கண்டன அறிக்கை !

தேதி: 14.5.2019

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை எதிர்த்து போராடிய மாணவர்கள் 68 பேரை தேர்வு எழுதவிடாமல் பழிவாங்கிய கோவை சட்டக் கல்லூரி நிர்வாகத்தை வன்மையாக கண்டிக்கிறோம்!

பொள்ளாச்சி பாலியல் கொடூரத்தை எதிர்த்து கடந்த மார்ச் மாதம் தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து போராடினார்கள். அதன்போது கோவை சட்டக்கல்லூரி மாணவர்கள் 14- 3- 2019 அன்று சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவ – மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தை முன்நின்று நடத்தியதாகக் கூறி சுமார் 167 மாணவர்கள் மீது காவல்துறையும்,  கல்லூரி நிர்வாகமும் சேர்ந்து பொய் வழக்குப் போட்டது. குறிப்பாக 17 மாணவர்களை குறிவைத்து பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டது கல்லூரி நிர்வாகம்.

இந்தப் பொய் வழக்கை திரும்பப் பெற வேண்டும் என மாணவர்கள் தொடர் உள்ளிருப்புப் போராட்டத்தை நடத்தினார்கள். அதன் பிறகு மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி இந்த வழக்குகள் அனைத்தையும் ரத்து செய்கிறோம். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது எந்தப் பழிவாங்கும் நடவடிக்கையும் எடுக்க மாட்டோம் என்று கல்லூரி முதல்வர் கே. கோபாலகிருஷ்ணன் அவர்கள் எழுத்துப்பூர்வமாக 20-3- 2019 அன்று கடிதம் கொடுத்துள்ளார்.

படிக்க :
♦ பொள்ளாச்சி : குற்றவாளிகளைப் பாதுகாக்கும் சௌக்கிதார்கள் | மருதையன் நேர்காணல் | காணொளி
♦ பொள்ளாச்சி : ஃபேஸ்புக் பயன்பாடுதான் பெண்களுக்கு பிரச்சினையா ?

ஆனால், தற்போது 68 மாணவர்களை தேர்வு எழுதவிடாமல் தடுத்து, மீண்டும் அந்த செமஸ்டரிலேயே படிக்க வேண்டும் என்று உத்தரவு போட்டுள்ளது  கல்லூரி நிர்வாகம். குறிப்பாக பல்கலைக்கழகத் தேர்வு தொடங்க ஒரு வாரம் மட்டுமே இருக்கும் சமயத்தில், திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களின், நிர்வாகத்தின் தவறுகளை எதிர்க்கும் மாணவர்களின் எதிர்காலத்தை பாழக்கும் வகையில் தேர்வு எழுதவிடாமல், மீண்டும் அதே செமஸ்டரில் படிக்கும் வேண்டும் என உத்தரவிட்டிருக்கும் கல்லூரி முதல்வர் கே. கோபாலகிருஷ்ணன் செயலை எமது புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.

அதேபோல், ’’இது எனது சொந்த ஊர். இது என்னுடைய கல்லூரி. என்னை பகைத்துக் கொண்ட அவர்கள் யாரையும் நான் படிக்க விடமாட்டேன்’’ என கல்லூரி முதல்வர் கே.கோபாலகிருஷ்ணன் ஒரு பண்ணையாரைப்போல மிரட்டுவதாக மாணவர்கள் தெரிவிக்கிறார்கள்.

சட்டக்கல்லூரி விதியின் படி பொறுப்பு முதல்வராக ஒருவர் 3 ஆண்டுகள் மட்டும்தான் பொறுப்பில் இருக்க முடியும்.  ஆனால் கே.  கோபாலகிருஷ்ணன் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகும் சட்டக்கல்லூரியின் விதிக்குப் புறம்பாக பொறுப்பு முதல்வராக நீடிக்கிறார். ஆளும் கட்சியில் செல்வாக்கு, அதிகார, பண பலம்தான் இதற்கெல்லாம் காரணம். இப்படிப்பட்ட கிரிமனல்கள் ஒரு கல்லூரியின் முதல்வராக இருந்தால் அந்தக் கல்லூரியும், மாணவர்களும் எப்படி உருப்பட முடியும்?

புமாஇமு

எனவே, கே. கோபாலகிருஷ்ணனை கல்லூரி முதல்வர் பொறுப்பில் இருந்து விடுவித்து புதிய தகுதியான முதல்வரை உடனே நியமனம் செய்ய வேண்டும்.  மாணவர்கள் தேர்வு எழுத தடைவிதித்து அதே செமஸ்ட்ரிலேயே அவர்கள் மீண்டும் படிக்க வேண்டும் என்ற உத்தரவை திரும்பப் பெற வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ஆதரவாக அனைத்து பேராசிரியர்களும், கல்லூரி மாணவர்களும்,  மாணவர் அமைப்புகளும்,  ஜனநாயக சக்திகளும் குரல் கொடுக்க வேண்டும் என எமது புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி சார்பில் கோருகிறோம்.

இவண்
த. கணேசன்,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணி,
தமிழ்நாடு.

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க