சந்திரமோகன் | சிவாஜி கண்ட இந்துராஜ்யம் | நாடகம் | பாகம் – 4

காட்சி – 6
இடம் : வீதி

உறுப்பினர்கள் : கேசவப்பட்டர், பாலச்சந்திரப் பட்டர், தர்மன்.

(தர்மன் வருகிறான்)

கேசவப்பட்டர் : யார், தர்மனா? சௌக்கியமாடா…?

தர்மன் : சுகந்தானுங்க. நீங்க சுகந்தானுங்களே! சுகமாத்தான் இருப்பீங்க; கேக்க வேணுமா? நம்ம ராஜ்யம் பூராவும் இப்ப சுகமாத்தானே இருக்கு.

பாலச்சந்திரப்பட்டர் : ஒய், பார்த்தீரா, பிரபஞ்ச மாறுதலை! தர்மன் ராஜ்யம் பூராவும் அறிந்தவனாகி விட்டான்.

தர்மன் : என்னங்கா கேவலமாகப் பேசறிங்க. என் மகன் இப்ப சிவாஜி மகாராஜா பட்டாளத்திலே சேர்ந்து ஊர் நாடெல்லாம் சுத்தி வரான்லே. அவன் சொல்லித்தான் ஊர் க்ஷேமங்கள் தெரியுது. நான் என்னத்தக் கண்டேனுங்க. நான் உண்டு. ஏர் உண்டுன்னு இருக்கிறவன் தானுங்களே.

கேசவப்பட்டர் : அது சரிடா தர்மா! உன் மகன் பட்டாளத்திலேயா இருக்கான்?

தர்மன் : ஆமாங்க!

பாலச்சந்திரப்பட்டர் : கர்மம் யாரை விட்டது?

தர்மன் :  ஏன் அப்படிச் சொல்றீங்க? அவன் பட்டாளத்திலே சேர்ந்து மராட்டிய ராஜ்யத்தை கீர்த்தி உள்ளதாக்கி வர்றான். நல்ல காரியந்தானே நடக்குது.

கேசவப்பட்டர் : என்ன மகா நல்ல காரியம்? ஏண்டா தர்மா! தேச சேவை, ராஜ சேவை, வீரம் என்று என்னதான் பெயர் வேண்டுமானாலும் வைக்கட்டும்; சண்டைன்னா அதிலே நடப்பது கொலைதானே… இல்லேன்னு சொல்லுவியா?

தர்மன் : அது சரிங்க!

கேசவப்பட்டர் : என்ன சரி! இல்லெ தர்மா! யோசித்துப் பேசு. நம்ம ராஜ்யம். நம்ம ராஜா, நம்ம கீர்த்தி இதெல்லாம் இருக்கட்டும் ஒரு புறம். சண்டேன்னா அங்கே மனுஷாளை மனுஷாள் மிருகங்கள் போல எதிர்த்துண்டு சாக அடிக்கிற காரியந்தானே நடக்கிறது. இல்லேம்பியா?

தர்மன் : ஆமா! எவ்வளவோ பேரு மடிஞ்சு போறாங்க.

கேசவப்பட்டர் : அப்படின்னா அது கொலைதானே?

தர்மன் : கொலைன்னாலும் நோக்கம் பாருங்க. அது . நல்லதுதானே.

கேசவப்பட்டர் : நோக்கம் இருக்கட்டும்டா தர்மா. கொலை நடக்கிறதா இல்லையா?

தர்மன் : ஆமாங்க!

கேசவப்பட்டர் : உன் மகன் பட்டாளத்திலே சேர்ந்து, இந்தப் படுகொலையிலே சம்பந்தப்பட்டிருக்கிறான். ஆகையினால் பாவ மூட்டையை உன் குடும்பத்துக்குச் சேர்த்திருக்கிறான். நான் சொல்றேன்னு வருத்தப்படாதே. தர்மா! நீ எவ்வளவோ நல்லவன். இருந்தாலும் உன் மகனாலே உனக்கு நரகவாசம் சம்பவிக்கும்.

தர்மன் : அய்யோ ! அப்படிங்களா?

கேசவப்பட்டர் : சாஸ்திரத்தைச் சொல்றேண்டா தர்மா. சாஸ்திரம்.

பாலச்சந்திரப்பட்டர் : ஏன், ஒய்! பிரமாதமாகப் பேசுகிறீரே! அதே சாஸ்திரத்திலே, அதே சாபத்துக்கும் பிராயச்சித்தம் சொல்லியிருக்கே.

கேசவப்பட்டர் : யார் இல்லேன்னா? ஏன் ஒய் நேக்கு அது தெரியாதுன்னு நினைத்தீரோ? நான் என்ன சாஸ்திரத்தை சாங்கோபங்கமாகத் தெரியாதவனா? இல்லை; என்ன உமது நினைப்பு? ஒய்! நான் சாமான்யாளிடம் சிட்சை கேட்டவனல்ல ஒய்! சாட்சாத் காகப்பட்டரிடம் பாடம் கேட்டவனாக்கும்.

பாலச்சந்திரப்பட்டர் : ஓய், கேசவப்பட்டர் சும்மா பேசாதேயும். நீர், மட்டுந்தானா காகப்பட்டரிடம் பாடம் கேட்டது. அவரிடம் பிரதம சிஷ்யராக இருப்பவர் யார் ? தெரியுமோ நோக்கு சொல்லும் பார்ப்போம்?

கேசவப்பட்டர் : இது தெரியாதோ? ரங்கு பட்டர்.

பாலச்சந்திரப்பட்டர் : அந்த ரங்குபட்டர் யார் தெரியுமோ?

கேசவப்பட்டர் : என்ன ஒய் இது? ரங்கு பட்டர் யார் என்றால் காகப்பட்டரின் சிஷ்யர்.

பாலச்சந்திரப்பட்டர் : ரங்கு பட்டர் காகப்பட்டரின் சிஷ்யர். காகப்பட்டர் ரங்கு பட்டரின் குரு. இது தெரியாமதான் கேட்டேனாக்கும். ரங்கு பட்டர் யார் என்று கேட்கிறேன் ஒய்!

கேசவப்பட்டர் : யார்? நீர்தான் சொல்லுமே…

பாலச்சந்திரப்பட்டர் : போகட்டும், என் அத்தை தெரியுமோ நோக்கு ?

கேசவப்பட்டர் : நோக்கு ரெண்டு பேருண்டே அத்தைமார். நீர் – யாரைக் கேட்கிறீர்?

பாலச்சந்திரப்பட்டர் : சிகப்பா ஒல்லியா இருப்பாள் ஒரு அத்தை.

கேசவப்பட்டர் : கொஞ்சம் வாயாடுதல்…

பாலச்சந்திரப்பட்டர் : ஒய் வாயாடுதல் இல்லை அவள். அவ எதிரே சொல்லியிருந்தா தெரிஞ்சு இருக்கும் உம் பாடு. அவளுடைய பெயர் அலமு . நான் சொல்றது அவ இல்லை. இன்னொரு அத்தை. கரப்பா நெட்டையா இருப்பாள். காமுண்ணு பெயர். அவ ஆத்துக்காரருக்கு ரங்கு பட்டர் நேர் தம்பிங்காணும்.

படிக்க:
மதுரை 1939-ம் ஆண்டு கோவில் நுழைவு : சாந்துப் பட்டருக்கு சாணி ஊற்றிய பார்ப்பனர்கள் !
வருகிறது வேத கல்வி முறை : பாபா ராம்தேவ் அதன் தலைவராகிறார் !

கேசவப்பட்டர் : அப்படிச் சொல்லும் ஒய்! ஒரு நாள் ரங்கு பட்டர் தூக்கத்திலே பிதற்ற ஆரம்பித்தார். காமு, காமுண்ணு கூவிக்கிட்டிருந்தார். கங்குபட்டர் கூட கோவிச்சிண்டு
என்னடா உளறிண்டிருக்கேன்னு கேட்டான்.

தர்மன் : என்னங்க இது. சாஸ்திரம் பிராயச்சித்தம்னு ஆரம்பிச்சு எங்கேயோ போயிட்டிங்களே?

கேசவப்பட்டர் : போயிடலேடா தர்மா. சாஸ்திரத்திலே சொல்லியிருக்கிற பிராயச்சித்தப்படி உன் மகன் யுத்தத்திலே செய்திருக்கிற பாப கிருத்தியங்களுக்கு ஒரு சுத்தி ஹோமம் செய்தால் நோக்கு விமோசனம் உண்டு.

தர்மன் : செலவு நிறைய ஆகுமோ?

கேசவப்பட்டர் : பிரமாதமா ஆகாது. ஒரு அறநூறு வராகன் பிடிக்கும்.

தர்மன் : அடேயப்பா! ஆறு நூறு. அவ்வளவு ஏது எங்கிட்டே?

கேசவப்பட்டர் : தர்மா. அரை நூறு. அதாவது, ஐம்பது வராகன். ஆறு நூறு இல்லே.

தர்மன் : அப்படிச் சொல்லுங்க. நாள் பாருங்க.

கேசப்பட்டர் : ஏன், நாளைக்கே திவ்யமான நாள்.

பாலச்சந்திரப்பட்டர் : ஒய்! ரொம்ப லட்சணங்காணும்! நாளைக்குக் கரிநாள் தெரியாதோ?

கேசவப்பட்டர் : யாருங்காணும் சொன்னது நோக்கு ?

பாலச்சந்திரப்பட்டர் : தர்மா! நாளைக்குக் கரிநாள். கேசவப்பட்டர் அவசரப்பட்டு சொல்லிவிட்டார். நாளைக்கு மறுநாள் ஹோமம் நடத்திவிடலாம்.

தர்மன் : சரிங்க! நான் வர்றேனுங்க.
(நமஸ்கரித்துப் போகிறான் )

கேசவப்பட்டர் : ஓய் இதென்ன வலிய வர்ற சீதேவியை உதைத்துத் தள்ளுறீர்? கரிநாளும், கத்தரிக்கா நாளும்னு சொல்லி ….

பாலச்சந்திரப்பட்டர் : கேசவப்பட்டரே! உம்ம மூளை வரவர வரண்டுண்டே போறது. நாமெ ரெண்டு பேரும் நாளைக்கு அடுத்த கிராமத்திலே சிரார்த்தத்துக்குப் போகணுமே, அது கவனமில்லாமெ, நாளைக்கு ஹோமம்ணு சொன்னீரே?

கேசவப்பட்டர் : அடடா நான் மறந்தே போனேன். நல்ல வேளையா நோக்காவது கவனம் வந்ததே.

பாலச்சந்திரப்பட்டர் : வரவேதான் கரிநாள்னு ஒரு போடு போட்டேன். வாரும் போகலாம். (போகிறார்கள்)

♠ ♠ ♠

காட்சி – 7
இடம் : வீதி
உறுப்பினர்கள் : சாந்தாஜி, பாலாஜி.

(சாந்தாஜியும், பாலாஜியும், எதிர் எதிரே வந்து சந்திக்கின்றனர்.)

பாலாஜி : நமஸ்காரம், சாந்தாஜி , நமஸ்காரம்.

சாந்தாஜி : நமஸ்கார். நமஸ்கார்… (போகிறார்)

பாலாஜி : ஏது சாந்தாஜி கோபமாக இருக்கிறீர்கள்?

சாந்தாஜி : (கோபத்துடன்) நான் கோபமாக இருப்பதாக யார் சொன்னார்கள்? அந்தப் பயல்தான் சொல்லியிருப்பான். சந்திரமோகன்தானே சொன்னான்?

பாலாஜி : ஆமாம் என்றுதான் வைத்துக் கொள்ளுங்களேன்.

சாந்தாஜி : மகா யோக்கியன் போல் உன்னிடம் பஞ்சாயத்துக்கு வந்துவிட்டானா? அவன் யோக்கியதையைப் பார் நான் கிளிப்பிள்ளைக்குச் சொல்லுவதைப் போல் சொல்லுகிறேன். அடே, சுந்தர் என் பேச்சைக் கேளடா. இந்து என் ஒரே மகள். குழந்தையை நான் கண்ணைப் போல் காப்பாற்றுகிறேன். அவள் எப்படியோ உன்னிடம் மயங்கிவிட்டாள். நீ இந்தச் சண்டைக்கு மட்டும் போகாதே. நீ அவளைக் கல்யாணம் செய்து கொண்டு வீட்டோடு இரு என்று கெஞ்சுகிறேன். அவன் என்ன சொன்னான் தெரியுமா? வீரத்தைப் பழிக்காதே. நாட்டுக்கு நான் அடிமை. என் நாயகியும் நாட்டுக்குப் பணிப்பெண்’ – என்று எதிர்த்துப் பேசினான். ஏழு லட்சம் வராகன் இருக்கிறது என்னிடம் அவன் என்னை எதிர்த்துப் பேசுகிறான்.

பாலாஜி : பேச்சோடு விட்டானேன்னு சந்தோஷப்படுங்க சாந்தாஜி. அவன் மகா கெட்டவன் ..

சாந்தாஜி : அவனா அவன் கெட்டவனில்லையே. அவனுக்கு ‘தேசம், தேசம்’ என்று ஒரே பைத்தியம். அது தவிர அவனிடம் குறையே கிடையாது. என்ன செய்வதென்று
தெரியவில்லை .

பாலாஜி : ஏன் தெரியவில்லை ? இந்துமதிக்கு வேறு ஒரு ஆள் பார்க்க வேண்டியதுதான். மகாராஷ்டிரத்திலே மாப்பிள்ளைக்கா பஞ்சம்?

சாந்தாஜி : மகாராஷ்டிரத்திலே ஒரே ஒரு சந்திரமோகன்தானே கிடைப்பான்.

பாலாஜி: தங்களுக்கு மோகன் மீது பற்று என்று சொல்லுங்கள்!

சாந்தாஜி : இல்லையென்றால்தான் தொல்லையில்லையே? விரட்டி
விட்டிருப்பேனே. அவன் இந்துவின் நெஞ்சிலேயும் புகுந்து கொண்டான். என் உள்ளத்தையும் கொள்ளை கொண்டு விட்டான்.

பாலாஜி : புத்தி சொல்லிப் பார்ப்பதுதானே?

சாந்தாஜி : நான் ஏதாவது பேச ஆரம்பித்தால் அவன் அகோரக் கூச்சல் போட்டு அடக்கிவிடுகிறான்.

பாலாஜி : ஒரு யோசனை! இந்தக் காதல் இருக்கிறதே, அது ஒரு மாதிரியான வெறி வேறு ஒருவர் அந்தக் காதலைத் தட்டிப் பறித்து விடுவார்கள் என்று தோன்றினால் போதும், காதல் பித்துக் கொண்டவர்கள் காலடியில் விழுந்தாவது காரியத்தை முடித்துக் கொள்ள முயல்வார்கள்.

சாந்தாஜி : விளங்கச் சொல்லப்பா?

பாலாஜி : இந்துமதியை வேறு யாரேனும் காதலிப்பதாகத் தோன்றினால் போதும்; தானாக வழிக்கு வருவான்.

சாந்தாஜி : அது எப்படி சாத்தியமாகும்?

பாலாஜி : நான் ஏற்பாடு செய்கிறேன் ஒரு ஆளை. இந்துவைக் காதலிப்பது போல் நடந்து கொள்ளச் சொல்லுகிறேன்.

சாந்தாஜி : விளையாட்டு வினையாகிவிட்டால்?

பாலாஜி : ஆகாது; ஆகாது. நான் கவனித்துக் கொள்கிறேன்.

சாந்தாஜி : யாரை ஏற்பாடு செய்கிறாய்? அவன் யோக்கியனாய் இருக்க வேண்டும். சபலப் புத்தி கூடாது. இந்துவிடம் உண்மையாகவே காதல் கொண்டு விடக்கூடாது.

பாலாஜி : எனக்குத் தெரியாதா? உங்களுக்குப் பகதூரைத் தெரியுமா?

சாந்தாஜி : அவனா? சுத்தப் பயங்கொள்ளிப் பயலாச்சே! பெண்களிடம் பேசவே தெரியாதே.

பாலாஜி : அப்படிப்பட்டவனை நம்பித்தான் இந்தக் காரியத்தில் இறங்க வேண்டும். எப்படி நடந்து கொள்வது என்று நான் அவனுக்குக் கற்றுக் கொடுக்கிறேன். என் தந்திரத்தைப் பாரும். ஒரு வாரத்தில் அவனைக் காதலன் வேஷத்தில் உமது மாளிகைக்கு அனுப்பி வைக்கிறேன். ம்… செலவுக்கு மட்டும்… (பணத்தை மடியிலிருந்து எடுத்து )

சாந்தாஜி : ஒரு சல்லிகூடத் தர முடியாது. இந்த இருநூறு வராகனுக்குமேல்.

பாலாஜி : இதிலேயே முடித்து வைக்கிறேன். வெற்றி கிடைத்ததும் தாங்களாகவே இனாம் தராமலா போகப் போகிறீர்கள்.

சாந்தாஜி : பார்ப்போம் போய்வாரும் ஜெயத்துடன்.
(சாந்தாஜி போகிறார்)

பாலாஜி : சரியான வேலை கிடைத்தது. நம்ம சாமர்த்தியம் இப்படி இருக்கு அவ என்னடான்னா நம்ம முட்டாள்னு நெனைக்கிறா, நினைக்கிறாளா? சொல்லவே சொல்றா.. ஆசையிலே … ஆசையிலே… (போகிறான்)

(தொடரும்)

நன்றி: Project Madurai

முந்தைய பகுதி:

பகுதி 1 : சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் | நாடகம் | சி. என். அண்ணாதுரை
பகுதி 2 :
சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் | நாட்டை மீட்கப் போரிடும் மாவீரன் அல்லவா நீ !
பகுதி 3 : யுத்த வெறியனுக்கு மனைவி மக்கள் மீது எப்படி அன்பு ஏற்படும் ?


இதையும் பாருங்க …

எங்க ஊரு காவக்காரன் (சவுக்கிதார்) | Chowkidar Modi Troll

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க