பரீஸ் பொலெவோய்

உண்மை மனிதனின் கதை | முதல் பாகம் | அத்தியாயம் – 7

… ஆனால் காலை ஆன பிறகு அலெக்ஸேய் எவ்வளவோ கூர்ந்து கவனித்துங்கூட போர் அரவங்கள் அவன் காதில் படவே இல்லை. துப்பாக்கி சுடுவதோ, பீரங்கிக் குண்டுகள் வெடிப்பதோ கூட அவனுக்குக் கேட்கவில்லை.

மரங்களிலிலிருந்து வெண் புகை உமிழும் தாரைகளாகப் பொழிந்தது வெண்பனி. வெயில் படும்போது கண்ணைக் குத்தும் படி பளிச்சிட்டது அது. சிற்சில இடங்களில் வெண்பனி மீது லேசாகச் சட்டென ஒலித்தவாறு விழுந்தன உருகிய பனியின் கனத்த துளிகள். வசந்தம்! அன்று காலை தான் அது அவ்வளவு தீர்மானதாகவும் விடாப்பிடியாகவும் தன் வருகையை முதன் முதலாக அறிவித்துக் கொண்டது.

பதனிட்ட இறைச்சியின் அற்ப மிச்சங்களை, மணம் வீசும் கொழுப்பு படிந்த சில இறைச்சி நார்களை காலையிலேயே தின்பது என்று அலெக்ஸேய் தீர்மானித்தான். இல்லாவிட்டால் தன்னால் எழுந்து நிற்க முடியாது என்று அவனுக்குப்பட்டது. டப்பாவின் கூர் விளிம்புகளில் பட்டு கையின் சில இடங்களைக் கீறிக் கொண்டு விரலால் டப்பாவைத் துப்புரவாக வழித்து நக்கினான். அப்புறமும் கொழுப்பு எஞ்சியிருப்பதாக அவனுக்குத் தோன்றியது. டப்பாவில் வெண்பனியை நிறைத்தான், அணைந்து கொண்டிருந்த நெருப்பின் வெளிர் சாம்பலைத் திரட்டி அகற்றினான், தணல் மீது டப்பாவை வைத்தான். பின்னர் சிறிது இறைச்சி மணம் வீசிய அந்த சுடுநீரைச் சிறுசிறு மடக்குகளாக இன்பத்துடன் பருகினான். டப்பாவில் தேநீர் காய்ச்சலாம் என்று தீர்மானித்து அதைப் பைக்குள் வைத்துக் கொண்டான். சூடான தேநீர் பருகலாம்! இது உவப்பான கண்டுபிடிப்பு. மீண்டும் வழி நடக்க தொடங்கியபோது இது அவனுக்கு ஓரளவு உற்சாகம் ஊட்டியது.

டப்பாவின் கூர் விளிம்புகளில் பட்டு கையின் சில இடங்களைக் கீறிக் கொண்டு விரலால் டப்பாவைத் துப்புரவாக வழித்து நக்கினான். அப்புறமும் கொழுப்பு எஞ்சியிருப்பதாக அவனுக்குத் தோன்றியது.

ஆனால், இப்போது பெருத்த ஏமாற்றம் அவனுக்காக காத்திருந்தது. இரவில் அடித்த சூறைக் காற்று பாதையை ஒரேயடியாக அழித்துவிட்டிருந்தது. சாய்வான, முடிகூம்பிய வெண்பனிக் குவியல்களால் அது வழியைத் தடுத்திருந்தது. ஒரே நிறத்தில் பளிச்சிட்ட வெண்ணீலம் கண்களைக் குத்தியது. மென்தூவி போன்ற, இன்னும் படிந்து இறுகாத வெண்பனியில் கால்கள் ஆழப்புதைந்தன. அவற்றை சிரமத்துடனேயே வெளியில் எடுக்க வேண்டியிருந்தது. வெண்பனியில் புதைந்த ஊன்று கோல்களும் நன்றாக உதவவில்லை.

நடுப்பகலில் மரங்களின் அடியில் நிழல்கள் கறுத்தன. மர முடிகளின் வழியே காட்டுப் பாதையை எட்டிப்பார்த்தது சூரியன். காலை முதல் அந்த நேரம் வரை அலெக்ஸேய் சுமார் ஆயிரத்தைந்நூறு அடிகள் மட்டுமே நடந்திருந்தான். இதற்குள் அவன் அரே அடியாகக் களைத்துப் போனான். மேலே ஒவ்வொரு அடி எடுத்து வைப்பதற்கும் அவன் தன் சித்த உறுதிக்கு வெகுவாக முறுக்கேற்ற வேண்டியிருந்தது. அவன் தள்ளாடினான். கால்களுக்கு அடியிலிருந்து தரை வழுகிச் சென்றது. நிமிடத்திற்கு ஒரு தரம் அவன் விழுந்தான். நெறுநெறுக்கும் வெண்பனியில் நெற்றியை அழுத்தியவாறு வெண்பனிக் குவியலின் உச்சியில் கணநேரம் கிடந்தான், பின்பு எழுந்து இன்னும் சில அடிகள் முன்சென்றான். தூக்கம் அடக்க மாட்டாமல் விழிகளைக் கப்பியது. படுத்து மறதியில் ஆழவேண்டும், ஒரு தசையைக் கூட அசைக்காமல் கிடக்க வேண்டும் என்ற ஆசை மனத்தை ஈர்த்தது. வருவது வரட்டும்! குளிரில் விறைத்துப் போய் இடமும் வலமுமாகத் தள்ளாடியவாறு அவன் நின்றுவிட்டான். பிறகு உதட்டை வலிக்கும்படிக் கடித்து, தன்னைச் சுதாரித்துக் கொண்டு கால்களைக் கஷ்டத்துடன் இழுத்து இழுத்துப்போட்டு மறுபடி சில அடிகள் முன்னேறினான்.

படிக்க:
மாட்டுக்கறி மக்கள் உணவு ! மோடி பருப்பு இங்கே வேகாது ! வீடியோ
இலங்கை குண்டு வெடிப்பு : எங்கட நாட்டுப் பக்கம் வந்திடாதே | பாஜக-வைச் சாடும் இலங்கை மக்கள் !

மேற்கொண்டு தன்னால் முடியாது, எந்தச் சக்தியும் தன்னை இடத்தை விட்டு நகர்த்த முடியாது, என்பது அவன் உணர்வில் பட்டது. ஏக்கத்துடன் சுற்றும் முற்றும் கண்ணோட்டினான். அருகே பாதையோரத்தில் சுருட்டையான இளம் பைன் மரக்கன்று நின்றது. கடைசி முயற்சி செய்து நடந்து அதை நெருங்கி அதன் மேல் விழுந்தான். இரு கவர்களைப் பிரிந்த அதன் உச்சியில் கவட்டின் மோவாயை அழுத்திக் கொண்டான். அடிபட்ட கால்கள் மேல் சார்ந்த சுமை ஓரளவு குறைந்தது, இதமாக இருந்தது. சுருள் வில்கள் போன்ற கிளைகள் மேல் சாய்ந்தவாறு அமைதியை அனுபவித்தான். இன்னும் வசதியாகப் படுக்கும் விருப்பத்துடன் மோவாயை பைன் மரத்தின் கவட்டில் சாத்தி, கால்களை ஒவ்வொன்றாக இழுத்துக் கொண்டான். உடலின் சுமையைத் தாங்கவில்லை ஆதலால் அவை வெண்பனிக் குவியலிலிருந்து சுளுவாக விடுபட்டுவிட்டன. அப்போது அலெக்ஸேயிக்கு மறுபடியும் ஒரு யோசனை தோன்றியது.

அதுதான் சரி! ஆமாம், அதுதான் சரி, இந்த சிறு மரக் கன்றை வெட்டி, உச்சியில் கலர்ப்பு உள்ள நீண்ட தடி தயாரிக்கலாம். தடியை முன்னே வீசி ஊன்றி, அதன் கவட்டில் மேவாயை அழுத்தி உடல் சுமையை அதன் மேல் சாத்தலாம். பின்பு, இதோ இப்போது பைன் மரக் கன்றின் அருகே செய்தது போலக் கால்களை முன்னே நகர்த்தி வைக்கலாம். முன்னேற்றம் மெதுவாயிருக்குமா? ஆமாம், மெதுவாகத்தான் இருக்கும். ஆனால் இவ்வளவு களைப்பு உண்டாகாது. வெண்பனிக் குவியல்கள் படிந்து கெட்டிப்படும் வரை காத்திராமல் தொடர்ந்து வழி நடக்கலாம்.

உடனேயே அவன் முழந்தாள் படியிட்டு அமர்ந்து, கட்டாரியால் மரக்கன்றை வெட்டி, கிளைகளைச் செதுக்கி எறிந்துவிட்டு, கவட்டில் கைக்குட்டையையும் பட்டித்துணியையும் சுற்றிக் கட்டினான். அக்கணமே முன் செல்ல முயன்று பார்த்தான். தடியை முன்னே தள்ளி ஊன்றினான், மோவாயாலும் கைகளாலும் அதை ஆதாரமாகப் பற்றி அழுத்திக் கொண்டு ஓர் அடி, இரண்டு அடி முன்னேறினான். மறுபடி தடியை முன்னே ஊன்றினான், மோவாயாலும் கைகளாலும் அதை ஆதாரமாக அழுத்திக்கொண்டு ஓர் அடி, இரண்டு அடி முன்னேறினான். மறுபடி அதை ஆதாரமாகப் பற்றி அழுத்திக்கொண்டு ஓரிரு அடிகள் நடந்தான். அடிகளை எண்ணுவதும் தனது முன்னேற்றத்திற்குப் புதிய அளவுமானத்தைத் திட்டம் செய்வதுமாக மேலே சென்றான்.

(தொடரும்)

முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க