மிழ்மாமணி தோழர் நந்திவர்மன் அவர்கள் எழுதியுள்ள கடலடியில் தமிழர் நாகரிகம் எனும் இந்த நூல் அளவில் சிறியதாக இருப்பினும் ஒன்பது தலைப்புகளில் அமைந்து, ஆழ்ந்த ஆய்வுச் சிந்தனைகளை எழுப்பக் கூடியதாக இருக்கிறது.

எண்ணிறந்த ஆண்டுகளுக்கு முன்பு உலகில் ஒரே ஒரு கண்டமே இருந்தது. பின் அது உடையத் தொடங்கியது. அடுத்தடுத்து உடைசல் ஏற்பட்டுத் தென்னமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா எனப் பிரிந்தது. இன்றுள்ள ஆஸ்திரேலியா, அண்டார்ட்டிகா, ஆப்பிரிக்கா, மடகாஸ்கர், இந்தியா தென்னமெரிக்கா உள்ளடக்கிய பெரும் நிலப்பரப்பு ஒன்று இருந்தது என்றும் நிலவியல் அறிஞர்கள் அதற்குக் கோண்டுவானா எனப் பெயரிட்டனர் என்றும் அறிஞர்கள் கூறுகின்றனர். கண்டங்கள் இடப்பெயர்வு கொண்டன என்ற கருத்தை அல்ஃபெரடு லோதர் வெக்கனர் என்ற ஜெர்மானிய அறிஞர் 1912-ல் வெளியிட்டார்.

காலப்போக்கில் அட்லாண்டிக், இலெமூரியா என்ற இரு கண்டங்களிலும் வாழ்ந்த மனித குல முன்னோடிகள் தொழில் நுட்பங்களில் வல்லமை பெற்றிருந்தனர் எனப் பிராஸ் ஜோசப் கூறியுள்ளார்…

இப்படியாக உலகின் பல்வேறு அறிஞர்களின் அரிய கருத்துக்களை ஆதாரமாகக் கொண்டு இந்நூலாசிரியர் தமிழர் நாகரிகங்களைக் கொண்ட நிலப் பகுதிகள் மாமல்லபுரம், பூம்புகார், குமரி போன்ற இடங்களில் கடல் அடியில் புதைந்து கிடக்கும் இடிபாடு கொண்ட கட்டிடங்கள் வழியே வரலாற்றை, மீட்டெடுக்கப்பட வேண்டிய வரலாறைத் தேடிக் கண்டறிந்து, தமிழுக்கும், தமிழருக்கும், தமிழ் நாகரிகத்துக்கும் அடையாளச் சின்னங்களை உருவாக்கித் தர வேண்டும்; அதன் வழியாகத் தமிழ் ஆய்வுப் பணிகள் தொடர வேண்டும் எனும் உள்ளக் கிடக்கையை நூலாசிரியர் அரிய நூல்கள் வழியாகவும், செயற்கைக் கோள் படங்கள் வழியாகவும் ஆதாரங்கள் காட்டி, தான் கொண்ட கருத்தை இந்நூலில் நிறுவுகிறார்.
(உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் -2010- பேரா. முனைவர் கே.ஏ. குணசேகரன் எழுதியுள்ள இந்நூலுக்கான அறிமுக உரையிலிருந்து)

… 25 கோடி ஆண்டுகள் முன்னர் உலகின் நிலப்பகுதி ஒட்டு மொத்தமும் ஒரே கண்டமாக நிலவி, பின்னர் வட தென் பகுதிகளாக, தென்பகுதி கோண்டுவானாவாகப் பிரிந்து, பின்னரும் நெருங்கிச் சேர்ந்து பின்னரும் பிரிந்து இன்றைய கண்டங்களாக, இயற்கை உருவாக்கிய வரலாற்றில், எத்தனை எத்தனையோ கடற்பெருக்கு, நிலமீட்சி, கண்டங்கள் சேருதல், பிரிதல் எனத் தொடர்கின்றது.

அப்படிப்பட்ட ஒரு கட்டத்தில் அமைந்தது மடகாஸ்கர் முதல் ஆஸ்திரேலியா வரை ஒட்டியிருந்த நிலப்பரப்பு. அதுவும் சில பல நிலப்பகுதிகளை இழந்த நிலையில் குமரிக்கண்டமாக அமைந்ததென்பர். குமரிக் கண்டத்தின் ஒரு பகுதியாக நிலவியது தான் இன்றைய இந்திய நாட்டின் தென்னகம் என்பர்.

அதுவே முதல் மாந்தன் பிறந்த நிலம், அவன் தமிழனாக உயர்ந்த நிலம் என்பர். அவர்களிடம் உருக்கொண்ட தமிழ்மொழியும், வளர்ந்த நாகரிகமும், உலக நாகரிகங்கட்கெல்லாம் ‘தாய்’ என்று கருதும் தரத்தது. உலகின் நிலநடுக்கோட்டின் தெற்கில் ஒரு பெரும் நிலப்பரப்பாக இருந்த கோண்ட்வானா, இன்றைய பசிபிக் கடல் பரப்பை மையமாகக் கொண்டிருந்தது என்றும், பின்னர் நிலத்தடிப் பாறைத் தட்டுக்களின் மோதுதலால் தெற்கு நோக்கி நகர்ந்ததென்றும், அதனால் அந்தப் பகுதியில் வளர்ந்திருந்த ஒரு சிறப்பான நாகரிகத்தில் எழுந்த கட்டுமானங்கள் மூழ்கின என்றும் அறியப்படுவதை ஆசிரியர் விளக்குகிறார்.

அதனால் கணக்கிட முடியாத நூற்றாண்டுகளாக, பசிபிக் கடலின் அடி நிலம் மெல்லமெல்ல அமிழ்ந்து வருகிறது என்பதுடன். இலெமூரிய நாகரிகத்தின் பழைய தடயங்கள் அங்கு மூழ்கியிருக்க வேண்டும் என்றும் ஆய்வாளர் கருதுவதையும் எடுத்துக்காட்டுகிறார்,

அமெரிக்காவின் செவ்விந்தியரான தொல்குடி மக்கள் தலைவன் ‘மாயன்’ சுவடிகளை ஆராய்ந்த அறிஞர் ஒருவர், ‘மூ’ என்னும் பழம் பெருங் கண்டம் ஒன்று இருந்தது பற்றியும், அது மூழ்கியபோது தப்பி வந்தோர் ‘மாயன் நாகரிகத்தை உருவாக்கியதாகவும் கூறியுள்ளதை எடுத்துரைக்கின்றார். – குமரிக் கண்டமென நாம் கருதும் இலெமூரியாவே ‘மூ’ நாகரிகம் கொண்டவர்களாகக் கருதப்படும் ‘தமிழர்’ வாழ்ந்த நிலம் என்றும் கருதுகிறார். தொன்னாளில் நிலவிய குமரிக்கண்டம் என்பது ஒரு சிறந்த அறிவியல் அடிப்படையான கட்டுமானங்களைக் கொண்டதாக, கட்டடவியல் கணக்கியலின்படி கற்கள் இணைத்துக் கட்டப்பட்ட கட்டடங்கள் கொண்டதாக இருக்கவேண்டும் என்பதால், பசிபிக்கிலோ, சீனத்தின் கிழக்குக் கடலிலோ, ஆழ்கடல் ஆய்வு நடத்துவதன் மூலம், அந்த நாகரிகத்தைக் கண்டறிய முடியும் என்னும் நம்பிக்கையையும் ஆசிரியர் தெரிவித்துள்ளார்.

திராவிடத் தமிழ் இனத்தின் நாகரிக வரலாறு, ஆரிய வைதிகச் சுனாமியால் மூழ்கடிக்கப்பட்டு, ஆங்கிலேயர் ஆட்சி அமைந்த சூழலால், மறுபடியும் உண்மை வெளிப்படும் வாய்ப்பைப் பெற்று, அதன் மூலம் நிலைநாட்டப்பட்ட வரலாற்று உண்மைகளின் துணையால், இக்காலத்தில்தான் தமிழக ஆட்சியில் உள்ள முதல்வர் கலைஞரின் முயற்சியால் “தமிழ் ஒரு செம்மொழி’’ என்பதை நடுவண் அரசு ஏற்று அறிவிக்கும் நிலை பெற்றுள்ளோம்.

இன்று தமிழ் வழங்கும் நிலத்திலும், இந்தியக் கடற்கரை ஒட்டிய மறைந்த பட்டினங்களான பூம்புகார், கொற்கை, மாமல்லபுரம் ஆகியவற்றிலும், அருகன்மேடு, ஆதிச்சநல்லூர், அழகன்குளம். கொடுமணல் ஆகிய ஊர்களிலும் சிந்துவெளி நகரங்கள், துவாரகா முதலான இடங்களிலும் தொடங்கப்பட்டுத் தொய்வு நிலைக்கு ஆளாகியுள்ள அவற்றின் அகழ்வாராய்ச்சியை விரைவுபடுத்துவதாலேயே மேலும் பல அரிய வரலாற்றுச் செய்திகளை நாம் பெற முடியும்.
(க. அன்பழகன் எழுதியுள்ள அணிந்துரையிலிருந்து)

இந்நூலில்,
♣ உலகமே ஒரே கண்டம்: அதில் நாவலந் தீவைத் தேடுவோம்
♣ மறைக்கப்படும் வரலாறும் மீட்டெடுக்க வேண்டிய வரலாறும்
♣ தமிழகக் கடலடியில் கிடைத்ததும் தேட வேண்டிய பணிகளும்
♣ குமரிக்கண்டம் பற்றிய வரைபடங்களும் குற்றம் சுமத்தும் கூட்டமும்
♣ உலகத் தொன்மங்களில் பெருவெள்ளக் கதைகள்
♣ ஆப்பிரிக்கக் கண்டத்தில் வெள்ளக்கதைகள்
♣ ஆசியாவில் பெருவெள்ளக் கதைகள்
♣ உலகெலாம் தமிழன் பரவினான் எனும் உண்மை மெய்ப்பிக்க முனைக
♣ புதிய அறிவும் புத்துருவாக்கமும்
என ஒன்பது உட்தலைப்புகளில் தமிழர் நாகரிகத்தின் வரலாற்றை விவரிக்கிறார், நூலாசிரியர்.

***

நூல் : கடலடியில் தமிழர் நாகரிகம்

ஆசிரியர் : நந்திவர்மன்

வெளியீடு : உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்,
இரண்டாம் முதன்மைச் சாலை, மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம், தரமணி, சென்னை – 600 113.

பக்கங்கள் : 128

விலை : ரூ.55.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

இணையத்தில் இந்நூலை வாங்க: marinabooks

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று,

கீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
புதிய முகவரி :
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு :

வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி : 99623 90277