எழுத்தாளர் அ. முத்துலிங்கம்
வர் உயர் படிப்பு படிக்கும் மாணவி. அவரைச் சந்திப்பதற்கு தொலைபேசியிலும் மின்னஞ்சலிலும் முயற்சி செய்தேன். அவர் என்னை சந்திப்பதற்கு விரும்பவில்லை என்பதல்ல; அவருடைய வகுப்பு நேரங்கள் அப்படி. சிலநாட்களில் அதிகாலையில் வீட்டை விட்டுக் கிளம்பிவிடுவார். சில நாட்கள் அவர் திரும்ப இரவு ஒன்பது மணியாகிவிடும். இன்ன நாள் சந்திப்போம் என ஒரு தேதி தருவார், பின்னர் அவசரமாக அதை மாற்றுவார். இறுதியில் ஒருநாள் காலை 9 மணிக்கு சந்திப்பதாக ஏற்பாடு. அவருடைய வகுப்பு 10.30-க்கு. அதற்கிடையில் என்னுடைய சந்திப்பை முடிக்கவேண்டும்.

அவர் கனடாவிற்கு வந்து குடியேறிய ஆப்பிரிக்கப் பெண். பெயர் மாரியாட்டு கமாரா. அவர் எழுதிய புத்தகம் “The Bite of the Mango” சில மாதங்களுக்கு முன்னர் வெளிவந்து பத்திரிகைகள் எல்லாம் அதுபற்றி சிறப்பாக எழுதியிருந்தன. உள்நாட்டுப் போரில் கலகக்காரர்கள் அவருடைய இரண்டு கைகளையும் துண்டித்துவிட்டார்கள். அப்போது மாரியாட்டுவுக்கு 12 வயது. இந்த நூல் அவருடைய கதையை சொல்கிறது.  இப்படியான கொடிய தண்டனை கிடைப்பதற்கு அவர் என்ன குற்றம் செய்தார்  என்பது அவருக்கு புரியாத ஒன்று.

அவர் எழுதிய புத்தகத்தை படித்த நேரம் தொடங்கி மாரியாட்டுவை எப்படியும் சந்திக்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். அவரைச் சந்தித்த அன்று காலை  முதல் வேலையாக அவர் எழுதிய புத்தகத்தை நீட்டி அவருடைய கையெழுத்தை பெற்றேன். மணிக்கட்டோடு துண்டிக்கப்பட்ட இரண்டு கைகளையும் இணைத்து பேனையை நடுவில் செருகிக்கொண்டு புத்தகத்தில் இப்படி எழுதினார்:

‘குழப்பத்துக்கு மன்னிக்கவும். என்னை சந்திக்க வந்ததற்கு நன்றி.

அன்புடன்
மாரியாட்டு கமாரா’

மாரியாட்டு கமாரா

அப்படியே இரண்டு கைகளையும் சுழற்றி பேனையை என்னிடம் நீட்டினார். அவர் புத்தகத்தின் சரியான பக்கத்தை திருப்பியதும், பேனையை உரிய இடத்தில் நிறுத்தி எழுதியதும், அதை நழுவவிடாமல் இறுக்கிப் பிடித்ததும் ஒரு மந்திரவித்தைபோல கண் இமைக்கும் நேரத்தில் நடந்தது. அவருடைய கையெழுத்து என்னுடையதிலும் பார்க்க நல்லாகத்தான் இருந்தது.

ஆப்பிரிக்காவின் மேற்கு கரையோர நாடான சியாரா லியோனில் ஒரு பின்தங்கிய கிராமம். 1999ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12 வயதுச் சிறுமி மாரியாட்டு தன் சிநேகிதிகளுடன் பக்கத்துக்கு கிராமத்துக்கு புறப்படுகிறாள். அவள் கிராமத்தை நோக்கி பெரிய ஆபத்து வருவது அவளுக்கு தெரியாது. கலகக்காரர்கள் ஒவ்வொரு கிராமமாக பிடித்து  முன்னேறி வந்தார்கள். அவர்களுடைய நோக்கம் தலைநகருக்கு போய் ஆட்சியை கைப்பற்றுவது. என்னென்ன குரூரமான வழிமுறைகள் உள்ளனவோ அத்தனையையும் அவர்கள் பயன்படுத்தினார்கள்.

ஒரு கிராமத்தை  அவர்கள் முற்றுகையிடும்போது முதலில் உணவுப்பொருள்களை பறிமுதல் செய்வார்கள். குழந்தைகளையும் பெரியவர்களையும் ஈவிரக்கமில்லாமல் கொன்றுவிடுவார்கள். சிறுவர்களையும் சிறுமிகளையும் தங்கள் படையில் சேர்த்துக்கொள்வார்கள். அவர்களை பழக்குவது சுலபம். கட்டளைகளுக்கு கேள்வியில்லாமல் கீழ்ப்படிவதுடன் விசுவாசமாகவும் இருப்பார்கள்.

மாரியாட்டு திரும்பியபோது அவளுடைய கிராமம் கைப்பற்றப்பட்டுவிட்டது. படையினரில் ஒன்றிரண்டு பேர் மூத்தவர்கள், மீதிப் படையினர் அவளிலும் பார்க்க சற்று வயது கூடியவர்கள். மேல்சட்டை இல்லாமல், காக்கி கால்சட்டை மட்டுமே அணிந்து,  தோள்களில் மூன்று நான்கு துப்பாக்கிகளைக் காவியபடி உலாவினர். சிலருடைய கைகளில் நீண்ட கத்திகள். துப்பாக்கி குண்டு மாலைகள் அணிந்து ஏதோ களியாட்ட விழாவுக்கு போய்வந்தவர்கள்போல மகிழ்ச்சியாக காணப்பட்டார்கள்.

மாரியாட்டுவையும் அவளுடன் வந்த சிநேகிதிகளையும் கைகளைக் கட்டி இருத்தினார்கள். அவர்கள் கண்முன்னே பெரியவர்களை நிற்கவைத்து சுட்டுக் கொன்றார்கள். சிலரை கத்தியினால் வெட்டி சாய்த்தார்கள். ஒருவரை கல்லினால் அடித்துக் கொன்றார்கள். இருபதுபேரை குழந்தைகளுடன் ஒரு குடிசைக்குள் வைத்து பூட்டி அதற்கு நெருப்பு வைத்தார்கள். இதுவெல்லாவற்றையும் கதிகலங்கிப்போய் பார்த்தபடி தன் முறைக்காக மாரியாட்டு காத்திருந்தாள்.

African Child Soliders
மாதிரிப் படம்

தலைவன்போல காணப்பட்டவன் மாரியாட்டுவைப் பார்த்து ‘நீ போ, உனக்கு விடுதலை’ என்றான்.  அவளால் நம்பமுடியவில்லை. அவள் சிறிது தூரம் நடந்ததும் மறுபடியும் கூப்பிட்டு ‘ஒரு தண்டனை அனுபவித்துவிட்டு நீ உயிருடன் போகலாம்’ என்றான். ‘நீ நல்ல சிறுமி என்றபடியால் உனக்கு ஒரு தெரிவு இருக்கிறது. உன்னுடைய இரண்டு கைகளையும் வெட்டப் போகிறோம். எந்தக் கையை முதலில் வெட்டுவது என்பதை தீர்மானிக்கும் சலுகையை உனக்கு அளிக்கிறேன்.’ மாரியாட்டு மௌனமாக நின்றாள். ஒருவன் அவளை பிடிக்க, மற்றவன் அவள் வலது கையை பாறையோடு அழுத்திப் பிடித்து  மணிக்கட்டோடு வெட்டினான். வெட்டில் போதிய விசை இல்லாததால் இரண்டுமுறை வெட்டவேண்டி நேர்ந்தது. வெட்டப்பட்ட கை துள்ளிப் பறந்து நிலத்திலே விழுந்த பிறகும் துடித்தது. இடது கையையும் மூன்று வெட்டில் துண்டித்தார்கள். அவர்கள் பலமாகச் சிரித்து பெரிய வெற்றியை கொண்டாடுவதுபோல ஒருவருக்கொருவர் கைகொடுத்துக்கொண்டார்கள். ‘உன் கையை நாங்கள் வெட்டியது நீ வோட்டுப் போடக்கூடாது என்பதற்காக. நாங்கள் செய்ததை உன் ஜனாதிபதியிடம் போய் காட்டு.’ ஜனாதிபதி என்றால் என்ன என்று மனதுக்குள் கேட்டுக்கொண்டே மாரியாட்டு மயக்கம் போட்டு விழுந்தாள்.

ஒரு முழு இரவு மயங்குவதும் விழிப்பதுமாக காட்டுக்குள் கழித்தாள். நிறைய ரத்தம் பெருகி உடையை நனைத்துவிட்டது. வழி தெரியாமல் காட்டுக்குள் அலைந்து ஒரு குளத்தை கண்டுபிடித்தாள். மிருகங்கள் குடிப்பதுபோல படுத்திருந்து வாயால் உறிஞ்சி நீர் பருகினாள். அவள் கண்களில் ஒருவருமே படவில்லை. அந்த நேரம் கடவுளின் தூதுவன்போல நெடுப்பமான ஒரு மனிதன் தனியாக தோன்றினான். மாரியாட்டு தன்னை காப்பாற்றும்படி அவனிடம் கெஞ்சினாள்.  அவனுடைய தாயாரைக் கொன்றுவிட்டார்கள். அவனுடைய மனைவி புதருக்குள் ஒளித்திருந்தாள். அவன் மாரியாட்டுவிடம் ஒரு மாம்பழத்தை கொடுத்து ‘இதைச் சாப்பிடு. இந்தப் பாதையால் நீ நேரே போனால் ஆஸ்பத்திரி வந்துவிடும். அங்கே போ, இல்லாவிட்டால் செத்துப்போவாய்’  என்றான்.

படிக்க:
♦ வரலாறு : ஆப்பிரிக்க இனப் படுகொலைகளுக்கு காரணம் யார் ?
♦ என் ஆதித்தாயை கண்டுபிடித்தேன் | அ.முத்துலிங்கம்

மாரியாட்டு எப்படியோ ஆஸ்பத்திரியை அடைந்து அங்கேயிருந்து தலைநகரத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டாள். சிகிச்சை முடிந்த பிறகு அவளை அகதி முகாமில் சேர்த்துவிட்டார்கள். அவளைப்போல 400 சிறுவர் சிறுமிகள், எல்லோரும் கைகள் வெட்டப்பட்டவர்கள், அங்கே இருந்தார்கள். தங்குவதற்கு இடம் மட்டும்தான். பகல் நேரத்தில் கூட்டமாய் வெளியே போய் பிச்சை எடுப்பார்கள், இரவு சமைத்து உண்ணுவார்கள். இந்த உலகத்திலேயே 400 கையில்லா சிறுவர்களும் சிறுமிகளும் ஓர் இடத்தில் தங்கினார்கள் என்றால் அது அங்கேயாகத்தான் இருக்கும்.

மாரியாட்டுவின் பெற்றோர் அவளை சாலியே என்ற கிழவருக்கு  இரண்டாம் மனைவியாக ஏற்கனவே நிச்சயித்திருந்தனர். கிராமத்து வீட்டில் இந்த மனிதர் ஒருநாள் இரவு அவளை பலாத்காரம் செய்திருக்கிறார். சிறுமிக்கு விவரம் தெரியாத வயது. அகதி முகாமில் அவள் கர்ப்பம் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. முகாமை பார்வையிட வந்த பத்திரிகைக்காரர்கள் மாரியாட்டுவின் கதையை வெளிநாட்டு பத்திரிகைகளில் எழுதினார்கள். ‘கலக்காரர்கள் கைகளை வெட்டியதுமல்லாமல் சிறுமியை கர்ப்பமாக்கிவிட்டார்கள்’ என்ற தலைப்பின் கீழ் அவளுடைய படத்தையும் பிரசுரித்திருந்தார்கள். கனடாவில் பில் என்பவர் அந்தப் படத்தை பார்த்து பரிதாபப்பட்டு ஏதாவது செய்யவேண்டுமென தீர்மானித்தார். மாரியாட்டு கனடா வந்து சேர்ந்தததற்கு அவர்தான் காரணம்.

‘சிறுவயதில் இருந்து நிறைய இன்னல்கள் அனுபவித்துவிட்டீர்கள். நீங்கள் உங்களை ஆகக்கீழாக உணர்ந்த தருணம் எது?’

‘அகதி முகாமில் இருந்தபோதுதான். காலையில் நாங்கள் கூட்டமாக பிச்சையெடுக்க நகரத்திற்குள் செல்வோம். சிலர் ‘ஏ பிச்சைக்காரி’ என்று என்னை அழைத்து பிச்சை போடுவார்கள். நான் ஓர் ஏழைக் குடும்பதிலிருந்துதான் வந்தேன். ஆனாலும் நாங்கள் பிச்சை எடுப்பதை கேவலமாக நினைத்தோம். என் கைகளை வெட்டியபோது கூட நான் அவ்வளவு வேதனையை அனுபவித்தது கிடையாது.’

‘ஆகச் சோகமான தருணம் எது?’

‘அகதி முகாமில் எனக்கு ஆண் பிள்ளை பிறந்தது. நான் ஆசையாக அப்துல்  என்று பெயர் சூட்டினேன். பத்து மாதங்கள்தான் குழந்தை உயிர்வாழ்ந்தது. சத்தான உணவு இல்லாததால் இறந்துபோனது என்று சொன்னார்கள். நான் தற்கொலை செய்ய முயன்றேன், ஆனால் என்னை தடுத்துவிட்டார்கள். அந்த இழப்பு என்னால் தாங்கமுடியாததாக இருந்தது.’

‘கனடாவுக்கு வரமுன்னர் உங்களுக்கு கனடா பற்றி ஏதாவது தெரியுமா?’

‘ஒன்றுமே தெரியாது. அது பெரிய முன்னேறிய நாடு என்பது தெரியும். உப்புத்தூள் போல பனி பொழியும் என்று சொன்னார்கள்.’

‘யந்திரக் கை பொருத்த விருப்பப்படவில்லையா?’

‘எத்தனையோ தரம் கேட்டார்கள். இப்பொழுது தேவையில்லை. என் காரியங்களை நானே செய்கிறேன். மற்றவர்கள் உதவியை எதிர்பார்ப்பது இல்லை. சமைக்கிறேன், சாப்பிடுகிறேன், உடைமாற்றுகிறேன், தலை சீவுகிறேன், எழுதுகிறேன், கதவை பூட்டுகிறேன்.’

‘உங்கள் எதிர்காலத் திட்டம் என்ன?’

‘படிப்பை முடித்துவிட்டு முதுகலை பட்டம் பெறுவது. அதுதான் என் இலக்கு.’

‘அதற்கு பிறகு?’

‘நான் UNICEF-க்காக வேலை செய்கிறேன். போரினால் சீரழிந்த குழந்தைகளுக்காகவும், தாங்கள் என்ன செய்கிறோம் எனத் தெரியாமல் தீங்கிழைத்த குழந்தை போராளிகளின் சீர்திருத்தத்துக்காகவும் பாடுபடுவேன். நானூறு சிறுவர் சிறுமிகளின் கைகளை ஒரு காரணமும் இன்றி அவர்கள் வெட்டிக் குவித்தபோது உலகம் சும்மா பார்த்துக் கொண்டிருந்தது, குரல் எழுப்பவில்லை. நான் எழுப்புவேன்.’

‘இது மிகப் பெரிய பணி அல்லவா? இரண்டு கைகளும் இல்லாதது உங்களுக்கு இடைஞ்சலாக இருக்காதா?’

‘அவர்கள் என் கைகளைத்தான் எடுத்தார்கள். என் குரலை எடுக்கவில்லை.’

நன்றி :அ.முத்துலிங்கம்
எழுத்தாளர் முத்துலிங்கத்தின் இணைய தளம்

எழுத்தாளர் அறிமுகக் குறிப்பு:
இலங்கையில் கொக்குவில் என்ற சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்தேன். கொழும்பு பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானப் படிப்பை முடித்ததன் பின், இலங்கையின் சாட்டர்ட் அக்கவுண்டண்ட் படிப்பையும், இங்கிலாந்தின் சாட்டட்ர்ட் மனேஜ்மெண்ட் அக்கவுண்டண்ட் படிப்பையும் பூர்த்தி செய்து வேலை பார்த்தேன். பின்னர் ஐ.நாவுக்காக பல வெளிநாடுகளில் பணிபுரிந்தேன். 2000ம் ஆண்டில் ஓய்வு பெற்று கனடாவில் மனைவியுடன் வசிக்கிறேன். பிள்ளைகள் இருவர், சஞ்சயன், வைதேகி. வைதேகியின் மகள்தான் அடிக்கடி என் கதைகளில் வரும் அப்ஸரா.

அறுபதுகளில் எழுத ஆரம்பித்து சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், நேர்காணல்கள், நாடகங்கள், நாவல்கள் என எழுதியிருக்கிறேன்.

(அ.முத்துலிங்கத்தின் தளத்தில் வெளிவந்துள்ள கட்டுரைகளை அவரது அனுமதியுடன் இங்கே வெளியிடுகிறோம்.)

3 மறுமொழிகள்

  1. மரியாட்டு கமாராவின் கதை உருக்கமானது. நாம் இன்னும் உழைக்கவேண்டியிருக்கிறது, நிறைய படிக்கவேண்டியிருக்கிறாது. பரப்ப வேண்டியிருக்கிறது என புரிந்துகொள்கிறேன்.

    இந்த புத்தகத்தை தமிழில் படித்திருக்கிறேன். சட்டென்று நினைவுக்கு வரவில்லை. நினைவுக்கு வந்ததும் சொல்கிறேன். நினைவுக்கு வந்தால் இதைப் படிப்பவர்கள் சொல்லி உதவுங்கள்.

  2. நினைவுக்கு வந்துவிட்டது. “என்பெயர் மரியாட்டு” ‍ ஆனந்தவிகடன் வெளியீடு.

    The Bit of the Mango
    என் பெயர் மரியாட்டு
    ஆனந்த விகடன்
    விலை ₹ 110.

  3. மனது பதைபதைக்கிறது.. என்னவோ செய்கிறது. இவ்வளவு கொடூரமான மனிதர்களும் இந்த பூமியில் இருக்கிறார்களா எனும்போது என்னவோ செய்கிறது..

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க