி நீ என்ன சொல்கிறாய்? மேலும் இவன் ஒரு பெரிய திருட்டுப் பயல் என்பதும் எல்லோருக்கும் தெரியும்…”

“ஐயோ! நீ நன்றாயிருப்பாய், கொஞ்சம் பேசாமல் இரேன். கான்ஸ்தந்தீன்…”

“ரொம்ப சரி” என்றான் சமோய்லவின் தந்தை, “ரொம்ப சரி. இந்த விசாரணை நேர்மையானது என்று சொல்லவே முடியாது……..”

மூத்த புகின் இந்தக் குரலைக் கேட்டான். அவன் தன்னோடு பலரையும் சேர்த்திழுத்துக்கொண்டு முன்னேறி வந்தான். அவனது முகம் சிவந்து போயிருந்தது. அவன் தன் கைகளை ஆட்டிக்கொண்டு சத்தமிட்டான்.

“கொலையானாலும் திருட்டானாலும் குற்றவாளிகளைப் பொது மக்களின் ஜூரிகளைக் கொண்டு விசாரிக்கிறார்கள். அந்த ஜூரிகளில் விவசாயிகளும், நகர மாந்தர்களும், தொழிலாளர்களும் உண்டு. ஆனால், ஜனங்கள் அதிகாரிகளுக்கு எதிராகப் போராடினால் மட்டும், அவர்களை விசாரிப்பது பொது மக்களின் ஜூரிகளல்ல, அதிகாரிகளே அவர்களைப் பிடித்து விசாரிக்கிறார்கள்! இதை என்ன சொல்கிறாய்? நீ என்னை அவமானப்படுத்தினாய் என்று வைத்துக் கொள். நான் உன் தாடையில் ஓங்கியறைகிறேன். அப்புறம் நீ என்மீது தீர்ப்புக் கூறுகிறாய்; நீ என்ன கூறுவாய்? என்னைத்தான் குற்றவாளி என்பாய். ஆனால் முதன்முதலில் தவறு செய்தது யார்? நீதான். அது போல…”

நரைத்த தலையும் கொக்கி மூக்கும் கொண்ட ஒரு காவலாளி மார்பகலத்துக்குப் பற்பல மெடல்களை மாட்டிக்கொண்டு அங்கு வந்து சேர்ந்தான். அவன் ஜனக்கூட்டத்தைக் கலைந்து போகச் செய்தான். புகினின் சகோதரனைப் பார்த்து விரலால் சுட்டிக்காட்டிப் பத்திரம் என்றான்.

“கூச்சலை நிறுத்து. இது ஒன்றும் கள்ளுக்கடை இல்லை!” என்றான் அவன்.

”அது சரிதான், பெரியவரே, எனக்குத் தெரியும், ஆனால் நான் உங்களை அடித்துவிட்டு, பிறகு நானே நீதிபதியாகவும் மாறினால், அதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்…?”

“உன்னை இங்கிருந்து கல்தா கொடுத்து வெளியில் தள்ளத்தான் நான் நினைக்கிறேன். தெரிந்ததா?” என்று கடுமையாகச் சொன்னான் அந்தக் காவலாளி.

“என்னை வெளியே தள்ளப் போகிறாயா? எதற்காக?”

”இந்தமாதிரிக் காட்டுக் கூச்சல் போடுவதற்காக! உன்னைத் தெருவில் கொண்டுபோய்த் தள்ளிவிடுவேன்!”

மூத்த புகின் தன்னைச் சுற்றியுள்ளவர்கள் அனைவரையும் பார்த்தான். பிறகு தணிந்த குரலில் சொன்னான்:

”அவர்கள் விரும்புவதெல்லாம் ஒரே ஒரு விஷயம்தான். ஜனங்கள் வாயைப் பொத்திக்கொண்டு சும்மா இருக்க வேண்டும்!”

“ஆமாம், நீ என்ன நினைத்தாய்?’ என்று அந்தக் கிழவன் கரகரத்த குரலில் கேட்டான்.

மூத்த புகின் தோள்களைக் குலுக்கிவிட்டுக் கொண்டு மிகவும் மெதுவாகப் பேசத் தொடங்கினான்.

”விசாரணையைப் பார்க்க எல்லா ஜனங்களையும் ஏன் அனுமதிக்கவில்லை? உறவினர்களை மட்டும் ஏன் அனுமதிக்க வேண்டும்? உங்கள் விசாரணை நேர்மையானதாக இருந்தால், எல்லோரும் தான் அதைக் கேட்டுவிட்டுப் போகட்டுமே. எதற்காகப் பயப்படுவதாம்?”

“விசாரணை நேர்மையானதல்ல. அதில் சந்தேகமே இல்லை” என்று உரத்த குரலில் ஆமோதித்தான் சமோய்லவின் தந்தை.

இந்த விசாரணையே சட்ட விரோதமானது என்பதைப் பற்றி நிகலாய் இவான்விச் விவரித்துச் சொன்ன விஷயங்களை இவனுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்று தாய் திரும்பினாள். ஆனால், அவன் சொன்ன விஷயங்களை அவள் பரிபூரணமாகப் புரிந்து கொள்ளவுமில்லை. மேலும் சில வார்த்தைகளும் அவளுக்கு மறந்து போய்விட்டன. எனவே அதை ஞாபகப்படுத்திப் பார்க்க முயன்று கொண்டே அவள் ஒரு பக்கமாக ஒதுங்கினாள். அந்தக் சமயத்தில் வெளிர் மீசை கொண்ட ஓர் இளைஞன் தன்னைக் கவனித்துக்கொண்டிருப்பதை அவள் கண்டு கொண்டாள். அவன் தன் வலது கையை கால்சராய்ப் பைக்குள் செலுத்தியிருந்தான். எனவே, அவனது இடது தோள் வலது தோளைவிடத் தணிந்திருப்பது போலத் தோன்றியது. இந்தத் தோற்றத்தை அவள் எங்கோ ஏற்கெனவே கண்ட மாதிரி இருந்தது. ஆனால் அவனோ திடீரென்று தன் முகத்தைத் திருப்பி நின்று கொண்டான், நினைவலைகளால் சூழப்பட்டிருந்த அவள், அவனை மறந்துவிட்டாள்.

ஒரு நிமிஷம் கழித்து அவள் காதில் ஒரு கேள்விக் குரல் விழுந்தது. “அவளா?” “ஆமாம்” என்று ஆர்வத்தோடு ஒலித்தது பதில்.

அவள் சுற்றுமுற்றும் பார்த்தாள். தோளைத் தூக்கிக்கொண்டு நின்ற அந்த இளைஞன் இப்போது பக்கவாட்டில் நின்றான், கரிய தாடியும், குட்டைக் கோட்டும், முழங்கால் வரை உயர்ந்த பூக்களும் கொண்ட இன்னொரு மனிதனோடு அவன் பேசிக்கொண்டிருந்தான்.

மீண்டும் அவள் தன் நினைவைத் தேடித் திரிந்தாள். அதனால் அவள் மனம் குழம்பியதுதான் மிச்சம். ஒன்றும் அவள் நினைவில் தட்டுப்படவில்லை. தனது மகனது கொள்கையை அந்த ஜனங்களுக்கு விளக்கி எடுத்துக் கூற வேண்டும் என்ற கட்டுப்படுத்த முடியாத பேராவல் அவள் மனத்தில் நிறைந்து பொங்கியது. அதைப் பற்றி இந்த ஜனங்களிடம் சொன்னால் இவர்கள் என்ன சொல்லுவார்கள், அதன் மூலம் அந்த விசாரணையின் முடிவு எப்படியிருக்கும் என்பதைத் தீர்மானிக்கலாம் என்று யோசித்தாள் அவள்.

படிக்க:
தமிழகத்தில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா? ஸ்டெர்லைட்டின் ஆட்சியா? | மக்கள் அதிகாரம்
ஆனந்த் தெல்தும்ப்டேவுக்கு எதிரான பொய் வழக்கை ரத்து செய் ! ஊபா உள்ளிட்ட கருப்புச் சட்டங்களை ரத்து செய் !

“இதுதான் விசாரணை நடத்துகிற ஒழுங்கோ?” என்று அமைதியாகவும் ஜாக்கிரதையாகவும் சிஸோவை நோக்கிப் பேச்சைத் தொடங்கினாள் தாய். ”யார் என்ன என்ன செய்தார்கள் என்பதை அறிவதில் தான் இவர்கள் நேரத்தைப் போக்குகிறார்களே தவிர, ஏன் அப்படிச் செய்தார்கள் என்பதை அறிய விரும்பவில்லை. இவர்கள் எல்லாம் கிழட்டு ஆசாமிகள், இளைஞர்களை இளைஞர்களைக் கொண்டுதான் விசாரிக்க வேண்டும்.”

“ஆமாம்” என்றான் சிஸோவ், ‘இந்த விவகாரத்தை நாமெல்லாம் புரிந்து கொள்வது சிரமம்தான் – படுசிரமம்!” அவன் ஏதோ யோசித்தவாறே தலையை ஆட்டினான்.

காவலாளி நீதிமன்றத்தின் வாயிற் கதவைத் திறந்து விட்டுவிட்டு, வாய்விட்டுக் கத்தினான்.

“உறவினர்களே! உங்கள் அனுமதிச் சீட்டுக்களைக் காட்டுங்கள்!”

“சீட்டுக்கள்!” என்று யாரோ குத்தலாகச் சொன்னார்கள். ”இதென்ன சர்க்கஸ் காட்சியா?”

ஜனங்களிடம் ஓர் உள்ளடங்கிய எரிச்சல் குணம் லேசாக வெளித்தோன்றியது. அவர்கள் மிகுந்த இரைச்சலோடு பேசினார்கள் , அரட்டையடித்து காவலாளிகளோடு விவாதம் செய்து கொண்டிருந்தார்கள்.

(தொடரும்)

கோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.

கார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.

’தாய்’ நாவல் அச்சு நூல் கிடைக்குமிடம்:

சென்னையில் கீழைக்காற்று வெளியீட்டகத்திலும் கிடைக்கும்.

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

பக்கங்கள்: 536
விலை: ரூ.200.00
பதிப்பகம் : தோழமை வெளியீடு

முந்தைய பகுதிகள்:

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – தொடர்

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க