ந்த ஆண்டு மஞ்சள் விளைச்சல் 2018 ஆம் ஆண்டை விட அதிகமாக இருப்பினும் விலை சரிந்துள்ளது. சீற்றமடைந்த விவசாயிகள் அரசாங்கத்தின் உதவியை கோரி அந்தந்த மாநிலங்களில் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கூறுகின்றனர். மஞ்சள் சந்தையை பொருத்த அளவில் இந்தியாதான் உலகின் மிகப்பெரிய ஏற்றுமதியாளர்.

மஞ்சளில் உள்ள ஆக்ஸிஜனேற்ற (antioxidant) மற்றும் அழற்சி எதிர்ப்பு (anti-inflammatory) பண்பு நலன்கள் காரணமாக உலகெங்கும் உடல்நலனில் அக்கறை கொண்டுள்ள மக்களிடம் அதனுடைய செல்வாக்கு சமீப ஆண்டுகளில் அதிகரித்திருக்கிறது.

ஆனால், இந்தியாவைப் பொறுத்த அளவில் மஞ்சள் இன்னும் பல வகையான இந்திய கறி வகைகளிலும், நறுமணப் பிரியாணி மற்றும் பிற உணவுப் பொருட்களில் தான் முதன்மையாக பயன்படுத்தப்படுகிறது. இந்தியர்கள் மஞ்சளை மங்களகரமானதாக கருதுகின்றனர். உடல்நலத்தை கொடுக்கும் என்ற நம்பிக்கையில் திருமண விழாக்களில் கூட மணமக்கள் முகங்களிலும் இது பூசப்படுகிறது.

படிக்க:
ஆனத்தூர் தலித் மக்கள் ஆதிக்க சாதிவெறியர்களால் தாக்கப்பட்டது ஏன் ? உண்மை அறியும் குழு அறிக்கை
யார் இந்த அருந்ததிராய் ?

2018 ஆம் ஆண்டில் மஞ்சள் விளைச்சல் குறைந்ததாலும் மேலும் அதனுடைய கையிருப்பு குறைவாக இருந்ததாலும் அதற்கு நல்ல விலை கிடைத்தது. அதன் விளைவாக இந்த ஆண்டு விவசாயிகள் மஞ்சளை அதிகம் விளைவித்தனர். ஆனால், கெடுபயனாக மொத்த விற்பனையகங்களில் மஞ்சளின் இருப்பு மலையாக குவிந்து விட்டதால் 2019 ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்தே மஞ்சளின் விலை 24 விழுக்காடு அளவிற்கு சரிந்து விட்டது.

“மஞ்சளின் விலை அதல பாதாளத்திற்கு சென்று விட்டது. விரக்தியடைந்த விவசாயிகள் தங்களது அவலநிலையை வெளிப்படுத்த தெருவில் இறங்கியிருக்கின்றனர்” என்று தெலுங்கானாவில் முதன்மையான மஞ்சள் சந்தைகளில் ஒன்றான நிஜாம்பாத்தை சேர்ந்த ஒரு வியாபாரி கூறினார். “2019 ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்தே மஞ்சளின் விலை சரிந்து வருவதால் தங்களது விளைச்சலை குறைவான விலைக்கு விற்க உண்மையிலேயே விவசாயிகள் நிர்பந்திக்கப்படுகிறார்கள்” என்று அவர் மேலும் கூறினார்.

மஞ்சள் ஒன்பது மாத பயிராகும். ஜூனில் பயிரிட்டால் உள்நாட்டு பயன்பாடு மற்றும் ஏற்றுமதிக்கு ஜனவரியிலிருந்தே தயாராகி விடும். 2018, டிசம்பர் மாதத்தில் ஒரு டன்னிற்கு 85 ஆயிரமாக (1,200 டாலர்) இருந்த மஞ்சளின் விலை 2019 தொடக்கம் முதல் படிப்படியாக குறைந்து வந்ததாக விவசாயிகளும் வியாபாரிகளும் தெரிவிக்கின்றனர்.

“ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் மஞ்சள் விலை தொடர்ந்து சரிந்து தற்போது டன்னிற்கு 65 ஆயிரம் ரூபாய் என்று வந்திருக்கிறது” என்று நிசாமாபாத்தை சேர்ந்த விவசாயியான அபிஜித் கூறினார். ஒன்று மஞ்சளின் விலையை சிறிதாவது ஏற்ற வேண்டும் அல்லது ஒரு பகுதியாவது அரசு நிர்ணயித்த விலைக்கு மஞ்சளை வாங்கிக் கொள்ள வேண்டும் என்று மேலும் அவர் கூறினார்.

மாநில அரசாங்கம் நடத்தும் இந்திய நறுமணப் பொருட்கள் வாரியத்தை சேர்ந்த அதிகாரிகளிடம் இதுகுறித்து கேட்டபோது பதிலேதும் கூறவில்லை.

இந்த விலை சரிவால் இலட்சக்கணக்கான இந்திய விவசாயிகளின் நிலை மோசமாகியுள்ளது.  தங்களது இழிநிலையை கண்டுகொள்ளாமல் இருப்பதாக மோடி அரசின் மீது குற்றம் சாட்டுகின்றனர்.

இந்தியா சராசரியாக ஆண்டொன்றிற்கு 70 கிலோகிராம் எடை கொண்ட 65 இலட்சம் மூட்டைகளை உற்பத்தி செய்கிறது. இதில் ஜப்பான், மலேசியா, வங்காளதேசம், ஐக்கிய அரபு நாடுகள் மற்றும் முக்கிய அமெரிக்காவிற்கு 10 இலட்சம் மூட்டைகள் ஏற்றுமதியாகிறது. ஒட்டு மொத்தமாக உலக அளவில் மஞ்சள் ஏற்றுமதியில் 80 விழுக்காடு இந்தியாவுடையதாக இருப்பினும் அதனுடைய உள்நாட்டு பயன்பாடான 60 இலட்சம் மூட்டைகளை ஒப்பிடுகையில் இது குறைவாகவே உள்ளது.

இந்த ஆண்டின் மஞ்சள் உற்பத்தி 2018 ஆம் ஆண்டின் உற்பத்தியை விட 10 இலட்சம் மூட்டைகள் அதிகரித்து 70 இலட்சம் மூட்டைகளாக உள்ளது என்று விவசாயிகளும் வியாபாரிகளும் கூறுகின்றனர். இந்த விளைச்சல் அதிகரிப்பின் மூலம் மஞ்சள் கையிருப்பின் அளவு 40 இலட்சம் மூட்டைகளாக இருக்கிறது என்று அவர்கள் கூறினார்கள்.

மஞ்சள் விலை சரிவு விவசாயிகளை வேறு பயிர்களுக்கு மாற நிர்பந்திக்கிறது. ஒரு ஏக்கருக்கு கிடைக்கும் விளைச்சலில் சோயாபீன், பயறு வகைகள் மற்றும் புகையிலை உள்ளிட்ட பயிர்களுடன் போட்டியிட்டாலும் அந்த பயிர்களுக்கான கால அளவு மஞ்சளை விடக் குறைவு.

படிக்க:
விவசாயிகளை மரணக் குழியில் தள்ளும் அரசு – வெங்கட்ட ராமைய்யா உரை !
விவசாயியை வாழவிடு – மக்கள் அதிகாரம் மாநாட்டுத் தீர்மானங்கள் !!

மேலோட்டமாக பார்த்தால் ஒருபுறம் விவசாயிகளின் பேராசைதான் மஞ்சளை அதிகம் விளைவித்தது. விளைவாக விலையும் சரிந்துவிட்டது என்று சிலர் வாதிடக்கூடும். ஆனால், ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாயத்தின் பங்களிப்பு குறைந்திருப்பதையும் அதே நேரத்தில் ஒட்டுமொத்த உழைப்பு சந்தையில் இன்னும் விவசாயம் தான் முதன்மையாக இருக்கிறது என்ற எதார்த்தம் தெரிய மறுக்கிறது.

விவசாயிகளை குறை கூறுவோர்தான் இயற்கை விவசாயத்தை குறித்தும் விதந்தோதுவார்கள். உண்மையான இந்திய கிராமங்கள் ஒரு கட்டுமான நெருக்கடியில் சிக்கித் தவிப்பதை இவர்கள் ஒருபோதும் கண்டுணரமாட்டார்கள். பல மாநிலங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான இந்திய விவசாயிகள் உயிர்வாழும் உரிமைக்காக டெல்லியில் நடத்திய போராட்டங்கள், கஜா புயல் நடத்திய கோரத்தாண்டவம் போன்றவை ஒரு செய்தியாய் கூட இவர்களுக்கு செவிக்கு வந்திராது.


நன்றி: the wire
கட்டுரையாளர்: Mayank Bhardwaj

தமிழாக்கம்: சுகுமார்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க