காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் நடந்த தாக்குதலில் 45 இந்திய துணை இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலை வைத்து இந்துத்வ ஓட்டு வங்கி அரசியல் செய்யத் தொடங்கியுள்ளது காவி கும்பல்.  காஷ்மீரில் இந்திய இராணுவத்தின் அத்துமீறலையும், காஷ்மீர் மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்திய பத்திரிகையாளர், செயல்பாட்டாளர்கள் மீது இந்துத்துவ காவிகள் சமூக ஊடகங்களில் கடுமையான தாக்குதலை தொடுத்து வருகின்றனர்.

காஷ்மீர் மக்களின் நிலை குறித்து கட்டுரை எழுதியதற்காக பத்திரிகையாளர் பர்கா தத்தின் தொலைபேசி எண்ணை வாட்சப்பில் பரப்பி வருகிறது காவி கும்பல். தன்னை கொலை செய்வோம் என்றும் வன்கொடுமை செய்வோம் என்றும் ஆபாசமான படங்களுடன் பலர் செய்தி அனுப்பி வருவதாக பர்கா தத் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். பத்திரிகையாளர் ராவிஷ் குமார் மீதும் தாக்குதல் தொடுத்து வருகின்றனர்.

இதுபோல, அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பேராசிரியர்  பாப்ரி இஸட். பானர்ஜி  காஷ்மீரில் இந்திய ராணுவத்தின் அத்துமீறலை தனது முகநூல் பக்கத்தில் விமர்சித்திருந்த காரணத்தால் காவிகளால் அச்சுறுத்தப்பட்டுள்ளார். மட்டுமல்லாமல், இவர் மீது போலீசு வழக்கு பதிந்துள்ளது.

படிக்க:
கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை அரங்கேற்றியது மோடியே : சாமியார் பிராச்சி ஒப்புதல் வாக்குமூலம் !
கார்ப்பரேட் – காவி பாசிசம்.. எதிர்த்து நில் ! ஏன் இந்த மாநாடு ?

குவஹாட்டியில் உள்ள ஐகான் வணிகவியல் கல்லூரியில் ஆங்கில பேராசிரியராக பணியாற்றிவருகிறார் பாப்ரி. பிப்ரவரி 15-ம் தேதி தன்னுடைய முகநூல் பக்கத்தில், “45 வீரம் மிக்க இளைஞர்கள் தாக்குதலில் கொல்லப்பட்டது துயரமளிக்கிறது. இந்தத் தாக்குதல்  கோழைத்தனமான செயல். வீரர்களின் மரணம் எந்த இந்தியரையும் உடைத்துவிடக் கூடியது” என எழுதியுள்ள அவர், அதே நேரத்தில் இந்திய இராணுவத்தின் அத்துமீறல்களையும் விமர்சித்துள்ளார்.

“பாதுகாப்புப் படையில் காஷ்மீரி பெண்களை வல்லுறவு செய்கின்றனர், அவர்களை முடமாக்கி குழந்தைகள் கொல்கின்றனர். அவர்கள் வீட்டு ஆண்களை கொல்கின்றனர். ஊடகங்கள் தொடர்ந்து அவர்கள் மீது அவதூறு பரப்புகிறது. இத்தனையும் செய்துவிட்டு அவர்களிடம் பதிலடி இருக்காது என எதிர்பார்க்கிறீர்களா?” என அந்தப் பதிவில் எழுதியுள்ளார் பாப்ரி.

“இசுலாமிய தீவிரவாதமாக இருக்கலாம். ஆனால், அதைத் தூண்டியது இந்தியம், சனாதன தர்மத்தின் கோட்பாடு அது” எனவும் கடுமையாக விமர்சித்துள்ளார். கனடாவைச் சேர்ந்த செயல்பாட்டாளர் தாரிக் ஃபதே இந்தப் பதிவை பகிர, அது வைரலாகி இந்துத்துவ ட்ரோல்களின் தாக்குதலுக்கு ஆளாகியிருக்கிறார் பேராசிரியர்.

காவி ட்ரோல்கள் இந்தப் பதிவின் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அசாம் போலீசுக்கு தொடர்ந்து வற்புறுத்தியுள்ளனர்.  பிப்ரவரி 16-ம் தேதி, இந்தப் பதிவை எழுதிய காரணத்துக்காக தன்னை வல்லுறவு செய்யப் போவதாகவும் அடித்து கொல்லப் போவதாகவும் மிரட்டல் வருவதாக முகநூலில் எழுதினார். “எனக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால், அதற்கு இவர்களே முழு பொறுப்பு” என அதில் எழுதியிருந்தார்.

பேராசிரியருக்கு இந்துத்துவ குண்டர்கள் பகிரங்க மிரட்டல் விடுத்த நிலையில், குண்டர்களின் வலியுறுத்தலுக்கு உடனடியாக எதிர்வினையாற்றியுள்ளது அசாம் போலீசு. அதன் அடிப்படையில் திங்கள் கிழமை விசாரணைக்கு ஆஜராகும்படி பேராசிரியரிடம் சொல்லியிருக்கிறது.

காவி கும்பல் அதோடு நில்லாது, அவர் பணியாற்றிய கல்லூரிக்கு அவரை பணியிலிருந்து நீக்கும்படி தொடர்ந்து அச்சுறுத்தியுள்ளது. இதன் காரணமாக கல்லூரி நிர்வாகம் பேராசிரியரை பணி நீக்கம் செய்வதாக அறிவித்தது.  “இந்திய ராணுவம் குறித்து ஆட்சேபணைக்குரிய கருத்து சொன்னதால் உடனடியாக பணி நீக்குகிறோம்” என கல்லூரி வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.

பிப்ரவரி 16-ம் தேதி சந்த்மாரி காவல் நிலையத்தில் அவரை அழைத்து இந்தப் பதிவின் பின்னணி குறித்து விசாரித்ததாக த வயர் செய்தி தெரிவிக்கிறது. அதன் பின் அவர் விடுவிக்கப்பட்டார் எனவும் குறிப்பிடுகிறது.

விடுவிக்கப்பட்ட பின்னர், தான் இந்திய வீரர்களை அவமரியாதை செய்யவில்லை என ஊடகங்களிடம் அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் சமூக ஊடகங்களில் காவி குண்டர்களின் தாக்குதல் அதிகரிக்கவே, தன் குடும்பத்தை பாதிக்கும் என்பதால் வீட்டை விட்டுச் செல்வதாக கடிதம் எழுதியுள்ளார் பாப்ரி.

படிக்க:
காஷ்மீர் : ஊரடங்கு மட்டுமல்ல உள்ளத்தையும் அடக்கும் இந்திய அரசு !
காஷ்மீர் : இந்தியாவின் பாலஸ்தீனம் !

இந்த நிலையில், 17-ம் தேதியிலிருந்து அவரைக் காணவில்லை என தி இந்து நாளிதழ் தெரிவிக்கிறது. திங்கள்கிழமை விசாரணைக்கு வரவிருந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமையிலிருந்து அவரைக் காணவில்லை என போலீசு தரப்பு சொல்வதாக செய்தி வெளியிட்டிருக்கிறது அந்த நாளிதழ்.

போலீசு விசாரணைக்குப் பின் அவருக்கு என்ன நடந்தது என்பது குறித்து  எந்தத் தகவலும் இல்லை. கொலை மிரட்டல், கடத்தல் மிரட்டல் இருந்த நிலையில், போலீசு அதை கண்டுகொள்ளாமல் காவி குண்டர்களின் சமூக ஊடக அவதூறுகளின் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. இதைத்தான் பேராசிரியர் தனது முகநூல் பதிவில் சுட்டிக்காட்டினார். சமூக ஊடக காவி ட்ரோல்கள் ஆளும் நாட்டில் மாற்றுக்குரல் எழுப்புவோர் தூக்கி அடிக்கப்படுவார்கள் என்பதைத்தான் கடந்த ஐந்தாண்டுகாலமும் இந்தியா அனுபவித்து வருகிறது.


கலைமதி
நன்றி: த வயர், த இந்து

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க