பஞ்சாப் நேஷனல் வங்கியிடம் ரூ. 13 ஆயிரம் கோடி கடனை வாங்கிவிட்டு திரும்பச் செலுத்தாத வைர வியாபாரி நீரவ் மோடி இங்கிலாந்துக்கு தப்பியோடினார். சமீபத்தில் இலண்டனில் உள்ள சொகுசு பகுதியில் வசிப்பதும், வைர வியாபாரத்தை தொடங்கியிருப்பதும் இங்கிலாந்து ஊடகம் மூலம் தெரியவந்தது.
தொழில் தொடங்கவும், வசிக்கவும், உரிமை வழங்கும் தேசிய காப்பீடு எண்ணை இங்கிலாந்து அரசு வழங்கியிருப்பதாக செய்தி வெளியான நிலையில், நீரவ் மோடி பற்றி மேலதிக தகவல்களைக் கேட்ட இங்கிலாந்து அரசுக்கு, இந்திய அரசு பதிலளிக்காமல் மழுப்பியிருப்பது தெரிய வந்துள்ளது. ஒருமுறை அல்ல, பலமுறை இவரைப் பற்றி தகவல்கள் அளிக்கக்கோரி கேட்டதாகவும் அதற்கு இதுவரை இந்திய அரசு பதிலளிக்கவில்லை என்றும் இங்கிலாந்து அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒரு சட்ட குழு இந்தியாவுக்கு வந்து நீரவ் மோடி குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க முனைந்தபோதும்கூட, இந்தியாவிடமிருந்து எந்தவித பதிலும் வரவில்லை என்பதும் வெளியாகியிருக்கிறது.
ஜனவரி 2018 -ல் இங்கிலாந்துக்கு தப்பி ஓடினார் நீரவ் மோடி. பரஸ்பர சட்ட உதவி ஒப்பந்தத்தின்படி பிப்ரவரி 2018-ல் இங்கிலாந்தின் தீவிர மோசடி அலுவலக அதிகாரிகளுக்கு இந்தியாதான் முதலாவதாக எச்சரிக்கையை அனுப்பியிருக்கிறது. மேற்கண்ட ஒப்பந்தத்தின்படி, இந்திய உள்துறை அமைச்சகம் அழைப்பாணைகளையோ பிடியாணைகளையோ இலண்டனில் உள்ள இந்திய தூதரகத்தின் மூலம் பிரிட்டன் மைய அதிகாரிகளுக்கு அனுப்ப முடியும்.
இந்த அதிகாரி, இந்தியாவின் கோரிக்கையை ஏற்று நீரவ் மோடி குறித்து தீவிர மோசடி அலுவலகம் விசாரிக்கலாம் என முடிவு செய்தது. மார்ச் மாதம், நீரவ் மோடி இங்கிலாந்தில்தான் வசிக்கிறார் என இந்திய அதிகாரிகளிடம் தெரிவித்தது இந்த அலுவலகம். மேலும், இதுகுறித்து இந்திய அதிகாரிகளுடன் பணியாற்ற பேரி ஸ்டான்கோம்ப் என்ற வழக்கறிஞரையும் ஒதுக்கியது.
ஸ்டான்கோம்பு மற்றும் அவரது குழு விசாரணையில் இறங்கியபோது, நீரவ் மோடிக்கு எதிரான நடவடிக்கைகளைத் தொடர அதிக அளவிலான ஆவணங்கள் தேவை என்பதை உணர்ந்தது. தொடர்ச்சியாக, இந்தியாவுக்கு மூன்று கோரிக்கைகளை அனுப்பி வைத்தனர். ஆனால், இந்தியாவிடமிருந்து எந்த பதிலும் இல்லை. கூடவே, இந்தக் குழு இந்தியாவுக்கு வந்து நீரவ் மோடியை கைது செய்ய தேவையான ஆதாரங்களை பெற முயன்றது. ஆனால், இந்திய அதிகாரிகளிடமிருந்து எவ்வித ஆதரவும் கிடைக்கவில்லை என்கிறது இந்தக் குழு.
டிசம்பர் 2018-ம் ஆண்டு, இந்த விசயத்தில் ‘’இந்தியாவுக்கு ஆர்வமில்லை’’ என்ற காரணத்தைக் கூறி மேற்கொண்டு விசாரணையை நிறுத்திவைத்தது தீவிர மோசடி அலுவலக குழு. இந்தச் செய்தியை வெளியிட்டுள்ள என்டீடிவி, இந்திய அதிகாரிகளிடம் இதுகுறித்து விசாரித்தபோது அவர்கள் மறுக்கவும் இல்லை; ஒப்புக்கொள்ளவும் இல்லை என பதிவு செய்துள்ளது.
கடந்த மார்ச் 9-ம் தேதி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம், நீரவ் மோடியை இந்தியாவிடம் ஒப்படைப்பது, இங்கிலாந்து அதிகாரிகளிடமிருந்து எந்தவித பதிலையும் பெற முடியவில்லை என சொல்லியிருந்தது. அமலாக்கத்துறை இயக்குனரகம் மற்றும் சி.பி.ஐ. நீரவ் மோடியை ஒப்படைக்க கேட்டிருந்தது இங்கிலாந்து அரசால், பரிசீலிக்கப்பட்டு வருவதாக வெளியுறவுத் துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ராவீஸ் குமார் தெரிவித்தார்.
படிக்க:
♦ பாசிசத்தின் இயற்கைக் கூட்டாளிதான் பாஜக | தோழர் மருதையன் உரை | காணொளி
♦ ஏழைத்தாயின் மகன் # 2 – நீரவ் மோடியின் லண்டன் ‘அகதி’ வாழ்க்கை !
அதே நேரத்தில், இந்தியாவின் கோரிக்கையை ஏற்று இங்கிலாந்து செயல்படுவதை எதிர்கொள்ளும் வகையில் நீரவ் மோடி ஒரு சட்ட குழுவை ஏற்படுத்தியுள்ளார். தன்னை ஒப்படைக்கோரும் வழக்கை எதிர்கொள்ளவும் நீரவ் மோடி சட்ட வல்லுநர் குழுவை அமைத்திருக்கிறார்.
ஆக, மோடி தலைமையிலான இந்திய அரசின் ஆதரவில்தான் நீரவ் மோடி சொகுசு வாழ்க்கையை இங்கிலாந்தில் தொடர்ந்துகொண்டிருக்கிறார் என்பதும் இந்த ஆதாரங்கள் மூலமாக தெளிவாகத் தெரிகிறது. 13 ஆயிரம் கோடியில் ஒரு ரூபாயைக்கூட மோடி அரசால் திரும்பப் பெற முடியாது என்பதும் தெளிவாகத் தெரிகிறது.