சந்திரமோகன் | சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் | நாடகம் | பாகம் – 13


காட்சி : 19

இடம் : விருந்து நந்தவனம்
உறுப்பினர்கள் : சாந்தாஜி, இந்துமதி, மோகன், பாலாஜி, பகதூர்.

(இந்துமதி சோர்ந்து நிற்க, சாந்தாஜி வந்து)

சாந்தாஜி : இப்படி வைத்துக் கொண்டிராதே முகத்தை என் பேச்சைக் கேளம்மா, உன் நன்மைக்குத்தான் இந்த ஏற்பாடு.

இந்துமதி : என் நன்மை? தேள் கொட்டுவது தேக ஆரோக்யத்துக்கா அப்பா? எதற்காகப்பா என்னை இப்படி வாட்டுகிறீர்கள்?

சாந்தாஜி : பைத்தியக்காரப் பெண்ணே ! நானும் கிளிப் பிள்ளைக்குச் சொல்லுவது போல் சொல்லிவிட்டேன். அவன் கேட்கவில்லை .

இந்துமதி : அதற்காக?

சாந்தாஜி : அதற்காகத்தான் இந்த ஏற்பாடு. பகதூர் வருவான்; அவனிடம் சிரித்துப் பேசு. அவன் உன்னைக் கல்யாணம் செய்துக் கொள்ள வேண்டும் என்று கேட்பான்.

இந்துமதி : ஆஹா! அதற்கென்ன சம்மதிக்க வேண்டும்? அதுதானேயப்பா உமது கட்டளை?

சாந்தாஜி : ஏனம்மா இப்படிக் கோபித்துக் கொள்கிறாய்? பகதூர் . துஷ்டனல்ல. கெளரவமான குடும்பம். அடக்கமானவன். கொஞ்சம் அசடு. அவ்வளவுதான். மேலும் …

இந்துமதி : என்னமோ அப்பா! எனக்கு இந்தப் பேச்சே வேதனையாக இருக்கிறது.

சாந்தாஜி : என்ன , மகா வேதனை? நான் என்ன , உன்னை பகதூரைக் கல்யாணம் செய்து கொள் என்றா கூறுகிறேன்? பாவனைக்கு ஒப்புக்கு ஒரு வார்த்தை அப்படிச் சொல். பிறகு பாரேன் அந்த முரட்டு மோகன் அலறி அடித்துக் கொண்டு என்னிடம் வருவான். வாளைத் தொடுவதில்லை என்று சத்தியம் செய்து தருவான். நான் கொஞ்ச நேரம் பிகு செய்வது போல் செய்துவிட்டு, பிறகு சம்மதிப்பேன். பயல் பெட்டிப் பாம்பாகி விடுவான். இந்தத் தந்திரத்தால்தான் மோகனை நம் வழிக்குக் கொண்டு வர முடியும்?

இந்துமதி : தந்திரம் கூட எனக்குக் கசப்பாகத்தான் இருக்கிறது. நான் ஒப்புக்குக் கூட எப்படி பகதூரைக் கல்யாணம் செய்துக் கொள்வதாக கூறுவேன்?

சாந்தாஜி : கூறித்தான் ஆக வேண்டும். உனக்குத் தெரியாது. இந்தக் காதல் இருக்கிறதே அது ஒரு மாதிரியான வெறி. வேறு ஒருவன் அந்தக் காதலை தட்டிப் பறித்துக் கொள்வான் என்று தெரிந்தால் போதும். காதலால் தாக்குண்டவன் காலடியில் விழுந்தாவது காரியத்தைச் சாதித்துக் கொள்ள முயல்வான். இது, பாலாஜி சொன்னது.

இந்துமதி : பாலாஜி சொன்னது … பாழாய்ப்போன பாலாஜி. நல்ல யோசனை சொன்னான் உமக்கு சரி. கொஞ்ச நேரம் நெருப்பிலே நிற்கிறேன். வேறு வழியில்லை…

சாந்தாஜி : அப்படிச் சொல். நீ எப்போதும் நல்ல பெண். அதோ யாரோ வருகிறார்கள். நீ போ! உடைகளை அணிந்து கொண்டு வா.

(பாலாஜியும் பகதூரும் வருகின்றனர்)

பாலாஜி : நமஸ்காரம் சாந்தாஜி! நமஸ்காரம்.

சாந்தாஜி : நமஸ்காரம்.

பாலாஜி : இவர்தான் நான் சொன்ன பகதூர்

(பகதூரை அங்குள்ள ஆசனத்தில் அமரச் செய்துவிட்டு )

நான் தங்கள் பூஜை அறையைப் பார்க்க வேண்டும் சாந்தாஜி.

சாந்தாஜி : ஆஹா அதற்கென்ன? வா, உள்ளே காட்டுகிறேன்.

(பாலாஜியும், சாந்தாஜியும் போக பகதூர் பாடத்தை ஆரம்பிக்கிறான்.)

பகதூர் : மயிலே! குயிலே மானே! தேனே!  மதிமுகவதி கலர்முகவதி…

இந்துமதி : இது என்ன அஷ்டோத்திரமா? சகஸ்ரநாமமா?

பகதூர் : இல்லை …. வந்து …

இந்துமதி : என்ன இல்லை. பாலாஜி கற்றுக் கொடுத்த பஜனையோ? ஏன் மறைக்கிறீர்? எனக்கும் இஷ்டம்தான் கூறும்.

பகதூர் : இந்து!

இந்துமதி : ஏன்?

பகதூர் : ஒன்றுமில்லை .

இந்துமதி : அவர்கள் போய்விட்டார்கள் என்று பயமா? பயப்படாதீர்கள். நான் பகலிலே இப்படியே தானிருப்பேன். பாதி ராத்திரியிலேதான் …

பகதூர் : பாதி ராத்திரியிலே என்ன இந்து அது?

இந்துமதி : ஏன் உங்களுக்குத் தெரியாதா? பாலாஜி சொல்லவில்லையா?

பகதூர் : என்ன இந்த விஷயம் எனக்கு ஒன்றும் தெரியாதே

இந்துமதி : தெரியாதா? விளையாடுகிறீர். தெரியாமலா இருக்கும். தெரிந்துதான் இருக்கும். பாலாஜி சொல்லி இருப்பாரே.

பகதூர் : அந்தப் பாழாய்ப்போன பாலாஜி ஒன்றுமே சொல்லவில்லையே. பாதி ராத்திரியிலே என்ன நடக்கும்? சொல்லேன்..

இந்துமதி : சொல்ல முடியாது. சொன்னால் நீங்களும் என்னைக் கல்யாணம் செய்து கொள்ள முடியாது என்று சொல்லி விடுவீர்கள்.

பகதூர் : எனக்கொன்றும் விளங்கவில்லையே!

இந்துமதி : நான் அழகாக இருக்கிறேனா, இல்லையா?

பகதூர் : எது போல இருக்கிறாய்

இந்துமதி : இருக்கிறேனல்லவா? நடுஜாமம் மணி அடித்ததும் …

பகதூர் : அடித்ததும்

இந்துமதி : ஊகூம்.. நான் சொல்ல மாட்டேன்.

பகதூர் : நான் சாந்தாஜியைக் கூப்பிடுகிறேன். எனக்கு இங்கிருக்கப் பிடிக்கவில்லை.

இந்துமதி : ஏன் வந்தீர்கள்?

படிக்க:
தேர்தல் மாற்றங்கள் தொழிலாளர்களின் நிலையை மாற்றிவிடுமா | சே. வாஞ்சிநாதன்
சென்னை மெட்ரோ : பணிப்பாதுகாப்பு இல்லை ! பயணம் மட்டும் பாதுகாப்பாக இருக்குமா ?

பகதூர் : அதுவா இந்து? நான் உன்னைக் காதலிக்கிறேன்.

இந்துமதி : காதலியுங்களேன். அதனால் என்ன?

பகதூர் : உன்னுடைய அழககைக் கண்டு…

இந்துமதி : மயங்கிவிட்டிருப்பீர்கள்.

பகதூர் : இல்லை ! அழகைக் கண்டு, அன்பு கொண்டு, உன்னைத் தவிர வேறொரு மங்கையைக் கனவிலும் கருதுவதில்லை என்று தீர்மானித்து விட்டேன். முக்கனியே! சக்கரையே! தேனே பாலே! உன்னை நான் என் உயிர் போலக் காதலிக்கிறேன்.

இந்துமதி : இவ்வளவுதானா? இன்னும் ஏதாவது உண்டா?

பகதூர்: இந்தச் சோலையிலே இந்து.. மாலையிலே உலாவுகிறோம். என்னைக் கணவனாக ஏற்றுக் கொள்ளச் சம்மதமாக் கண்ணே ?

இந்துமதி : எனக்குச் சம்மதந்தான். வேறு யார் இவ்வளவு தைரியமாக என்னைக் கல்யாணம் செய்து கொள்ள முன்வருவார்கள்?

பகதூர் : சுந்தரி ! சுகுந்தா சுகுணவதி சுப்ரதீபா! உன்னைக் கல்யாணம் செய்து கொள்ள மன்னாதி மன்னர்கள் மண்டியிடுவார்களே. அப்படியிருக்க தைரியம் என்ன தேவைப்படுகிறது?

இந்துமதி : மறந்துவிட்டீரோ? பாதி ராத்திரியிலே…

பகதூர் : ஐயோ! பாதி ராத்திரியிலே என்ன?

இந்துமதி : என்னவா? பாதி ராத்திரியிலே, நான் பாதி உடல் புலியாக மாறுவேன்.

பகதூர் : ஐயையோ!

இந்துமதி : அது தெரிந்துதான் என்னை யாரும் கல்யாணம் செய்து
கொள்ள முன்வரவில்லை. நானும் உம்மைக் காதலிக்கிறேன்.

(பகதூர் பயந்து ‘புலி, புலி’ என்று ஒட, மோகன் வர, சாந்தாஜி, பாலாஜி வருதல்)

இந்துமதி : விருந்து முடிகிற நேரத்திலே வந்தீரே.

மோகன் : இந்து! பகதூர் பாக்யசாலி! மராட்டிய மண்டலத்திலேயே இப்போது இப்படித்தான் யார் யாருக்கோ எதிர்பாராத யோகம் அடிக்கிறது. மந்தியிடம் மலர் மாலையைத் தருகிறார்கள். தாமரைத் தடாகத்திலே எருமை தாண்டவமாடுகிறது.

சாந்தாஜி : மோகனா! என்னடாப்பா, சந்தோஷமான நாளிது. சச்சரவு செய்யாதே.

மோகன் : சச்சரவா? சேச்சே … எப்படிப்பட்ட இன்ப நாளிது. ஸ்ரீமதி இந்துமதிக்கும் ஸ்ரீஜத் பகதூருக்கும் திருமணம் நிச்சயிக்கப்படும் நன்னாள். வீர, தீரமுள்ள பகதூரை விவேக சிந்தாமணியாம் இந்துமதி அம்மையார் பராக்கிரமம் மிகுந்த பாலாஜியின் முன்னிலையில், சகல கலா பண்டிதர் சாந்தாஜி ஆசிர்வாதத்துடன் மணாளராகத் தேர்ந்தெடுக்கும் மங்களகரமான மாலை; சுயம்வர வேளை.

இந்துமதி : கேலி செய்தது போதும். உங்களுக்கு ஒரு துண்டு இரும்பினிடம் இருக்கும் பற்றை விட இது ஒன்றும் கேலிக்கிடமான விஷயமில்லை.

சாந்தாஜி : அப்படிக் கேள் இந்து, அப்படிக் கேள். இன்னொரு தடவை கேள். ஒரு பெண்ணின் பிரேமைக்காக ஒரு வாளைத் துறந்துவிடக் கூடாதா என்று கேள்.

மோகன் : இந்து, உன்னை இதுவரை அறிந்து கொள்ளாதது என் குற்றம் தான். பகதூருக்கு ஏற்றவள்தான் நீ. அவன் வாள் ஏந்தமாட்டான். வாள் ஓர் இரும்புத் துண்டு அல்லவா? பேஷ் இந்து.. சுதந்திரப் போருக்காக நான் ஏந்தும் வாள் ஒரு இரும்புத்துண்டு அல்லவா? எவ்வளவு அற்புதமான அறிவு உனக்கு. வலியோர் எளியோரை வாட்டும் போது, நீதியை நிலைநாட்ட நான் வீசும் வாள் ஒரு இரும்புத்துண்டு . வீழ்ச்சியுற்ற இனத்தை மீண்டும் எழுச்சி பெறச் செய்வதற்காக விளங்கும் வாள் ஒரு இரும்புத்துண்டு. வீரம், நாட்டுப்பற்று இரண்டுமற்ற நீ, இத்தனை நாட்களாக என்னிடம் உண்மையான காதல் கொண்டதாக நடித்து, ஆயிரம் தடவை ‘அன்பரே! அன்பரே!’ என்று அர்ச்சித்து என்னிடம் இருக்கும் பிரேமைக்காக எந்தக் கஷ்ட நஷ்டத்தையும் ஏற்றுக் கொள்ளத் தயார் என்று சத்தியம் செய்து கொடுத்து, உன் வஞ்சகத்தால் என்னைப் பித்தனாக்கி, இன்று பணத்தாசை கொண்டு படாடோபத்தில் ஆசை வைத்து, பகதூரைக் கல்யாணம் செய்து கொள்ளச் சம்மதித்த நீ, ஒரு மாமிசப்பிண்டம். இதோ, ஒரு எலும்புக்கூடு. உனக்கேற்ற மணாளன். இவன் கையிலே அந்த இரும்புத்துண்டு இல்லை ; இவனுடன் கூடி வாழ்.

(போகிறான். பகதூரும் பாலாஜியும் போகின்றனர்.)

இந்துமதி : அப்பா! உங்களால் வந்தது இவ்வளவும், அவர் இனி என்னை ஏறெடுத்துப் பார்க்கமாட்டார். ஐயோ! நீங்கள் இந்த விபரீதமான விளையாட்டை ஏன் ஏற்பாடு செய்தீர்கள்? அவருக்கு என் மீது வீணான சந்தேகம் ஏற்பட்டு விட்டதே. நானும் துடுக்குத்தனமாகப் பேசி விட்டேன். அவர் எவ்வளவு கோபமாகப் போய்விட்டார் பார்த்தீர்களா? நான் என்ன செய்வேன்?

சாந்தாஜி : கிணறு வெட்டப் பூதம் புறப்பட்டது போல் ஆகிவிட்டது. இனிமேல் நான் என்ன செய்வேன்? அந்தப் பாலாஜி யோசனையால் கெட்டேன்.

இந்துமதி : அப்பா!

(தொடரும்)

நன்றி: Project Madurai

முந்தைய பகுதி: சந்திரமோகன் | சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க