ந்திய சுதந்திரத்துக்குப் பின் நடந்த முதல் தீவிரவாதத் தாக்குதலாக காந்தியை சுட்டுக் கொன்ற இந்துத்துவக் கும்பல், இன்று நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறது. இந்த ‘வளர்ச்சி’க்குப் பின்னே, பெரும்பான்மை இந்து மதத்தை முன்வைத்து அது நடத்திய படுகொலைகளும் கலவரங்களுமே உள்ளன. குஜராத் படுகொலைகளை திட்டமிட்டு நடத்திய அனைவரும் இன்று நாட்டின் தலையெழுத்தை தீர்மானிக்கும் சக்திகளாக வளர்ந்துள்ளனர்.

ஆட்சியும் அதிகாரமும் கையில் இருக்கும்போது, விசாரணை அமைப்புகள், நீதிமன்றம் அனைத்தும் வளைக்கப்பட்டு குற்றவாளிகள் வெளியேறுகின்றனர். அவர்கள் மக்கள் பிரதிநிதிகளாக உலா வரவும் செய்கின்றனர். அந்த வகையில், ஆறு பேரைப் பலிகொண்ட மாலேகான் குண்டுவெடிப்பை நிகழ்த்திய இந்துத்துவ தீவிரவாதி பிரக்யா சிங் தாகூருக்கு பாஜக போபால் மக்களவை தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்திருக்கிறது. ‘உடல்நிலை’ காரணம் காட்டி குற்றப் பத்திரிகையில் பெயர் உள்ள இந்த இந்துத்துவ தீவிரவாதிக்கு பிணை வழங்கியது நீதிமன்றம். இதே நீதிமன்றமும் அரசும்தான் துண்டறிக்கை கண்டெடுத்ததாகப் பொய்க்குற்றச்சாட்டின் கீழ் கைதான, உடல் குறைபாடுடைய பேராசிரியர் சாய்பாபாவுக்கு பிணை வழங்காமல் அவரை சிறையில் வைத்திருக்கிறது.

உடல் குறைபாடுடைய பேராசிரியர் சாய்பாபாவுக்கு பிணை வழங்காமல் அவரை அண்டா சிறையில் வைத்திருக்கிறது நீதிமன்றம்.

2008-ம் ஆண்டில் மகாராஷ்டிர மாநிலம் மாலேகானில் நடந்த குண்டுவெடிப்பில் பயன்படுத்திய மோட்டார் வாகனம், பிரக்யா சிங்கிற்கு சொந்தமானது என்பதையும் இந்தத் தாக்குதலை நடத்த சதி திட்டமிட்டதும் இவரே என்றும் மகாராஷ்டிர தீவிரவாத தடுப்பு படை குற்றப்பத்திரிகையில் சொன்னது. மத்தியில் ஆட்சி மாற்றம் நடந்தவுடன் தேசிய புலனாய்வு முகமை தன்னுடைய நிலையை மாற்றிக்கொண்டது.

சிறப்பு வழக்கறிஞர் ரோஹிணி சாலியன், இந்த வழக்கில் ‘மென்மையான’ அணுகுமுறையை கடைபிடிக்கும்படி தாம் அறிவுறுத்தப்பட்டதாக பகிரங்கமாகத் தெரிவித்தார். தேசியப் புலனாய்வு முகமை, பிரக்யா சிங்கிற்கு எதிராக குற்றச்சாட்டை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இல்லை எனக் கூறியது. இருந்தபோதிலும் மும்பை சிறப்பு நீதிமன்றம் உபா சட்டத்தின் கீழ் தீவிரவாத செயல், குற்ற சதி, கொலை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பிரக்யா சிங் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப் போதுமான ஆதாரங்கள் உள்ளதாகத் தெரிவித்தது.

இந்தக் குற்றத்தில் தொடர்புடைய அபினவ் பாரத் என்ற தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த பிரக்யா சிங், கர்னல் புரோகித் உள்ளிட்டவர்கள் பிணை வழங்கப்பட்டு வெளியே உள்ளனர்.

படிக்க:
♦ நீதித்துறையை ஆளுகிறது இந்து மனசாட்சி !
♦ கார்ப்பரேட் – காவி பாசிசம் ! மோடி ஆட்சியின் ஐந்தாண்டு தொகுப்பு ! அச்சுநூலை ஆன்லைனில் வாங்கலாம்

இவை அனைத்தையும் மீறி சட்டத்தை காலில் மிதித்திருக்கும் பாஜக, போபாலில்  பிரக்யா சிங்கை வேட்பாளராக அறிவித்துள்ளது. இதற்கு மற்றொரு காரணமும் இருக்கிறது. காங்கிரஸைச் சேர்ந்த வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள திக்விஜய் சிங், முதன்முதலில் ‘இந்து தீவிரவாதம்’ என்ற பதத்தை பயன்படுத்தியவர் என்பதாலும் அவரை பழிவாங்க இதுதான் சரியான சந்தர்ப்பம் எனவும் இந்துத்துவ கும்பல் அறைகூவல் விடுத்துள்ளது.

2014 தேர்தலில் பாஜக பெருவாரியான இடங்களைப் பிடிக்க ‘இந்து ஒருங்கிணைப்பு’ முதன்மையான காரணியாக இருந்தது என கருதுகிற சங்பரிவாரங்கள், இந்த தேர்தலிலும் அதை முதன்மைபடுத்தும் வகையில் பிரச்சாரத்தை திட்டமிடுவதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சங்பரிவாரங்களின் திட்டத்துக்கு மிகப் பொருத்தமான நபராக பிரக்யா சிங் கிடைத்திருக்கிறார்.

‘இந்து தீவிரவாதம்’ என்ற வார்த்தையை முதன் முதலில் பயன்படுத்திய காஞ்கிரஸ் தலைவர் திக் விஜய் சிங் அவரை பழிவாங்க வேண்டும் என அறைகூவல் விடுத்துள்ளார் பிரக்யா.

இந்நிலையில் பிரக்யா சிங்கிற்கு வழங்கப்பட்ட பிணையை ரத்து செய்யும்படி குண்டுவெடிப்பால் பாதிக்கப்பட்ட பிலால் நீதிமன்றம் சென்றிருக்கிறார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில்,  “மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள இவர், நீதிமன்ற விசாரணைக்கு வரவில்லை. ஆனால், பிணையில் வெளியானதிலிருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று, வன்முறையை தூண்டும்வகையில் பேசி வருகிறார். தன்னால் நடக்கக்கூட முடியாது என நீதிமன்றத்தில் இவர் சொன்னார். இப்போது வாட்டும் வெயிலில் பிரச்சாரத்துக்கு எப்படி இவரால் போக முடியும்? எனவே, தேர்தலில் போட்டியிடுவதை தடுக்கும் வகையில் இவருடைய பிணையை ரத்து செய்ய வேண்டும். நீதிமன்ற விசாரணைக்கு வர இவரை அறிவுறுத்த வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

கிரிமினல் பின்னணி கொண்டவர்கள் தேர்தலில் போட்டியிடுவதை தடுக்கும் வாய்ப்பை தவறவிட்ட நீதிமன்றம், இப்போது குண்டுவெடிப்பை நடத்திய குற்றவாளிக்கு எதிராக தீர்ப்பு எழுதுமா என்பது சந்தேகமே. ‘தர்ம யுத்த’த்தை தொடங்கியுள்ளதாக கண்ணீர் சிந்தியுள்ள பிரக்யா சிங், ‘இந்து’ மக்களின் ஆதரவுடன் நாடாளுமன்றம் செல்லக்கூடும். நாம் இதை பார்த்துக் கொண்டே மட்டும்தான் இருக்கப் போகிறோமா ?


கலைமதி