எங்களுடைய இளம் தலைமுறையை கொன்ற அவர்களுக்கு எப்படி வாக்களிப்பது?” : காஷ்மீரில் வெறிச்சோடிய வாக்குச்சாவடிகள் !

நாடு முழுவதும் நடந்து கொண்டிருக்கும் மக்களவை தேர்தலில் மூன்று கட்ட வாக்குப்பதிவு முடிந்திருக்கிறது. மூன்று கட்ட வாக்குப்பதிவு சதவீதம் சராசரியாக ஐம்பது சதவீதத்துக்கு மேல் இருந்த நிலையில், காஷ்மீரின் அனந்த்நாக் தொகுதியில் நடந்த வாக்குப்பதிவு சதவீதம் வெறும் 13.61% மட்டுமே.

மோடி ஆட்சிக்கு வந்ததிலிருந்து இந்திய இராணுவத்துக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே அதிக அளவிலான மோதல்கள் தெற்கு காஷ்மீரில் நடந்தன. முன்னெப்போதும் இல்லாதவகையில் பொது மக்கள் மீது பெல்லட் குண்டுகளால் தாக்கியது இந்திய இராணுவம். பல இளைஞர்கள் கொல்லப்பட்டனர்.

எனவே, இந்தியா மீது அப்பகுதி மக்கள் மிகுந்த வெறுப்புடன் உள்ளனர். கடந்த செவ்வாய்க்கிழமை அங்கு நடந்த தேர்தல் மூலம் அம்மக்கள் இதனை உணர்த்தியிருக்கிறார்கள். 2014-ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் அனந்த்நாத் தொகுதியில் 39.37 சதவீதமாக இருந்த வாக்குப்பதிவு, இப்போது 13.61 சதவீதமாக கடும் வீழ்ச்சி கண்டுள்ளது.

வாக்குப்பதிவு முடிந்த பின்னர் தேர்தல் ஆணையம் தெரிவித்த இறுதியான தகவலின்படி இங்கே 5,27,497 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். இதில் 2,69,773 ஆண்களும் 2,57,713 பெண்களும் 11 மாற்று பாலினத்தாரும் அடங்குவர். இவர்களில் வாக்களித்தவர்கள் வெறும் 67,676 பேர் மட்டுமே. இதில் 4,101 வாக்குகளை புலம்பெயர்ந்த பண்டிட்டுகள் செலுத்தியிருக்கிறார்கள்.

அனந்த்நாத் தொகுதியில் உள்ள பகுதிகளில் மிகக்குறைந்த அளவான 2.04 % வாக்குகளே பதிவானது பிஜ்பிஹாரா-வில்தான். பாஜகவுடன் கூட்டணி அமைச்சரவை அமைத்திருந்த முன்னாள் முதலமைச்சர் மெஹபூபா முப்தியின் சொந்த ஊர் இது. அனந்த நாத் பிரிவில் 3.4%, டோரு – 17.2%, கோகெர்நாக் – 19.36%, ஷாங்கஸ் – 15.09% வாக்குகள் பதிவாகியுள்ளன.

தேர்தலை புறக்கணிக்கும்படி உள்ளூர் தலைவர்கள் விடுத்த அழைப்பினால், மக்கள் கூடும் இடங்கள் வெறுச்சோடி இருந்தன. சர்னால் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் மூவர் மட்டுமே வாக்களித்தனர்.

தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டதற்கிணங்க, தெற்கு காஷ்மீரில் வாக்குப்பதிவு நேரம் இரண்டு மணி நேரம் குறைக்கப்பட்டது. ஒருசில இடங்களில் நடந்த கல்வீச்சு சம்பவங்களைத் தவிர, பெரிய அளவிலான வன்முறை ஏதுமில்லாமல் வாக்குப்பதிவு சுமூகமாகவே நடந்ததாக தேர்தல் ஆணையம் கூறுகிறது.

வாக்குப்பதிவு நாளன்று அனந்த்நாக்கில் உள்ள பொதுப் பேருந்து நிலையம் வெறிச்சோடியிருந்தது.

அனந்த்நாக்கில் உள்ள கிராங்சோ கிராமத்தில் வாக்குச் சாவடிக்கு வெளியே அமர்ந்திருந்த கிராமத்தினர், “நாங்கள் வாக்களிக்கவில்லை; எதிர்காலத்திலும் வாக்களிக்கப்போவதில்லை. அவர்கள் எங்களுடைய இளைய தலைமுறையை கொன்றுவிட்டார்கள்” என ஒருசேர தெரிவித்தனர்.

பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் யாரும் வாக்களிக்க வராததால் தேர்தல் பணியாளர்கள் வெளியே வந்து அமர்ந்திருந்தனர்.

இந்த வாக்குச் சாவடியில் எட்டு பேர் மட்டுமே வாக்களித்திருந்தனர். கடந்த காலத்தில் பிடிபி கட்சியின் செல்வாக்கான பகுதியாக இருந்தது கிராங்சோ. “இந்தியாவின் பிற மாநிலங்களில் தேர்தலின்போது வாக்களிக்கும் கூட்டத்தைத்தான் பார்த்திருக்கிறேன். ஆனால், காஷ்மீரில் மக்கள் வாக்களிப்பதில்லை. காலையிலிருந்து இரண்டு , மூன்று பேர்தான் வாக்களிக்க வந்தார்கள். இவர்களிடையே தேர்தல் ஆர்வமே இல்லை” என்கிறார் பீகாரிலிருந்து தேர்தல் பார்வையாளர் பணிக்கு வந்திருக்கும் நீல் கமல்.

பீகாரிலிருந்து தேர்தல் பார்வையாளர் பணிக்கு வந்திருக்கும் நீல் கமல்.

படிக்க:
தேர்தல் ஆணையமே … நடையைக் கட்டு !
♦ ”தந்தையர் இல்லா காஷ்மீர் ” – திரைப்படம் | கண்ணீர் பள்ளத்தாக்கின் கதை !

முகேஷ் பாட்டி என்ற பாதுகாப்பு அதிகாரி, “தேர்தலுக்காக அரசு பல கோடிகளை செலவழிக்கிறது. ஆனால், இங்கே ஒருசிலர் மட்டுமே வாக்களிக்க வருகிறார்கள். காஷ்மீர் மக்கள் பயமுறுத்தப்பட்டிருக்கிறார்கள் என நினைக்கிறேன். நாம் இப்போது தொழிற்நுட்ப உலகில் இருக்கிறோம். அரசு காஷ்மீரில் வேறு சில மாற்றுகளை யோசிக்க வேண்டும். இல்லையென்றால், தேர்தல் நடைமுறை காஷ்மீரில் தோல்வியுற்ற ஒன்றாகிவிடும்” என்கிறார்.

எவரும் வராத வாக்குச் சாவடிக்கு காவல் காக்கிறார் இந்த போலீசு அதிகாரி.

டெஹ்ருனா கிராமத்தில் உள்ள 793 வாக்குகளில் மூன்றே மூன்று வாக்குகள் மட்டுமே பதிவாகின. அந்த கிராமத்தைச் சேர்ந்த பெயர் சொல்ல விரும்பாத ஒருவர், “எங்கள் ஊரில் எம்.பில் பட்டத்தாரியான ஒருவர் கிளர்ச்சியாளராக மாறிவிட்டார். ஒரு பக்கம் படித்த இளைஞர்கள் கிளர்ச்சி குழுக்களில் சேரும் நிலைக்குத் தள்ளப்பட்டுக்கொண்டிருக்க, இன்னொரு பக்கம் இளைஞர்கள் வாக்களிக்க வேண்டும் என்று கேட்கிறார்கள். அது ஒருபோதும் முடியாது” என்கிறார் காட்டமாக.

மட்டான் உயர்நிலைப் பள்ளியில் நான்கு வாக்குச்சாவடிகள் வைக்கப்பட்டன. ஆனால். வாக்குச் சாவடிக்குச் செல்லும் வழி வெறிச்சோடிக்கிடக்கிறது.

அனந்த்நாக் தொகுதியில் வென்ற மெகபூபா முப்தி கடந்த ஜூன் 2016-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் முதல்வரானதை அடுத்து, மக்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். 2017-ல் ஸ்ரீநகர் மக்களவை தொகுதி இடைத்தேர்தலின் போது எட்டு பேர் கொல்லப்பட்டனர்.  இதனால் தேர்தல் ஆணையம் அனந்த்நாக் தொகுதியில் கடந்த மூன்று ஆண்டுகளாக இடைத்தேர்தலை நடத்தவேயில்லை.

793 வாக்காளர்கள் உள்ள கந்த் ஃபதேபுரா வாக்குச்சாவடியில் மூன்று பேர் மட்டுமே வாக்களித்தனர்.

நான்காம் கட்டமாக ஏப்ரல் 29-ம் தேதி குலாமில் வாக்குப்பதிவு நடக்கிறது. கிளர்ச்சியாளர்களின் தாக்கம் அதிகம் உள்ள புல்வாமா சோபியனில் ஐந்தாம் கட்டமாக மே 6-ம் தேதி வாக்குப்பதிவு நடக்க இருக்கிறது.

மத்தியில் ஆட்சியமைத்துள்ள இந்துத்துவ அரசின் கொடுங்கோல் ஆட்சி காஷ்மீர் மக்களை மிகக் கடுமையாக பாதித்துள்ளது. மோடி ஆட்சி தாங்கள் இந்தியர்கள் அல்ல என்பதை காஷ்மீர் மக்களுக்கு ஆழமாக உணர்த்தியிருக்கிறது என்பதைத்தான் அவர்களின் தேர்தல் புறக்கணிப்பு எடுத்துக் காட்டுகிறது.


கட்டுரை, படங்கள்: அமீர் அலி பட்
தமிழாக்கம் : கலைமதி
நன்றி : வயர்