”குடி அரசு” இதழில் சந்திரசேகரப் பாவலர் என்பவரால் ”இதிகாசங்கள்” என்னும் தலைப்பின் கீழ் எழுதப் பெற்று வெளிவந்த இராமாயண ஆராய்ச்சிக் கட்டுரைகளைத் தொகுக்கப் பட்டிருக்கிறது.

இதிகாசங்கள் என்ற சொல்லுக்குப் பொருள், பழைய கதைகள் என்பது. பழைய கதைகளெல்லாம் இப்பொதுத் தலைப்பின்கண் வருமோ என்றால் அவை வரா. இராமாயணம், பாரதம் என்ற இரண்டுமே இதிகாசங்களெனப் பெயர் பெறுவன. இவற்றை நன்றாக ஆராய்ந்து படிப்பதால், பழைய காலத்திலிருந்த ஆரியர்களது பழக்க வழக்கங்களும், நீதி முறைகளும், இன்னும் அவர்களைப் பற்றிய ஒழுக்க முறைகளும் நன்கு புலனாகும். ஆதலின் ஈண்டுத் தலைப்பிட்டு அவ்விரண்டு நூல்களையும் ஆராயத் தொடங்குகின்றோம். இவ்வாராய்ச்சியைப் படிப்போர், இதனை ஆராய்ச்சிக் கண்கொண்டு நோக்க வேண்டுகின்றோம். முதற்கண் இராமாயணத்தை எடுத்துக் கொள்வோம்.

இராமாயணம் என்பது இராமன் என்ற ஆரிய மன்னவனின் வரலாறு. தற்காலம் இவ்வரலாற்றை அறியாதவர் இலர். இது அவ்வளவு தூரம் ஆரியர்களால் தமிழ்நாட்டில் பரப்பப் பெற்றுள்ளது. நம் தமிழ் மக்களில் பெரும்பாலோர் இவ்விராம சரித்திரம், நம்மவர்களைச் சேர்ந்த சரித்திரமென்றும், இராமபிரான் திருமாலின் அவதாரமென்றும், அவன் நம் தெய்வமென்றும் நினைத்துப் பாராட்டும்படி ஆரியர் செய்து விட்டனர். இப்போது இச்சரித்திரம் பல ஊர்களில் வித்வான்கள் படிக்க, பலர் கூடிப் பக்தி சிரத்தையோடும் கேட்கப் பெறுகின்றது. அவ்வாறு படிக்கும் வித்வான்களும், கேட்கும் அறிஞர்களும் இக்கதையின் உண்மையை அறிய வேண்டிக் கொள்கின்றோம். அவர்கள் தயவு செய்து கீழே வரும் ஆராய்ச்சிக் கட்டுரையைக் கவனித்துப் படிக்கக் கேட்டுக் கொள்கிறோம். அவர்கள் படிப்பதெல்லாம் தமிழ் மகனாகிய பெரும் புலவர் கம்பர் பாடிய இராமாயணக் கதையே. கம்பர் தாம் பாடியுள்ள இராமாயணக் கதையைப் படிப்போர், அது முழுதும் உண்மைதானா என்பதை அறிந்து கொள்வதற்காக, வட மொழியிலுள்ள இராமாயணத்தையும் படிக்க வேண்டுமென்று அதன் பெருமையை முதலில் எடுத்தோதுகிறார். ஏனென்றால், கம்பர் தாம் பாடியுள்ள பாடல்களில் சிற்சில இடங்களில் தம் கதையை மாற்றி எழுதியிருக்கிறார். புலவர்களில் மிகச் சிறந்தவரிலொருவராகிய கம்பர் இக்கதையைப் பாடிய பின்னரே இது தமிழ் மக்கள் பெரும்பாலோரால் படிக்கப் பெற்றது. (நூலிலிருந்து பக்.10-11)

குரங்குகளோடு அவன் கூடி வாழ்ந்தது அவன் பெற்ற சாபப் பயனேனும், அவன் வாலியை மறைந்து நின்று கொன்று சகோதரத் துரோகியாகிய சுக்ரீவனோடு நட்பு கொண்டது. பரதனாகிய தனது சகோதரனுக்குத் துரோகம் நினைத்த அவ்விராமனுக்கு இயல்பானதே. இதுபோலவே சகோதரத் துரோகியாகிய விபீஷணனிடம் இராமன் நட்புக் கொண்டதும் அவனுக்கு இயல்பும் இராஜ தந்திரமுமாம். இவ்வாறாக இவ்விருவருடனும் நட்பு கொண்டதை இராமனுக்குப் பெருமையானதென மயங்கினார் சாமிநாதன். 3 பேராசைக்காரனும் சகோதரத் துரோகியுமாகிய விபீஷணனைத் தன்பக்கம் சேர்க்காதிருந்தால், இராமன் இராவணனைக் கொன்றிருத்தல் இயலாது.

படிக்க:
விழுப்புரம் கெடார் : மருத்துவர் இல்லாததால் இறந்து பிறந்த குழந்தை – ஆபத்தான நிலையில் தாய் !
விரைவில் வெளிவருகிறது ! கார்ப்பரேட் – காவி பாசிசம் புதிய நூல் !

“இராவணனுடைய நெஞ்சில் அம்பெய்து கொல்” எனக் கூறி அருகே நின்றானே பாவி விபீஷணன்! அநியாயம்! அநியாயம்! இன்று போய் நாளை வாவென இராமன் கூறியதாகக் கூறுவது, இராமனால் பற்றுடைய வால்மீகியும் கம்பரும் என்பதைச் சாமிநாதன் உணர்வாராக ! இனத்துரோகமும் இனத் துரோகச் சேர்க்கையும்தான் சாமிநாதனுக்குச் சமத்துவமாகத் தோன்றுகின்றன போலும். தனக்கு உதவி செய்த சடாயுவுக்கு மனமிரங்கியது உலக இயற்கையே. நல்லுணவு கிடையாது திண்டாடிய இராமனுக்குச் சபரி நல்லுணவு தர அதை அவன் ஆவலுடன் வாங்கி உண்டதும் அவனுக்கு ஒரு பெருமையே! நன்றாகச் சாப்பிட்டதை ஒரு பெருமையாகக் காட்டியது சுவாமிநாதனுக்கு ஒரு பெருமையே. இவற்றால் இராமனுடைய துரோகச் செயல்கள் இனிது புலனாகும். இராமன் சூத்திரனைக் கொன்றது அதிபாதகமே, அதனால், இராமன் சிறந்த அதர்மராஜனே என்பதும் விளங்குகிறது. இனி சீதையைப் பற்றி அவர் கூறுவதைக் கவனிப்போம்.

இராமன் சீதையின் கற்புடைமையில் அய்யுறுகிறான். சீதையை இராவணன் பற்றி மடியில் வைத்துப் போனதும் அவனுடைய வசமாக அவள் பத்துமாதம் வாழ்ந்ததுமே அவ்வையுறவுக்குக் காரணம். சீதையும் தன்னுடல் இராவணன் வசமிருந்ததை ஒப்புக் கொள்ளுகிறாள்.

இராமன் அரசாளும் நாளையிலே ஒரு வண்ணான் (சலவைத் தொழிலாளி) அந்நியனோடு வாழ்ந்த சீதையை இராமன் சேர்த்துக் கொண்ட இழிசெயலை மிக இழித்துப் பேசுகிறான். அதனால் மானம் பொறுக்க மாட்டாமல் இராமன், நிறைந்த கர்ப்பிணியாக இருந்த சீதையைக் காட்டுக்கு வஞ்சகமாக அனுப்புகிறான். இவ்விழிந்த செயலைப் பாராட்டிச் சாமிநாதன், “வண்ணான்தானே என்று அலட்சியம் செய்யாமல் அவனும் ஒரு பிரஜா உரிமையுடையவனெனக் கருதி, அவன் சொல்லுக்கும் தான் கட்டுப்பட வேண்டுமென்னும் காரணத்தால், தன்னுடைய மனைவியாகிய நாட்டின் அரசியைக் காட்டிற்கனுப்பிய நன்னடத்தைகளும்” என்று எழுதினார். பிரஜா உரிமை பற்றியும் அரசாளும் முறை பற்றியும், நன்னடத்தை பற்றியும் இச்சாமிநாதனுக்குள் அறிவு மிக அழகியதே. இவ்விழிந்த ஆராய்ச்சியையும் தமிழ்நாடு’ வெளிப்படுத்தியதே! அறிவாளர் நகையாடக் கூடிய இத்தகைய கட்டுரைகளை வெளிப்படுத்துவதிலும் நல்ல கட்டுரைகள் கிடையாது போலும். வெள்ளைத் தாள்களை மடித்துச் சந்தாதாரர்களுக்கு அனுப்பின் மிக நலமாக இருக்குமே.

” வண்ணான் ஒருவன் தன் மனைவியின் நடத்தையில் அய்யுற்றது காரணமாகத் தன் மனைவியை – அதிலும் பூரணக் கர்ப்பிணியை ஒருவன் காட்டுக்கு அனுப்பினானென்றால், அவனைப் போலும் அறிவில்லாத முழு மூடன் ஒருவன் இவ்வுலகத்தில் இதுகாறும் தோன்றியிருப்பானா என்பதைச் சாமிநாதன் சிந்திப்பாராக!

இராமன் இதனால் மிகவும் முழுமூடனாதல் வேண்டும். அன்றியும் இரக்கமற்ற பாவியுமாதல் வேண்டும். தன்னுடைய மனைவியும் பூரணக் கர்ப்பிணியுமாகிய சீதையென்ற ஒரு பெண்ணிடத்திலே இவ்வாறு மிருகத்திலும் கேடு கெட்ட மிருகம் போல நடந்துகொண்ட இராமன், தவம் செய்து கொண்டிருந்த ஒரு சூத்திரனுடைய தலையை வெட்டினானென்பது ஒரு ஆச்சரியமன்று. விவேகானந்தர் கூறுகிறாரென நம்பும் இடைச் செருகலெனும் நம்பிக்கையைச் சாமிநாதன் விட்டொழிப்பாராக! மேலும், சீதை கற்பிழந்தவளாகாதிருந்தால், அவள் கணவனாகிய இராமன் அய்யுற்றதோடு நில்லாமல் உறுதி கொண்டு அவளைக் காட்டுக்கு அனுப்பியிரானன்றோ ? அவரது பாரதக் கூற்றாராய்ச்சியை வரும்போது எழுதுவோம். இது இடனன்றாம். ( நூலிலிருந்து 83 – 84 )

நூல்: இராமாயண ஆராய்ச்சி ( பால காண்டம் )
ஆசிரியர்: பண்டித இ.மு. சுப்பிரமணியபிள்ளை

வெளியீடு: பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்,
பெரியார் திடல், 50, ஈ.வெ.கி. சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை – 600 007.
தொலைபேசி: 8428 455 455
மின்னஞ்சல்: periyarbooks.in@gmail.com

பக்கங்கள்: 84
விலை: ரூ 20.00 (ஆறாம் பதிப்பு)

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

இணையத்தில் வாங்க: periyar books

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று,

கீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
புதிய முகவரி :
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு :

வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி : 99623 90277

1 மறுமொழி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க