தென்னமெரிக்கக் கண்டத்திலுள்ள  வெனிசுவேலா மீது அமெரிக்கா எந்நேரத்திலும் இராணுவத் தாக்குதல் தொடுக்கும் அபாயம் அதிகரித்திருக்கிறது. வெனிசுவேலாவிலிருந்து தனது தூதரக அதிகாரிகளைத் திரும்பப் பெற்றது மட்டுமின்றி, அந்நாட்டுக்குச் சென்றுள்ள அமெரிக்கக் குடிமக்களை வெனிசுவேலாவை விட்டு வெளியேறுமாறும் அறிவுறுத்தியிருக்கிறது, டிரம்ப் அரசு.

அமெரிக்காவின் ஓய்வு பெற்ற மூத்த இராணுவ அதிகாரிகள் பலர் இராணுவ ஆக்கிரமிப்பை எதிர்த்து டிரம்புக்கு ஏப்ரல் 4-ம் தேதியன்று பகிரங்கக் கடிதம் எழுதியிருக்கின்றனர். “அமெரிக்கா நேரடியாகவோ, மறைமுகமாகவோ தாக்குதல் தொடுக்குமானால், வெனிசுவேலா அடிபணியாது என்றும் ஆக்கிரமிப்பை எதிர்த்து சுமார் 2,35,000 பேரைக் கொண்ட வெனிசுவேலா இராணுவமும், சுமார் 16 இலட்சம் பேர்களைக் கொண்ட குடிமக்கள் இராணுவமும்  விடாப்பிடியாகப் போரிடும்” என்றும் நோம் சோம்ஸ்கி உள்ளிட்ட அறிஞர்கள் அமெரிக்க அரசை எச்சரித்து அறிக்கை வெளியிட்டிருக்கின்றனர்.

வெனிசுவேலா மீது அமெரிக்க ஏகாதிபத்தியம் திணித்துவரும் மறைமுகப் போரை எதிர்த்து ஐ.நா. சபையின் தலைமைச் செயலகம் முன்பாக பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் நடத்திய ஆர்ப்பாட்டம். (கோப்புப் படம்)

ஏப்ரல் 7-ம் தேதியன்று, “ஏகாதிபத்தியத்தை எதிர்ப்போம்! தந்தையர் நாட்டைக் காத்து நிற்போம்!” என்ற முழக்கத்தினை முன்வைத்து வெனிசுவேலா அதிபர் மதுரோவின் தலைமையில் பிரம்மாண்டமான ஆர்ப்பாட்டம் தலைநகர் காரகாஸில் நடைபெற்றுள்ளது. அமெரிக்காவுக்கு அடிபணிய மறுக்கின்ற ஒரே காரணத்துக்காக வெனிசுவேலா, கியூபா, நிகராகுவா ஆகிய நாடுகளைத் தீமையின் முக்கூட்டு என்று முத்திரை குத்தித் தாக்குதல் தொடுப்பதற்காகவே பொய்க் குற்றச்சாட்டுகளைப் புனைந்து வருகிறது அமெரிக்க அரசு.

கடந்த சில மாதங்களாகவே, சீர்குலைவு நடவடிக்கைகள் மூலம் மின்சாரம், தண்ணீரையும்; பொருளாதாரத் தடை மூலம் உணவு, மருந்துகளையும் தடுத்து வெனிசுவேலா மக்களைப் பட்டினிபோட்டுப் பணிய வைக்க முயலுகிறது, டிரம்ப் அரசு. அடிபணிய மறுத்துப் போராடுகிறார்கள் வெனிசுவேலாவின் வீரப்புதல்வர்கள்.

*****

டந்த மார்ச் 7-ம் தேதி வெனிசுவேலாவில் பரவலாக மின்சாரத் தடை ஏற்பட்டது. நாடெங்கும் மின் பகிர்மான வலைப்பின்னலும், பகிர்மான நிலையங்களும் அரச எதிர்ப்பு வன்முறையாளர்களால் தாக்கப்பட்டுச் செயலிழந்தன. மின்சாரம் தடைபட்டிருப்பதால், குடிநீர் விநியோகமும் பரவலாகப் பாதிக்கப்பட்டது. தவித்த வாய்க்குத் தண்ணீரின்றி, இருளில் பரிதவித்துக் கிடக்கும் அந்த மக்களுக்கு நிவாரணப் பொருட்களை அனுப்பியது அமெரிக்கா. நிவாரண டிரக்குகளை உள்ளே நுழைய அனுமதிக்காமல், எல்லையிலேயே தடுத்து நிறுத்திய வெனிசுவேலா மக்கள், டிரக்கில் இருந்த நிவாரணப் பொருள் பெட்டிகளைத் திறந்து சோதனையிட்டனர். அவற்றில் கம்பிச்சுருள்களும் சுள்ளாணிகளுமே இருந்தன.

பட்டினி கிடந்தாலும் பணிய மறுக்கின்ற காரணத்தினால் அம்மக்களுக்கு அமெரிக்கா வழங்கிய பரிசு அது. அமெரிக்காவின் இந்த ஆத்திரத்தைப் புரிந்து கொள்ள வேண்டுமானால், வெனிசுவேலாவின் அரசியல் சூழலைப் புரிந்து கொள்வது அவசியம்.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கண்ணில் விரலைவிட்டு ஆட்டியவரும் வெனிசுவேலா மக்களின் அன்பிற்குரிய மறைந்த அதிபருமான ஹியூகோ சாவேஸ்.

1999-ல் இருந்து 2013-ம் ஆண்டு வரை வெனிசுவேலாவை ஆட்சி செய்து வந்த ஹியூகோ சாவேஸ் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தொண்டையில் சிக்கிய முள்ளாக உறுத்திக் கொண்டிருந்தார். இடதுசாரி அரசியல், பொலிவேரிய ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசியல் ஆகியவற்றை முன்நிறுத்திய சாவேஸ், ஒரு மக்கள் நல அரசாக வெனிசுவேலாவை மறுநிர்மாணம் செய்தார். சாவேசின் நடவடிக்கைகள், அதுவரை வெனிசுவேலாவில் சர்வ சுதந்திரமாக அமெரிக்கா நடத்தி வந்த கார்ப்பரேட் சுரண்டல்களுக்குத் தடையாக நின்றன.

உலகிலேயே மிக அதிகமான நிரூபிக்கப்பட்ட எண்ணெய் வளம் கொண்ட நாடு வெனிசுவேலா. அதனை விழுங்குவதே அமெரிக்காவின் நோக்கம். ஆனால், அந்த நோக்கம் நிறைவேறவில்லை. வெனிசுவேலாவின் எண்ணெய் வளம் தேசியமயமாக்கப்பட்டதுடன், சில அமெரிக்க கார்ப்பரேட் நிறுவனங்களும் சாவேஸால் தேசியமயமாக்கப்பட்டன.  கைவிடப்பட்ட ஆலைகளைத் தொழிலாளர்களே ஏற்று நடத்துவது, மக்கள் கம்யூன் என ஹியூகோ சாவேசின் காலத்தில் நிகழ்ந்த சில பரிசோதனைகள் வெற்றி பெற்றன. ஹியூகோவின் சீர்திருத்த நடவடிக்கைகள் அனைத்தும் அமெரிக்க ஆதிக்க எதிர்ப்பை மையமாகக் கொண்டிருந்தது, மக்களின் ஆதரவையும் பெற்றது.

படிக்க:
♦ வெனிசுலா குறித்து தி இந்துவில் ஒரு அபத்தக் கட்டுரை | கலையரசன்
♦ இலங்கை குண்டுவெடிப்பு

வெனிசுவேலாவின் முன்னுதாரணம் அமெரிக்காவின் இலத்தீன் அமெரிக்க ஆதிக்கத்துக்குப் பெரும் சவாலாக இருக்கவே, தனது ஆட்சிக்காலம் முழுவதும் எதிர்ப்புரட்சிகளையும், ஆட்சிக் கவிழ்ப்பு சதிகளையும் சாவேஸ் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. 2013-ம் ஆண்டு சாவேஸ் மறைந்ததையடுத்து, அவரது கட்சியைச் சேர்ந்த நிகோலஸ் மதுரோ ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். வெனிசுவேலாவின் பொருளாதாரம் எண்ணெய் வளத்தை நம்பி இருந்த சூழலில், சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலைகளைச் செயற்கையாக வீழ்ச்சியடைய வைத்தது அமெரிக்கா. இதன் விளைவாக வெனிசுவேலா மட்டுமின்றி, ரஷ்யாவும் பெரும் பொருளாதார நெருக்கடிகளைச் சந்திக்க வேண்டியதாயிற்று.

அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு அச்சுறுத்தலை எதிர்கொண்டுவரும் வெனிசுவேலாவின் அதிபர் நிகோலஸ் மதுரோ.

ஒருபுறம் பொருளாதாரத் தடைகள், எண்ணெய் வர்த்தகத்திற்குக் கட்டுப்பாடு என வெனிசுவேலாவின் பொருளாதாரத்தை நசுக்கிய அமெரிக்கா, மறுபுறம் ஆட்சிக் கவிழ்ப்பு சதிகளையும் அரங்கேற்றி வந்தது. இந்தச் சூழலில் கடந்த 2018-ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்ட நிகோலஸ் மதுரோ, மீண்டும் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மதுரோவுக்கு எதிரான, தனக்கு ஆதரவான அரசியல் கட்சிகளை வைத்து வெனிசுவேலாவின் தேர்தல் முறைப்படி நடக்கவில்லை என உள்ளூரில் பெரும் கலவரங்களைத் தூண்ட முயற்சித்தது அமெரிக்கா. எனினும், அம்முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன.

இதற்கிடையே வெனிசுவேலாவில் “ஜனநாயகம்” படுகொலை செய்யப்பட்டிருப்பதாகக் கடந்த பல மாதங்களாகச் சர்வதேச ஊடகங்கள் அமெரிக்காவின் குரலில் ஊளையிடத் தொடங்கின. வெனிசுவேலா மக்கள் பசி, பட்டினியில் வாடுவதாகவும், நிகோலஸ் மதுரோ அரசியல் படுகொலைகள் செய்வதாகவும், எதிர்ப்பாளர்கள் உயிரோடு கொளுத்தப்படுவதாகவும், இன்னும் இது போல் ஏராளமான பொய்ச் செய்திகளைச் சர்வதேச முதலாளித்துவ ஊடகங்களின் வாயிலாகத் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வந்தது, அமெரிக்கா.

இந்த நிகழ்ச்சிப் போக்குகளின் வரிசையில் கடந்த ஜனவரி மாதம் ஜூவான் கௌடியோ என்பவரைத் தற்காலிக அதிபராக அறிவிக்கச் செய்தது, அமெரிக்கா. வெனிசுவேலா நாடாளுமன்றத்தின் அவைத் தலைவரான ஜூவான் கௌடியோ, அமெரிக்க ஆதரவாளராவார். இதில் வேடிக்கை என்னவென்றால், கடந்த 2018-ம் ஆண்டு தேர்தலில் ஜூவானோ, அவர் சார்ந்திருக்கும் “வெகுஜனங்களின் விருப்பம்” (Popular will) என்கிற கட்சியோ அதிபர் பதவிக்கு மதுரோவுடன் மோதவில்லை என்பதோடு, அவ்வாறு மோதும் அளவுக்கு மக்கள் ஆதரவு கொண்ட கட்சியும் அல்ல, அது. தன்னைத் தானே அதிபராக ஜூவான் அறிவித்துக் கொள்ளும் வரை அவர் வெனிசுவேலாவின் அரசியல் அரங்கில் பிரபலமாக அறியப்பட்டவரும் அல்ல.

அமெரிக்காவால் சட்டவிரோதமான முறையில் வெனிசுவேலா அதிபராக அறிவிக்கப்பட்டுள்ள ஜூவான் கௌடியோ.

ஜூவான் தன்னை அதிபராக அறிவித்துக் கொண்டவுடனே, அவரை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தது, அமெரிக்கா. அத்துடன், “இங்கிலாந்து வங்கி”யில் (Bank of England) வெனிசுவேலா அரசு வைத்திருந்த சுமார் ஒரு பில்லியன் டாலர் மதிப்பிலான தங்கத்தையும் பறித்துக் கொண்டது. அமெரிக்க வங்கிகளில் இருந்த வெனிசுவேலாவுக்குச் சொந்தமான சுமார் முப்பது பில்லியன் டாலரையும் அபகரித்துக் கொண்ட அமெரிக்கா, இவ்வாறு களவாடிய பணத்தை வெனிசுவேலாவில் தனது கைக்கூலிகளாகச் செயல்படும் எதிர்கட்சிகளுக்கு வாரி வழங்கியது.

இப்படி வெனிசுவேலா மக்களின் சொந்தப் பணத்தைக் கொண்டே அந்நாட்டில் தீவிரவாதச் செயல்களை அரங்கேற்றி வருகிறது, அமெரிக்கா. வெனிசுவேலாவின் கூரி நகரில் அமைந்துள்ள “சிமோன் பொலிவார் நீர்மின் நிலையத்தில்” அமெரிக்க ஆதரவுக் கூலிப் படைகள் கடந்த சில வாரங்களுக்கு முன் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கிறார், அந்நாட்டின் துணை அதிபர் ஜோர்ஜி ரோட்ரிக்ஸ்.

ஒரு பக்கம் பொருளாதாரத் தடைகளின் மூலமும், இன்னொரு பக்கம் உள்ளூர் குற்றக் கும்பல்களின் மூலமும் வெனிசுவேலாவின் கழுத்தை நெறிக்கும் அமெரிக்கா, தனது ஆதரவு பெற்ற கூலிப் படையினர் நிகழ்த்தும் வன்முறைகளின் காணொளிகளை சர்வதேச ஊடகங்களில் பரவச் செய்து, அவற்றை மதுரோவின் ஆதரவாளர்கள் செய்வதாகப் பொய்ப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றது.

இந்நிலையில் வெனிசுவேலாவுடன் இராணுவ ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கும் ரசியா, அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் தனது தொழில்நுட்ப வல்லுனர்களையும், இராணுவ அதிகாரிகளையும், இரண்டு விமானப்படை விமானங்களையும் அனுப்பி வைத்துள்ளது. இதற்கெதிராக அமெரிக்கா போட்ட கூச்சல்களை ரசியா கண்டு கொள்ளவில்லை. வெனிசுவேலாவில் கணிசமான அளவு முதலீடு செய்துள்ள சீனா, சில தினங்களுக்கு முன் தனது இராணுவத்தினரையும் அனுப்பியிருக்கிறது. ஏறக்குறைய சிரியாவின் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது வெனிசுவேலா.

வெனிசுவேலா இழைத்த ஒரே குற்றம், அமெரிக்க கார்ப்பரேட்டுகளின் ஏகபோகச் சுரண்டலைத் தடுத்ததும், அதன் மேலாதிக்கத்தை எதிர்த்து நின்றதும் மட்டுமே. இத்தனைக்கும் அந்த நாடு ஒரு முழுமையான சோசலிசப் பொருளாதாரத்தை மேற்கொள்ளவும் இல்லை. எண்ணெய் வர்த்தகத்தில் காலங்காலமாகச் சுரண்டி வந்த அமெரிக்க மற்றும் பன்னாட்டு கார்ப்பரேட்டுகளைத் தூக்கியெறிந்துவிட்டு, எண்ணெய் வயல்களைத் தேசியமயமாக்கினார் சாவேஸ். எண்ணெய் வர்த்தகத்தில் கிடைத்த பணத்தை மக்கள் நலத் திட்டங்களுக்கு திருப்பிவிட்டார்.

எண்ணெய் வர்த்தகம், துறைமுகங்கள், விமான நிலையங்கள் மற்றும் பாதுகாப்புத் துறை உள்ளிட்ட துறைகளே முழுமையாக அரசுடைமை ஆக்கப்பட்டுள்ளன. உணவு உற்பத்தி, ரியல் எஸ்டேட், கட்டுமானத் துறை, ஊடகங்கள் மற்றும் சில உற்பத்தித் துறைகளில் இன்றும் தனியார் மூலதனம் செயல்பட்டுக் கொண்டுதான் உள்ளது; இவற்றில் அந்நிய முதலீடும் அனுமதிக்கப்படுகின்றது. சொல்லப்போனால், உணவு உற்பத்தி தனியாரிடம் இருக்கின்ற காரணத்தினால்தான், உணவுப் பொருட்கள் பதுக்கப்பட்டுச் செயற்கையாகப் பஞ்சம் ஏற்படுத்தப்படுகின்றது.

வெனிசுவேலாவில் செயல்படும் தனியார் தொலைக்காட்சி, வானொலி, பத்திரிகைகள் அனைத்துமே எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவான பிரச்சார சாதனங்கள்தான். அவை அரசுக்கெதிரான செய்திகளை மட்டுமே சொல்லிக் கொண்டிருந்த போதிலும், தடை செய்யப்பட வில்லை.

இதுமட்டுமல்ல. வெனிசுவேலாவின் உயிர் ஆதாரமான கச்சா எண்ணெய் வணிகத்தைத் தடுத்து, அந்நாட்டைப் பொருளாதாரரீதியில் திவாலாக்கும் பொருட்டு, அந்நாட்டுடன் பொருளாதார உறவு வைத்துக் கொள்ளக்கூடாது என உலக நாடுகளை அச்சுறுத்தித் தடுத்திருக்கிறது, அமெரிக்கா. கடந்த பிப்ரவரி மாதம் வரை வெனிசுவேலாவின் முதன்மையான எண்ணெய் இறக்குமதியாளராக இந்தியா இருந்து வந்தது. தற்போது மோடி அரசு அமெரிக்காவின் உத்தர வுக்கு அடிபணிந்து, இறக்குமதியை முற்றிலுமாக நிறுத்தி விட்டது.

*****

மெரிக்காவின் பன்முனைத் தாக்குதல்களை வெனிசுவேலா மக்கள் எதிர்கொள்ளும் முறை ஒரு கவிதை. வெனிசுவேலாவில் அமைதியற்ற சூழல் நிலவுவதாக அமெரிக்கா பரப்பிவரும் செய்திகளின் உண்மைத் தன்மையை நேரில் சென்று சோதித்தறிந்துள்ளார் பத்திரிகையாளரும் சமூகச் செயல்பாட்டாளருமான ஈவா பார்லெட். கொலம்பிய எல்லையில் நிலவிய சிறிய அளவிலான பதற்றத்தையும், அங்கொன்றும் இங்கொன்றுமாக அரச எதிர்ப்புக் கூலிப் படையினர் நிகழ்த்தும் வன்முறைகளையும் தவிர்த்துப் பெரும்பாலும் வெனிசுவேலாவில் அமைதியே நிலவுவதாகப் பதிவு செய்கிறார் ஈவா.

வெனிசுவேலாவின் உண்மை நிலை குறித்து உலகுக்கு உணர்த்தும் நோக்கில் கட்டுரைகளை எழுதிவரும் பத்திரிக்கையாளர் ஈவா பார்லெட்.

அமெரிக்க ஆதரவு உணவு உற்பத்தியாளர்கள் மற்றும் சங்கிலித் தொடர் சூப்பர் மார்கெட் முதலாளிகள் பதுக்கலில் ஈடுபட்டுச் செயற்கையான உணவுப் பஞ்சத்தை ஏற்படுத்த முனைந்துள்ள நிலையில், அரசு மக்கள் கூட்டுறவுகள் மூலம் உணவுப்பொருள் விநியோகத்தைத் துரிதப்படுத்தி வருகின்றது. ஊடகங்கள் மதுரோவுக்கு எதிரான பிரச்சாரங்களை மேற்கொண்டு வரும் நிலையில், மக்கள் பெருமளவில் அவருக்கு ஆதரவான ஊர்வலங்களை நடத்தி வருகின்றனர்.

சுமார் பத்து இலட்சம் மக்கள் தொகை கொண்ட ஃபேப்ரீசியோ ஒஜேடா (Fabricio Ojeda) என்கிற கம்யூன் சுயேச்சையாக உணவு உற்பத்தியில் ஈடுபடுவதுடன், உற்பத்தி செய்யப்பட்ட உணவுப் பொருட்களைச் சந்தை விலையில் இருந்து 30-40 சதவீதம் குறைந்த விலையில் விற்று வருகின்றது. மக்கள் வசிக்கும் ஒவ்வொரு பகுதிகளிலும் கலெக்டிவோஸ் (Colectivos) எனப்படும் சமூகக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மின் தடையினால் இறைச்சி உள்ளிட்ட பொருட்களை மையமாக ஒரே இடத்தில் சேமிப்பது, உணவுப் பொருள் விநியோகம், தண்ணீர் விநியோகம் என அத்தியாவசியப் பொருட்களை இந்த கலெக்டிவோஸ் குழு ஒருங்கிணைக்கிறது.

பத்திரிகையாளர் ஈவாவுக்கு பேட்டியளித்துள்ள கம்யூன் தலைவர் ஒருவர், “நாங்கள் உணவுப்பொருள் உற்பத்தியில் சுயசார்புத் தன்மையை அடைய முயற்சித்து வருகிறோம். எங்கள் மேல் தொடுக்கப்பட்டுள்ள பொருளாதாரப் போருக்கு எதிராக இதைத்தானே செய்ய முடியும்” எனக் குறிப்பிடுகிறார். பல்வேறு தரப்பு மக்களும் அமெரிக்காவின் பொருளாதாரப் போர் தங்களுக்குப் புதிதில்லை எனவும், ஒவ்வொரு முறை தங்கள் நாடு அமெரிக்காவால் பொருளாதார நெருக்கடிக்குள் திட்டமிட்டு தள்ளிவிடப்படும் போதும், அதை அமைதியுடன் எதிர்கொள்ளப் பழகியுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளனர்.

படிக்க:
♦ வெனிசுலா: அமெரிக்காவின் அடுத்த ஆக்கிரமிப்புப் போர் !
♦ வெனிசுவேலா : சாவேஸின் தோல்வி உணர்த்தும் உண்மைகள்!

ஏகாதிபத்திய எதிர்ப்புக் கலாச்சாரம் வெனிசுவேலா மக்களின் உணர்வுகளில் மிக அழுத்தமாகப் பதிவாகியுள்ளது. அவர்கள் சோறைவிடச் சுரணை முக்கியம் என்பதை உணர்ந்துள்ளனர். எனவே, அமெரிக்க ஏகாதிபத்தியத்தை அமைதியுடனும் உறுதியுடனும் தீரத்தோடும் எதிர்த்து நிற்கிறார்கள்.

*****

ப்கான், ஈராக் போன்ற நாடுகளில் தலையிடுவதற்கான நியாயத்தை அல்கொய்தாவும் பின்லேடனும் சில நூறு அமெரிக்க உயிர்களும் இரட்டை கோபுரத் தகர்ப்பும் அமெரிக்காவுக்கு வழங்கின. சிரியாவில் தலையிட ஏ.கே. 47 துப்பாக்கி தரித்த சிலரின் மரணங்கள் அமெரிக்காவுக்குத் தேவைப்பட்டது. வெனிசுவேலாவில் அதன் தகிடுதத்தங்கள் எதுவும் வெற்றி பெறவில்லை. உள்நாட்டுக் கலகம், வன்முறை, மதுரோவுக்கு எதிரான மக்கள் எழுச்சி என்று சர்வதேச ஊடகங்களில்தான் அமெரிக்காவால் பொய்ப்பிரச்சாரம் செய்ய முடிகிறதே தவிர, வெனிசுவேலாவுக்குள் எந்தச் சலசலப்பையும் உருவாக்க முடியவில்லை.

வெனிசுவேலாவில் மீண்டும் அமெரிக்க மேலாதிக்கத்தைத் திணிக்க முயன்றுவரும் அமெரிக்க அதிபர் டிரம்ப்.

வெனிசுவேலா தலைநகரில் மதுரோ எதிர்ப்பாளர்களின் ஆர்ப்பாட்டம் என்று உலக முழுவதும் சமூக ஊடகங்களில் விளம்பரப்படுத்தப்பட்ட ஒரு ஆர்ப்பாட்டத்துக்கு நேரில் சென்றிருந்த ஈவா பார்லெட், அதைப் புகைப்படத்துடன் வெளியிட்டிருக்கிறார். பத்துப் பதினைந்து பேர் முழக்கம்கூட எழுப்பத் திராணியில்லாமல் சாலையில் நிற்கின்றனர். அமெரிக்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திலோ இலட்சக்கணக்கான மக்கள், குறிப்பாக கருப்பின, கலப்பின உழைக்கும் மக்கள் திரண்டு நின்று முழங்குகிறார்கள்.

வெனிசுவேலா நமக்கு  இரண்டு செய்திகளைச் சொல்கிறது. புதிய தாராளவாதக் கொள்கைகளை மறுத்தும், ஏகாதிபத்திய மேலாதிக்கத்தை எதிர்த்தும் சுயசார்பாக நிற்கும் நாடுகளும் மக்களும் எத்தகைய தாக்குதல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பது முதல் செய்தி.

ஆகப் பெரும்பான்மையான மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாக இருப்பினும், அந்த அரசு, அந்நாட்டு மக்களின் விருப்பப்படித் தனது பொருளாதார அரசியல் கொள்கைகளை வகுக்க விரும்பினால், ஒரு ஏகாதிபத்திய எதிர்ப்புப் போருக்கு தயாராக வேண்டும் என்பதும் அதற்கு மக்களைத் தயார்படுத்த வேண்டும் என்பதும் இரண்டாவது செய்தி.

சாக்கியன்

புதிய ஜனநாயகம், ஏப்ரல் 2019

மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

புதிய ஜனநாயகம் நவம்பர் 2018

15.00Add to cart

புதிய ஜனநாயகம்

15.00Add to cart

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க