“சமத்துவமில்லாமல் செல்வம் சேருவது நாட்டின் சமூக கட்டமைப்புக்கு அச்சுறுத்தலாக அமையும்” என்கிறது திங்கள்கிழமை வெளியான ஆக்ஸ்ஃபாம்  சமத்துவமின்மைக்கான 2019 அறிக்கை. “செல்வம் சேர்ப்பதில் அதிக அளவிலான வேறுபாடு ஜனநாயகத்தையே சீர்குலைக்கக்கூடியது” என்றும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

உலகம் முழுமைக்குமே அதிக செல்வம் உள்ளவர்களிடம் அதிகப்படியான செல்வம் சேர்வதும், பரம ஏழைகளும் மேலும் ஏழ்மையான நிலைக்கு தள்ளப்படுவது பொதுவான ‘டிரெண்டாக’ உள்ளது என்கிறது ஆக்ஸ்ஃபாம் அறிக்கை.  கடந்த ஆண்டு மட்டும் உலக அளவில் 3.8 பில்லியன் மக்கள், அதாவது வறுமையின் பிடியில் இருந்த மக்கள் தொகையில் பாதிபேர் 11% கீழ் நிலைக்குச் சென்றனர். அதே சமயம், 2017-2018 காலக்கட்டத்தில் இரண்டு நாட்களில் ஒரு புதிய பில்லினியர் உருவாகிக்கொண்டிருந்தார்.  2018-ம் ஆண்டு 26 செல்வந்தர்கள் உலகின் சரிபாதி 308  பில்லியன் ஏழைகளின் ஒட்டுமொத்த செல்வத்துக்கு ஈடான செல்வ வளத்தை பெற்றுள்ளனர்.

இந்தியாவில், 1% உள்ள செல்வந்தர்களின் செல்வ வளம் 39% அதிகரித்துள்ளது. ஆனால், மக்கள் தொகையில் சரிபாதியானவர்,  50% பேர் 3% வளர்ச்சியை மட்டுமே அடைந்திருக்கின்றனர்.  கடந்த ஆண்டு மட்டும் 18 புதிய பில்லியனர்கள் இந்தியாவில் உருவாகியிருக்கிறார்.  ஒட்டுமொத்தமாக உள்ள 119 பில்லியனர்கள் மட்டும், இந்தியாவின் 2018-19 பட்ஜெட் தொகையான ரூ. 24,42,200 கோடிக்கும் அதிகமான செல்வத்தை கையகப்படுத்தி வைத்துள்ளனர்.

இந்தியாவின் செல்வந்தர்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ள முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு, நாட்டின் மொத்த வருமானம், மத்திய, மாநில அரசுகள் பொது சுகாதாரம், துப்புரவு மற்றும் குடிநீர் விநியோகம் போன்றவற்றுக்கு செய்யும் மூலதன செலவைவிட அதிகம் என்கிறது இந்த அறிக்கை.

சமத்துவமின்மை பாலின ஒடுக்குமுறையானதும்கூட!

இந்த அறிக்கையில் பெண்களின் பணி குறித்து சிறப்பு கவனத்தை செலுத்தியிருக்கிறது. பெண்கள்  எப்படி ஏழ்மையிலும் ஏழ்மையாக இருந்துகொண்டிருக்கிறார்கள் என அறிக்கை விவாதிக்கிறது. சமத்துவமின்மை பாலின ஒடுக்குமுறையானதுகூட என அந்தப் பகுதிக்கு தலைப்பிடப்பட்டிருக்கிறது. உலக அளவில்  23% குறைவான பணம் ஈட்டும் பெண்களைக் காட்டிலும் மொத்த செல்வ வளத்தில் 50% அதிகமானதை ஆண்கள் பெற்றிருக்கிறார்கள் என்கிற ஐ.நா.வின் பெண்கள் அறிக்கையை சுட்டிக்காட்டுகிறது ஆக்ஸ்ஃபாம்.

படிக்க:
ரஜினி படம் குறித்து வாய் திறக்க மாட்டேன் ! அம்பலப்பட்ட எச். ராஜா ! மரணமாஸ் ஆடியோ !
என்னுடைய நம்பிக்கை நொறுங்கிய நிலையில் இருக்கிறேன் : ஆனந்த் தெல்தும்ப்டே கடிதம்

இந்தியாவைப் பொருத்தவரை, ஒரே விதமான பணிக்கு பெண்கள் இப்போதும் ஆண்களைவிட 34% குறைவான சம்பளத்தையே பெறுகிறார்கள் என்றும் இந்த அறிக்கை கோடிட்டு காட்டுகிறது.  பெண்களின் ஏற்றுக்கொள்ளப்படாத, சம்பளம் தரப்படாத பராமரிப்பு பணிகளை உலக அளவில் கணக்கிட்டால் , ஆப்பிள் நிறுவனத்தின் 10 ட்ரில்லியன் டாலர் ஆண்டு வருமானத்தைவிட 43 மடங்கு அதிகமாக வருகிறது என அறிக்கை சொல்கிறது.

செல்வந்தர்களில் செல்வந்தர்களுக்கான வரி சலுகைகள்!

செல்வந்தர்கள் மற்றும் கார்ப்பரேட்களுக்கு வழங்கப்படும் வரி சலுகைகள் கடந்த பத்தாண்டுகளைவிட தற்போது மிகவும் குறைவாக உள்ளது என்பதை அறிக்கை சொல்கிறது. முன்னெப்போதும் இல்லாத அளவிலான வரி தவிர்ப்பும் வரி ஏய்ப்பும் செல்வந்தர்கள் மிகக் குறைந்த  அளவிலான வரி செலுத்த காரணமாகிறது எனவும் ஆக்ஸ்ஃபாம் சுட்டிக்காட்டுகிறது.

“அவமதிப்பிற்குரிய புதிய தாராளவாத கொள்கையைக் கடந்து, அறத்தின் அடிப்படையில் இதை நியாயப்படுத்தவே முடியாது.” என கடினமான வார்த்தைகளிலும் செல்வந்தர்களின் வரி ஏய்ப்பு குறித்து கருத்து சொல்கிறது. செல்வந்தர்களில் செல்வந்தர்கள் 7.6 ட்ரில்லியன் டாலர்கள் அளவிலான பணத்தை வரி ஏய்ப்பை செய்வதாகவும் கார்ப்பரேட்டுகள் தங்களுடைய பணத்தை வரி ஏய்ப்பு செய்வதற்காக போலி நிறுவனங்களில் பெயர்களில் மறைத்து வைப்பதாகவும் அறிக்கை கூறுகிறது.

இந்தியாவின் சமத்துவமின்மை வர்க்கம், சாதி, பாலின அடிப்படையிலானது!

இந்தியாவில் சமத்துவமின்மை வர்க்க அடிப்படையிலானது மட்டுமல்ல, சாதி ரீதியிலானது, பாலின அடிப்படையிலானது என்கிறது ஆக்ஸ்ஃபோம். “ஒரு தலித் பெண்ணின் வாழ்நாள், உயர்சாதி பெண்ணின் வாழ்நாளைவிட 14.6 ஆண்டுகள் குறைவு” என சமத்துவமின்மை இந்தியாவின் மனித வளத்தையும் காவு வாங்குவதை அழுத்தமாகச் சொல்கிறது.

பொது சேவையை தனியார்மயமாக்குதலும் நிதி ஒதுக்கீட்டை குறைப்பதும் பாலின சமத்துவமின்மையை ஏற்படுத்தி பெண்களுக்கு எதிரான வன்முறையைத் தூண்டுகின்றன.  ஊதியமில்லா பராமரிப்புப் பணிகள், பெண்கள் மற்றும் பிற ஒடுக்கப்பட்ட குழுக்களுக்கான நிதிஒதுக்கீட்டில் சமத்துவமின்மையும் ஊழலும் இந்தியாவின் செல்வ வளத்தில் சமத்துமின்மை அதிகரிக்கக் காரணம் என்கிறது அறிக்கை.

ஊதியமில்லா பணிகளுக்கு ஒரு நாளில் ஆண்கள் வெறும் 30 நிமிடங்களே செலவழிக்கிறார்கள் என்றும் பெண்கள் 3 மணி நேரம் செலவழிக்கிறார்கள் என்றும் இதுவே பெண்கள் பணியில் சேர்ந்து மதிப்பான சம்பளம் வாங்குவதற்கு தடையாக இருப்பதாகவும் முக்கியமான காரணத்தை அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. “ஊதியமில்லா சேவை, பொருளாதாரத்தின் பெரும்பகுதியாக மறைத்து வைக்கப்பட்டிருக்கும் மானியம். இது துல்லியமான பொருளாதார ஆய்வில் கண்டுகொள்ளப்படுவதில்லை.” என்கிறது ஆக்ஸ்ஃபாம்.

பொய் பிம்பங்களின் மறுபுறம்!

இந்தியாவின் கிராமப்புற மருத்துவ சேவை மிக மோசமான நிலையில் இருப்பதை அறிக்கை சொல்கிறது. ஆயிரம் பேருக்கு 0.7 மருத்துவர்களே உள்ளனர். இங்கிலாந்தில் ஆயிரம் பேருக்கு 2.8 மருத்துவர்கள் மருத்துவம் பார்க்கின்றனர். முக்கியமாக இந்தியாவின் மருத்துவ இன்ஷூரன்ஸ் திட்டங்கள் தோல்வியடைந்தவை.  மோடியின் ஆயுஷ்மான் பாரத் திட்டமும் இதில் அடங்கும். அதோடு இந்த அறிக்கை மிக மோசமான மருத்துவ மோசடியையும் அம்பலப்படுத்துகிறது.  ‘உலகத்தரத்திலான மருத்துவம் குறைந்த விலையில்’ என அரசு விளம்பரப்படுத்தப்படும் மருத்துவ சுற்றுலாவில் இந்தியா ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. அதேவேளையில் தன் சொந்த மக்களின் நலனில் அக்கறை செலுத்துவதில் மொத்தமுள்ள 195 நாடுகளில் 145-வது இடத்தில் இருக்கிறது இந்தியா!

அதுபோல, தனியார் கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கையே கெடுபிடியாக உள்ள நிலையில், அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை, குறிப்பாக மாணவிகள் சேர்க்கை குறைந்து கொண்டே வருவதாகவும் ஆய்வறிக்கை சுட்டுகிறது. அரசின் கண்டுகொள்ளாத்தனமே இதற்கு காரணம் எனவும் அதில் சொல்லப்பட்டுள்ளது.

அரசுக்கான பரிந்துரைகள்

பல்வேறு பிரிவுகளில் நிலவும் சமத்துவமின்மையை சுட்டிக் காட்டியிருக்கிற ஆக்ஸ்ஃபாம் அறிக்கை, சில பரிந்துரைகளையும் செய்துள்ளது. இந்தியாவில் உள்ள 1% செல்வந்தர்களிடம் 0.5 % வரி பிடித்தம் செய்தால், அரசு பொது சுகாதாரத்துக்காக செலவிடும் தொகையில் 50% எளிதாக அதிகரிக்க முடியும்.

பொதுசுகாதாரத்தின் தரத்தை அதிகப்படுத்துதல், கல்வி உரிமையை கட்டாயமாக்குதல், கல்வி மற்றும் சுகாதாரத்தில் வணிகமயமாக்கலை கைவிடுதல், பாலின அடிப்படையிலான நிதி ஒதுக்கீடு போன்றவற்றை பலப்படுத்தவும் பரிந்துரைக்கிறது ஆக்ஸ்ஃபாம்.

“சாதி, வர்க்கம், பாலின அடிப்படையிலான பொருளாதார சமத்துவமின்மையை சீர்செய்ய போர்க்கால அடிப்படையிலான நடவடிக்கை தேவை. அரசு மிகப் பெரும் செல்வந்தர்களிடமும் கார்ப்பரேட்டுகளிடமும் வரி பிடித்தம் செய்து உண்மையான மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும். அந்த வரிப்பணத்தில் பொது சுகாதாரத்தையும் கல்வியை பலப்படுத்த வேண்டும். ஒரு சிலருக்காக மட்டுமல்ல, அரசு அனைவருக்கும் சிறப்பான எதிர்க்காலத்தை கட்டமைத்து தரவேண்டும் ”  என்கிறார் ஆக்ஸ்ஃபாம் இந்தியாவின் செயல் அதிகாரி அமிதாப் பெஹர்.

அறிக்கை என்னவோ, சமூகத்தின் உண்மை நிலையை பிரதிபலிப்பதாகவே உள்ளது. ஆனால், சமத்துவமின்மையை சரிபடுத்த வேண்டிய அரசு, மேலும் மேலும் சமத்துவமின்மையை ஆழப்படுத்தவே பார்க்கிறது.  நான்கரை ஆண்டுகால மோடி அரசு கார்ப்பரேட்டுகள், அம்பானி, அதானிகளுக்காகத்தான் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது என்பதை அரசியல் அறிவில்லாதவரும் அறிந்து வைத்திருக்கிறார்கள். இந்துத்துவ மனுவின் வாரிசுகள் பெண்களை படிதாண்டக்கூடாது என்பதையே வெவ்வேறு விதங்களில் வலியுறுத்தி வருகிறார்கள். இவர்களால் எப்படி உழைப்புச் சுரண்டலிலிருந்து பெண்களை மீட்க முடியும்? ஜனநாயகத்தின் படியேதான் இந்த பாசிச ஆட்சியாளர்கள் ஆட்சியில் அமர்ந்திருக்கிறார்கள் எனும்போது, இந்த ஜனநாயக அமைப்பு சமத்துவமின்மைக்கு முடிவு கட்டுமா?


கலைமதி
செய்தி ஆதாரம்:  த வயர் 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க