லக அளவில் உணவு உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் நாடுகளில் ஒன்று இந்தியா. ஆனாலும் இங்கு சுமார் 19.4 கோடி இந்தியர்கள் அன்றாடம் பட்டினியில் வாடுகிறார்கள். காரணம், நாம் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான டன்கள் தானியங்களை வீணடிக்கிறோம். இந்திய உணவுக் கழகத்தின் தானியக் கிடங்கில் சேமிக்கப்படும் உணவுப் பொருள்கள் மழை, வெயில் மற்றும் வெள்ளத்தால் அழுகியோ அல்லது பூச்சிகளாலும் எலிகளாலும் உட்கொள்ளப்பட்டோ வீணாவதை தடுப்பதற்கான கொள்கைகளை உருவாக்குவதாக மாறி மாறி வரும் அரசாங்கங்கள் வாக்களிக்கின்றனர். ஆனாலும் கோடிக்கணக்கான மக்களின் பட்டினியைப் போல் இந்த அவலமும் நீடிக்கத்தான் செய்கிறது. உலக பசிப் புள்ளிவிவரப் பட்டியலில் (Global Hunger Index) 119 இடங்களில் 100-வது இடத்தில் இருக்கும் ஒரு நாட்டில், இந்த புழுங்கி நாறிப்போன கல்நெஞ்ச நிலையை, நாம் வஞ்சனை என்றே விளிக்கலாம்.

நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சர் சி.ஆர்.சவுத்தரி கடந்த பிப்ரவரி 5, 2019 அன்று பாராளுமன்றத்தில் பேசுகையில், “ஜனவரி 1, 2019 கணக்குப்படி, வழங்கவியலாத / நாசமடைந்த நிலையில் 4,135.224 டன் தானியங்கள் இந்திய உணவுக் கழகத்தின் தானியக் கிடங்கில் இருப்பதாகத் தெரிவித்தார். கடந்த 2017-ம் ஆண்டில் இத்தகைய வழங்கவியலாத தானியங்களின் அளவு ஏறக்குறைய 62,000 டன்கள் ஆகும். பின்னர் அவை கால்நடைகளுக்கு தீவனம் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு ஏலம் விடப்பட்டது.

“இந்திய உணவுக் கழக மோசடிதான் இந்த நாடு இதுவரை சந்தித்ததிலேயே மிகப்பெரிய மோசடி” என்கிறார் உத்தரப்பிரதேசத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், அகில இந்திய கிசான் சங்கர்ஷ் ஒருங்கிணைப்புக் குழுவின் தேசியத் தலைவருமான வி.எம்.சிங். “இந்திய உணவுக் கழகம் தானியங்களை வாங்கி அவற்றை திறந்த வெளிகளில் வைத்து விடுகின்றது. நீங்கள் பஞ்சாப், அரியானா அல்லது பீகாருக்குச் சென்று பார்த்தால், அவர்கள் எவ்வாறு ஒரு கருப்புத் தார்ப்பாயை மட்டும் வைத்துக்கொண்டு தானியங்களை திறந்த வெளியில் வைக்கின்றனர் என்பதைப் பார்க்க முடியும். தானியங்களை பிரமிட் போல 50 அடுக்குகளுக்கு அடுக்கி வைத்திருப்பார்கள். நான்கு அடி உயரத்திற்கு தண்ணீர் வந்து மூழ்கியிருந்தாலும், அதில் கீழே உள்ள நான்கு அல்லது ஐந்து அடுக்கு தானியங்கள்தான் பாழாகியிருக்கும். ஆனால், அவர்கள் மொத்த பிரமிட் அடுக்குகளிலுமுள்ள தானியங்களையும் (50 அடுக்குகளையும்) அடிமாட்டு விலைக்கு ஏலம் விட்டுவிடுவர். பெரும்பாலான மூட்டைகளில் பாதிப்படையாத சுத்தமான கோதுமையே இருந்தாலும் இவ்வாறுதான் நடக்கும். இவ்வாறுதான் இந்த மோசடி நடைபெறுகிறது” என்கிறார் சிங்.

நாடு முழுவதும் சேமிப்புக் கிடங்குகள் கட்டுவது சிக்கலாக இருக்கும் சூழலில், பிரச்சினைக்குரிய இடங்கள் என பொறுப்பில் உள்ளவர்களுக்கு தெரியும் சூழலில் மாற்று தளங்களை அவர்கள் நிர்மாணிக்கலாம். “அவர்களுக்கு அந்தப் பகுதி வெள்ளத்தால் பாதிக்கப்படும் என்பது தெரியும். அப்படியிருப்பினும் அவர்கள் அதே இடத்தைத்தான் சேமிக்க பயன்படுத்துகிறார்கள். அவர்கள் ஏன் அங்கே தானியங்களை வைத்திருக்கிறார்கள்? ஏனென்றால், அவை கெட்டுப் போனவை என்று அறிவிக்கப்படவேண்டும் என அவர்கள் விரும்புகிறார்கள். அப்போதுதானே அவர்களால் அதனை விற்பனை செய்யமுடியும்! அழுகிப்போன நெல்லும், கோதுமையும் இல்லை என்றால் ஊழல்வாதிகள் என்ன செய்வார்கள்? ஊழல்வாதிகள் பணம் சம்பாதிக்க உதவுவதற்குப் பதிலாக தானியங்களை பாதுகாப்பான சேமிப்புக் கிடங்குகளில் வைக்க போதிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். அதற்கு முதலீடு செய்ய வேண்டும்.

படிக்க:
இராணுவத்தின் அத்துமீறலைக் கூறிய பேராசிரியர் பணிநீக்கம் – போலீசு வழக்கு !
கார்ப்பரேட் – காவி பாசிசம்.. எதிர்த்து நில் ! ஏன் இந்த மாநாடு ?

பெயர் கூற விரும்பாத ஒரு இந்திய உணவுக் கழக அதிகாரி இது குறித்துக் கூறுகையில், வழிகாட்டுதல்கள் அனைத்தும் சரியாகப் பின்பற்றப்படுகின்றன என்றும், ஏலம் விட முடிவெடுக்கும் முன்னர் தானியங்களை தரம் பிரிக்க மூன்றடுக்கு முறை பின்பற்றப்படுவதுடன், ஊழல் தடுப்புப் பிரிவின் சோதனையும் நடைபெறுகிறது என்கிறார். “நீங்கள் நாசமான தானியங்களை வெளியில் வீசியெறிய முடியாது. ஒரு கிலோவாக இருந்தாலும் அல்லது ஒரு டன்னாக இருந்தாலும், ஏலத்திற்கு டெண்டர்கள் விடுக்கப்பட வேண்டும்” என்கிறார்.

தேசிய மின் கருவூலத்தின் கணக்கீட்டின்படி, ஆண்டுதோறும் இந்தியா 265 மில்லியன் டன்கள் தானியம் உற்பத்தி செய்யப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் விநியோகிக்கப்படும் மொத்த தானியங்களின் அளவை ஒப்பிடுகையில், பாதிப்படைந்த உணவு தானியங்களின் அளவு குறைவானதாக இருந்தாலும், வீணடிக்கப்படும் தானியங்களை வைத்து மொத்த கொல்கத்தாவுக்கும் ஒரு வாரத்திற்கு உணவுதானியங்கள் வழங்கலாம் (ஒரு நபர் ஒரு நாளைக்கு சராசரியாக எடுத்துக் கொள்ளும் தானியங்களின் அளவாக 3 அவுன்ஸுகள் எனக் கணக்கிட்டுக் கொண்டால்). 2019-ம் ஆண்டுக் கணக்கீட்டின் படி மாநில அளவில் வீணடிக்கப்படும் தானியங்களின் அளவில் பீகாரில் மட்டும், சுமார் 3,567.65 டன்கள் (தேசிய மொத்த அளவில் 86%) உணவு தானியங்கள் வீணாகியிருக்கின்றன. இதில் கோதுமை 1267.69 டன்களும், நெல் 2,299.97 டன்களும் அடங்கும். பஞ்சாப் மாநிலத்தில் 324.39 டன்கள் தானியங்கள் வீணாகியிருக்கின்றன.

“பஞ்சாபில் தானியங்கள் வீணாகுதல் பொதுவாக அதிகமாகவே இருக்கும். ஏனெனில், பஞ்சாபைப் பொறுத்தவரையில் பெருமளவிலான தானியங்கள் திறந்த வெளி சேமிப்புக் கிடங்குகளிலோ அல்லது தார்ப்பாயால் மூடப்படும் கிடங்குகளிலோதான் சேமிக்கப்படுகின்றன. இங்கு தானியங்கள் நாசமடைவதற்கு வாய்ப்புகள் அதிகம். மேலும் மழை மற்றும் மோசமான போக்குவரத்து காரணமாகவும் தானியங்கள் நாசமடைகின்றன”, என்கிறார் விவசாயம் மற்றும் விவசாயிகள் நலனுக்கான முன்னாள் ஒன்றியச் செயலர், சிராஜ் ஹுசைன்.

குறிப்பாக பிகாரைப் பொறுத்தவரையில், கடந்த ஐந்தாண்டு காலகட்டத்தில் தானியங்கள் வீணாவது குறித்த புள்ளிவிவர வரைபடமும் பிறழ்வாகவே உள்ளது. மராட்டியம், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்கள் அவர்களது பழைய நிலையிலிருந்து முன்னேறியிருக்கின்றன.  பீகாரும் கடந்த 2017-ம் ஆண்டு வரை அவ்வாறு முன்னேறியிருக்கிறது. குறிப்பாக 2013-14-ம் ஆண்டில் பீகாரில் நாசமடைந்த தானியங்களின் அளவு 3909.41 டன்களாக இருந்தது. 2014-15 காலகட்டத்தில் 703.65 டன்களாக இருந்தது. 2015-16 காலகட்டத்தில் அது 46.931 டன்களாகக் குறைந்தது. பின்னர் 2016-17-ம் ஆண்டுகளில் வீணான தானியங்களின் இருப்பே இல்லை. தற்போது பீகாரில் இருக்கும் வீணான தானியங்களின் இருப்பு 2017-18 மற்றும் 2018-2019-க்கான இருப்பு ஆகும்.

படிக்க:
உணவு மானியம் : வாரி வழங்குகிறதா இந்திய அரசு ?
நோஞ்சான் தேசம் : போரில் தோற்றது மோடியின் இந்தியா !

“தானியங்கள் நாசமடைந்ததற்கு முக்கியக் காரணம், வெள்ளங்கள்தான். சில சேமிப்புக் கிடங்குகள் முழுவதுமாக வெள்ளத்தில் மூழ்கிவிட்டன. இழப்பைக் குறைக்க அவற்றை அடுக்குவாரியாக ஆய்வு செய்வதற்கான நடைமுறை உள்ளது” என்கிறார் பீகாரின் இந்திய உணவுக் கழக அலுவலர். கடந்த 2000-ம் ஆண்டிலிருந்து எடுத்துக் கொண்டால் பீகார் 11 ஆண்டுகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2016 மற்றும் 2017-ம் ஆண்டில் 700-க்கும் மேற்பட்ட மக்கள் வெள்ளத்தில் மரணமடைந்துள்ளனர்.

வினவு செய்திப் பிரிவு
கட்டுரையாளர் : சித்தார்த்தா மிஸ்ரா
தமிழாக்கம் : நந்தன்
நன்றி : அவுட்லுக்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க