முஸ்லிம்களின் சமூக, பொருளாதார, கல்வி நிலைகளை கண்டறிய ஏற்படுத்தப்பட்ட சச்சார் குழு தன் அறிக்கையின் மூலம் இஸ்லாமிய சமூகம் குறித்து நிலவிவந்த ஒற்றைப் பார்வையை மட்டுப்படுத்தியதுடன் அவர்களின் வாழ்நிலை குறித்த ஏராளமான தரவுகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்துள்ளது. நாட்டின் மிகப் பெரும் சிறுபான்மையினர் மீது மேற்கொள்ளப்பட்ட குஜராத் இன அழிப்பைத் தொடர்ந்து இந்துத்துவ சக்திகளால் கக்கி எறியப்பட்ட வார்த்தைகள். “முஸ்லீம்கள் எங்கெல்லாம் அதிகமாக வாழ்கிறார்களோ அங்கெல்லாம் பிரச்சினைகளை உண்டு பண்ணுகிறார்கள்” என்பதுதான். இதற்கு முற்றிலும் மாறுபட்ட அவர்களின் நிஜ பரிமாணங்களும் அவர்கள் மிகுதியாக வாழும் பகுதிகளில் எதிர்கொள்ளும் இன்னல்களும், எந்தவித அகக் கட்டுமான வசதிகளும் அற்று ஏனைய பகுதிகளின் குறைந்தபட்ச வசதிகள்கூட இன்றி வாழ்வதும் இப்போது வெளிக்கொணரப்பட்டுள்ளது.

மேலும், கல்வி பெறுவதில் அவர்களின் போதாமையும் நாட்டின் மற்ற பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையினரைவிட கல்வியில் பின்தங்கி இருப்பதும் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய செய்தியே ஆகும்.

இஸ்லாமிய பயங்கரவாதம் என்று மேற்குலக நாடுகளாலும் முஸ்லிம் தீவிரவாதம் என உள்நாட்டு ஊடகங்களாலும் தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படும் ஒரு சமூகம் தன் இன, மத அடையாளங்களுடன் வாழ்வது என்பதே அவர்களை தேச நலனுக்கு எதிராக நிறுத்தும் பிம்பத்தை கட்டமைத்துவிடுகிறது. இதுவே அவர்களுக்கு வங்கிக் கடன்களிலிருந்து அரசியல் பங்கேற்பு, கல்வி, மருத்துவம் மற்றும் ஏனைய அடிப்படை வசதிகளைப் பெறுவதிலிருந்தும் விலக்கப்பட்ட சமுதாயமாக மாற்றியுள்ளது.

நாட்டின் வளர்ச்சி என்பது ஒட்டுமொத்த சமுதாய இன மக்களின் வளர்ச்சியே என்பதை சச்சார் குழு அறிக்கை தெளிவாகச் சுட்டிக் காட்டியுள்ளது. ஏற்கனவே சிறுபான்மையினரின் நலனுக்காக நியமிக் கப்பட்ட பல கமிட்டிகளின் பரிந்துரைகளே இன்னும் நிறைவேற்றப் படாமல் தூங்கிக் கிடக்க சச்சார் குழு அறிக்கையின் மேல் முஸ்லிம் சமூகம் எத்தகைய பார்வையைச் செலுத்தும் என்பதும், அதை நடைமுறைப்படுத்த அரசியல் ரீதியாக எவ்வாறு நிர்பந்திக்கப்போகிறார்கள் என்பதும் கேள்விக்குறியே… (நூலின் பதிப்புரையிலிருந்து)

சச்சார் குழு அறிக்கையின் பின்புலம், முக்கியத்துவம் ஆகியவை குறித்து இந்நூலிலுள்ள பல்வேறு கட்டுரைகளிலும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் பேசப்பட்டுள்ளன… சரியாக 404 + 20 = 424 பக்கங்களில் விரிவாகத் தொகுக்கப்பட்ட இந்த ஆவணத்தின் அடிப்படையான அம்சங்களை எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையில் பல்வேறு கோணங்களிலிருந்து இக்கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. ‘சென்சஸ் ‘ உள்ளிட்ட ஏராளமான ஆவணங்களிலிருந்து தொகுக்கப்பட்ட விரிவான தரவுகளிலிருந்து பெறக்கூடிய முக்கியச் செய்திகள் அனைத்தும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. முக்கிய வரைபடங்கள், அட்டவணைகள் ஆகியன தமிழில் பெயர்க்கப்பட்டுள்ளன. சச்சார் குழு அறிக்கையை பல கோணங்களிலிருந்து ஆய்வு செய்தும் விமர்சித்தும் எழுதப்பட்ட பல கட்டுரைகள் இந்த ஆக்கத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன. அவற்றை Reference பகுதியில் காணலாம். குறிப்பாக, குழு உறுப்பினர் ராகேஷ் பசந்தின் கட்டுரை அறிக்கையை அறிமுகம் செய்யப் பெரிதும் பயன்பட்டுள்ளது…

…சச்சார் அறிக்கை என்பது ஏதோ முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பதற்கு மட்டுமேயான ஒரு பரிந்துரை என்பது போல இங்கு சிலரால் முன்வைக்கப்பட்டுகிறது. சமூக-பொருளாதார-கல்வி நிலை என்கிற எல்லா அம்சங்களிலும் மிகவும் பின்தங்கிய நிலையிலுள்ள இந்திய முஸ்லிம்களை மேம்படுத்தி பிற சமூகப் பிரிவினருக்கு இணையாகக் கொண்டு வருவதற்கு இட ஒதுக்கீடு என்பது பல்வேறு வழிமுறைகளில் ஒன்று மட்டுமே.

சச்சார் குழுவின் பரிந்துரைகள் மிகவும் விரிந்த தளத்தில் இயங்குவதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். சமூகத்தின் பன்மைத்துவத்தை மதிப்பிடும் “பன்மைத்துவக் குறியெண்” (Diversity Index) ஒன்றை உருவாக்குவது பற்றிப் பேசுகிறது சச்சார் குழு அறிக்கை. பன்மைத்துவம் குறித்தும், முஸ்லிம்கள் மீது சமூகத்தில் நிலவும் புறக்கணிப்பு குறித்தும், அரசு ஊழியர் மற்றும் அதிகாரிகள் மத்தியில் பிரக்ஞையூட்டுவதையும் அது வற்புறுத்துகிறது.

பாடநூல்களின் உள்ளுறையை மதிப்பிடுகிற சட்டபூர்வமான அமைப்பு ஒன்றை உருவாக்குவது குறித்து அது கவனத்தை ஈர்க்கிறது. உயர்கல்விச் சேர்க்கையில் பன்மைத்துவம் செயல்படும் வகையில் ஒரு மாற்றுச் சேர்க்கை அளவுகோல் ஒன்றைப் பரிந்துரைக்கிறது. முஸ்லிம்கள் மேலும் மேலும் தனிமைப்பட்டு புவியியல் மற்றும் கலாச்சார அடிப்படையில் சுருங்குவதைத் (ghetoisation) தடுப்பதில் சிவில் சமூகத்தின் பொறுப்பை அது சுட்டிக்காட்டுகிறது. பஞ்சாயத்து முனிசிபாலிடி, கார்ப்பரேஷன், கூட்டுறவு வங்கி, மார்கெடிங் கமிட்டி’ ஆகியவற்றில் முஸ்லிம் உறுப்பினர்களை நியமனம் செய்யும் ஆந்திர மாநிலச் சட்டத் திருத்தங்களின்பால் பிற மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கிறது…

…முஸ்லிம்கள் குறித்த கட்டுக்கதைகளையே நம்பி உயிர்வாழும் இந்துப் பாசிச அரசியல் தொடர்ந்து முன்வைக்கும் சில மாயைகள் சச்சார் அறிக்கை மூலம் தகர்ந்துள்ளன. அதேபோல் முஸ்லிம் சமூகம் சற்றே தன்னை உள்நோக்கித் திரும்பி ஆய்வு செய்வதற்கான சில புள்ளிகளையும் அது சுட்டிக்காட்டியுள்ளது…

படிக்க:
ஆனத்தூர் தலித் மக்கள் ஆதிக்க சாதிவெறியர்களால் தாக்கப்பட்டது ஏன் ? உண்மை அறியும் குழு அறிக்கை
பாஜக-வுக்கு எதிராக கருத்திட்ட பேராசிரியரை மண்டியிடச் செய்த ஏபிவிபி குண்டர்கள் !

மசூதி இடிப்பு, தொடர்ந்த கலவரங்கள், பாசிச எழுச்சி ஆகியவற்றின் பின்னணியில் இந்திய முஸ்லிம்கள் தம்மைப் பலதுறைகளிலும் ஆற்றல்படுத்துதல், அரசதிகாரத்தில் பங்கேற்பு, கல்வி மற்றும் அரசுப் பணிகளில் இட ஒதுக்கீடு முதலிய கோரிக்கைகளை முன்வைக்கத் தொடங்கினர். இந்தப் பின்னணியில் உருவான “முஸ்லிம் இட ஒதுக் கீட்டிற்கான தேசிய மாநாடு” (புது டெல்லி, 1994 அக்டோபர் 9), “முஸ்லிம் இந்தியர்களை ஆற்றல் படுத்துவதற்கான இயக்கத் தொடக்கத்திற்கான மாநாடு” (புது டெல்லி, 1999 மே 8) ஆகியன முக்கியமான வரலாற்று நிகழ்வுகள், இம்மாநாடுகளின் தீர்மானங்களும் பின்னிணைப்பில் தொகுக்கப்பட்டுள்ளன. இந்தப் பின்னணியில்தான் முஸ்லிம்களுக்குத் தனி இட ஒதுக்கீடு என்னும் கோரிக்கை தமிழ்நாட்டில் மேலுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த விரிவான வரலாற்றுப் பின்னணியில் சச்சார் அறிக்கையை வைத்துப் பார்க்கும்போதுதான் கடந்த அறுபது ஆண்டுகளாக முஸ்லிம்களின் கோரிக்கைகளும் முஸ்லிம்களின் மேம்பாட்டிற்கென முன்வைக்கப்படும் பரிந்துரைகளும் அப்படியே மாறாது இருப்பது விளங்கும். இதன் பொருள் அவை எதுவும் இதுவரை நிறைவு செய்யப்படவில்லை என்பதே, எனவே இப்போதைய தேவை வெறும் பரிந்துரைகளல்ல. என்ன செய்யப் போகிறோம்?’ என்பதே. (நூலின் முன்னுரையிலிருந்து)

நூல்: சச்சார் குழு அறிக்கை: அறிமுகம், சுருக்கம், விமர்சனம்
ஆசிரியர்: அ.மார்க்ஸ்

வெளியீடு: எதிர் வெளியீடு,
305, காவல் நிலையம் சாலை,
பொள்ளாச்சி – 642 001.
தொலைபேசி: 04259 – 226012 | 98650 05084
மின்னஞ்சல்: ethirveliyedu@sify.com

பக்கங்கள்: 144
விலை: ரூ 70.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

இணையத்தில் வாங்க: noolulagam | panuval | discovery book palace

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று,

கீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
புதிய முகவரி :
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு :

வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி : 99623 90277

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க