அறிவுத்துறைகளின் மீதான மோடியின் ‘சர்ஜிக்கல் ஸ்டிரைக்’ !

பதவி ஏற்ற ஐந்தாண்டுகளில், முக்கியப் பல்கலைக்கழகங்களான ஜே.என்.யூ, ஹைதராபாத் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் மீதான மோடி அரசின் தாக்குதல்களை எடுத்துரைக்கிறார் குஹா

0

ரேந்திர மோடி அரசின் மிகவும் விருப்பத்துக்குரிய சொல் ‘துல்லியத் தாக்குதல்’ (Surgical Strike).  2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம், பாகிஸ்தான் முகாம்கள் மீது இந்தியா எல்லை தாண்டி நடத்திய தாக்குதலின்போது இந்த சொல் அறிமுகப்படுத்தப்பட்டது. இராணுவம் இந்தச் சொல்லை பயன்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது; பிரதமரும், அவருடைய பரப்புரையாளர்களும் இந்த வார்த்தையைப் பயன்படுத்தினார்கள்.

அதே ஆண்டு நவம்பர் மாதம் பிரதமரின் திடீர் பேரழிவுப் பிரகடனமான 1000 மற்றும் 500 ரூபாய் தாள்களை திரும்பப் பெறும் முடிவின்போது கருப்புப் பணத்தின் மீதான ‘துல்லியத் தாக்குதல்’ என அந்தச் சொல்லை ஆளும் கட்சியின் செய்தி தொடர்பாளர் பயன்படுத்தினார்.

பயங்கரவாதத்தின் மீதான மோடி அரசின் துல்லியத் தாக்குதல்கள் எந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை. பாகிஸ்தானில் இருந்து வரும் கிளர்ச்சியாளர்களின் ஊடுருவலைத் தடுக்க நமது பாதுகாப்புப் படைகள் தினமும் போரிட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள்.  கருப்புப் பணத்திற்கு எதிரான துல்லியத் தாக்குதலும் எதிர்விளைவுகளையே உண்டாக்கியது. பணமதிப்பழிப்பு கருப்புப் பணத்தை ஒழிப்பதற்குப் பதிலாக, பணத்தாளை அடிப்படையாகக் கொண்ட பல சிறு, குறு தொழில்களை ஒழித்துக்கட்டியது. பல லட்சக்கணக்கான விவசாயிகள் விதைகள் வாங்கவோ, உரம் வாங்கவோ பணம் இல்லாமல் தடுமாறி நின்றனர்.

படிக்க :
♦ #SayNoToWar : போரை விரும்புகிறவர்கள் உங்கள் குழந்தைகளை அனுப்பி வையுங்கள் !
♦ மோடி அரசின் சர்ஜிக்கல் ஸ்டிரைக் 2.0 : உண்மை என்ன ?

அதேபோன்றதொரு தாக்குதலை, மே 2014 முதல் அதாவது மோடி அரசு பதவியேற்றது முதல் நமது சிறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆய்வு நிறுவனங்கள் போன்ற அறிவுசார் துறைகளை மீது நடத்தி வருகிறது மோடி அரசு. அந்நிறுவனங்களை வேண்டுமென்றே குறைமதிப்பிட்டு அவற்றின் மீது தொடர்ச்சியாக போர் தொடுத்து வருகிறது. இந்த முயற்சிகள் மிகவும் வெற்றிகரமாகவே முடிந்திருக்கின்றன; இந்த கல்வி நிறுவனங்களுக்கிடையே இருந்த அறமும் நம்பகத்தன்மையும் இழப்புக்கு உள்ளாகியிருக்கின்றன. விளைவாக, தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் இந்த நிறுவனங்கள் பெற்றிருந்த மதிப்பிற்குரிய இடத்தை இழந்து வருகின்றன.

தற்போதைய பிரதமர், ஆய்வாளர்கள் மீதும் ஆய்வு உதவித்தொகை மீதும் எத்தகைய மதிப்பு வைத்திருக்கிறார் என்பதை இந்தத் துறைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர்களின் மூலமாக வெளிப்படுத்துகிறார். இதுவரை நியமிக்கப்பட்ட இரண்டு மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர்களும் கல்விப் புலத்திலோ அல்லது ஆய்வு புலத்திலோ பின்புலம் இல்லாதவர்கள். அவர்கள் சில நேரங்களில் தங்களுடைய கட்டளையை ஆர்.எஸ்.எஸ்-டமிருந்தே பெற்றிருக்கிறார்கள்.  உதாரணத்துக்கு ‘சங்கி’ சிந்தனைக் கூடத்திலிருந்து உருவான, பூஜ்ஜிய ஆய்வுத்தன்மையுள்ளவர்கள் இந்திய வரலாற்றியல் ஆய்வு கவுன்சிலின் தலைவராகவும் இந்திய சமூக அறிவியல் ஆய்வுக் கவுன்சிலின் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மற்ற நேரங்களில், ஆர்.எஸ்.எஸ்.-ன் மாணவர் அமைப்பான ஏபிவிபி-யின் கட்டளைகளை ஏற்று இரண்டு சிறந்த அரசு பல்கலைக்கழகங்களான ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகம் மற்றும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் ஆகியவற்றின் மீது மனிதவள மேம்பாட்டுத்துறை வெளிப்படையான விரோதப் போக்கை கடைப்பிடித்தது. முந்தைய காலங்களில் இந்த கல்வி நிறுவனங்களில் உள்ள மாணவர் அமைப்புகள் ஏபிவிபி-யின் பிரச்சாரத்தை ஏற்றுக்கொள்ளாத நிலையில், திட்டமிட்டு இந்தப் பிரச்சினைகளை உண்டாக்கியது இந்த அமைப்பு.

முந்தைய காலங்களில் இந்தப் பல்கலைக்கழகங்களில், வெளிநாட்டு மார்க்சிய சித்தாந்தங்கள் ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில், அவற்றை சரிசெய்யும்விதமாக தற்போது சுதேசி தேசப்பற்றாளர்களின் சித்தாந்தங்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக சில வலதுசாரி சித்தாந்தவாதிகள் கூறிக்கொள்கிறார்கள். சமூக அறிவியல் மற்றும் மனிதநேயத் துறைகள் மீது மட்டுமே மோடி அரசின் போர் என்பதை இவர்களின் கூற்று சொல்வதாக நம்பினாலும், உண்மையில் அப்படி இல்லை. இது இயற்கை அறிவியலின் மீதும் உளப்பூர்வமாக தொடுக்கப்பட்ட போராகும்.

பழங்கால இந்தியர்களே பிளாஸ்டிக் சர்ஜரியையும் செயற்கைக் கருவூட்டலையும் கண்டறிந்தார்கள் என்று பிரதமரே சொன்னது அறிவியல் மீதான தாக்குதலில் முதன்மையானதாக அமைந்தது. முத்தாய்ப்பாக, “அனைத்து நவீன கண்டுபிடிப்புகளும் பழங்கால அறிவியல் சாதனைகளின் தொடர்ச்சிகளே” என்றவரை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சராக நியமித்தார். அந்த அமைச்சர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சொன்ன கோட்பாடுகள், வேதங்களிலேயே சொல்லப்பட்டிருப்பதாக சொன்னார்.

படிக்க:
♦ ஜே.என்.யூ தேச துரோக வழக்கு : ஏ.பி.வி.பி.யின் திட்டமிட்ட சதி அம்பலம் !
♦ மோடிக்கு சேவகம் செய்யும் ஜே.என்.யூ துணை வேந்தர் !

அறிவியல் மற்றும் தொழிற்நுட்ப அமைச்சரின் இந்தக் கூற்றுகள் தனிப்பட்ட முறையிலோ அல்லது ஆர்.எஸ்.எஸ். சாகாக்களிலோ சொல்லப்பட்டவை அல்ல; இந்திய அறிவியல் மாநாட்டில் சொல்லப்பட்டவை! சமீப ஆண்டுகளில் நடக்கும் இந்த வருடாந்திர நிகழ்வானது, நவீன அறிவியலின் புதிய கண்டுபிடிப்புகள் குறித்து பேசப்படுவதற்கு பதிலாக, அமைச்சரின் சித்தாந்தக் கூட்டாளிகள், பழங்கால இந்துக்கள் விமானத்தை கண்டுபிடித்தார்கள் என்றும் கௌரவர்கள் முதன் முதலில் பிறந்த சோதனைக் குழாய் குழந்தைகள் என்றும் பேசினார்கள்.

துயரமாக இல்லாத வகையில் இவை வேடிக்கையானவையாக இருந்திருக்கும். இந்திய அறிவியல் கழகம், தொலைநோக்காளர் ஜாம்சட்ஜி டாடாவின் உதவியோடு ஒரு நூற்றாண்டுக்கு முன்பாக தோற்றுவிக்கப்பட்டதிலிருந்து அறிவியல் ஆய்வுகள் இந்த நாட்டில் மூடநம்பிக்கை மற்றும் புராணத்தின் வழியாக அல்லாமல், காரணம் மற்றும் பரிசோதனைகளின் அடிப்படையில் வழிகாட்டப்பட்டன. டாடா அடிப்படை ஆய்வியல் நிறுவனம், தேசிய உயிரியல் அறிவியல் மையம் போன்ற கல்வி நிறுவனங்கள் சர்வதேச தகுதிக்குரியவை.

அதேசமயத்தில், ஐஐடி-க்கள் தொழிற்நுட்ப கல்வியின் தரத்தை மேம்படுத்துவதில் முக்கியப் பங்காற்றின. அங்கே படித்த பட்டதாரிகள் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்துக்கு பலவகைகளில் உதவி வருகின்றனர்.  பிரதமரால் உற்சாகமளிக்கப்பட்டு, மத்திய அமைச்சர்களால் ஊக்குவிக்கப்படும் சீர்குலைவு நடவடிக்கைகள் இந்தியாவின் அறிவியல் சிந்தனைக்கு கடுமையான, மீள முடியாத சேதத்தை ஏற்படுத்தியுள்ளன.

அறிவுத்துறை மீது இந்த அரசின் போர் குறித்து விமர்சிப்பவர்கள், தற்போதைய பிரதமருக்கும், இந்தியவின் முதல் பிரதமருக்கும் உள்ள வேறுபாடுகளை சுட்டிக் காட்டினார்கள். விமர்சகர் பிரசன்ஜித் சவுத்ரி, “உலகின் இரண்டாவது பெரிய அளவிலான பயிற்சியளிக்கப்பட்ட அறிவியலாளர்களையும் பொறியியலாளர்களையும் நேரு உருவாக்கினார். ஹோமி பாபா,  விக்ரம் சாராபாய் போன்றவர்கள் நேருவின் அறிவுறுத்தலின் பேரில், இந்திய அறிவியல்தளத்தை உருவாக்கினார்கள்.. அறிவியல் கோட்பாட்டின் மீது ஆழமான பற்றுமிக்க நேருவை எதிர்க்கும் முயற்சியில், மோடி வெகுஜன போலி அறிவியல் பிற்போக்குத்தனத்தை தேர்வு செய்தார்” என டெக்கான் ஹெரால்டு பத்திரிகையில் எழுதினார்.

இந்தியாவின் உயர்தரமான சமூக அறிவியல் ஆய்வை மோடி அரசு ஆபத்துக்கு உள்ளாக்கியிருக்கிறது என்பதை, நான் அதில் கூடுதலாக சேர்க்கிறேன். காவி சிந்தனையாளர்களுக்கு மாறாக, நேருவிய கலைக் கழகத்தில், மார்க்சியம் உள்ளிட்ட பல அறிவார்ந்த நீரோட்டங்கள் இருந்தன. D.R. Gadgil மற்றும் André Béteille போன்றவர்கள் தங்களது பொருளாதாரம் மற்றும் சமூகவியல் துறைகளில் பாபாவாகவும் சாராபாயாகவும் திகழ்ந்தார்கள். இவர்களும் இவர்களைப் போன்றவர்களும் சமத்துவமின்மை, கல்வி, சுகாதாரம், ஊரக வளர்ச்சி, அரசின் கொள்கைகளை ஒரு குறிப்பிட்ட சித்தாந்தத்தை புகுத்தாமல் ஆதாரத்தின் அடிப்படையில் உருவாக்கியவர்கள். காவி ஊடுருவல் காரணமாக இதுவும் ஆபத்துக்குள்ளாகியிருக்கிறது.

அறிவியல் மற்றும் அறிவியல் ஊக்குவிப்பு என வரும்போது மோடி அரசு தன்னை தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல் அரசைக் காட்டிலும் தாழ்வாக உள்ளது. அடல் பிகாரி வாஜ்பாயி அரசில் சில அமைச்சர்கள் கற்றவர்களாகவும் நிபுணத்துவம் கொண்டவர்களாகவும் இருந்தனர். முதல் தே.ஜ.கூ. அரசின் மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சராக இயற்பியலில் ஆய்வுப்பட்டம் பெற்ற எம்.எம்.ஜோஷி இருந்தார்.  அவருடைய அமைச்சரவை சகாக்களான ஜார்ஜ் பெர்னாண்டஸ், யஷ்வந்த் சின்ஹா மற்றும் எல்.கே. அத்வானி ஆகியோர் வரலாற்றையும் அரசு கொள்கைகள் குறித்தும் ஆர்வத்துடன் வாசிப்பவர்களாக இருந்தவர்கள்.  ஜஸ்வந்த் சின்ஹாவும் அருண் சோரியும் படிப்பவர்களாக மட்டுமல்லாது, எழுதுபவர்களாகவும் இருந்தனர்.

படிக்க:
♦ மாரடைப்பு என்றால் என்ன ? உடனடியாக செய்யவேண்டியது என்ன ? | மருத்துவர் BRJ கண்ணன்
♦ அச்சு புத்தகம் – டிஜிட்டல் புத்தகம் : எதை வாசிப்பது நல்லது

இப்போது நேரெதிராக, இந்த அரசில் உள்ள ஒரே ஒரு அமைச்சர், பிரதமர் உள்பட ஒரே ஒருவர்கூட வரலாறு, இலக்கியம் அல்லது அறிவியலில் ஆழ்ந்த ஆர்வம் உள்ளவர்களாக இல்லை. அவர்களில் ஒருவராவது தினமும் செய்தித்தாள்களை படிப்பாரா என நான் யோசிக்கிறேன். சிலர் முகநூல், ட்விட்டர் அல்லது வாட்சப் போன்றவற்றில்கூட இல்லை. பல்கலைக்கழக துணைவேந்தர்களையோ அல்லது ஆய்வு நிறுவனத்தின் இயக்குநர்களையோ நியமிக்கும்போது முதல்தரமான ஆய்வாளர்களை நியமிப்பதற்கு பதிலாக, மூன்றாம் தரமான சிந்தாந்தவாதிகளை நியமிக்கும் போது, இவற்றை நினைத்துக்கொள்வேன்.

25 ஆண்டுகளுக்கு முன்பு கல்விப் புலத்தை விட்டு விலகியதிலிருந்து, மோடி அரசின் வலுவிழந்த மனப்பான்மை என்னை பாதிக்கவில்லை என்றாலும் எனக்குள் துயரத்தை உணர்கிறேன். நான் இந்தியாவிலேயே முழுக் கல்வியையும் பெற்றவன்,   அப்போது அரசு பல்கலைக்கழகங்களின் தன்னாட்சி மதிக்கப்பட்டது, ஊக்குவிக்கப்பட்டது. தற்போது, பகுதி நேர பணியாளராக உள்ள நான், பல ஆய்வியல்  நண்பர்கள், உடன் பணியாற்றுவோர், தனிப்பட்ட முறையில் தொழில்முறையில் துயரத்துக்கு உள்ளாவதைக் காண்கிறேன். தங்களுடைய வாழ்க்கையை அர்ப்பணித்த இந்த கல்வி நிறுவனங்கள் அரசியல் ஆதாயங்களுக்காக தாக்கப்படுவது அவர்களை துயரம் கொள்ளச் செய்கிறது.

மோடி அரசு டெல்லியில் அதிகாரத்துக்கு வந்த அடுத்த ஒரு வருடத்தில் ‘இந்த அரசு அறிவுக்கு எதிரானதாக உள்ளது’ என எழுதினேன். என்னுடைய கருத்தை பொய்ப்பிக்கும் வகையில், மோடி அரசு எந்தவித நடவடிக்கையிலும் இறங்கவில்லை. ஆனால், நான் சொன்னதை பலவிதங்களில் உறுதிப்படுத்தியது.  மோடி அரசு ஆட்சிக்கு வந்த நிமிடத்திலிருந்து அறிவியல் மீதும் அறிவியல் ஊக்குவிப்பு மீதும் தொடர்ச்சியான துல்லிய தாக்குதல்களை நடத்தியது. பயங்கரவாதம் மற்றும் கருப்புப் பணத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக்காட்டிலும் இது மிகுந்த சேதாரத்தை விளைவிக்கக்கூடியது.

அறிவை உற்பத்தி செய்யும், கண்டுபிடிப்புகளை உருவாக்கும் சிறந்த கல்வி நிறுவனங்களை அமைப்பாக குறைமதிப்பிற்கு ஆட்படுத்துவதன் மூலம் மோடி அரசு நாட்டின் அறிவியல் மற்றும் பொருளாதார எதிர்காலத்தை புதைத்துவிட்டது. தற்போது வாழும் இந்தியர்களும் பிறக்காத இந்தியர்களும் இந்த மிருகத்தனமான, சகிப்புத்தன்மையற்ற அறிவின் மீதான போரின் விளைவுகளை சந்தித்தே ஆகவேண்டும்.

கட்டுரையாளர்: ராமச்சந்திர குஹா
தமிழாக்கம் : கலைமதி
நன்றி: தி வயர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க