நாம் இதற்கு முன்பு பேசிய உணவுமுறை அனைத்தும் அனைவருக்கும் பொதுவானவை அதாவது சர்க்கரை நோய் உள்ளவர்கள், இல்லாதவர்கள் மாரடைப்பு உள்ளவர்கள் இல்லாதவர்கள் என அனைவருக்குமானது. அந்த வகையில் இன்று நாம் பார்க்கவிருப்பது, சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்களுக்கான உணவு முறை.

சிறுநீரக பாதிப்பிற்குப்பின் நீங்கள் மருத்துவரிடம் செல்கிறீர்கள் என்றால் உடனே அவர் உங்களுக்கு உப்பு சத்து அதிகமாக உள்ளது என்று கூறுவார், அதைத்தொடர்ந்து நீங்கள் மருத்துவர் கூறி விட்டார் என்பதற்காக உணவில் உப்புச் சுவையை குறைத்துக் கொள்வீர்கள் இது தவறான ஒரு செயல்.

நம் உணவில் இருக்கக்கூடிய உப்பானது சோடியம் ஆகும். இந்த உப்பு சத்து இல்லாமல் நமது உடலில் உள்ள எந்த செல்களும் இயங்காது மருத்துவர் கூறிய உப்பானது இந்த உப்பு அல்ல அவர் கூறியது யூரியா கிரியாட்டினின் இந்த வகையான உப்பு. இந்த வகையான உப்பு நம் உடலில் உண்டாகும் கழிவுகளிலிருந்து உற்பத்தியாகக் கூடியது. இந்த வகையான உப்பை நமது சிறுநீரகத்தால் வெளியேற்ற முடியவில்லை. ஆகையால் இது நம் ரத்தத்தில் கலக்கிறது இந்த உப்பு சோடியம் வகை ஆகாது.

இந்த இரண்டையும் பிரித்துப் பார்க்காமல் நம் உணவில் உப்புச் சுவையை சேர்க்காமல் இருப்பது நம் உடலை மேலும் வலுவிழக்கச் செய்யும். இந்த சிறுநீரக நோய்க்கு பல படிநிலைகள் உண்டு. ஒவ்வொரு நிலையிலும் ஒவ்வொரு வகையான உணவு பழக்கங்களை நாம் பின்பற்ற வேண்டும். அனைத்து படிநிலைக்கும் பொதுவான ஒரு உணவுப் பழக்கம் ஒன்று கிடையாது. உதாரணத்திற்கு கிரியாட்டினின் அளவு இரண்டு புள்ளியை தாண்டினால் மருத்துவர் உணவில் உப்பு சுவை சேர்ப்பதை குறைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துவார். அது எந்த அளவு என்று நாம் அவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்வது நல்லது.

இன்னும் விரிவாக கூற வேண்டுமென்றால் சிறுநீரக கோளாறு உள்ள சில பேருக்கு சிறுநீரானது வழக்கத்திற்கு மாறாக அதிகமாக வெளியேறும். அதாவது, உடம்பில் உள்ள சோடியம் அதிக அளவு வெளியேறும். அந்த வகையானவர்கள் உணவில் அதிக உப்பு சுவையை சேர்த்துக் கொள்ள நேரிடும் இது மிகவும் சிக்கலாக தென்படுகிறது அல்லவா. ஆகையால் சிலபேருக்கு உப்பு சுவையை குறைத்து சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும், சிறுநீரகம் மூலம் சோடியம் அதிகம் வெளியேறும் நபர்களுக்கு உப்புச் சுவையை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது. நாம் எந்த படிநிலையில் உள்ளோம் என்பதைப் பொறுத்து இது மாறுபடும். ஆகையால் பொதுவாக உப்பில்லாமல் உணவை சேர்த்துக் கொள்வது என்பது தவறான செயல். இது முதலில் நாம் தெளிய வேண்டிய ஒன்று.

இரண்டாவது வகையான உப்பு பொட்டாசியம். இதுவும் நம் உடலில் அவசியமான ஒன்றாகும். ஆனால், குறிப்பிட்ட அளவைவிட இது அதிகமாக இருத்தல் கூடாது. பொட்டாசியமானது நம் உடலில் இருந்து வெளியேற இரண்டு வழிகள்தான் உள்ளது. ஒன்று, சிறுநீரகம் மூலம் வெளியேறுவது மற்றொன்று மலம் கழிப்பதன் மூலம் வெளியேறுவது. நம் உணவில் பொட்டாசியம் எதிலெல்லாம் அதிக அளவு உள்ளதோ அதை நாம் முடிந்த அளவு குறைத்துக் கொள்வது நல்லது. முழுதாக பொட்டாசியம் உள்ள உணவுகளை சேர்க்கக்கூடாது என்று நாம் கூறவில்லை. உதாரணத்திற்கு காய்கறி, பழங்கள், இளநீர் ஆகியவற்றில் கூட பொட்டாசியம் உள்ளது. இதை நாம் முழுவதும் தவிர்க்கப்போவது கிடையாது. எந்த அளவு என்பதைத்தான் நாம் முறைப்படுத்திக் கொள்ள வேண்டும். அவ்வாறு மருத்துவர் கூறும் உணவுப் பொருட்களை குறிப்பெடுத்துக் கொள்வது நல்லது. சிறுநீரகக் கோளாறு கொண்டவர்களுக்கு மலச்சிக்கல் இயல்பாக இருக்கக்கூடியதாகும்.

மலச்சிக்கல் அனைவருக்கும் பொதுவானது எனினும் சிறுநீரக கோளாறு கொண்டவர்கள் அது இயல்பான ஒன்றாக அமையும். ஆதலால் மலச்சிக்கல் நீங்க வேண்டும் என எண்ணி வாழைப்பழம் போன்றவற்றை நாம் எடுத்துக் கொள்வதுண்டு. ஆனால், அதில் பொட்டாசியம் அதிகமாக உள்ளது. எனவே எவற்றிலெல்லாம் பொட்டாசியம் அதிகம் உள்ளது எவற்றில் குறைவு என்பதை நாம் கணக்கில் கொள்ள வேண்டும்.

படிக்க :
♦ சர்க்கரை நோய் – உடல்பருமனை கட்டுப்படுத்துவது சரிவிகித உணவா – பேலியோ உணவா ? மருத்துவர் BRJ கண்ணன்
♦ சர்க்கரையின் அறிவியல்

அடுத்ததாக, பாஸ்பரஸ். இதைப்பற்றி பெரிதும் குழம்பிக் கொள்ள வேண்டாம். எந்த வகை உணவுகளில் பொட்டாசியம் அதிக அளவு உள்ளதோ, அதே உணவுகளில் பாஸ்பரசும் அதே அளவு இருக்கும். நாம் உண்ணும்போது நம் உடலானது இதை எந்த அளவுக்கு உள் வாங்கிக்கொள்ளும் என்பதற்கு ஏற்றவாறு மருத்துவர் நமக்கு மருந்துகளை கொடுப்பார். அவற்றை நாம் தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும்.

அடுத்து நாம் பார்க்கவிருப்பது புரதம். பொதுவாக சிறுநீரகக் கோளாறு உள்ளவர்களுக்கு ஒரு பொய்யான தகவல் பரப்பப்படுகிறது. புரதம் குறைவாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் அது. நாம் அன்றாடம் சொற்ப அளவுதான் உணவில் புரதம் எடுத்துக் கொள்கிறோம். உதாரணத்திற்கு, இட்லி – தோசை ஆகியவற்றில் இரண்டு கிராம்தான் புரதம் உள்ளது. அடுத்து அரிசியில் 100 கிராமில் 3 கிராம்தான் புரதம் உள்ளது. சிறுதானியங்கள் 100 கிராமில் 10 கிராம் புரதம் உள்ளது. அசைவ உணவுகளில் இது 25 கிராம் உள்ளது. மாமிச உணவுகளில் அதிக அளவு புரதம் உள்ளது. வெளிநாடுகளில் அவர்களது அன்றாட உணவில் போர்க், முட்டை என மாமிசங்களை சேர்த்துக் கொள்கிறார்கள், ஆகையால் அவர்களுக்கு சிறுநீரகக் கோளாறு ஏற்படும்போது புரதம் குறைவாக எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப் படுவது சரிதான். நம்மைப் பொருத்தவரை ஏற்கனவே புரதம் குறைவாக உண்கிறோம் சராசரியாக ஒரு கிலோ எடைக்கு ஒரு கிராம் புரதம் என்ற விகிதத்தில் நம் உடலில் புரதம் சேர வேண்டும்.

ஆனால் நாம் உண்ணும் உணவில் அந்த அளவிற்கு புரதம் இல்லை. ஒரு கை நிறைய பருப்பை உண்டால்தான் அது 40 கிராம் புரதத்தை நம் உடலில் சேர்க்கும். நாம் அவ்வளவு உண்பதில்லை. சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர் என்றால் 60 கிலோ உடலுக்கு 60 கிராம் புரதம் என்பது சராசரியான அளவு. இது இவர்களுக்கு 40 கிராம் என்று குறையும். இந்த 40 கிராம் நம் உடலில் சேர்வது கடினமான ஓர் இலக்கு. இவர்களிடம் இதையும் குறைக்குமாறு அறிவுறுத்துவது சிக்கலை உண்டாக்கும். ஏனென்றால் நாம் ஏற்கனவே குறைவான புரதம்தான் உண்டு வருகிறோம். ஆகவே எந்த அளவிற்கு நம் உடலில் புரதச்சத்து உள்ளது என்பதை கண்டறிந்து அதற்கேற்றவாறுதான் உணவுப் பழக்கத்தை மாற்றிக்கொள்ள வேண்டும். இவ்வாறு பரிசோதித்த பின் சிலருக்கு புரதச் சத்தானது, மேலும் தேவைப்படுவதாக இருக்கலாம். உதாரணத்திற்கு, நான் மேலே கூறியது போல் ஒரு கிலோ எடைக்கு 1.3 கிராம் புரதம் தேவைப்படலாம்.

ஆனால் சிலர் புரதச் சத்தை குறைத்துக்கொள்ள அறிவுறுத்துவது தவறான செயலாகும். ஆகையால் சிறுநீரகம் பாதிப்படைந்தவராக இருந்தாலும் சராசரியாக 40 கிராம் புரதம் தேவைப்படுகிறது சிறுநீரக நோய் முற்றிப்போய் டயாலிசிஸ் நிலையில், மேலும் புரதம் தேவைப்படுகிறது. நோய் முற்றிப்போய் இறக்கும் நபர்களுக்கு புரதச்சத்து குறைபாடு முக்கியமான ஒன்று என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அடுத்ததாக, தண்ணீர் எந்த அளவிற்கு உட்கொள்ள வேண்டும் என்பதை பார்ப்போம். சாதாரண மக்களுக்கு இதில் எந்த கட்டுப்பாடும் இல்லை. ஆனால் சிறுநீரகம் பாதிக்கப்பட்டோர் தன் உடலில் எந்த அளவிற்கு நீர் வெளியேறுகிறதோ அதைவிட 200-300 மில்லி ஏனும் அதிகம் உட்கொள்ள வேண்டும். உதாரணமாக ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு ஒரு லிட்டர் சிறுநீர் வெளியேறுகிறது என்றால் ஒரு நாளைக்கு அவர் ஒரு லிட்டர், 300 மில்லி தண்ணீர் அருந்த வேண்டும். ஆனால், முகம், பாதங்கள் வீங்கி, உடலும் நீர்க்கோர்வையால் பருத்து உள்ளதெனில் அவர்கள் குறைவான அளவு தண்ணீர் பருக வேண்டும். அப்போதுதான் அவர்கள் உடலில் உள்ள நீரானது வெளியேறும். இவ்வாறு உள்ளவர்கள் நாள் ஒன்றுக்கு ஒரு லிட்டர் சிறுநீர் வெளியேறுகிறது என்றால் 700 மில்லி தண்ணீர் அருந்தினால் போதுமானது. இதுவும் மருத்துவர் ஆலோசனைப்படி அமைய வேண்டும்.

நாம் கூறியதை தொகுப்பாகக் கூறவேண்டுமெனில் முதலில் உப்பை தேவை இல்லாமல் குறைக்கக் கூடாது. பொட்டாசியம் அளவு சரியாக உட்கொள்ள வேண்டும். பாஸ்பரஸ் நம் உடலில் சேர்வதை கவனமாக கணக்கில் கொள்ள வேண்டும். புரதச்சத்து உணவுகளை தேவை இல்லாமல் குறைக்கவும் கூடாது, அதிகப்படுத்தவும் கூடாது. தண்ணீர் முறையான கணக்கீட்டின்படி பருக வேண்டும். இதுவும் நாம் எந்த நிலையில் அதாவது எந்த படிநிலையில் உள்ளோம் என்பதை பொருத்து அது அமையும்.

அதை உங்கள் மருத்துவரே தீர்மானிப்பார். இந்த ஒட்டுமொத்த கருத்து உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.

காணொளியைக் காண

நன்றி: மருத்துவர் BRJ கண்ணன்,
இதயத்துறை மருத்துவர், (Senior Interventional Cardiology)
வடமலையான் மருத்துவமனை, மதுரை.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க