க்கள் அதிகாரம் பிப்ரவரி 23-ம் தேதி  ‘அடக்குமுறைதான் ஜனநாயகமா? கார்ப்பரேட் – காவி பாசிசம் ! எதிர்த்து நில் !’ மாநாட்டை திருச்சியில் நடத்தியது.  இந்நிகழ்வில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டு சிறப்பு பேச்சாளர்கள் எழுத்தாளர் அருந்ததி ராய், தோழர் மருதையன், தோழர் ராஜு, தோழர் தியாகு, தோழர் ஆளூர் ஷாநவாஸ், வழக்கறிஞர் பாலன் ஆகியோரின் உரைகளைக் கேட்டனர்.

மக்கள் பாடகர் கோவனின் உணர்ச்சி மிக்க பாடல்களை மக்களும் விருந்தினர்களும் ரசித்தனர். ‘எதிர்த்து நில்’ மாநாட்டில் கலந்துகொண்ட சிலர் முகநூலில் தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்துள்ளனர். அதனுடைய தொகுப்பு இங்கே…

*****

தி. லஜபதி ராய் :

மக்கள் அதிகாரத்திற்காக திருச்சியில் குரல் கொடுத்த  அருந்ததி ராய்

“நான் சற்று பதட்டமாக உணர்கின்றேன் , இவ்வளவு பெரிய கூட்டத்தில் நான் உரையாற்றியதில்லை” எனத் தொடங்கிய எழுத்தாளர் அருந்ததி ராயின் கவலையும் மக்கள் மீதான அன்பும் அவரது உரையில் பிரதிபலித்தன.

போர் வெறி ஊட்டி ஆட்சியைப் பிடிக்க நினைக்கும் திருவாளர் மோடிக்கு எதிரான அவரது உரை பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒன்று.

இஸ்லாமியர், பட்டியல் இனத்தவர், பழங்குடியினர், கம்யூனிஸ்டுகள், அனைவரும் பிரிந்து கிடப்பதை சுட்டிக்காட்டிய ராய் தற்போதைய பாசிச ஆட்சியை வீழ்த்த அனைவரும் ஒருங்கிணைய வேண்டியதை வலியுறுத்தினார்.

பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி , எண்கர சாலைகள் என மக்கள் மீது தாக்குதல் நிகழ்த்தி அவர்களது பொருளாதாரத்தை சிதைத்த பாஜக அரசின் ஆட்சியில் முகேஷ் அம்பானியின் சொத்துக்கள் 175 சதவிகிதம் உயர்ந்ததை ராய் சுட்டிக்காட்டினார்.

1980 -களில் மைய அரசு இரு பூட்டுக்களை திறந்தது முதலாவதாக பாபர் மசூதியை வழிபாட்டுக்காக திறந்தது , இரண்டாவதாக நாட்டை உலக நாடுகளின் கட்டுப்பாடற்ற சந்தைப் பொருளாதாரத்திற்கு திறந்தது இவ்விரு பூட்டுக்களை திறந்த நாள் முதல் மாவோயிஸ்ட் பயங்கரவாதம், இஸ்லாமிய அடிப்படைவாதம் என மக்களை திசை திருப்பும் அதே பொழுது இந்து மத பாசிசம் மக்களுக்குள் விதைக்கப்படுவதை ராய் குறிப்பிட்டார்.

அரசின் திட்டமிட்ட மோதல் படுகொலைகள், மதவெறி கும்பலின் கொலைகள், இவை நிகழும் அதே கால கட்டத்தில் சத்திஸ்காரில் போலிஸ் ஆட்சியும் கஷ்மீரில் ராணுவ ஆட்சியும் நடப்பது தற்செயலானதல்ல எனக் குறிப்பிட்ட ராய், புல்வாமா நிகழ்வுக்கு பின்னர் ராணுவத்தை காஷ்மீரில் குவிப்பது அம்மாநில மக்களை பெரும் கொடுமைகளுக்கு ஆளாக்கும் என கவலை தெரிவித்தார்.

1950-ம் ஆண்டில் அரசியலமைப்புச் சட்டத்தை இந்நாட்டுக்கு அன்னியமானது, மனு ஸ்மிருதியே இந்தியாவிற்கானது எனக் கூக்குரலிட்ட ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கொள்கைப்படியே இன்று இந்தியாவின் 75% சொத்துக்கள் 1% தனியார்களிடம் குவிந்திருப்பதையும், 9 பேர்கள் கையில் ஐம்பது கோடி இந்தியர்களின் சொத்துக்கள் இருப்பதையும் அவர்கள் அனைவரும் ஒரே சாதியினர் என்பதையும் ராய் பட்டியலிட்டார்.

ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் அம்பானி பொதுமக்களின் பணத்தைப் பெற்று பயன்பெற்றதை சுட்டிய ராய், அம்பானியின் சொத்துக்களால் இந்தியாவிற்கு ஆண்டு முழுவதும் சுத்தமும், சுகாதாரமும், குடிநீரும் வழங்க முடியும் என்றார்.

வனவிலங்குகளுக்காக செயல்படும் வயில்ட் லைப் பர்ஸ்ட் என்ற வழக்கில் இருதினங்களுக்கு முன் காட்டினுள் வசிக்கும் 18 லட்சம் பழங்குடி மக்களை வெளியே தள்ளி காட்டைக் காப்பாற்ற உத்தரவிட்ட உச்சநீதிமன்றம் அதே காடுகளை சுரங்கங்களும், பெரு வணிக நிறுவனங்களும் சூறையாடிய போது என்ன செய்தது எனக் கேள்வி எழுப்பினார்.

வடகிழக்கு மாநிலங்களில் 18 லட்சம் பேர் நாடற்றவர்களாக ஆக்கப்பட்டதையும் குறிப்பிட்டார்.

வணிக நிறுவனங்களுக்கு சமூகப் பொறுப்பு என கூறுவது தேவையற்றது ஏனெனில் மக்களுக்கு பிச்சை போட வேண்டாம் அவர்களுக்கு சேர வேண்டியதை கொடுத்தாலே போதுமென உறுதியுடன் உரைத்தார்.

பரம்பரை அரசியல் என மத்தியிலும், தமிழகத்திலும் குறை சொல்பவர்களை, பரம்பரை அரசியலில் கூட தேர்தலில் நின்று வெற்றி பெறத்தேவை. ஆனால் சாதி ஆதிக்க சொத்துரிமை வாரிசுரிமையாக தொடர்வதை விமரிசித்தார். நிலம், சொத்துரிமை பொதுவுடமையாக்கப்படுவதன் தேவையை வலியுறுத்திய ராய் வரும் தேர்தலில் மக்கள் பாஜக கூட்டணியை தோற்கடிக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்தார்.

வேதாந்தா நிறுவனத்தின் குழந்தையான ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கெதிரான தூத்துக்குடி மக்களின் போராட்டத்திற்கு துணை நின்ற மக்கள் அதிகாரத்தை குறிப்பிடத் தவறாத ராய் தோழர் கோவனின் ஆட்டத்துடன் கூடிய படேல் சிலை நையாண்டிப் பாடலை இரசிக்கத் தவறவில்லை.

தி. லஜபதி ராய்
23.02.2019
திருச்சி

ஆசிர் முகமது :

மகஇக நடத்திய ‘எதிர்த்து நில்’ பொதுக்கூட்டத்துக்கு சென்றிருந்தேன். உண்மையில் மார்க்சிய விமர்சனத்தை மக்கள்மயப்படுத்தியதில் மகஇக தோழர்களுக்கும் வினவு தளத்துக்கும் ஒரு முக்கிய இடமுண்டு. ஆரம்பத்தில் அவர்களது பாடல்கள் தான் எனக்கு அறிமுகம்.

சில முஸ்லிம் அமைப்புகளின் கூட்டங்களில் ‘சொல்லாத சோகம்…’, ‘சம்மதமா.. சம்மதமா…’ போன்ற பாடல்கள் ஒலிக்கும். ஆசிரியர் மார்க்ஸின் எழுத்துக்கள் மற்றும் இத்தகைய பாடல்கள் தான் ‘ஒடுக்குபவர்களின் அடையாளங்கள் சுமத்தப்பட்டிருப்பவர்கள் கூட விமர்சனப்பார்வையோடு ஒடுக்கப்படுபவர்களின் சார்பாக தீவிரமாக நிலையெடுக்க முடியும்’ என்பதை எனக்கு உணர்த்தின.

இந்தியாவில் முஸ்லிம் பிரச்சினை என்பது தனித்தவொரு பிரச்சினையில்லை, அது பிற பிரச்சினைகளோடு இணைந்ததே என்ற புரிதலும் எனக்குள் மெல்லப் படிந்தது. இதெல்லாம் தியரியாக அப்போது புரிந்திருக்காவிட்டாலும் அது எனக்குள் ஏற்படுத்திய பார்வைத் தாக்கம் அத்தகையதுதான்.

இதற்கு ஒரு முக்கியமான காரணம் மகஇக ‘தமிழ்நாட்டில்’ கம்யூனிஸ்ட் கட்சி வைத்து நடத்துவதால்தான். இந்தியாவில் கட்சி வைத்து நடத்துபவர்கள் ‘சம்மதமா.. சம்மதமா…’ போன்ற பாடல்களெல்லாம் போடவே முடியாது. அவர்கள் இன்னும் ‘வகுப்புவாத வன்முறை’ என்ற பழைய பல்லவியே பாடுகிறார்கள். அவர்களது universalism பம்பாய் படத்துக்கு விருது கொடுக்கும் universalism. ஏழை பிராமணர்களுக்கு 10% ஒதுக்கீடு கொடுக்கும் universalism.

ஆனால் மகஇக தோழர்களது universalism ஒடுக்கப்படுபவனோடு தீவிரமாக நிலையெடுக்கும் universalism. திராவிட, தலித், பகுஜன் விமர்சனங்களை ஆழமாக உள்வாங்கிய, அதை மக்கள் மயப்படுத்திய universalism. மேற்கண்ட தரப்புகள் இவர்களோடு எவ்வளவு வேண்டுமானாலும் முரண்படலாம். ஆனால் பெரியார்-அம்பேத்கரை வெறுமனே பெயருதிர்த்தலாக அல்லாது, அந்தப் புரிதலையும் மொழியையும் தன்னகப்படுத்திகொண்ட கம்யூனிஸ்டுகளாக இவர்கள் ஒரு போக்கை உருவாக்கினார்கள். அதனால் தான் அவர்கள் பேசும் மார்க்சியம் எல்லோருக்கும் புரிந்தது. இது கம்யூனிஸ்டுகளின் நடைமுறை பற்றிய மதிப்பீடு கிடையாது. அதை என்னால் செய்யவும் முடியாது. மாறாக தொண்ணூறுகளில் பிறந்த ஒரு நடுத்தர வர்க்கத்தின் முஸ்லிமாக, பகுஜனாக இடதுசாரி அரசியல் பற்றிய அறிமுகம் எனக்கு கிடைப்பதற்கு எவ்வாறு அவர்களும் ஒரு காரணமாக இருந்தார்கள் என்றே சொல்கிறேன்.

மேலும் பண்பாட்டுத்தளத்தில் வெகுஜன பாணியில் எல்லாவற்றையும் பற்றி சொல்வதற்கு அவர்களுக்கு எப்போதுமே ஒரு கருத்து இருந்தது. வெகுஜன சினிமா, கலை, இலக்கியம் என்று பண்பாட்டுத் தளத்தின் அத்தனை பரிமாணங்களையும் அக்குவேறு ஆணிவேறாகவும், அதேநேரத்தில் பல்வேறுபட்ட தரப்பினருக்கும் புரியும் வகையிலும் சுவாரசியமாகவும், ஒடுக்கும் தரப்புகளுக்கு எதிரான கோபத்தோடும் எழுதுவார்கள்.

இப்போது கூட பாருங்கள், ஆ. ரா. வேங்கடாசலபதி என்ற ‘பார்ப்பனருக்கு உகந்த வேஷ திராவிடர்’ திராவிடத்தை பார்ப்பன அறிவுக்காலனியத்துக்கு உள்ளாக்கும் நடவடிக்கையை விமர்சித்து வினவு தளத்தில் ஒரு கட்டுரை வந்திருக்கிறது. இதெல்லாம் வினவு தளத்தில் தான் நடக்கும். இன்றும் தமிழ்ச்சூழலைப் பற்றிய இடதுசாரி விமர்சனம் என்றால் அதில் அவர்களுக்கு ஒரு முக்கிய இடமுண்டு.

திலகவதி திலோ :
மக்கள் அதிகாரம் மாநாடு !

இப்படி ஒரு மாநாட்டில் நான் கலந்து கொண்டதேயில்லை. எத்தனையோ அரசியல் கட்சிகளின் அமைப்புகளின் மாநாட்டில் கலந்து கொண்டிருக்கிறேன், ஆனால் இது மிகவும் வித்யாசமாக இருந்தது.

எந்த வித அரசியல் சடங்கும் இல்லை, நேரம் வீணடிக்கப்படவில்லை, சால்வை போற்றுதல், மரியாதை செலுத்துதல், நோட்டீஸில் உள்ள அனைவரின் பெயரையும் படித்து வணக்கம் சொல்லி அனைவரின் நேரத்தையும் வீணடித்தல், மரியாதை நிமித்தமாக சிலரை பேச வைத்து கண்டன்டே இல்லாமல் மொக்கை போட வைத்தல் போன்ற எந்தவித அரசியல் நிர்பந்தமும், பகுத்தறிவற்ற செயலும் இல்லாத மேடையாக மாநாடாக அது இருந்தது.

அங்கிருந்த தோழர்கள் அத்தனை நாகரிகமாக, இருக்கையில் அமர்ந்து ஒரு சிறு சலசலப்புமின்றி 6 மணி நேரம் அமர்நது கூர்மையாக கவனித்ததை எந்த இடத்திலும் நான் பார்க்கவேயில்லை, அரசியல் படுத்தப்பட்ட தோழர்களின் மத்தியில் தான் இப்படிபட்ட பண்பை பார்க்க முடியும்.

அரசியல் கட்சிகளுக்கும் மக்கள் இயக்கங்குளுக்கும் உள்ள வித்யாசம் அது. அமைப்பாதல் எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியம் அந்த மக்களை அரசியல் படுத்துதல். அதன் வெற்றியே இம்மாநாடு.

அத்தனை அறிவுப்பூர்வமான, உணர்வுப்பூர்வமான, ஆதாரப்பூர்வமான உரைகள் நிகழ்த்தப்பட்டன். கொஞ்சம் கூட கவனத்தை சிதறடிக்க முடியவில்லை, அவர்கள் பேசிய ஒவ்வொரு வரிகளும் அத்தனை முக்கியத்துவம் வாய்ந்தன.

குறிப்பாக தோழர்கள் அருந்ததி ராய், ஷா நவாஸ், தியாகு, ராஜூ, மருதையன், வழக்கறிஞர்களின் உரைகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.

காவிகளின் பாசிசத்தை தோலுரித்து மக்கள் முன் நிறுத்தினர் !

கோவன் தோழரின் கலை நிகழ்ச்சிகளும் மேடையில் ஒளிபரப்பப்பட்ட பல்வேறு பிரச்சனைகளின் காணொளிகளும் மாநாட்டினை அத்தனை உயிர்ப்புடன் வைத்திருக்க உதவியது.

சட்டக் கல்லூரி தோழமைகளுடன் இதில் கலந்து கொண்டது மகிழ்ச்சி 😍
மக்கள் அதிகாரம் மாநாடு மாஸ்👌👌

-திலகவதி திலோ,
சட்டக்கல்லூரி மாணவி.

தொகுப்பு : வினவு செய்திப் பிரிவு

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க