‘வளர்ச்சி’க்கு ’உதாரணமான’ குஜராத்தில் மின்சாரம், சாலை, தண்ணீர் வசதியில்லாமல் தவிக்கும் மக்கள் !

குஜராத் சமீபமாக வரலாறு காணாத அளவுக்கு வறட்சியை சந்தித்து வருகிறது. 2018-ம் ஆண்டு பெய்த தென் மேற்கு பருவ மழையின் அளவு சராசரி அளவில் வெறும் 76% மட்டுமே அம்மாநிலம் பெற்றிருக்கிறது.

ஊடக கவனத்துக்கு அப்பால், குஜராத்தின் சில பகுதிகள் கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன. கடுமையான குடிநீர் தட்டுப்பாடு மற்றும் மின்சாரம், சாலை வசதிகளற்ற கட்ச் பகுதியில் நிலவும் சூழ்நிலை குறித்து விரிவாக பதிவு செய்திருக்கிறது தி வயர் இணையதளம். வளர்ச்சிக்கு முன்னுதாரணமாக காட்டப்படும் குஜராத் மாடலின் உண்மையான முகத்தைக் காட்டுகிறது இந்தக் கட்டுரை.

*****

ட்ச் பகுதியின் தொலைதூரத்தில் உள்ள கடுமையான நிலப்பகுதியான தோர்டோ-வை, ‘அசாதாரண வளர்ச்சி’ என்பதற்கு ‘மாதிரி கிராமமாக’ அந்த கிராம மக்கள் காட்டிக் கொள்கிறார்கள். கட்ச் பகுதியின் பிரசித்தி மிக்க வெள்ளை பாலைவனத்தில் வருடம்தோறும் நடக்கும் ‘ரான் உத்சவ்’ என்ற நான்கு மாத குளிர்கால விழாவைக் கொண்டாடுவதால் இப்பெருமையைப் பெற்றதாக இந்த கிராமம் கூறுகிறது.

முதல்முறை குஜராத்தின் முதலமைச்சராக பதவி ஏற்ற நரேந்திர மோடி, 2005-ம் ஆண்டின் போது இந்தத் திருவிழாவை அறிமுகப்படுத்தினார். இப்போது ஆண்டுதோறும் இரண்டு லட்சம் சுற்றுலாப் பயணிகள் இந்த விழாவில் கலந்துகொள்ள வருகிறார்கள். இந்த விழாவுக்கான எண்ணம், வடிவமைப்பு மற்றும் செயல்படுத்தியது அனைத்தையும் செய்தது தானேதான் என மோடி கூறுகிறார்.

பாலைவனத்தின் நடுவே போடப்படும் ஆடம்பர கொட்டகைகளில் தண்ணீர், குளிர்சாதன வசதி மற்றும் வெப்பமூட்டிகளும் கார்ப்பெட்டுகள் விரிக்கப்பட்ட தரைப்பகுதியும் துணி மாற்றும் அறைகளும் தனிப்பட்ட உணவு உண்ணும் பகுதிகளும், ‘ஆடம்பர’ கழிப்பறைகளும் செய்து தரப்படுகின்றன.

உணவுகளும் பானங்களையும் கோர்ட்யார்டு மெரியாட் என்ற பிரபல நட்சத்திர விடுதி செய்து தருகிறது. தோர்டோவில் உள்ள இந்தக் கொட்டகை நகரத்தில் பாரா கிளைடிங், ஏடிவி பைக் ரைடிங், நீச்சல் குளம், ஸ்பா, வில் வித்தை போன்ற மற்ற வசதிகளோடு, சில நேரம் மழை நடனம் ஆடவும் வசதி ஏற்படுத்தி தரப்படுகிறது.

இந்த தோர்டோவிலிருந்து மண் பாதையின் வழியாக நடந்து 15 கி.மீ. தள்ளி வந்தால் ஆயிரம் பேர் வசிக்கும் இரண்டு குக்கிராமங்கள் வருகின்றன. பாலைவனக் கொட்டகை வாழ்க்கையிலிருந்து மிகவும் வித்தியாசப்படுகிறது இவர்களுடைய வாழ்க்கை. ஏப்ரல் 23-ம் தேதி வாக்களிக்கப்போகும் இவர்கள், மின்சாரத்துக்காகவும் சாலைக்காகவும் தண்ணீருக்காகவும் வாக்களிக்க இருக்கிறார்கள்.

படிக்க:
வாடகைக் கருப்பை : உலகில் முதலிடம் மோடியின் குஜராத் !
♦ நேர்மையாக தேர்தல் நடந்தால் 40 இடங்களில் கூட பாஜக வெல்லாது : பாஜக தலைவர் !

பூஜ் பகுதியின் வடக்குப் பிராந்தியமான பானியின் பிதாரா வந்த் மற்றும் நானா பிதாரா என்ற இந்த கிராமங்களில் மேற்கண்ட எந்த வசதியும் இல்லை. அருகில் இருக்கும் சாலையை அடைய அவர்கள் 10 கி.மீ. பயணித்தாக வேண்டும். 7 கி.மீ. நடந்து தங்களுடைய மொபைல் போன்களுக்கு இந்த ஊர்வாசிகள் சார்ஜ் ஏற்றிக்கொண்டு வருகிறார்கள். தண்ணீருக்காக அரசு விநியோகிக்கும் டேங்கரை நம்பியிருக்கிறார்கள். அதுவும் வராத நாட்களில் ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியில் குழி பறித்து அதில் சேகரிக்கப்பட்டிருக்கும் தண்ணீரை பயன்படுத்துகிறார்கள்.

தண்ணீருக்காக ஆங்காங்கே தோண்டப்பட்டிருக்கும் குழிகள்.

“நிலநடுக்கம் வந்த பிறகு தோர்டோ முற்றிலுமாக மாற்றியமைக்கப்பட்டுவிட்டது. பூஜ்-ல் இல்லாத வசதிகள்கூட அங்கே உள்ளன. ஆனால், எங்கள் கிராமத்தில் எதுவும் இல்லை” என்கிறார் அப்துல் கரீம். தண்ணீருக்காக ஆங்காங்கே குழிகள் வெட்டப்பட்டுள்ள, அந்த இடத்துக்கு நடந்து செல்லும் அவர், “இதோ இங்கிருந்துதான் நாங்கள் குடிக்க தண்ணீர் எடுக்கிறோம்” என கைக்காட்டுகிறார்.

கட்ச் பகுதியில் உள்ள மேய்ச்சல் சமூகமான மால்தாரிக்கள், தண்ணீரை சேமிக்க பாரம்பரியமாக ‘விர்தா’ எனப்படும் இந்த முறையை ஆயிரம் ஆண்டுகாலமாக பயன்படுத்தி வருகிறார்கள். இந்தக் குழிகளில் மழைக்காலங்களில் சேரும் தண்ணீர், நிலத்தடியில் உள்ள உப்பு நீருக்கு மேலே ஒரு படலமாக சேகரமாகிறது. ஆரம்பத்தில் சுவையாக இருந்த இந்த நீர், நாளடைவில் பருவ மாற்றம் காரணமாக குறைந்துபோனதோடு, கருப்பு நிறமாகவும் மாறிவிட்டது.

அப்பகுதி கிராம மக்கள் பருகும் குடிநீர்.

“இப்போது இந்த தண்ணீர் உப்பு கரிக்கிறது. ஏனெனில் இந்த வருடம் மழை குறைவாகவே பெய்தது” என்கிறார் கரீம். கடந்த முப்பது ஆண்டுகளில் காணாத வறட்சியை குஜராத் சந்தித்து வருகிறது என்பதும், கட்ச் பகுதிதான் அதில் அதிகமாக பாதிக்கப்பட்ட பகுதி என்பதும் குறிப்பிடத்தக்கது. முப்பது ஆண்டுகளில் மிகக் குறைந்த அளவில் 26% மட்டுமே மழையளவு பதிவாகியிருக்கிறது இந்தப் பகுதியில்.

“பிப்ரவரி மாதம் கொஞ்சமாக மழை பெய்தது. அதனால்தான் சிறிதளவாவது நல்ல தண்ணீர் இங்கே உள்ளது” என்கிற கரீம், தனது 6 வயது மகனின் துணையுடன் தண்ணீர் சேகரிப்பதாக சொல்கிறார். இந்தத் தண்ணீர் பார்ப்பதற்கு பச்சை கலந்த கருப்பு நிறமாகவும் சுவையில் கரிப்பாகவும் உள்ளது.

இந்தப் பகுதிக்கு குடிநீர் குழாய் வசதி செய்து தரப்படாத நிலையில், டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீரை விநியோகிக்கிறது அரசு. ஆனால், அந்த விநியோகமும் முறையாக செய்யப்படுவதில்லை.

“ஐந்து அல்லது ஆறு நாட்களுக்கு ஒருமுறைதான் டாங்கர் லாரிகள் வரும். சில நேரங்கள் இன்னும் தாமதமாகும். சில நேரங்களில் சாலை வசதி இல்லாததால் டேங்கர் சிக்கிக்கொள்ளும்.” என்கிறார் பிதாரா வந்த் கிராமத்தைச் சேர்ந்த 60 வயதான முகமது காசிம். கட்ச் பகுதியின் துணை ஆட்சியரான நியாஸ் பதான் இதை மறுக்கிறார். “தண்ணீர் தேவை என்று கேட்டால் அதே நாளில் டேங்கர் லாரிகளை அனுப்பி வைக்கிறோம்” என்கிறார் இவர்.

பாலைவனத்திலிருந்து இந்த குக்கிராமங்களுக்குச் செல்லும் பாதைகள், வாகன இயக்கத்தின் மூலமாக உருவாக்கப்பட்டுள்ளதை பார்க்க முடிகிறது. குறுகி, சமதளமற்ற, உப்பு சதுப்பு நிலத்தின் தாக்கம் காரணமாக வழுக்கும் தன்மையுடன் உள்ளன, இந்தப் பாதைகள்.

“இத்தகைய நிலப்பரப்பில் செல்லக்கூடிய ‘பொலிரோ’ போன்ற வாகனங்களில் மட்டுமே பயணிக்க முடியும்” என்கிறார் காசிம். துணை ஆட்சியரோ கட்சின் பெரும்பாலான கிராமங்கள் இணைக்கப்பட்டுவிட்டதாகவும், விரைவில் அனைத்து கிராமங்களும் சாலைகளால் இணைக்கப்பட்டுவிடும் என்றும் கூறுகிறார்.

மக்கள் பயன்பாட்டிற்காக உள்ள ஒரே வாகனம் பொலிரோ மட்டும்தான்.

இந்த இரண்டு கிராமங்களிலும் தலா ஒரு பொலிரோ உள்ளது. இவற்றை அனைவரும் பகிர்ந்துகொள்கிறார்கள். “இங்கிருந்து அருகே உள்ள கிராமங்களுக்கு பாலை எடுத்துச் சென்று விற்க இந்த வாகனத்தைத்தான் பயன்படுத்துகிறோம்” என்கிறார் காசிம்.

சுமார் 50 கி.மீ. தொலைவில் அருகில் இருக்கும் காவ்டா மற்றும் தயாபர் கிராமங்களைக்காட்டிலும் மிகவும் அருகில் இருக்கும் தார்டோவின் மக்கள் தொகை 500 மட்டுமே.

படிக்க:
மோடியின் பெருமைமிகு குஜராத் சிங்கங்களை வைரஸ் மட்டுமா அழித்தது ?
♦ சந்தி சிரிக்கும் குஜராத் மாடல் வளர்ச்சி !

கோதுமை-கம்பு மாவு அரைக்கவும், செல்போன்களை சார்ஜ் ஏற்றவுமே தங்களுக்கு மின்சாரம் அவசியமாகத் தேவை என்கிறார் காசிம். ஆனால், துணை ஆட்சியர் கட்ச் பகுதிகளுக்கு மின்சார வசதி செய்து கொடுக்கப்பட்டிருப்பதாகவும், சிலர் வீடுகளுக்கு இணைப்புக் கொடுக்க விண்ணப்பிக்காமல் இருக்கிறார்கள் என்றும் சொல்கிறார். ”மின்சாரம் வந்திருப்பதற்கான அறிகுறிகள் எதையுமே காணோம்” என தெரிவித்தபோது, “மீண்டும் உறுதிபடுத்திக்கொண்டு தெரிவிக்கிறேன்; சரி செய்கிறேன்” என்கிறார்.

முகமது காசீம் மற்றும் உமேஷ்

2001-ம் ஆண்டு நடந்த நிலநடுக்கத்தில் பிதாரா கிராமத்தில் இருந்த தங்களுடைய வீடுகள் அழிக்கப்பட்ட நிலையில், இந்த இரண்டு குடியிருப்பு பகுதிகள் உண்டாக்கப்பட்டதாக கூறுகிறார் காசிம்.

கட்ச் பகுதியில் இதுபோன்ற குடியிருப்புகள் உருவாவது வழக்கமானதுதான் என்கிறார் பங்கஜ் ஜோஷி என்ற தன்னார்வலர். நாடோடிகளால் இதுபோன்ற குடியிருப்புகள் அவ்வப்போது உருவாவதால் அவர்களை கண்காணிப்பது கடினமாக உள்ளதாக கட்ச் மாவட்ட ஆட்சியர் ரம்யா மோகன் தெரிவிக்கிறார்.

ஆசியாவின் மிகச்சிறந்த புல்வெளிப் பிரதேசமாக 2500 சதுர கிலோமீட்டர்களில் பரந்து விரிந்திருந்த பூஜ்-ன் வடக்குப் பகுதியான பன்னி, இப்போது சீரழிவைக் கண்டு வருகிறது. இந்தப் பகுதியில் மட்டும் 110 புதிய குடியிருப்புகள் உள்ளன என்கிறார் ஒரு மூத்த அரசு அதிகாரி. இதில் உள்ளடங்கிய பகுதிகளாக பிதாரா வந்தும், நானா பிதாராவும் உள்ளன. இந்தக் குடியிருப்புகள் குறித்த முழுமையான புள்ளிவிவரங்கள் எதுவும் கிடைக்க பெறாதநிலையில், சில குடியிருப்புகளில் தண்ணீர், சாலை, மின்சார வசதிகள் எதுவும் இல்லை என்பதை நிர்வாகம் ஒப்புக்கொள்கிறது.

ஊரக மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரத்தின்படி, கட்சில் உள்ள 918 வருவாய் கிராமங்களில் 11 கிராமங்களில் மின்சாரம் இல்லை. 49 கிராமங்களில் ஒரு நாளைக்கு 12 மணி நேரத்துக்கும் குறைவாகவே மின்சாரம் கிடைக்கிறது. 50% குறைவான வீடுகளில் மட்டுமே குடிநீர் குழாய் வசதி உள்ளது. 57 கிராமங்கள் மட்டுமே அனைத்து பருவநிலைக்கும் தாங்கும் சாலை வசதிகளைக் கொண்டுள்ளன என்கிறது அந்த அறிக்கை.

இது வருவாய் கிராமங்களுக்கான அறிக்கையே தவிர, குக்கிராமங்களுக்கான நிலவரம் அல்ல.

பிதாரா வந்த் மற்றும் நானா பிதாராவாசிகள் தேர்தலில் வாக்களிப்பதன் மூலம் இந்த நிலைமை மாறும் என நம்புகிறார்கள்.

சாஜன் உசைன்

1996-ம் ஆண்டு முதல் பாஜக இந்தத் தொகுதியை கைப்பற்றி வருகிறது. தற்போதைய எம்பி ஆன வினோத் சவ்டா, காங்கிரஸ் வேட்பாளரைவிட இரண்டரை லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். ஆனால், ஒருமுறைகூட இவரைப் பார்த்ததில்லை என்கிறார் சாஜன் உசைன். “அவரை விடுங்கள். தற்போது பிரதமராக உள்ளாரே… நரேந்திர மோடி, அவர் 12 ஆண்டு காலம் குஜராத் முதலமைச்சராக இருந்தார். தன்னுடைய இதயத்தில் கட்ச் -க்கு சிறப்பான இடம் உள்ளதாக சொல்லிக்கொண்ட இவர், எங்களுக்கு என்ன செய்தார்?” என கேள்வி எழுப்புகிறார்.

“இப்போதும்கூட மோடி டோர்தோ-வுக்கு ஆண்டுக்கு ஒரு முறையாவது வருகிறார். ஆனால், ரான் உத்சவு-க்கு மட்டுமே செல்கிறார். ஏன் அவர் இங்கே வருவதில்லை? இங்கே சாலை இல்லை; மின்சாரம் இல்லை; தண்ணீர் இல்லை. டோர்தோவில் அனைத்தும் உள்ளது” என சிரிக்கிறார் அப்துல் கரீம்.

“இந்த அடிப்படை வசதிகளை செய்துதருவது யாருடைய வேலை? இது மோடியின் வேலை இல்லையா? அவருடைய வேலையை அவர் செய்யவில்லை என்றால், ஏன் அவருக்கு வாக்களிக்க வேண்டும்” என வினவுகிறார் காசிம்.


கட்டுரையாளர் : கபீர் அகர்வால்
தமிழாக்கம் : அனிதா
நன்றி : தி வயர் 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க