வாழ்க்கை நவீனமாக மாறிவிட்டாலும் குழந்தைகளை வளர்ப்பது என்பது மேலும் மேலும் கடினமாகி வருகிறது. அதிலும் பள்ளிகளை தெரிவு செய்வதும், தெரிவு செய்த பள்ளிகளில் ஆசிரியர்கள் நல்ல முறையில் கற்பிக்கிறார்களா என்பதும் பெற்றோர்களின் நிரந்தரக் கவலைகளாகி விட்டன. கல்வியில் தனியார்மயம் ஏற்படுத்திய தீங்குகள் ஒருபுறமிருக்க, கல்வி – பள்ளி – ஆசிரியர் போன்ற கல்வியியல் வார்த்தைகள் வெறுமனே தேர்வில் வெற்றி பெறுவதற்கான குறியீடுகளாக மாறிவிட்டன.

குழந்தைகள் உலகில் சோவியத் நிபுணர்கள் மிகப்பெரும் சாதனைகளை படைத்திருக்கின்றனர். ஆரம்பப் பள்ளி ஒன்றில் பதினைந்து ஆண்டுகளாக பணியாற்றிய அமனஷ்வீலியின் அனுபவங்கள் ஒரு இனிமையான இசை ராகமாக இங்கே மீட்கப்பட்டிருக்கிறது. குழந்தைகளை சொந்த முறையில் சிந்திக்க வைப்பதும், கற்றுக் கொடுப்பதும், சரி தவறுகளை இங்கிதமாக உணர வைப்பதும் இன்னபிற அசாத்தியமான விசயங்களை இலகுவாகச் செய்கிறார் இந்த ஆசிரியர். இந்த ஆசிரியரிடமிருந்து நாம் – பெற்றோர்களும், ஆசிரியர்களும் – கற்றுக் கொள்ளவதற்கு நிறைய இருக்கின்றது. தொடர்ந்து படியுங்கள். இந்த பாகத்தில் அணிந்துரையும், நூலாசிரியரின் முன்னுரையும் இடம் பெறுகின்றன. அடுத்த பாகத்தில் இருந்து நூலின் அத்தியாயங்கள் ஆரம்பமாகும்.

– வினவு

 அணிந்துரை

ல்வா அலெக்சாந்தரவிச் அமனஷ்வீலியின் இந்நூலை ஒரு குறிப்பிட்ட வகையை மட்டும் சேர்ந்த நூலாகக் கருத முடியாது. எல்லாமே மிக எளிமையானதாகத் தோன்றக்கூடும் – நூலாசிரியர் தன் பல்லாண்டு நடைமுறைப் பயிற்சியின் அடிப்படையில், ஆறு வயதுக் குழந்தைகளுக்குப் படிப்பு சொல்லித்தரும் அனுபவத்தை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். வாசகரைப் பொறுத்தமட்டில் ஷ. அமனஷ்வீலி சாதாரண ஆரம்பப் பள்ளியாசிரியர். உண்மையிலோ இவர் பிரபல சோவியத் விஞ்ஞானி, மனோதத்துவ இயலில் டாக்டர் பட்டம் பெற்றவர், பேராசிரியர். ஆறு வயதுக் குழந்தைகளுக்குப் படிப்பு சொல்லித்தரும் முறைகளும் வழிகளும் இந்நூலில் சுட்டிக் காட்டப்படுகின்றன.

எழுதப் படிக்கவும் ஆரம்பக் கணிதத்தையும் சொல்லித்தரும் ஏராளமான முறையியல் சாதனங்கள், படங்கள் மற்றும் வரைபடங்களுடன் விளக்கப்பட்டுள்ளதானது இதற்கேற்றவாறு உள்ளது. நூலாசிரியரும் இவரது சகாக்களும் இவற்றை வெற்றிகரமாகப் பயன்படுத்தி, குழந்தைகள் அந்தந்தப் பாடங்களின் அடிப்படைகளை நன்கு கிரகிக்குமாறு செய்கின்றனர். இதில் வாசகரும் (குறிப்பாக ஆரம்பப் பள்ளியாசிரியரும் குழந்தைகளுக்கான தோட்டப் பள்ளியின் ஆசிரியரும்) கல்வி கற்பிப்பதற்கான ஏராளமான முறையியல் சாதனங்களைக் காணலாம். இவற்றை உருவாக்கியதில் எல்.எஸ். விகோத்ஸ்கி, டி.என். உஸ்னாட்ஸே, எல்.வி. ஸான்கோவ், பி.இ. ஹச்சாபுரீட்ஸே, டி.பி. எல்கோனின், வி.வி. தவீதவ் மற்றும் பல சோவியத் மனோதத்துவ வல்லுநர்களின் மனவியல் – ஆசிரியர் பயிற்சிக் கருத்துக்கள் பெரும் பங்காற்றின.

அப்படியென்றால், இந்நூல் ஒரு முறையியல் பாடநூல், ஆரம்பப் பள்ளியாசிரியர்களுக்கான பாடப் புத்தகம் என்று பொருளாகுமா? கிடையவே, கிடையாது. இந்நூல் உண்மையிலேயே ஒரு முழு கல்வியியல் காவியமாகும். அ.எஸ். மக்கா ரென்கோ எழுதிய கல்வியியல் காவியம் என்ற பிரபல நூலிற்குப் பின் காவிய நடையிலான கல்வியியல் எனும் வரையறுப்பிற்கு இவ்வளவு தூரம் பொருந்தி வரும் நூலை நான் பார்க்கவில்லை. ஷ.அ. அமனஷ்வீலியைப் பொறுத்த மட்டிலும் கூட இந்தப் படைப்பு வெறும் கல்வியியல் காவியம் மட்டுமின்றி கல்வியியல் இன்னிசையும் ஆகும்.

குழந்தைகளுடன் நூலாசிரியர் அமனஷ்வீலி.

நூலாசிரியர் குழந்தைகளுடன் கலந்து பழகும் ஒவ்வொரு தருணத்திலும் நுண்ணிய இன்சுவை மிக்க இசைநயம் ஒலிக்கிறது. தன் சின்னஞ்சிறு மாணாக்கர்களுடனான ஒவ்வொரு சந்திப்பையும் நூலாசிரியர், ”எண்ணற்றவகை மாறுபாடுகளையுடைய கல்வி எனும் இசைவெள்ளமாகக்” கருதுவது தற்செயலானதல்ல. ”ஒவ்வொரு பள்ளி நாளின் இன்னிசையும் என் காதுகளில் குழந்தைகள் போடும் சத்தமாக ஒலிக்கிறது” என்று எழுதுகிறார் ஷ.அமனஷ்வீலி.

குழந்தைகளின் மீதான அன்பு, குழந்தைகளின் மென்மையான இதயத்தின் பாலான நுட்பமான அணுகுமுறை ஆகியனதான் இந்நூலை எழுதத் தூண்டிய முக்கியக் காரணிகளாகும். குழந்தைகளின் மென்மையான இதயத்தைப் புண்படுத்துவது, ஒரு கவனமற்ற வார்த்தையால் அல்லது செயலால் காயப்படுத்துவது எளிது. திபிலீசி நகரில் ஷ.அ. அமனஷ்வீலி ஒரு வகுப்பை நடத்திக் கொண்டிருந்ததை நான் பார்க்க நேர்ந்தது. அவர் வகுப்பில் உள்ளவர்களைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டார். ஒரு சில குழந்தைகள் பதில் தெரியுமென கரங்களை உயர்த்தினர்.

படிக்க:
பொருளாதார அறிஞர்களின் நகரம் இலண்டன் : பொருளாதாரம் கற்போம் – 11
கார்ப்பரேட் – காவி பாசிசம்.. எதிர்த்து நில் ! ஏன் இந்த மாநாடு ?

தனக்கே உரித்தான பாணியில், மும்முரமாக நடந்து வந்த அமனஷ்வீலி ஒரு சிறுவனை அணுகி மெதுவாகச் சொல்கிறார்: ”தாத்தோ, மெதுவாக என் காதில் சொல்.” தாத்தோ உற்சாகமாக அவர் காதில் ஏதோ கிசுகிசுக்கிறான். ஷ. அ. அமனஷ்வீலி புன்முறுவலோடு கேட்டு, பின் அவனது தலையை அன்பாகக் கோதிவிட்டபடியே மிக மிக மெதுவாகக் கூறுகிறார்: ”தாத்தோ, எங்கே இன்னும் சிறிது யோசி, பார்க்கலாம்.” தாத்தோ தன் அடர்த்தியான கறுப்புப் புருவங்களை சுருக்கியபடியே ஆழ்ந்த சிந்தனையில் மூழ்குகிறான். இந்த சமயத்தில் ஆசிரியர் இன்னொரு சிறுவனின் அருகே நிற்கிறார், அவனோ எழுந்து நின்று உரக்க, உறுதியோடு பதில் சொல்கிறான்.

சமீபத்தில் எனக்கு தெரிந்த பெண்மணி ஒருவர் தன் ஐந்து வயதுச் சிறுமியைப் பற்றிச் சொன்னார்: ”நான் அறையில் நுழைந்து பார்த்தால் என் மகள் தான்யா எதைப் பற்றியோ யோசித்துக் கொண்டிருந்தாள், தன்னுள்ளேயே மிகவும் லயித்திருந்தாள். இரண்டு முறை நான் கூப்பிட்ட பின் தான் அவள் தன் நிலைக்கே வந்தாள். ‘என்ன யோசனை’ என்று நான் கேட்டேன். அவள் திடீரென பதில் சொன்னாள்: ’ஒன்றுமில்லை அம்மா, நான் என் விஷயமாக, குழந்தைகள் விஷயமாக சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்’….”

சோவியத் பதிப்பில் குழந்தைகள் வாழ்க நூல்

ஆம், குழந்தைகள் தம் விஷயங்களை, குழந்தைகள் விவரங்களைப் பற்றி சிந்திக்கின்றனர். அது இவர்களின் சின்னஞ்சிறு உலகம், பெரியவர்களாகிய நாம் இந்த உலகத்தினுள் நுழைவதே கடினம். ஆனாலும் நாம் இந்த உலகத்தினுள் நுழைய வேண்டும். இல்லாவிடில் பெரியவர்களின் உலகத்தை இவர்களுக்கு நம்மால் காட்ட முடியாது, எனவே இவர்களுக்கு அவசியமான சமூக அம்சங்களை அளிக்க முடியாது. நமக்கு உகந்த வழியில் இவர்களை வளர்க்க இயலாது. கட்டளைகள், அச்சுறுத்தல், நிர்ப்பந்தம் மூலம் இதைச் செய்ய முயலலாம் அல்லது ஷ. அ. அமனஷ்வீலி செய்வதைப் போல் குழந்தையின் எண்ணங்களுக்குள், குழந்தையின் நடவடிக்கைகளின் உட்பொருளினுள் ஆழப்புகுவதன் மூலம், குழந்தையின் உள்ளாற்றல்களைப் பயன்படுத்தி, அன்பு, பரந்த மனப்பாங்கு, நகைச்சுவை உணர்வு, துடியார்வம், எதார்த்தத்தை அறியும் ஆக்கபூர்வமான அணுகுமுறை ஆகியவற்றைத் தட்டியெழுப்பி இதைச் செய்யலாம்.

இந்த விஷயத்தில் ”தனக்கே உரித்தான, குழந்தைகள் விஷயம்” சிறுவனுக்கு ஒரு மகிழ்ச்சியாக மாறுகிறது, இதை ஆசிரியருடன் கூடிய விரைவில் பகிர்ந்து கொள்ள அவன் துடிக்கிறான். தமக்கு சுவாரசியமானவையும், முக்கியமானவையுமான எல்லாமே ஆசிரியருக்கும் சுவாரசியமானவை, முக்கியமானவை என்று குழந்தைகளுக்குத் தெரியும். ஆசிரியரின் எல்லா முடிவுகளும் நடவடிக்கைகளும் விவாதத்திற்கு அப்பாற்பட்டவை என்று கூற முடியாவிட்டாலும் அவருடைய உள்ளத்தில் போதனை முறை சம்பந்தமான ஆக்கபூர்வமான அணுகுமுறை  பொங்குகிறது. ஆசிரியரையும் குழந்தைகளையும் இணைக்கும் இழை, நூல் முழுவதும் ஓரிடத்தில் கூட அறுந்து போவதில்லை, நூலாசிரியரின் சிந்தனைகள் மற்றும் செயல்களின் பாலான வாசகரின் கவனம் ஒரு நிமிடம் கூடக் குறைவதில்லை.

படிக்க:
புதிய கல்விக் கொள்கையல்ல – கல்வி மறுப்புக் கொள்கை !
ஏன் வேண்டும் பொதுக்கல்வி? – பேரா லஷ்மி நாராயணன்.

ஆறு வயதுக் குழந்தைகளுக்குப் படிப்புச் சொல்லித் தருதல் எனும் ஒரு மிக முக்கிய, கடினமான பிரச்சினைக்கு இந்நூல் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. தற்போது சோவியத் நாட்டில், 1984 ஆம் ஆண்டு பொது மற்றும் தொழிற்கல்வி சீர்திருத்தத்தின்படி ஆறு வயதிலிருந்தே குழந்தைகளுக்கு கல்வி ஆரம்பமாகிறது. இதை எப்படி நடைமுறையில் செயல்படுத்துவது? இது குழந்தைகளுக்குப் பாதகமாக அமையாதா? இது அவர்களின் குழந்தைப் பருவத்திலிருந்து ஒராண்டைப் பிடுங்கி விடாதா? இப்பிரச்சினைத் தொடர்பாக சோவியத் நாட்டில் எழுபதாம் ஆண்டுகளில் பெரும் விவாதங்கள் நடைபெற்றன.

ஐந்து, ஆறு வயதுக் குழந்தைகளுக்குப் படிப்புச் சொல்லித்தருவதன் நோக்கம் குழந்தையின் வளர்ச்சியை வேகப்படுத்தி, முடுக்கி விடுவது அல்ல, மாறாக விரிவுபடுத்துவதே, அதாவது குழந்தைகளின் ஆன்மிக உலகைச் செழுமைப்படுத்தி, அவர்களின் அறிவாற்றலுக்கு ஊக்கமளித்து, கண்ணோட்டங்களை விரிவுபடுத்துவது தான் இதன் நோக்கமென இப்பணிக்குத் தலைமை தாங்கும் பேரவை விஞ்ஞானி அ. வி. ஸப்பரோ ஷட்ஸ் கோடிட்டுக் காட்டியுள்ளார்.

அ. வி. பெத்ரோவ்ஸ்கி,      சோவியத் யூனியன் ஆசிரியரியல் விஞ்ஞானப் பேரவை உறுப்பினர்.


முன்னுரை

ரம்பப் பள்ளியின் தயாரிப்பு வகுப்பில் (பல சமயங்களில் இதை பூஜ்ஜிய வகுப்பு என்கின்றனர்) உள்ள ஆறு வயதுக் குழந்தைகளுடன் ஆசிரியர் எப்படிக் கலந்து பழக வேண்டும் என்பது பற்றிய நூலை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன். இந்த ”அசாதாரண” மாணவர்களுடன் கடந்த 15 ஆண்டுகளாகக் கலந்து பழகிய அனுபவம் இந்நூலில் பொதுமைப்படுத்தப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் பெற்றோர்கள் சந்தேகப்பட்டனர் (”இந்த வயதில் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப வேண்டுமா?” என்றனர் அவர்கள்), ஒரு சில விஞ்ஞானிகள் மறுப்பு தெரிவித்தனர் (”எதற்கு அவசரம்? குழந்தைகளின் மன நிலை இதற்குத் தயாராயில்லை!” என்றனர் இவர்கள்)… ஆண்டுகள் உருண்டோடின, தயாரிப்பு வகுப்பு பற்றிய பிரச்சினை அரசு முக்கியத்துவத்தைப் பெற்றது.

பள்ளியில், நர்சரிப் பள்ளியில் அல்லது வீட்டுச் சூழ்நிலையில் ஆறு வயதுக் குழந்தைகளுக்குப் படிப்புச் சொல்லித் தர முடியுமா, இது அவசியமா என்று இந்நூலில் நான் நிரூபிக்கப் போவதில்லை. விஞ்ஞான அடிப்படையில், வாழ்க்கையே முன் வைக்கும் கோரிக்கைகளின் அடிப்படையில், படிப்பதன் மீது குழந்தைகளுக்கே இருக்கும் நாட்டத்தின் அடிப்படையில் இப்பிரச்சினை ஏற்கெனவே தீர்க்கப்பட்டு விட்டது. ஆறு வயதுக் குழந்தைகளுக்கு என் கருத்துப்படி எப்படிப்பட்ட பள்ளி வாழ்க்கையை அளிக்கலாம் என்பது பற்றி இந்நூலில் கூற விழைகிறேன்.

தமிழகத்தின் அங்கன்வாடி ஒன்றில் குழந்தைகள்.

இந்நூலை எழுதும் போது கீழ்க்காணும் கடமைகளை என் முன் வைத்துக் கொண்டேன்: ஆரம்பப் பள்ளியின், இயன்ற அளவிற்கு செகன்டரி பள்ளியின் முழுமையான முறை எனும் படிகத்தின் ஊடாக தயாரிப்பு வகுப்பை புரிந்து கொள்வது; ஆறு வயதுக் குழந்தையைப் பள்ளிச் சிறுவனாக மட்டும் காட்டாமல் (உண்மையில் இவனைப் பள்ளிச் சிறுவன் என்று கூறுவதே கடினம்) முதலில் இவனை, தன் பன்முக வாழ்வைக் கொண்ட, சுற்றியுள்ளவர்களுடன் – சிக்கலான பரஸ்பர உறவுகளையுடைய ஒரு வளரும் மனிதனாகக் காட்டுவது; இதற்கேற்றபடி, ஒவ்வொரு குழந்தையின் உண்மையான வாழ்க்கை, இவனது மகிழ்ச்சி, அதிருப்தி, தேவைகள், நாட்டங்கள், திறமைகள், நம்பிக்கைகள் ஆகியவற்றைக் கவனத்தில் கொள்வதன் மூலமாக மட்டுமே இவனைப் புரிந்து கொண்டு ஒரு தனிநபர் என்ற வகையில் வளர்க்க முடியும் என்று காட்டுவது; ஆறு வயதுக் குழந்தைகள் ஒரு விசேஷப் பிரிவினர், முதல்வகுப்பு சிறுவர் சிறுமியருக்கு ஏற்ற அதே முறையை இயந்திரகதியாக இவர்களுக்கும் பயன்படுத்தக் கூடாது என்று தெட்டத் தெளிவாக நிரூபிப்பது என்பன தான் என் முன்நின்ற கடமைகளாகும். இது தவிர, பள்ளி வாழ்க்கையின் போதனை முறையில் மனிதாபிமான மற்றும் எதிர்கால நன்னம்பிக்கை அடிப்படைகளை ஊர்ஜிதப்படுத்தும் கடமையும் என் முன்நின்றது.

இக்கடமைகள் தான் இந்த ”பூஜ்ஜிய வகுப்பினருடனான” பணியின் நடைமுறை வடிவங்களை வரையறுத்தன. தன் செயல்முறை, தன் முயற்சிகள், கண்டுபிடிப்புகள், தோல்விகள் பற்றிய ஆசிரியரின் சிந்தனைகள் இவற்றிலடங்கும். நான் ஐந்து பாடநாட்களை சித்தரிக்கிறேன். இவற்றில் ஒவ்வொன்றும் குழந்தைகளுடைய பள்ளி வாழ்க்கையின் குறிப்பிட்ட கட்டத்தோடு (பள்ளி வாழ்க்கையின் துவக்கம், எழுத்துகளைக் கற்றுக்கொள்வது இத்தியாதி) தொடர்புடையது. என் முன் தோன்றும் பாடக்கல்வி சம்பந்தமான கடமைகளை விளக்கும் போது, குழந்தைகளின் பாலான மனிதாபிமான அணுகுமுறையின் அடிப்படையில் இவற்றைத் தீர்க்கும் முறைகள், கோட்பாடுகளைப் பற்றி சிந்திக்கிறேன், இப்படிப்பட்ட கடமைகளை நிர்ப்பந்த நிலையிலிருந்து தீர்க்கும் முறைகளோடு இவற்றை ஒப்பிடுகிறேன்.

படிக்க:
மாதிரிப் பள்ளிகள் தேவையா? – ச.சீ.இராஜகோபாலன்
தனியார் பள்ளிகள் ஒழியட்டும் ! அரசுப் பள்ளிகள் பெருகட்டும் !

முதலாவது வகுப்பில் ஆறு வயதுக் குழந்தைகளுக்கு அந்தந்தப் பாடங்களைக் கற்பிக்கும் முறையியல் நூலை உருவாக்க நான் திட்டமிடவில்லை. முதலாவதாக, குழந்தைகளின் பள்ளி வாழ்வை ஒழுங்கமைக்கும் பொது அணுகுமுறையை விளக்குவதும், இரண்டாவதாக, மிகச்சிறு பள்ளி மாணவர்களை வளர்த்து, கல்வி கற்பிப்பதில் மேன்மேலும் புதிய கடமைகளைத் தீர்க்கும் ஆசிரியரின் ஆக்கபூர்வமான முறைகளை விளக்குவதும் தான் எனக்கு முக்கியமாக இருந்தன. பள்ளியாண்டு துவங்கும் முதல் நாளாகிய செப்டெம்பர் 1-ம் தேதிக்கு முந்தைய தருணத்தின் சிந்தனையிலிருந்து துவங்கும் இந்நூல் ஆறு வயதுக் குழந்தைகளின் நாளைய தினத்தைப் பற்றிய எண்ணங்களுடன் முடிவடைகிறது.

என்னுடைய இந்த அனுபவம் பரிசோதனை ரீதியானது; விசேஷமானது; பள்ளியின் எதார்த்த சூழ்நிலைகளிலிருந்து தள்ளி இருப்பது; பரிசோதனை ரீதியான தயாரிப்பு வகுப்பிற்காகக் குழந்தைகள் விசேஷமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்; எனது ஆசிரியர் பணிக்கு ஒரு ஈடு இணையற்ற தனித்துவம் உண்டு என்றெல்லாம் ஒரு வேளை உங்களுக்குத் தோன்றக்கூடும். நிச்சயமாக, ஒவ்வொரு ஆசிரியருக்கும் அவருக்கே உரித்தான அம்சம் இருக்க வேண்டும். ஒவ்வொரு வகுப்பிற்கும் அதற்கே உரித்தான தன்மைகள் இருக்க வேண்டும். ஒவ்வொரு பள்ளியும் ஆசிரியர் குழாமும் குழந்தைகளை வளர்த்து படிப்புச் சொல்லித் தருவதற்கான விசேஷ சூழ்நிலைகளைத் தோற்றுவிக்கின்றன. இவையெல்லாம் உண்மை.

குழந்தைகளை கொண்டாடுவோம் தமிழில் …

ஆனால், இதனால் நான் கூறும் பரிசோதனைப் பணியின் அனுபவம் எங்கோ ஆகாயத்தில் மிதக்கிறது, இதற்கும் வாழ்க்கைக்கும் இடைவெளி அதிகம் என்று பொருளாகாது. சாதாரண பள்ளிச் சூழலில், விசேஷமாக குழந்தைகள் யாரையும் தேர்ந்தெடுக்காமலேயே தான் இந்த அனுபவம் கிடைக்கப்பெற்றது. என் பாணி என்று தனியாகக் கூற முடியாது; பல சோவியத் ஆசிரியர்களின் ஆசிரியர் பயிற்சி அம்சங்கள் இதில் கலந்துள்ளன. சிறு பள்ளி மாணவர்களுடன் கலந்து பழகுவது சம்பந்தமாக எம்மால் முன்வைக்கப்பட்ட சிபாரிசுகள் சரியானவை என்று இவர்கள் மெய்ப்பித்துள்ளனர். சமீப ஆண்டுகளில் இவர்கள் தம் கூட்டு உழைப்பால் பல நல்ல முறையியல் வழிகளையும் வடிவங்களையும் முன்மொழிவுகளையும் கூறியுள்ளனர். குழந்தைகளின் மீதான உண்மையான அன்பு, இவர்களின் உறுதியான, செயல் முனைப்பான, ஆக்கபூர்வமான உழைப்பு ஆகியவற்றால் இவையனைத்தும் சாத்தியமாகியுள்ளன.

குழந்தைகளுடன் நான் கலந்து பழகிய அனுபவமும், பள்ளியில் இவர்களின் மகிழ்ச்சிகரமான, சுவாரசியமான வாழ்க்கைக்கு ஏற்பாடு செய்வதற்கான வழிகளின் விஞ்ஞான பூர்வமான தேட்டமும், நீண்ட காலமாகப் பல பரிசோதனை வகுப்பு ஆசிரியர்களுடன் இருந்து வரும் ஆக்கபூர்வமான, விஞ்ஞான ஒத்துழைப்பும் ஒரு சில போதனைமுறை நம்பிக்கைகள் என்னிடம் உருவாக வழிகோலின.

படிக்க:
மதிய உணவு : மோடி ஆட்சியில் குழந்தைகளுக்கு முட்டை கூட கிடையாது !
இராணுவத்தின் அத்துமீறலைக் கூறிய பேராசிரியர் பணிநீக்கம் – போலீசு வழக்கு !

குழந்தைகளை வளர்த்து, கல்வி கற்பிப்பது சம்பந்தமான மனிதாபிமானம் மிக்க, எதிர்கால நன்னம்பிக்கையுள்ள அடிப்படைகளிலிருந்து இந்நம்பிக்கைகள் வருகின்றன. அனேகமாக எனது கருத்துக்கள் எல்லாமே விவாதத்திற்கு அப்பாற்பட்டவையாக இல்லாமலிருக்கலாம். ஆனால், பள்ளிச் சூழலில் ஆறு வயதுக் குழந்தைகளை வளர்த்து படிப்புச் சொல்லித்தர ஒரு விசேஷ போதனை முறை வேண்டும், நவீன வாழ்க்கை மற்றும் சமுதாய வளர்ச்சி ஆகியவற்றைக் கவனத்தில் கொண்டு ஆரம்பப் பள்ளியின் உள்ளடக்கத்தையும் முறையியலையும் மாற்றியமைக்க வேண்டும் எனும் முக்கிய அம்சத்தில் நாம் கருத்தொருமித்தவர்களாக இருந்தால் இந்நூலின் லட்சியம் அடையப்பட்டு விட்டதாக நான் கருதுவேன்.

– ஷல்வா அலெக்சாந்தரவிச் அமனஷ்வீலி

(தொடரும்)

இத்தொடரைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க