சந்திரமோகன் | சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் | நாடகம் | பாகம் – 6

சி.என்.அண்ணாதுரை
காட்சி – 9
இடம் : வீதி
உறுப்பினர்கள் : கேசவப்பட்டர், பாலச்சந்திரப்பட்டர், வீரர்கள்.

கேசவப்பட்டர் : ஒய் ஒய்! வாரும் இப்படி… காலம் எவ்வளவு தலைகீழா மாறிண்டு போறது பார்த்தீரோ?

பாலச்சந்திரப்பட்டர் : என்ன! நேக்குப் புரியல்லையே?

கேசவப்பட்டர் : வேதம், சாஸ்திரம், ஆச்சாரம், அனுஷ்டானம், நேமம், நிஷ்டை எல்லாம் பாழ். பாழாகிப் போச்சுங்காணும். தலையை வெளியே நீட்ட முடியாது போலிருக்கு இனி.

பாலச்சந்திரப்பட்டர் : ஏன் ஒய்! விஷயத்தை விளக்கமா, சாவதானாமா, சாந்தமா சொல்லுமே! வறட்டுக் கூச்சல் போட்டுண்டே இருக்கறேள்?

கேசவப்பட்டர் : ஆமாம், ஒய்! இனி நம்ம வேத சத்தமே இந்த மராட்டிய மண்டலத்துக்கு வறட்டுக் கூச்சலாகத்தான் தோணப் போறது. தலைக்குத் தீம்பு வர்றது . தெரியாமெ, சாஸ்திரம் அழிக்கப்படுகிறது. அறியாமெ அவாள் அவாள் வயிறு நெறைஞ்சா போதும்னு இருந்தா என்ன ஆறது ஒய்? நம்ம குலம், கோத்திரம், பூர்வபெருமை சகலமும் பாழகிறது சர்வேஸ்வரா!

பாலச்சந்திரப்பட்டர் : ஆத்திரமாப் பேசினா ஆயாசமாத்தான் இருக்கும். நிதானமாய்ப் பேசும் ஒய்!

கேசவப்பட்டர் : முடியலை ஒய் நிசமாச் சொல்றேன். மனது பதறிண்டு இருக்கு. பதறாமலிருக்குமோ, மகாபாவம் நடக்க இருக்கும் போது நமக்குத் தெரியறது. தெரிந்தும் நாம் அதைத் தடுக்காமல் இருக்கிறதுண்ணா , ஒண்ணு , நாம் மரக்கட்டேண்ணு அர்த்தம். அல்லது நாமும் அந்தப் பாவத்துக்குச் சம்மதிக்கிற சண்டாளர்கள்ணு அர்த்தம். சம்மதிக்குமோ மனசு? சம்மதிக்குமோண்ணு கேக்கறேன்.

பாலச்சந்திரப்பட்டர் : சம்மதிக்காது! சாஸ்திரம் அழிக்கப்படுவதைப் பார்த்துண்டு, சகிச்சிண்டு இருக்கத்தான் முடியாது.

கேசவப்பட்டர் : முடியாதுண்ணு சொல்லிண்டு மூக்காலே அழுதுண்டிருந்தா போதுமா?

பாலச்சந்திரப்பட்டர் : வேறே என்ன செய்யிறது? என்ன செய்ய முடியும் நம்மாலே..?

கேசவப்பட்டர் : மண்டு மண்டு! ஏன் ஒய் முடியாது? ஏன் முடியாதுண்ணு கேக்கறேன்.

பாலச்சந்திரப்பட்டர் : சும்மா இரும் ஒய்! இது என்ன மாடா போ. மரமா போ, பூச்சியா போ, புழுவாய் போ-ன்னு சாபங் கொடுக்கிற காலமா? இல்லே. நம்ம கையிலே அக்கினி இருக்குண்ணு சொன்னா ஊரார் கேட்டு பயப்படற காலமா? காலத்தை அறிஞ்சுண்டு பேசும். கர்ச்சனை செய்யணும்னா சிங்கமா இருக்க வேணுமோ?

கேசவப்பட்டர் : காலத்தை அறிஞ்சிண்டு மட்டுமில்லெ ஒய் காலம். இன்னும் வரவர எவ்வளவு கெட்டுப் போகப் போறதுண்ணும் தெரிஞ்சுண்டுதான் பேசறேன்.

(வீரர்கள் கொடி ஏந்தி முழக்கத்துடன் வருதல்)

அடே கொஞ்சம் நில்லு! என்ன, ஒரே கூச்சல் போட்டுண்டு போறேளே. என்ன விசேஷம்?

வீரன் : மகாராஷ்டிர வீரன், மாவீரத் தலைவன் சிவாஜி மகாராஜாவுக்குப் பட்டாபிஷேகம் நடைபெறப்போவது உங்களுக்குத் தெரியாதா?

கேசவப்பட்டர் : ஆமாம்! கேள்விப்பட்டோம். என்ன அதுக்கு?

வீரன் : பட்டாபிஷேகத்தன்று சிவாஜி பவனி வருவதற்காக பாஞ்சாலத்திலிருந்து தருவிக்கப்பட்ட பஞ்சகல்யாணி ஊர்வலமாக அழைத்துச் செல்லப்படுகிறது. நாங்கள் போகிறோம். சிவாஜி மகாராஜாவுக்கு … ஜே.

கேசவப்பட்டர் : எவ்வளவு துணிச்சல் இந்த சிவாஜிக்கு இவன் என்ன குலம்? இவன் குலத்துக்கு சாஸ்திரம் என்னவிதமான தருமத்தைக் கூறியிருக்கிறது, என்பதைத் துளிகூட யோசிக்காமப்படிக்கு, இவன் ராஜ்யாபிஷேகம் செய்து கொள்ளப் போகிறானாமே. அடுக்குமோ! சாஸ்திரம் சம்மதிக்குமோ?

(எதிரே மோரோபந்த் வருகிறார்)

பாலச்சந்திரப்பட்டர் : ஒய்! அதோ மோரோபந்த் வருகிறார். அவரிடம் கூறுவோம்.

கேசவப்பட்டர் : எந்த மோரோபந்த்?

பாலச்சந்திரப்பட்டர் : நம்மவர்தான் ஓய்!

கேசவப்பட்டர் : நம்ம குலந்தான். ஆனால், அவர் இப்போ சிவாஜியினிடமல்லவா வேலை செய்துண்டிருக்கிறார்? முதன் மந்திரி ஸ்தானமல்லவோ வகிச்சிண்டிருக்கிறார். அவர் சிவாஜியின் சார்பாகத்தான் பேசுவார். அவன் பட்டாபிஷேகம் செய்து கொள்வது சாஸ்திர சம்மதமான காரியம்ணு பேசுவார்.

பாலச்சந்திரப்பட்டர் : அசட்டுத்தனமான முடிவுக்கு அவசரப்பட்டு வராதீர். மோரோபந்த் சிவாஜியிடம் பெரிய உத்தியோகம் பார்த்துண்டு வருபவரானாலும், நம்ம அவர் குலம். நம்மவா எங்கே இருந்தாலும் குல ஆச்சாரத்தையும், அவர் அந்த ஆச்சாரத்துக்கு ஆதாரமாய் இருக்கிற சாஸ்திரத்தையும் ஒருநாளும் அழிஞ்சு போகப் பாத்திண்டிருக்க மாட்டா. வேணுமானாப் பாரும். அதோ, அவரே வந்துவிட்டார். வரணும். வரணும்

மோரோபந்த் : ராம் ராம் என்ன பாலச்சந்திரப்பட்டர் வாள் . ஓகோ! கேசவப்பட்டர்? ஆமாம், என்ன கோபமாகப் பேச்சுக்குரல் கேட்டதே?

கேசவப்பட்டர் : பேச்சுக் குரல்தானே? இனி அதிக நாளைக்கு இராது. நிர்ச்சந்தடியாகிவிடும். ஸ்மசான சந்தடி இருக்கும். கவலைப்பட வேண்டாம்.

மோரோபந்த் : என்ன, கேசவப்பட்டர்! ஏதோ வெறுப்படைந்தவர் போலப் பேசறேளே?

கேசவப்பட்டர் : வெறுப்பில்லை ஸ்வாமி, வெறுப்பில்லை! வேதனை தாங்க முடியாத வேதனை. வேதம் நாசமாகிறது. வேதியர்கள் வகுத்த விதிமுறைகள் நாசமாகின்றன. சாஸ்திரம் அழிகிறது; தர்மம் அழிகிறது, வேதனை இல்லாமலிருக்குமோ?

மோரோபந்த் : எதைக் குறித்துப் பேசுகிறீர், இவ்வளவு ஆக்ரோஷத்தோடு?

கேசவப்பட்டர் : ஆக்ரோஷமா? இதுவா? மோரோபந்த்! மோரோபந்து நீர் ஞானசூன்யரல்ல. நமது குலதர்மம், குலப்பெருமை அறியாதவரலல்ல.

மோரோபந்த் : அறிந்திருக்கிறேன். அதனால் என்ன ஸ்வாமி, அடேடே! அதைச் சொல்கிறீர்களா?

கேசவப்பட்டர் : அதென்ன ஸ்வாமி, அவ்வளவு சாதாரணமாகப் பேசுகிறீர், சர்வ நாசம் சம்பவிக்கும் காரியமல்லவா அது. சிவாஜி என்ன குலம்? அந்தக் குலத்துக்கு என்ன கடமை? க்ஷத்திரிய குலமல்லவா அரசாளலாம். ராஜ்யாபிஷேகம் உண்டு.

மோரோபந்த் : க்ஷத்திரியனுக்குத்தான் சிவாஜி முயற்சிக்கிறான்.

கேசவப்பட்டர் : நீர் பார்த்துக் கொண்டு இருக்கிறீர். மார்பிலே முப்பிரியும் இருக்கிறது. அறிந்து பயன்? செந்தாமரை நிறைந்த தடாகத்திலே முரட்டு எருதுகள் இறங்கி தாமரையைத் துவம்சம் செய்வதைப் பார்த்தும், அதைத் தடுக்காமல் இருந்து கொண்டே, தாமரையின் அழகு நேக்கு நன்னா தெரியுமேன்னு பேசிண்டிருந்தா போதுமா? புத்திமான் செய்கிற காரியமா இது?

மோரோபந்த் : நீர் எதைக் குறிப்பிடுகிறீர்?

கேசவப்பட்டர் : உம்ம கண் எதிரிலேயே நம்ம சாஸ்திரம் – நாசமாவதைத்தான் குறிப்பிடுறேன். சிவாஜி பட்டாபிஷேகம் செய்துக் கொள்ளப் போறானாமே?

மோரோபந்த் : பைத்தியக்காரர் பார்த்துக் கொண்டு சும்மாவா இருப்பேன்? நேக்கு தெரியாதா, வேதாச்சாரம் கெடக்கூடாது என்கிற விஷயம்.

கேசவப்பட்டர் : அப்படியானா தடுத்தீரோ?

மோரோபந்த் : கண்டிப்பாக பட்டாபிஷேகத்தை சாஸ்திர விதிப்படி செய்துக் கொள்வது மகாபாவம். அந்தப் பாவகாரியத்துக்கு நான் உடந்தையாய் இருக்க முடியாது. தடுத்தே தீருவேன். எதிர்த்தே தீருவேன் என்று தெளிவாக, தீர்மானமாகக் கூறியாகிவிட்டது.

பாலச்சந்திரப்பட்டர் : பார்த்தீரா, ஒய்… நான் சொன்னேனல்லவா. (கேசவப்பட்டர் மேரோவைத் தழுவி)

கேசவப்பட்டர் : க்ஷமிக்கணும் ஸ்வாமிகளே! ஆத்திரமாகப் பேசிவிட்டேன். தங்கள் குலப்பெருமையை உணராமல். தடுத்தீரோ? ஆரிய குல ரட்சகர் நீர். வேதாகம பாதுகாவலர் நீர்.

மோரோபந்த் : இது கலிகாலம். கலிகால தருமப்படி இப்போது பூலோகத்திலே க்ஷத்திரிய குலமே கிடையாது என்று கூறினேன்.

கேசவப்பட்டர் : ஆதாரம் என்ன கூறினீர்?

மோரோபந்த் : ஏன், அந்தக் காலத்திலேயே பரசுராமர் க்ஷத்திரியப் பூண்டையே அழித்து விட்டாரே . க்ஷத்திரியர் ஏது இப்போது என்று கேட்டேன். சிவாஜிக்குப் பட்டம் சூட்டுவது என்பதற்கு எந்த சனாதனியும் சம்மதிக்க முடியாது என்று கூறிவிட்டேன். ஆகையாலே ஆத்திரப்பட்டு ஏதேதோ கூவிண்டிருக்க வேண்டாம். நமது ஆரிய சோதராளிடம் பேசி இது விஷயமாக, அனைவரையும், ஒன்று திரட்டும். சிவாஜி சம்மதம் கேட்டு அனுப்புவான். முடியாது’ என்று ஒரேயடியாய்க் கூறிவிடும்.

படிக்க:
முதியோர் கல்வி குறித்து முதல் அகில ரஷ்யக் காங்கிரசை வாழ்த்தி ஆற்றிய உரை !
மோடியா…? அந்த ஆளைப் பத்தி பேசாதீங்க ! சென்னை மக்கள் கருத்து

கேசவப்பட்டர் : ஆஹா! இப்போதே கிளம்புகிறேன்! நம்ம சோதராளிடம் சொல்கிறேன் விஷயத்தை. சூட்சமமா இரண்டொரு வார்த்தை சொன்னாக்கூட புரிந்து கொள்வாளே நம்மளவா.

மோரோபந்த் : செய்யும் ஸ்வாமி! முதலில் போய் அந்தக் காரியத்தைச் செய்யும். நான் பட்டாபிஷேகத்தை நடக்க ஒட்டாதபடி என்னாலான காரியமெல்லாம் செய்துண்டு இருக்கேன்.

கேசவப்பட்டர் : மனம் நிம்மதியாச்சு. மனுமாந்தாதா கால ஏற்பாடு சாமான்யமா? நான் வர்ரேன். வாரும் ஒய், பாலச்சந்திரப்பட்டர் சந்திரரே வாரும், போய்க் காரியத்தைக் கவனிப்போம்.

(தொடரும்)

நன்றி: Project Madurai

முந்தைய பகுதி:

பகுதி 1 : சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் | நாடகம் | சி. என். அண்ணாதுரை
பகுதி 2 :
சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் | நாட்டை மீட்கப் போரிடும் மாவீரன் அல்லவா நீ !
பகுதி 3 : யுத்த வெறியனுக்கு மனைவி மக்கள் மீது எப்படி அன்பு ஏற்படும் ?

பகுதி 4 : என்னதான் சொன்னாலும் சண்டைன்னா அதிலே நடப்பது கொலைதானே !
பகுதி 5 :
ஒரு விருந்துக்குத் தலைமை தாங்க குல தர்மம் தடைவிதிக்கிறது !

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

2 மறுமொழிகள்

  1. //கேசவப்பட்டர் : உம் மகன் எதிரிலேயே நம்ம சாஸ்திரம் – நாசமாவதைத்தான் குறிப்பிடுறேன்.//உம்ம கண் எதிரிலேயே என்று வர வேண்டும்

    • திருத்தப்பட்டுவிட்டது. தவறுக்கு வருந்துகிறோம் ! சுட்டிக் காட்டியமைக்கு நன்றி !

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க