அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் : பாகம் 16

அரசியல் பொருளாதாரத்தின் கொலம்பஸ்
அ.அனிக்கின்

கொலம்பசுக்குத் தன்னுடைய வாழ்க்கையின் இறுதி வரை தான் அமெரிக்காவைக் கண்டுபிடித்த விவரம் தெரியாமலிருந்தது என்பதை நாம் அறிவோம். ஏனென்றால் அவர் இந்தியாவுக்குக் கடற்பாதையைக் கண்டுபிடிக்கின்ற நோக்கத்தோடு புறப்பட்டாரே தவிர, ஒரு புதிய கண்டத்தைக் கண்டுபிடிப்பதற்கு அல்ல.

பெட்டி அவர் காலத்திய பொருளாதார நிபுணர்களைப் போல குறிப்பிட்ட நோக்கங்களோடு சில சமயங்களில் பணத்துக்காக-பிரசுரங்களை எழுதினார். அவர் தன்னைப் பற்றி ”அரசியல் கணிதத்தை ” (புள்ளியியல்) கண்டுபிடித்ததாக மட்டுமே சொல்லிக் கொண்டார். அவருடைய சம காலத்தவர்களும் இதையே அவருடைய முக்கியமான சாதனையாகக் கருதினார்கள். உண்மை என்னவென்றால் அவர் வேறு முக்கியமானவற்றையும் எழுதினார். மதிப்பு, நில வாரம், கூலி, உழைப்புப் பிரிவினை, பணம் ஆகியவற்றைப் பற்றி அவர் அங்கங்கே தற்செயலாகச் சொல்லிச் சென்ற கருத்துக்கள் அரசியல் பொருளாதார விஞ்ஞானத்தின் அடிப்படையாக ஆயின. இந்தப் புதிய கொலம்பஸ் கண்டுபிடித்த உண்மையான “பொருளாதார அமெரிக்கா” இது.

கிறிடோபர் கொலம்பஸ்

பெட்டி முதலாவதாக எழுதிய கருத்தாழமிக்க பொருளாதார நூல் வரிகள், பங்களிப்புகளைப் பற்றி ஒரு ஆய்வுரை என்பதாகும். இது 1662 -ம் வருடத்தில் வெளியிடப்பட்டது. ஒருவேளை அவருடைய முக்கியமான புத்தகம் இது என்று கூடச் சொல்லலாம். புதிய அரசாங்கம் வரிகளை விதிப்பதன் மூலம் அதனுடைய வருமானத்தை எப்படிப் பெருக்கிக் கொள்ள முடியும் (அவர் நேரடியாகப் பங்கு கொண்டு அல்லது அவருடைய மேற்பார்வையில் இது நடைபெற வேண்டும் என்று அவர் விரும்பினார்) என்பதை எடுத்துக் கூறும் பொழுது, அவர் தம்முடைய பொருளாதாரக் கருத்துக்களையும் மிக முழுமையாக விளக்கினார்.

இப்பொழுது அவர் ஒரு காலத்தில் மருத்துவராக இருந்ததை அநேகமாக மறந்துவிட்டார். அவர் எப்பொழுதாவது தமக்கு அபூர்வமாகக் கிடைக்கும் ஓய்வு நேரங்களில் அல்லது விஞ்ஞானிகளாக இருந்த தமது பழைய நண்பர்களைச் சந்திக்கும் பொழுது மட்டுமே கணிதம், இயக்கியல், கப்பல் கட்டுதல் ஆகியவற்றைப் பற்றிப் பேசுவார். அவருடைய ஆராய்ச்சிக் கூர்மையுடைய, சுறுசுறுப்பான மூளை மென்மேலும் அதிகமாகப் பொருளாதாரத்தையும் அரசியலையும் நோக்கித் திரும்பியது.

திட்டங்கள், செயல் திட்டங்கள் வரிச் சீர்திருத்தம், புள்ளியியல் இலாகாவைத் தொடங்குவது, வர்த்தகத்தை அபிவிருத்தி செய்வது போன்ற ஆலோசனைகளைப் பற்றியே அவர் நினைத்துக் கொண்டிருந்தார். இவை அனைத்தும் அவருடைய ஆய்வுரையில் இடம் பெற்றன. இவற்றைத் தவிரவும் பல கருத்துக்களை அப்புத்தகத்தில் எழுதியிருந்தார். 18-ம் நூற்றாண்டின் மிக முக்கியமான பொருளாதாரப் புத்தகம் ஆடம் ஸ்மித் எழுதிய நாடுகளின் செல்வம் என்பதைப் போல, 17-ம் நூற்றாண்டில் பெட்டியின் ஆய்வுரை மிக முக்கியமான பொருளாதாரப் புத்தகமாக இருந்தது.

இரு நூறு வருடங்களுக்குப் பிறகு கார்ல் மார்க்ஸ் பெட்டியின் ஆய்வுரையைப் பற்றி பின்வருமாறு எழுதினார்: “இப்புத்தகத்தில் அவர் உண்மையில் பண்டங்களின் மதிப்பை அவற்றில் அடங்கியிருக்கும் உழைப்பின் அளவின் மூலம் நிர்ணயிக்கிறார்.” (1)  “உபரி மதிப்பை நிர்ணயிப்பது மதிப்பை நிர்ணயிப்பதைச் சார்ந்திருக்கிறது.” (2) மேலே கூறப்பட்டிருக்கும் வார்த்தைகள் அந்த ஆங்கிலச் சிந்தனையாளரின் விஞ்ஞான சாதனையின் சாராம்சத்தைச் சுருக்கமாகக் கூறுகின்றன, அவருடைய வாதத்தின் போக்கைத் தொடர்வது சுவாரசியமானதாகும்.

புதிய, முதலாளித்துவ யுகத்தின் மனிதனுக்குரிய கூர்மையான அறிவோடு அவர் முதலில் எழுப்பும் பிரச்சினை அடிப்படையில் உபரி மதிப்பைப் பற்றியதாகும். “…. நாம் முன்னர் குறிப்பிட்ட வட்டி என்று சொல்லப்படுகின்ற பணத்தின் வாடகை, வீடுகள், நிலத்தின் வாடகை ஆகியவற்றின் மர்மமான தன்மையை விளக்குவதற்கு முயற்சி செய்ய வேண்டும்.” (3) 17 -ம் நூற்றாண்டில் மனிதனுடைய உழைப்பு உபயோகிக்கப்படுகின்ற முக்கியமான பொருளாக நிலம் இன்னும் இருந்தது. எனவே பெட்டியைப் பொறுத்த வரை, உபரி மதிப்பு என்பதை நில வாரத்தின் வடிவத்தில் தான் எப்போதும் காண்கிறார்.

படிக்க:
பொருளாதாரம் : முதலாளித்துவ அறிஞர் உலகம் மார்க்சை நிராகரிக்க முடியுமா ?
♦ பாஷாணத்தில் புழுத்த புழுக்கள் யார் ?

அது தொழில் துறையில் கிடைக்கும் லாபத்தையும் மறைத்துக்கொள்கிறது. அவர் வாரத்திலிருந்தே வட்டியையும் பெறுகிறார். பெட்டி வர்த்தகத்தின் மூலம் கிடைக்கும் லாபத்தைப் பற்றி அநேகமாக அக்கறை காட்டவில்லை. இது அவர் காலத்திய வாணிப ஊக்கக் கொள்கையினரிடமிருந்து அவரைப் பிரித்துக் காட்டுகிறது. வாரத்தின் மர்மமான தன்மையைப் பற்றி அவர் குறிப்பிட்டிருப்பதும் சுவாரசியமானதாகும். அது ஒரு மாபெரும் விஞ்ஞானப் பிரச்சினை, அந்த நிகழ்வின் வெளித்தோற்றம் உள்ளே இருப்பதை மறைக்கிறது என்று அவர் உணர்கிறார். இதற்குப் பிறகு அவர் எழுதியிருக்கும் பகுதியை அடிக்கடி மேற்கோள் காட்டுவது வழக்கம்.

ஒரு நபர் (இவர் இது வரை கணிதப் பாடபுத்தகங்களின் கதாநாயகராக இருந்தார்; இனிமேல் பொருளாதார ஆய்வுரைகளுக்கும் கதாநாயகராகப் போகிறார்) தானிய உற்பத்தியில் ஈடுபட்டிருப்பதாக வைத்துக்கொள்வோம். அவருடைய உற்பத்திப் பொருளில் ஒரு பகுதி அடுத்த வருடத்தில் விதைப்பதற்கென்று ஒதுக்கப்படும். இன்னொரு பகுதி அவருடைய தேவைகளைப் பூர்த்தி செய்வதில் (அதைக் கொடுத்துப் பரி வர்த்தனை செய்வதும் இதில் அடங்கும்) செலவழிக்கப்படும்; “மீதமிருக்கின்ற தானியம் நிலத்துக்கு அந்த வருடத்துக்கு உண்மையான, இயற்கையான வாரமாகும்.” இங்கே உற்பத்திப் பொருள், அதன் மதிப்பும் அதை உற்பத்தி செய்த உழைப்பும் மூன்று முக்கிய பகுதிகளாகப் பிரிக்கப்படுகின்றன.

1) செலவழிந்து போன உற்பத்திச் சாதனங்களின் இடத்தை நிரப்புகின்ற பொருளைப் பிரதி நிதித்துவப்படுத்தும் பகுதி; இங்கே விதைகள்;(4)

2) அந்த நபர், அவர் குடும்பத்தின் தேவைகளுக்கு அவசியமான பகுதி;

3) உபரி அல்லது நிகர வருமானம். கடைசியாகச் சொல்லப்பட்டிருக்கும் பகுதி மார்க்ஸ் கூறிய உபரி உற்பத்திப் பொருள் மற்றும் உபரி மதிப்புடன் பொருந்துகிறது.

பெட்டி மற்றொரு கேள்வியையும் எழுப்புகிறார். ”… ஆங்கில நாணயத்தில் இந்த தானியம் அல்லது வாரத்தின் மதிப்பு என்ன? இன்னொரு நபர் இதே கால அளவுக்குத் தன்னைப் பண உற்பத்தியில் முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டால் அவருக்கு ஏற்படும் செலவுகள் போக மிச்சப் படுகின்ற தொகைக்கு இது சமமானது என்று சொல்வேன். உதாரணமாக, ஒருவர் வெள்ளி கிடைக்கின்ற தேசத்துக்குப் போகட்டும்; அங்கே அதைத் தோண்டி எடுத்து சுத்தப் படுத்தி பணம் மற்றும் இதரவைகளாகச் செய்து தானியத்தை விதைத்திருக்கும் நபர் இருக்கின்ற இடத்துக்கு அதைக் கொண்டுவரட்டும். அந்த நபர் வெள்ளியைத் தோண்டிக் கொண்டிருக்கும் அதே சமயத்தில் தன்னுடைய வாழ்க்கைக்குத் தேவையான உணவையும் உடைகளையும் இதரவைகளையும் சேகரித்துக்கொள்கிறார். ஒரு நபர் கொண்டுவரும் வெள்ளி மற்றொரு நபர் உற்பத்தி செய்த தானியத்துக்குச் சமமானதாக மதிப்பிடப்பட வேண்டும் மென்று நான் சொல்வேன். வெள்ளியின் அளவு இருபது அவுன்சாகவும் தானியத்தின் அளவு இருபது புஷல் களாகவும் (5) இருந்தால், ஒரு புஷல் தானியத்தின் விலை ஒரு அவுன்ஸ் வெள்ளி என்பது பெறப்படும்.”(6)

இங்கே தானியம், வெள்ளியின் உபரிப் பகுதிகளை மதிப்பின் அடிப்படையில் சமம் என்று சொல்வது, இரண்டின் மொத்த உற்பத்திப் பொருள்களையும் சமமாக ஆக்குவதைப் போன்றதுதான். எல்லா ஒதுக்கீடுகளும் போக மிச்சப்படும் இருபது புஷல் தானியத்துக்கும் விதை, விவசாயியின் வாழ்க்கைத் தேவை ஆகியவைகளையும் சேர்த்து முப்பது புஷல் தானியத்துக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது. மேலே குறிப்பிடப்பட்ட இருபது அவுன்ஸ் வெள்ளிக்கும் இது பொருந்தும். வேறொரு பகுதியில் பெட்டி உழைப் பளவை மதிப்புக் கருத்தைக் கலப்பற்ற வடிவத்தில் சொல்லுகிறார். ”ஒரு நபர் ஒரு புஷல் தானியத்தை உற் பத்தி செய்வதற்கு எடுத்துக் கொள்கின்ற அதே நேரத்தில், பெரு நாட்டில் பூமியிலிருந்து ஒரு அவுன்ஸ் வெள்ளியை எடுத்து லண்டனுக்குக் கொண்டுவர முடியுமென்றால், ஒன்று மற்றதின் இயற்கையான விலையாகும்.” (7)

இங்கே பெட்டி சாராம்சத்தில் மதிப்பு விதியை முறைப்படுத்திக் கொண்டிருக்கிறார். இந்த விதி அதிகச் சிக்கலான வகையில், ஒரு பொதுவான போக்காக மட்டுமே அமுலாகி வருவதை பெட்டி தெரிந்து கொண்டிருக்கிறார். இதைப் பின்வரும் பகுதியில் இது அதிசயிக்கத்தக்க பகுதியே – கூறுகிறார்: ”மதிப்புகளைச் சமானப்படுத்துவதிலும் சம நிலைக்குக் கொணர்வதிலும் இதுவே அடிப்படையானது என்று நான் சொல்வேன். எனினும் இந்த அடிப்படையின் மேற்கட்டுமானம் பல்வகையானதும், மிகவும் சிக்கலானதும் ஆகும் என்று சொல்வேன்…'(8)

ஒரு பண்டத்தின் பரிவர்த்தனை மதிப்பை அதன் உற்பத்தியில் செலவிடப்பட்டிருக்கும் உழைப்பு நிர்ணயிக்கிறது. பரிவர்த்தனை மதிப்புக்கும் அதன் உண்மையான சந்தை விலைக்கும் இடையே பல இடைநிலைக் கட்டங்கள் இருக்கின்றன. இவை பண்டத்தின் விலையை நிர்ணயிக்கும் நிகழ்வுப் போக்கை அதிக அளவுக்குச் சிக்கலாக்குகின்றன. பெட்டி அதிசயிக்கத்தக்க நுண்ணறிவோடு விலையை உருவாக்கும் காரணிகள் பலவற்றை மாற்றுப் பண்டங்களின் தாக்கம், புது விதமான பண்டங்கள், புது நடைப்பாளிகள், போலியான செயற்கைப் பொருள்கள், நுகர்வுப் பழக்கங்கள் முதலியனவற்றைக் குறிப்பிட்டிருக்கிறார். இவற்றை நவீனப் பொருளாதார நிபுணர்களும் திட்டங்களைத் தயாரிப்பவர்களும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

படிக்க:
பாஜகவுக்கு வாக்களித்தால் டீ விற்க வைத்து விடுவார்கள் | ஒரு உழவரின் தற்கொலைக் குறிப்பு !
♦ ஐரோப்பியர் பார்வையில் தமிழர்கள் தரங்கெட்டவர்களா… ? | பொ . வேல்சாமி

மதிப்பைப் படைத்துத் தருகின்ற சூக்குமமான உழைப்பின் ஆராய்ச்சியை நோக்கி பெட்டி முதல் காலடிகளை எடுத்து வைத்தார். ஏனென்றால் ஸ்தூலமான உழைப்பின் ஒவ்வொரு வகையும் ஒவ்வொரு ஸ்தூலமான பண்டத்தை, ஒரு பயன் மதிப்பைப் படைக்கிறது. விவசாயியின் உழைப்பு தானியத்தை, நெசவாளியின் உழைப்பு துணியை, இப்படி ஒவ்வொன்றும் ஒவ்வொன்றைப் படைக்கிறது. ஆனால் ஒவ்வொரு வகையான உழைப்பிலும் பொதுவான ஒரு அம்சம் இருக்கிறது; அது எல்லா வகையான உழைப்பையும் ஒப்பிடக் கூடியதாகச் செய்கிறது; எல்லாப் பொருள்களையும் பண்டங்களாக, பரிவர்த்தனை மதிப்புக்களாகச் செய்கிறது. உழைப்பு நேரத்தைச் செலவிடுதல், பொதுவாகத் தொழிலாளியின் உழைப்புச் சக்தியைச் செலவிடுதல் என்பதே அந்தப்பொது அம்சமாகும்.

பொருளாதார விஞ்ஞானத்தின் வரலாற்றில் சூக்குமமான உழைப்பு என்ற கருத்தை நோக்கி சுடர் வீசிக் கொண்டு முன்னேறியவர் பெட்டி. அந்தக் கருத்து மார்க்சிய மதிப்புத் தத்துவத்தின் அடிப்படையாயிற்று.

பெட்டி பொருளாதார விஞ்ஞானத்தின் ஸ்தாபகர், அதன் முன்னோடி. எனவே அவரிடமிருந்து சம நிலையான, முழுமையான பொருளாதாரத் தத்துவத்தை ஒருவர் எதிர் பார்க்கக் கூடாது. அவர் வாணிப ஊக்கக் கொள்கையில் சிக்கிக் கொண்டிருந்தபடியால், விலையுயர்ந்த உலோகங்களைத் தோண்டி எடுப்பதற்குச் செலவழிக்கப்படும் உழைப்பு, மதிப்பை நேரடியாகவே உருவாக்குகின்ற விசேஷமான ரகத்தைச் சேர்ந்த உழைப்பு என்ற பிரமையை அவர் தன்னிடமிருந்து அகற்றிக் கொள்ள முடியவில்லை. இந்த உலோகங்களில் மிகத்தெளிவான முறையில் அடங்கியிருந்த பரிவர்த்தனை மதிப்பை, அந்த மதிப்பின் ஆதாரமாகிய, எக்காலத்துக்கும் உரிய மனிதனின் சூக்குமமான உழைப்பைச் செலவழித்தல் என்பதிலிருந்து பிரிப்பதற்குப் பெட்டியால் முடியவில்லை.

மதிப்பின் அளவை நிர்ணயிப்பது செலவிடப்பட்ட சமூகத்துக்கு அவசியமான உழைப்பு; அந்த உழைப்பு பொருளாதார வளர்ச்சியின் குறிப்பிட்ட மட்டத்தில் குறியடையாளமாகவும் சராசரியாகவும் இருக்கிறது என்பதை அவர் சிறிது கூட நினைக்கவில்லை. சமூகத்துக்கு அவசியமான உழைப்பைக் காட்டிலும் அதிகமான உழைப்பைச் செலவிட்டால் அந்த உழைப்பு வீணாகிவிடுகிறது; அது மதிப்பைப் படைக்காது. பிற்காலத்தில் இந்த விஞ்ஞானம் அடைந்த வளர்ச்சியை வைத்துப் பார்க்கும் பொழுது அவருடைய எழுத்துக்களில் பெரும்பகுதி பலவீன மானதாக அல்லது அடியோடு தவறாகவும் இருக்கிறதென்பதை ஒத்துக்கொள்வது அவசியம். ஆனால் இங்கே எது முக்கியமென்றால், அவர் தன்னுடைய கருத்தில் – உழைப்பளவை மதிப்புத் தத்துவத்தில் உறுதியாக நிற்கிறார், பல ஸ்தூலமான பிரச்சினைகளில் அதை வெற்றிகரமாகக் கையாள்கிறார் என்பதே.

அவர் உபரிப் பொருளின் தன்மையை எப்படி விளக்கினார் என்பதை முன்னர் பார்த்தோம். ஆனால் அதில் ஒரு சாதாரணமான பண்ட உற்பத்தியாளர் உதாரண மாகக் காட்டப்படுகிறார். தான் உற்பத்தி செய்த உபரிப் பொருளை அவரே தனக்கு ஒதுக்கீடு செய்து கொள்கிறார். உற்பத்தியில் கணிசமான பகுதி முன்பே கூலி உழைப்பைக் கொண்டு செய்யப்பட்டு வருவதை பெட்டி அவர் காலத்தில் பார்க்காமல் இருந்திருக்க முடியாது.

உபரிப் பொருள் என்பது தொழிலாளி தனக்காக மட்டும் உற்பத்தி செய்வதல்ல; நில உடைமையாளர்களுக்கும் மூலதனத்தின் சொந்தக்காரர்களுக்காகவும் உற்பத்தி செய்யப்படுகிறது, உண்மையில் அவர்களுக்காகவே உற்பத்தி செய்யப்படுகிறது என்ற முடிவுக்கு அவர் வருவது நிச்சயம். அவர் இந்த முடிவுக்கு வந்தார் என்பதைக் கூலியைப் பற்றி அவர் எழுதியுள்ள சிந்தனைகளிலிருந்து தெரிந்து கொள்கிறோம்.

ஒரு தொழிலாளியின் கூலி வாழ்க்கைக்கு அவசியமான குறைந்தபட்சத் தேவையைக் கொண்டு நிர்ணயிக்கப்படுகிறது, அவ்வாறு நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று அவர் கருதினார். அவன் ”வாழ்க்கைக்கும், உழைப்புக்கும், இனப்பெருக்கத்துக்கும்” அவசியமானதற்கும் அதிகமாக அவன் பெறக் கூடாது. அதே சமயத்தில் தொழிலாளியின் உழைப்பினால் உருவாக்கப்படும் மதிப்பு முற்றிலும் வேறு விதமான பரிமாணத்தைக் கொண்டது, அது எல்லா சமயங்களிலும் கணிசமான அளவுக்குப் பெரியது என்பதை பெட்டி உணர்ந்திருக்கிறார். இந்த வித்தியாசம் தான் உபரி மதிப்பின் தோற்றுவாய்; இது பெட்டியின் எழுத்துக்களில் நில வாரத்தின் வடிவத்தில் தோன்றுகிறது.

(தொடரும்…)

அடிக்குறிப்பு:
(1) K. Marx, Theories of Surplus-Value, Part 1, Moscow, 1969, p. 355.
(2) Ibid.
(3) W. Petty, The Economic Writings, Vol. 1, Cambridge, 1899,
(4) பெட்டி உற்பத்திச் சாதனங்களின் இதர செலவினங் களை, உதாரணமாக உரம் குதிரை, ஏர், கருக்கறிவாள் ஆகிய வற்றின் தேய்மானத்தைச் சேர்க்காமல் விட்டுவிடுகிறார். இந்தச் செலவுகளைத் தானியத்தைக் கொடுத்து ஈடு செய்ய முடியாது (ஒருவேளை அதனால் தான் பெட்டி இதைச் சேர்க்காது விட்டார் போலும்); மதிப்பைக் கொடுத்தே அவற்றை ஈடுசெய்ய வேண்டும். உதாரணமாக, பத்து வருடங்களுக்குப் பிறகு உழவனுக்குப் புதிய குதிரை வாங்க வேண்டியிருக்கும். எனவே எதிர்காலத்தில் குதிரை வாங்கு வதற்காக அதன் விலையில் ஒரு பகுதியை ஒவ்வொரு வருட அறுவடையிலிருந்தும் அவன் தனியாக ஒதுக்கி வைக்க வேண்டும்.
(5) புஷல் என்பது தானிய நிறுத்தல் அளவாகும்.
(6) W. Petty, The Economic Writings, Vol. 1, Cambridge, 1899, p. 43.
(7) Ibid., p. 50.
(8) Ibid., p. 44.

தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க:

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்

நூல்: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்
ஆசிரியர் : அ.அனிக்கின்
மொழிபெயர்ப்பு : பேராசிரியர் நா. தர்மராஜன், எம்.ஏ
வெளியீடு :
முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ – 1983

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க