ச்சம் தரும் அளவுக்கு தமிழக இளைஞர்களிடையே வளர்ந்து நிற்கிறது சாதி வெறி. குறிப்பாக பதின்ம வயது இளைஞர்கள் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்களில் தெறிக்கவிடும் ரத்தமும், வீசியெறியும் அரிவாள்களும் நம்மை பயம்கொள்ள வைக்கின்றன.

பதினைந்து, இருபது ஆண்டுகளுக்கு முந்தைய கிராமத்தின் சாதி அடர்த்தி, இப்போது பன்மடங்கு கெட்டிப்பட்டிருக்கிறது. குறிப்பாக இளைஞர்களிடையே சாதியை வெளிப்படுத்திக்கொள்வதில் இருந்த வெட்கமும் கூச்சமும் விடைபெற்று, அது ஒரு பெருமிதம் தரும் நடவடிக்கையாக உருமாறிக் கொண்டிருக்கிறது. முளைக்காத மீசையை தடவி விட்டுக்கொண்டு இல்லாத எதிரிக்கு சவால் விடுகிறார்கள். தஞ்சாவூர், திருவாரூர், பெரம்பலூர், திருச்சி, நாகப்பட்டினம் பகுதிகளில் இதன் நேரடி சாட்சிகளைக் காண முடியும்.

டிக்-டாக் செயலிகளில் சாதிவெறி பேசும் இளைஞர்கள்.

அஜித் பிறந்த நாளாக இருந்தாலும், அக்கா மகள் பூப்பு நீராட்டு விழாவாக இருந்தாலும் தத்தமது சாதிப் பெயரோடு முச்சந்தியில் ப்ளெக்ஸ் வைக்கிறார்கள். ஒரு சாதிக்காரன் இப்படி ஃப்ளெக்ஸ் வைத்தால், ‘அப்ப நாம மட்டும் என்ன தக்காளி தொக்கா?’ என்று இன்னொரு சாதிக்கார சிறுவர்களும் ப்ளெக்ஸ் வைக்கிறார்கள். நடு ரோட்டில் போஸ்டர் அடித்து தங்கள் பிள்ளைகள் சாதியை அறிவித்துக்கொள்வது குறித்து இந்த சிறுவர்கள் / இளைஞர்களின் பெற்றோர்களுக்கு எந்த தடையும் இருப்பதில்லை. எப்படி இருக்கும்? அவர்களுக்கு பணம் கொடுப்பதே இந்தப் பெற்றோர்கள்தானே? மேலும், பல கிராமங்களில் சாதி உணர்வுடன் ஒன்றிணைவதை ஒரு சமூகப் பங்களிப்பு என்ற வகையில் வியாக்கியானப்படுத்துகின்றனர். ‘எல்லாரும் சொந்த வேலையைப் பார்த்துக்கிட்டு போனா ஊரை பார்க்கிறது யார்?’ என்ற கேள்வியில் வெளிப்படும் ‘ஊர்’ என்பது எல்லோரையும் உள்ளடக்கியது அல்ல.

கிராமத்து இளைஞர்கள், கல்வியின் வழியே வேலைவாய்ப்பைப் பெற்று வெளியூர்களிலும், வெளிநாடுகளிலும் பணிபுரிகின்றனர். இவர்கள் வாட்ஸ் அப் குழுக்களின் வழியே ஒன்றிணைந்து தத்தமது கிராமங்களுக்கு நற்பணிகள் செய்ய முயற்சிக்கின்றனர். அந்த கிராமத்து பள்ளிக்கூடத்தில் நல்ல மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு பரிசளிப்பது, சிலருக்கு கல்லூரி கல்விக் கட்டணம் செலுத்துவது என்பதாக இது இருக்கிறது. இதற்காக கைக்காசை செலவழிக்கின்றனர் என்றாலும், பெரும்பாலும் இந்த உதவியின் இலக்கு அவர்களின் சொந்த சாதியினர் மட்டுமே. உண்மையிலேயே அதிகபட்ச உதவி தேவைப்படக்கூடிய ஒடுக்கப்பட்ட சாதி மாணவர்கள் இவர்களின் பயனாளிகள் பட்டியலில் இருப்பதில்லை. அப்படியே ஓரிரு இடங்களில் வழங்கினாலும் கூட, அதை தங்களின் பெருந்தன்மைப் பட்டியலில் மறக்காமல் இணைத்துக்கொள்கின்றனர். இத்தகையோர் செய்யக்கூடிய நற்பணி என ஏதேனும் இருக்குமானால், அது சாதிவெறியின் திரட்சியைத் தடுப்பதுதான். அது எங்கும் நிகழ்வதில்லை.

படிக்க:
♦ சுந்தரபாண்டியன்: உசிலம்பட்டி வழக்கா, தேவர் சாதி அழுக்கா?
♦ தமிழகம்: ஆதிக்க சாதிவெறித்தனத்தின் புதிய பரிமாணங்கள்!

மதுரை, இராமநாதபுரம் பகுதி பள்ளிக்கூடங்களில் சில ஆண்டுகளுக்கு முன்பு, சில குறிப்பிட்ட சாதிகளை சேர்ந்த மாணவர்கள், ஆளுக்கு ஒரு வண்ணத்தில் கயிறு கட்டிக்கொள்ளத் தொடங்கினார்கள். கயிறைப் பார்த்தே சாதியைக் கண்டுபிடித்துவிடும் அதிநவீனத் தொழில்நுட்பம். இந்த சாதிக் கயிறு இப்போது தஞ்சாவூர், நாகை மாவட்டங்கள் வரையிலும் வந்துவிட்டது. 15 ஆண்டுகளுக்கு முன்புவரை, பசும்பொன் முத்துராமலிங்கத்தின் புகைப்படங்களைக் கூட திருச்சி மற்றும் டெல்டா மாவட்டங்களில் காண முடியாது. இந்தப் பெயரே அங்குள்ளவர்களுக்கு பரிச்சயம் இல்லை. ஆனால் இன்று ஊருக்கு ஊர், வீதிக்கு வீதி தென்படுகிறது. தங்களை மாபெரும் ஆண்ட சாதியின் அங்கத்தினர்களாக நிறுவிக்கொள்ள துடிக்கின்றனர்.

எப்படி நிறுவுவது? அதற்குத்தான் இந்து மதம் ஒரு வாய்ப்பை வழங்கியிருக்கிறதே… உனக்கும் கீழுள்ள சாதியை தூக்கிப்போட்டு மிதி. அப்படி ஒடுக்குவதை பரம்பரை அனுபவ பாத்தியதை வழியிலான மரபுரிமையாக பெற்றுள்ள இவர்கள், அதை ஓர் அனிச்சை செயலாகவே மேற்கொள்கின்றனர். ஓர் ஊரில் இருக்கும் பத்து சாதிகளில் தன் சாதி மட்டும் எப்படி மேலானது என்று நிறுவுவதற்கு, போலியான ஆண்ட சாதி கட்டுக்கதைகளைத் தவிர இவர்களுக்கு எதுவுமில்லை. இதனால், ஒடுக்கப்பட்ட மக்களை யார் அதிகம் துன்புறுத்துவது என்பதன் வழியே யார் பெரிய சாதி என்று காட்டிக்கொள்கின்றனர்.

இவர்களுக்கு ஓர் அண்மைக்கால வெற்றிகரமான முன்மாதிரியாக இருப்பவர் மருத்துவர் ராமதாஸ். நாய்க்கன்கொட்டாய் வன்முறையை முன்வைத்து பா.ம.க. சமூக ஊடகங்களில் விமர்சிக்கப்பட்டாலும் கூட அது சமூக யதார்த்தத்தில் எதிர்மறை முன்னுதாரணத்தை உருவாக்கியிருக்கிறது. ’வன்னியரை பாரு… எப்படி கெத்தா இருக்கான், நம்மளும் அதேபோல இருக்கணும்’ என்று இதை ஒரு peer pressure-ஆக, எதிர் நிலையில் இருந்து உள்வாங்கிக்கொண்டு தலித் ஒடுக்குமுறையில் தீவிரம் செலுத்துகின்றனர். பொன்னமராவதி ஆடியோவும், பொன்பரப்பி தாக்குதலும் ஊடக கவனம் பெற்றதால் வெளியில் தெரிகின்றன. ஆனால், இத்தகைய எண்ணற்ற ஒடுக்குமுறைத் தாக்குதல்கள் மிக அதிகமாக தமிழ்நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. மேற்பரப்பில் வெளிப்படுவதை விட உள்ளே நிலவும் கொந்தளிப்பு அதிகம்.

படிக்க:
தொழிலாளர் பிரச்சினை : சங்கமாகத் திரண்டால் மட்டும் போதுமா ?
தமிழகத்தைக் குலுக்கிய மே தினம் ! | செய்தி – படங்கள் !!

கடந்த 20 ஆண்டுகளாக விவசாயம் என்பது முற்றிலும் லாபமற்ற, நிச்சயமற்ற தொழிலாக மாறிவிட்டது. அதை நம்பியிருந்த தொழிலாளர்கள் நகர்ப்புறம் சார்ந்த வெவ்வேறு உதிரித் தொழில்களுக்கு இடம்பெயர்ந்துவிட்டனர். கூடுதலாக, படிப்பின் வழியே பெற்றுள்ள கணிசமான வேலைவாய்ப்புகள் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையில் குறிப்பிடத்தகுந்த, கண்களால் காணத்தக்க பொருளாதார மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறது. இதே சமகாலத்தில், மேல் உதட்டில் முளைத்த நான்கு மயிரைத் தடவிக்கொண்டு ஊர்ச் சாவடியில் சாதிப் பெருமை பேசிக்கொண்டிருந்தவர்களின் பெருமிதத்துக்கு அடிக் கட்டுமானமாக இருந்த விவசாயம் கண்ணெதிரே சரிந்தது. மிகக் குறைந்த நிலம் இருப்பினும் அல்லது நிலமே இல்லை எனினும் அவர்களிடம் இழப்பதற்கு சாதிப் பெருமிதம் இருந்தது. கோவணத்துக்கு வழியின்றி அம்மணமாக நின்றாலும் சாதியை எப்படி விட முடியும்?

தன்னை சார்ந்திருக்க வேண்டிய நிலையில் இருந்து ஒரு ஒடுக்கப்பட்டவன் விலகிச் செல்கிறான் என்ற யதார்த்தம் இவர்களின் மனதைக் குடைகிறது. கல்வி, வேலைவாய்ப்பின் வழியே ஓர் ஒடுக்கப்பட்டவன் பெரும் வசதிகள் இவர்களின் கண்களை உறுத்துகிறது; வயிறு எரியச் செய்கிறது. அதனால்தான் பெரும்பான்மையான தாக்குதல்களில், தலித்களின் வீடுகளும், வண்டி வாகனங்களும், பொருட்களும் சேதப்படுத்தப்படுகின்றன. அதன் வழியே இவர்கள் குரூரமான திருப்தி அடைகின்றனர். ஏதேனும் ஒரு கிராமத்து தலித் தெருவின் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அதன் ripple effect அந்த வட்டாரம் முழுவதும் இரு தரப்பிலும் எதிரொலிக்கிறது. அதாவது ஒடுக்கும் தரப்பு அதில் இருந்து உற்சாகம் பெறுகிறது. ஒடுக்கப்படும் தரப்பு, மேலும் அச்சம் கொண்டு ஒடுங்கிப்போகிறது.

படிக்க:
♦ ஷேக்கினா : கத்தோலிக்க திருச்சபை லீலைகளை மறைக்கும் திரைச்சீலை !
♦ பசும்பொன் தேவரைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?

இந்தப் பின்னணியில் ’தேவராட்டம்’ போன்ற திரைப்படங்கள் மிக பாரதூரமான பாதிப்பை சமூக தளத்தில் ஏற்படுத்துகின்றன. தன் முன்னிருக்கும் சமூக- பொருளாதார சிக்கலுக்கான காரணத்தை கண்டறிந்து தீர்க்க வழி தெரியாத இளைஞர்கள், சாதியிடம் சரணடைகின்றனர். அவர்களின் கைகளில் இத்தகைய திரைப்படங்கள் ஒரு அரிவாளை போல கொடுக்கப்படுகிறது. பேசலாமா, கூடாதா என்ற தயக்கத்தில் இருப்பவனை இது பேச வைக்கிறது. திட்டு, திட்டாக இருக்கும் சாதி உணர்ச்சியை திரட்டித் தருகிறது. அவன் இந்தத் திரைப்படத்தை வைத்துக்கொண்டு இன்னும் பத்து பேரை வம்பிழுப்பான். இன்னும் பத்து பேருக்கு சவால் விட்டு டிக்டாக் வீடியோ போடுவான். எந்த ஊரிலாவது நாலு பேர் வெட்டிக்கொண்டு சாவார்கள். இயக்குனருக்கு அதைப்பற்றி என்ன கவலை? அவர் மயிராட்டம், மட்டையாட்டம் என்று அடுத்த ஆட்டத்தை எடுக்க கிளம்பிவிடுவார்.

இதுபோன்ற அருவருப்பான சாதிவெறி தலைப்புகளுக்கு சென்ஸார் போர்டு எப்படி அந்த காலத்தில் இருந்து இப்போது வரை அனுமதி தருகிறது? இதேபோல ஒவ்வொரு சாதியின் பெயரோடும் திரைப்படங்கள் உருவாகி வந்தால், அது உருவாக்கும் பாதிப்பு இன்னும் ஒரு நூற்றாண்டுக்கேனும் தொடரக்கூடும். ஒரு தலித் குடியிருப்பை அடித்து நொறுக்கி தீ வைத்து எரித்தால் அதன் பொருள் என்ன? அவர்கள் இரு தலைமுறைகளாக உழைத்து சேர்த்த செல்வம் கரிக்கட்டையாகிவிட்டது என்று பொருள். தமிழில் பெயர் வைத்தால் வரிவிலக்கு இருந்ததைப் போல, சாதிப் பெயரோடு தலைப்பிட்டால் அப்படத்துக்கு தடை விதிக்கப்பட வேண்டும்.

நன்றி :
முகநூலில் பாரதி தம்பி