‘உரைகல்’ என்ற இந்த நூலில் பேராசிரியர் தொ.ப. அவர்கள் வெவ்வேறு தருணங்களில் எழுதிய கட்டுரைகள், மதிப்பீடுகள், அணிந்துரைகள், பேட்டிகள், உரைகள் ஆகியவை தொகுக்கப்பட்டுள்ளன. அழகான நடையில் சிறியசிறிய சொற்றொடர்களில் கடினமான கருத்துக்களைப் புரிந்துகொள்ளும்படி விளக்குவது பேராசிரியரின் வழக்கம். இந்த நூலும் அவ்வாறே உள்ளது.

பேராசிரியர் தொ.ப. அவர்களுடன் உரையாடும்போது வரலாற்றுச் செய்திகள், தொல்லியல் கண்டுபிடிப்புகள், நாட்டார் வழக்காற்றியல் தரவுகள், பழந்தமிழ் இலக்கிய மேற்கோள்கள், தற்கால இலக்கியச் சிந்தனைகள், மொழியியல் கருத்துக்கள், தாம் களஆய்வு மேற்கொண்ட அனுபவங்கள் போன்றவற்றை அவர் இயல்பாகச் சொல்வதைப் பல காலகட்டங்களில் நான் கண்டிருக்கிறேன். அவருடைய எழுத்துக்களும் அவ்வாறே நம்மோடு உரையாடுவதுபோலவே அமைந்துள்ளன. குழப்பம் ஏதும் விளைவிக்காது சொல்வதைப் பிறருக்கு விளங்கும்படிச் சொல்ல வேண்டும் என்ற அக்கறையோடு கூறப்படுபவை அவை. தம்முடைய மேதாவிலாசத்தைப் பிறருக்குப் பறைசாற்ற வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு எப்போதும் இருந்ததில்லை. இந்த நூலைப் படிப்பாரும் அதனை நன்கு உணரலாம்.

… தொ.ப. அவர்களுக்கு நாட்டார் வழக்காற்றியல் புலம் மீது தனித்த அக்கறையும் மரியாதையும் உண்டு. அவருடைய நூல்களில் மக்களிடையே வழக்கிலுள்ள சொற்கள், உறவு முறைகள், பழக்கவழக்கங்கள், நாட்டார் சமய நடவடிக்கைகள், நாட்டார் தெய்வங்கள் ஆகியவை குறித்த கட்டுரைகள் பல. இந்த நூலில் ‘சடங்கு’ குறித்து ஒரு கட்டுரை இடம்பெற்றுள்ளது. பட்டம் கட்டுதல், புனித எண்கள் குறித்த சடங்குச் சொல்லாடல்கள், சடங்கின்போது ஒரு சொல்லைத் திரும்பத் திரும்பச் சொல்லுதல், சூலுற்ற பெண்ணுக்கு மடிநிரப்பும் சடங்கு செய்தல், காதணி விழாவில் காதரிசி வழங்குதல், பூப்புச் சடங்கில் தீட்டுக் கழிப்பு போன்றவை பற்றிய குறிப்புக்கள் இக்கட்டுரையில் இடம் பெற்றுள்ளன. திராவிடச் சாதிகளில் இன்னும் வழக்கிலுள்ள சடங்கு நடவடிக்கைகளை ஆய்வு செய்வோருக்கு இக்கட்டுரை தரும் தகவல்கள் முக்கியமானவை. ‘பேரக் குழந்தைகள் குறித்த கட்டுரையில் பேரன், பேத்தி என்ற சொற்களின் பொருண்மைகள், நம்பிக்கை, சடங்குகள், கேலி செய்யும் உரிமை போன்றவற்றைச் சுவையாகச் சொல்வதோடு நிகழ்காலத்தில் குழந்தைகள் தாத்தா பாட்டியிடமிருந்து அந்நியப்பட்டுவிட்டதையும் சுட்டிக் காட்டுகிறார் பேராசிரியர். (நூலின் அணிந்துரையிலிருந்து)

மரபு – புதுமை என்கிற இரண்டு சொற்கள் அடிக்கடிப் பேசப்படுகிற சொற்கள். இன்றைக்கு நாம் எங்கே நின்று கொண்டிருக்கிறோம்? நம்முடைய நாடு எங்கே நின்று கொண்டிருக்கிறது? இந்த நாட்டினுடைய பெருவாரியான மக்களின் ஆசைகள் – கோபங்கள் – ஏக்கங்கள் – தாகங்கள் நம்பிக்கைகள் – கனவுகள் இவைகளெல்லாம் என்னென்ன? என்பதெல்லாம் பற்றி உங்களுக்குத் திட்டவட்டமான கருத்துக்கள் இருக்குமென்று நினைக்கிறேன்.

பன்னாட்டு மூலதனமுடைய பெரிய நிறுவனங்கள் இந்தியாவுக்குள் இறங்கி இருக்கின்றன. எந்த தேசத்திலே உப்பெடுப்பதற்காக காந்தியடிகள் பெரிய போராட்டத்தை நடத்தினாரோ அந்த தேசத்தில் அதே மாநிலமாகிய குஜராத்தில் உப்பெடுத்து விற்பதற்காக கார்கில் இண்டியா என்ற வெள்ளைக்காரக் கம்பெனியை கூட்டி வந்தார்கள். உப்பெடுப்பதற்கு 50,000 ஏக்கர் நிலத்தைக் கொடுத்தார்கள். உப்புச்சத்தியாக்கிரகம் ஒரு வரலாற்றுக் காரியமாகப் பேசப்படுகிற தேசத்தில், உப்பெடுக்க மறுபடியும் அவனைக் கூட்டிக்கொண்டு வந்தார்கள். நாட்டின் நிலைமையைச் சொல்ல இன்றைக்கு இது ஒன்று போதும். இன்னொன்றையும் சொல்ல வேண்டும். அதே குஜராத் மாநிலத்தில் 50,000 மக்கள் திரண்டு எழுந்து நிலத்தைக் கொடுக்கக் கூடாது என்று போராடினார்கள். அரசாங்கம் எல்லாவிதப் பாதுகாப்பும் கொடுத்தபிறகும் கூட கார்கில் இண்டியா நிறுவனம் உப்பெடுக்கிற தொழிற்சாலையை நம்மால் நடத்த முடியாது என்று விட்டுவிட்டுப் போய்விட்டது. அதுவும் இன்றைய இந்தியாதான்.

சரி. மரபு என்கிற செய்தியைப் பற்றிப் பேசுவோம். மரபு என்று சொன்னவுடன் ராஜா, ராணி, கோட்டைகள் வேகமாக வந்து கொண்டிருக்கிற குதிரைகள் என்று எல்லோரும் ஏதோ ஒரு பழைய காலத்தை நினைக்கக் கூடாது. மரபு என்பது வழிவழியாக வருகிற ஒரு வழக்கம். ஆனால் அது வெறும் வழக்கம் அல்ல. அந்த வழக்கம் உருவாக பல ஆண்டுகாலம் ஆகி இருக்கின்றது. மரபுகள் உருவாக பல நூற்றாண்டு காலம் ஆகி இருக்கின்றது. மரபுகள் பேணப்பட வேண்டியன என்கிற கருத்து நம்முடைய அறிஞர்களால் 2000 ஆண்டுகளுக்கு முன்பே வைக்கப்பட்டிருக்கிறது.  (நூலிலிருந்து பக். 86 – 87)

சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி என்று சொல்வார்கள். சயின்ஸ் என்றால் என்ன? டெக்னாலஜி என்றால் என்ன? விஞ்ஞானத் தொழில் நுட்பம் அவ்வளவுதான். ஆர்க்கிமிடிஸ் மிதத்தல் விதியை கண்டுபிடிக்கும் முன்பே மனிதன் படகைக் கண்டுபிடித்துவிட்டான். ரோமானியக் கலங்கள் பூம்பூகார் துறைமுகத்தில் வந்து நின்றாயிற்று. அது டெக்னாலஜி. மிதத்தல் விதியைக் கண்டுபிடித்தது சயின்ஸ். பாரம்பரியமான அறிவுத் தொகுதி முழுக்க தொழில்நுட்ப ரீதியாக அமைந்தது. அதனால் காலிலே புண்ணானதும் மருந்தை அரைத்துக் கட்டினால் அம்மருந்து பயனளிக்காமல் போவதில்லை. பக்க விளைவுகளையும் உண்டாக்காது. ஏனென்றால் அது பல்லாயிரக்கணக்கான முறை சோதனை செய்யப்பட்டது.

ஆனால் விஞ்ஞானக் கோட்பாடுகள் அடுத்த ஐந்தாண்டில் மற்றொரு விஞ்ஞானியால் நிராகரிக்கப்படுகிறது. கடந்த நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்த விஞ்ஞானத்தை நம் தலையில் கட்டினான். என்ன நடந்தது? ஏன் எதற்கு என கேள்வியில்லாமல் பாரம்பரிய மரபுகள் எல்லாவற்றையும் நிராகரித்தோம். பண்பாட்டின் சல்லிவேர்கள் அறுந்து போயின. அறுந்து போகப் போக வேரிலே சிக்கல் ஏற்பட்டது. வேரில் புழு தாக்கினால் அது கொழுந்தில் தெரியும். வேரிலே வெக்கை கட்டியதால் மேலேயிருக்கும் முடி வாடுகிறது. நம்முடையே குழந்தைகளிடத்திலே இளைஞர்களிடத்திலே இளம் பெண்களிடத்திலே மாறுதல் ஏற்படுகிறது. பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை வெவ்வேறு பிராண்ட் சோப்பை மாற்றச் சொல்கிறார்கள். வெவ்வேறு பிராண்ட் என்றாலும் கூட்டிக் கழித்துப் பார்த்தால் இந்துஸ்தான் லீவர், கோத்ரேஜ் அண்ட் பாயிஸ் என எல்லாம் ஒரே இடத்திலிருந்து வரும். (நூலிலிருந்து பக்.91-92)

சீர்திருத்தம் என்பதே மரபை மீறிய புதுமைதான். ஊறிப்போன விசயத்தை முதலில் உடைத்தது சித்தர்களின் ககலகமரபும் ராமனுஜர் மரபும் ராமானுஜர் மரபு மென்மையானது. ஆனால் ஆழமான வேர்களைக் கொண்டது. இவர்கள் இரண்டு பேரும் பெற்ற வெற்றி சிறியது. ஆனால் வரலாற்றில் அவற்றின் பாதிப்பு இருந்தது. மறு நூற்றாண்டிலே நம் மரபிலே ஒரு விபத்து நடந்தது. மலிக்காபூர் வடக்கே இருந்து படையோடு வந்து விட்டான். சிறிய குடிசையில் தீவிபத்து என்றால் தெருவின் மனநிலையே மாறிவிடும். யார் வீட்டிற்குள்ளும் யாரும் புகுந்து தண்ணீர் எடுப்பர். அதுபோல மலிக்காபூர் வந்ததும் சித்தர்களின் கலக மரபு விரிவடையாமல் நின்றுவிட்டது. அந்த நெருப்பின் மீது இந்த நெருப்பு தண்ணீராக வந்து விழுந்தது.

படிக்க:
செயற்கை நுண்ணறிவு : அறிவியல் உலகில் அறம் சார்ந்த கேள்விகள் !
நீட் கொடுமைகள் 2019 : இன்னும் எவற்றையெல்லாம் சகித்துக் கொள்ளப் போகிறோம் ?

திட்டமிட்ட தீர்க்கமான வெற்றியினை மரபுகளை நிராகரிப்பதில் பெற்றவர் தந்தை பெரியார் ஒருவர்தான். நிராகரிக்கப்பட வேண்டிய மரபுகளை நிராகரிப்பதில் பெரிய வெற்றியை பெரியார்தான் பெற்றார். பிரசன்ஸ் ஆப் திங்ஸ் என்பது போல ஆப்சன்ஸ் ஆப் திங்ஸ் என்பதையும் பார்க்க வேண்டும். உண்மையைப் போல இன்மையும் ஆய்வுக்குரிய விசயம். சிறுபான்மை மக்களுக்கு பெரியாரின் அருமை பெரியாரின் இறப்புக்குப் பின் தான் தெரிந்தது. பெரியார் இருந்தபோது பெரியாரின் பணியின் வீச்சினை உணரவில்லை. பெரியார் இறந்த பிறகுதான் தமிழ்நாட்டில் சிறுபான்மையினருக்கு ஏற்பட்ட உணர்வு நெருக்கடிகள் இவ்வளவு காலம் நம்மைக் காப்பாற்றியது, அரசியல் சட்டம் அல்ல. பெரியாரும் அவரது சிந்தனைகளும்தான் என்பதை உணர்ந்தார்கள். சித்தர்களில் சிலர்தான் கடவுளை நிராகரித்தார்கள். ராமனுஜர் கடவுளை நிராகரிக்கவில்லை. பெரியார் ஒருவர்தான் விஞ்ஞானப்பூர்வமாக துணிச்சலாக கடவுளை நிராகரித்தார். (நூலிலிருந்து பக். 94 – 95)

நூல்:உரைகல்
ஆசிரியர்: தொ.பரமசிவன்

வெளியீடு: கலப்பை பதிப்பகம்,
9/10, முதல் தளம், இரண்டாம் தெரு,
திருநகர், வடபழனி, சென்னை – 600 026.
மின்னஞ்சல் : kalappai.in@gmail.com

பக்கங்கள்: 144
விலை: ரூ 130.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

இணையத்தில் வாங்க: udumalai| puthinambooks

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று

கீழைக்காற்று விற்பனையகத்தின் புதிய முகவரி :
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு :

வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி : 99623 90277

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க