
உண்மை மனிதனின் கதை | முதல் பாகம் | அத்தியாயம் – 15
மிஹாய்லா தாத்தா வீட்டில் அலெக்ஸேய் தங்கியிருந்த மூன்றாம் நாள் காலை, கிழவர் அவனிடம் தீர்மானமாகச் சொன்னார்:
“கேள், அலெக்ஸேய். உன்னைக் குளிப்பாட்ட ஏற்பாடு செய்கிறேன். உன் உடம்பைக் கழுவி ஆவியால் எலும்புகளுக்குச் சூடேற்றுகிறேன். நீ பட்டிருக்கும் பாட்டிற்கு, வென்னீரில் குளிப்பது ரொம்ப இதமாயிருக்கும். ஊம்? அப்படித்தானே?”
பின்பு அவர் வென்னீர் போடுவதற்கு ஏற்பாடு செய்தார். மூலையில் இருந்த கணப்பைப் பெரிதாக மூண்டு எரியச் செய்தார். அதன் சூட்டில் கற்கள் ஓசையுடன் பிளக்கலாயின. தெருவிலும் நெருப்பு எரிந்தது. பெரிய கற்பாளம் அதில் பழுக்கச் சூடேற்றப் பட்டது. வார்யா தண்ணீர் கொண்டு வந்து பழைய பீப்பாயில் நிரப்பினாள். தரைமீது பொன்னிற வைக்கோல் பரப்பப்பட்டது. அப்புறம் மிஹாய்லா தாத்தா மேலுடைகளைக் களைந்து விட்டு, உட்காற்சட்டை மட்டும் அணிந்தவாறு சிறு மரத் தொட்டியில் காரத்தை மளமளவென்று கரைத்தார், மரவுரிப் பாயைப் பிய்த்து, கோடை மணம் வீசும் தேய்ப்பு நார்க் கற்றை தயாரித்தார். நிலவரையில் விட்டத்திலிருந்து கனத்த குளிர் நீர்த் துளிகள் சொட்டும் அளவுக்குச் சூடு ஏறியதும் கிழவர் தெருவுக்குப் பாய்ந்து போய், சூட்டால் சிவந்திருந்த கற்பாளத்தை இரும்பு தகட்டில் தள்ளி அறைக்குள் கொண்டு வந்து பீப்பாயில் போட்டார். ரோவிப் படலம் குப்பென்று கிளம்பி விட்டத்தை நோக்கிச் சென்று வெண் சுருள்களாக அங்கே பரவியது. ஒன்றுமே கண்ணுக்குத் தெரியவில்லை. கிழவரின் லாவகமான கைகள் தன் உடலைக் களைவதை அலெக்ஸேய் உணர்ந்தான்.
வார்யா, மாமனாருக்கு ஒத்தாசை செய்தாள். வெக்கை காரணமாகத் தன் பஞ்சுவைத்த சட்டையையும் தலைக்குட்டை யையும் அவள் கழற்றிவிட்டாள். கனத்த பின்னல்கள் அவிழ்ந்து தோள்கள் மீது புரண்டன. கிழிந்த தலைக்குட்டைக்குள் அவை இருப்பதை அனுமானிப்பதே கடினமாயிருந்தது. லேசான, மெலிந்த மேனியும் பெரிய விழிகளும் கொண்ட வார்யா, கடவுளை வழிபடும் கிழவியிலிருந்து இளநங்கையாக எதிர்பாராத விதமாக மாறிவிட்டாள். இந்த உருமாற்றம் முற்றிலும் எதிர்பாராததாக இருந்தமையால், தொடக்கத்தில் அவள்பால் கவனமே செலுத்தாதிருந்த அலெக்ஸேய் தான் நிர்வாணமாக இருப்பது குறித்து நாணம் அடைந்தான்.
“கூச்சப்படாதே, அலெக்ஸேய்! ஆமாம், நண்பா, கூச்சப்படாதே. இப்போது நமது விவகாரம் அப்பேர்பட்டது. இவள் இருக்கிறாளே, வார்யா, சண்டையில் காயமடைந்தவனுக்கு முன் மருத்துவத்தாதி போல. ஆமாம். கூச்சப்படுவது கூடாது. இந்தா, இவனைப் பிடித்துக்கொள், நான் சட்டையைக் கழற்றுகிறேன். அடே, சட்டை எப்படி இற்றுப்போய்விட்டது! தானாகவே கிழிந்து போகிறதே!”
அப்போது இளநங்கையின் பெரிய கரு விழிகளில் அச்சம் தென்பட்டதை அலெக்ஸேய் கண்டான். அசையும் நீராவித் திரையின் ஊடாகத் தனது உடம்பை அவன் விபத்துக்குப் பின் முதன்முறையாக நோக்கினான். தங்க நிற வைக்கோல் மேல் கிடந்து பழுப்பேறிய தோலால் போர்த்தப்பட்ட எலும்புக்கூடு. முழங்கால் சில்லுகள் உருண்டையாகத் துருத்திக் கொண்டிருந்தன. இடுப் பெலும்புக் கட்டு உருண்டையாகவும் கூர்ந்தும் இருந்தது. வயிறு ஒரேடியாக ஒட்டிப் போயிருந்தது. பழுவெலும்புகள் கூரிய அரை வளையங்களாக இருந்தன.
கிழவர் சிறு தொட்டியில் காரத்தைக் கரைத்துக் கொண்டிருந்தார். சாம்பல் நிற எண்ணெய்ப் பசையுள்ள திரவத்தில் தேய்ப்பு நார்க் கற்றையை பிடித்திருந்த அவரது கை அப்படியே அந்தரத்தில் நின்றுவிட்டது.
“அடக் கஷ்டமே! உன் விவகாரம் ஆபத்தானது, தம்பி அலெக்ஸேய்! ஊம்? ஆபத்தானது என்கிறேன். ஜெர்மானியர்களிடமிருந்து நீ ஊர்ந்து தப்பிவிட்டாய், வாஸ்தவந்தான். ஆனால் காலனிடமிருந்தோ…” திடீரென அவர் அலெக்ஸேயைப் பின்புறம் தாங்கிக் கொண்டிருந்த வார்யா மீது பாய்ந்தார்: ”நீ என்ன அம்மணமான ஆண் பிள்ளை மீது சாய்ந்து கொண்டு விட்டாய், வெட்கங் கெட்டவளே, ஊம்? உதட்டை எதற்காகக் கடித்துக் கொள்கிறாய்? ஐயோ, நீங்கள் இருக்கிறீர்களே, பெண்கள், உளறுவாய் ஜன்மங்கள்! அலெக்ஸேய் நீ ஏதேனும் கெடுதலாக நினைக்காதே. என்னவானாலும் உன்னை நாங்கள் காலன் கொண்டு போக விட மாட்டோம், தம்பி. உனக்குச் சிகிச்சை செய்து குணப்படுத்தியே தீர்ப்போம், இது உண்மை! செளக்கியமாக இரு!”
அவர் லாவகமாகவும் பதமாகவும் குழந்தையைப் போல அலெக்ஸேயைக் காரத்தினால் தேய்த்துக் கழுவினார், புரட்டினார், வென்னீரால் குளிப்பாட்டினார், மறுபடி மறுபடி ஒரே உற்சாகத்துடன் தேய்த்தார். வார்யா பேசாமல் அவருக்கு உதவி செய்தாள்.
…அப்பறம் அலெக்ஸேய், குறுக்கும் நெடுக்கும் இழையெடுத்துத் தைக்கப்பட்டிருந்த, ஆனால் துப்பரவும் மென்மையுமான நீண்ட சட்டை – மிஹாய்லா தாத்தாவினது – அணிந்து, கோடிட்ட மெல்லிய மெத்தை மேல் படுத்துக் கொண்டான். அவன் உடம்பு முழுவதிலும் புத்துணர்ச்சியும் உற்சாகமும் பொங்கின. குளியலுக்குப் பிறகு, கணப்புக்கு மேல் விட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த சாளரம் வழியாக நீராவி நிலவறையிலிருந்து வெளியேறிய பின் வார்யா அவனுக்குப் புகை மணம் வீசிய காட்டுப் பழத் தேநீர் பருகக் கொடுத்தாள். சிறுவர்கள் கொண்டு வந்த இரண்டு சர்க்கரைக் கட்டிகளை வார்யா அவனுக்காகச் சிறு சிறு துணுக்குகளாக வெள்ளை பிர்ச் பட்டை மேல் உதிர்த்து வைத்திருந்தாள். அந்த சர்க்கரையுடன்தான் அலெக்ஸேய் தேநீர் பருகினான். அப்புறம் அவன் உறங்கி விட்டான் – முதன் முறையாகக் கனவுகள் இன்றி ஆழ்ந்து தூங்கினான்.
உரத்த பேச்சுக்குரல் கேட்டு அவன் விழித்துக் கொண்டான். நிலவறையில் அனேகமாக இருட்டாயிருந்தது. சிறாய் விளக்கு மினுக்கு மினுக்கென்று எரிந்தது. இந்தப் புகை இருட்டில் மிஹாய்லா தாத்தாவின் சுரீரென்ற கீச்சுக்குரல் கணகணத்தது:
“பெண் புத்திக்காரி, உன் அறிவு எங்கே போயிற்று? மனிதன் இந்தப் பதினொரு நாட்களாக ஒரு பருக்கை தினைச் சோறு கூட வாயில் போட்டுக் கொள்ளாமல் இருக்கிறான், நீ என்னடா என்றால் முழு வேக்காடு முட்டையைத் தின்னச் சொல்கிறாய்…. இந்த முழு வேக்காடு முட்டை அவனுக்கு எமனாயிற்றே! திடீரென்றுக் கிழவனாரின் குரலில் வேண்டுகோள் ஒலித்தது.” வஸிலீஸா, இவனுக்கு இப்போது வேண்டியது முட்டை அல்ல. இவனுக்கு வேண்டியது என்ன தெரியுமா? கோழி சூப் வேண்டும் இவனுக்கு இப்போது. ஓ, அது தான் இவனுக்குத் தேவை. அது கிடைத்தால் இவனுக்கு உயிர் கிடைத்த மாதிரி. உன் கொரில்லாக் கோழியை அறுத்து, ஊம்?…
ஆனால் கடுமையும் கலவரமும் தொனித்த கிழவியின் குரல் அவரது பேச்சை இடை முறித்தது:
“தர மாட்டேன்! தர மாட்டேன் என்றால் தர மாட்டேன். நீயும் கேளாதே, கிழட்டுப் பேயே! நல்ல ஆள்தான் போ. இந்தப் பேச்சை மறுபடி எடுக்கத் துணியாதே. என் கொரில்லாக் கோழியை நான் அறுப்பதாம்…. சூப் வைத்துக் கொடுப்பதாம்… சூப்! இங்கே தான் ஊர்பட்டப் பண்டங்கள் நிறைந்து கிடக்கின்றனவே, கலியாண விருந்துக்குப் போல! நல்ல யோசனைதான் செய்தாய் போ!…”
கிழவியின் இருண்ட நிழலுரு வாயிலுக்கு வழுகிச் சென்றது. கதவு திறக்கப்பட்டதும் வசந்த காலப் பகலின் பளிச்சிடும் ஒளிக் கீற்று அறைக்குள் வந்து விழிகளைக் கூசச் செய்தது. அலெக்ஸேய் தான் அறியாமலே கண்களைச் சுருக்கிக் கொண்டு முனகினான். கிழவர் அவனருகே பாய்ந்து வந்தார்.
“அடே, நீ உறங்கவில்லையா, அலெக்ஸேய்? ஊம்? பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்தயா? கேட்டுக் கொண்டிருந்தாய் அல்லவா? அவளை மோசமானவள் என்று எண்ணிவிடாதே. அவள் வார்த்தைகளை வைத்து எடை போடாதே, அப்பனே. உனக்காகக் கோழியை அறுக்க அவள் தயங்கினாள் என்று நினைக்கிறாயா? சே, சே, இல்லை, அலெக்ஸேய்! அவளுடைய குடும்பத்தார் எல்லோரையும் – குடும்பம் பெரிது, பத்து ஆட்கள் இருந்தார்கள் – ஜெர்மன்காரன் கொன்றுவிட்டான். மூத்த மகன் கர்னல். கர்னலின் குடும்பம் அது என்ற தகவல் கிடைத்ததும் ஜெர்மன்காரர்கள் வந்து வஸிலீஸா ஒருத்தி தவிர மற்றவர்களை எல்லாம் ஒரே நேரத்தில் கொன்று அகழியில் எறிந்து விட்டார்கள். சொத்து சாமான்களை எல்லாம் பாழ்படுத்திவிட்டார்கள். அட்டா, பெருந்துன்பம் இது, இவள் வயதில் சொந்தக்காரர் யாரும் இல்லாமல் ஒண்டிக் கட்டை ஆகிவிடுவது!
சொத்துக்களில் கடைசியாக மிஞ்சியது ஒரே ஒரு கோழி தான். படு தந்திரக்காரக் கோழி அலெக்ஸேய்! முதல் வாரத்திலேயே ஜெர்மானியர் எல்லாக் கோழிகளையும் வாத்துக்களையும் பிடித்துக் கொண்டு போய்விட்டார்கள், ஏனென்றால் ஜெர்மானியனுக்கு எல்லாவற்றையும் விடச் சுவையான உணவு அவை. ஆனால் வஸிலீஸாவின் கோழி தப்பிவிட்டது. பெருத்த நடிகைதான் போ, வெறும் கோழி அல்ல இது! ஜெர்மானியன் வீட்டு முகப்புக்கு வந்தால் இது முகட்டறையில் பதுங்கிக் கொள்ளும். அது இருப்பதே தெரியாது. தன்னவர்கள் வந்தாலோ, ஒன்றுமில்லை. முற்றத்தில் அதன் பாட்டில் திரிந்து கொண்டிருக்கும். எப்படித்தான் அடையாளம் தெரிந்து கொண்டதோ, சைத்தானுக்கே வெளிச்சம். எங்கள் கிராமம் பூராவுக்கும் இந்த ஒரு கோழி தான் மிஞ்சியிருக்கிறது. இதன் தந்திரத்திற்காகத் தான் கொரில்லாக் கோழி என்று நாங்கள் இதற்கு பெயர் வைத்தோம்.”
அலெக்ஸேய் திறந்த விழிகளுடன் உறங்கி வழிந்தான். இப்படி உறங்க அவன் காட்டில் பழகியிருந்தான். அவன் பேசாமல் இருந்தது மிஹாய்லா தாத்தாவுக்குக் கவலை அளித்தது. போலும். நிலவறையில் ஏதோ பரபரப்புடன் இங்குமங்கும் துருவிவிட்டு, மேஜை அருகே ஏதோ வேலையைச் செய்தபடியே அவர் மறுபடி இந்த விஷயத்துக்கு திரும்பினார்.
“அலெக்ஸேய், இந்தக் கிழவியை மோசமாக மதித்து விடாதே. விஷயத்தை ஆழ்ந்து ஆராய்ந்து பார், அருமை நண்பா. பெரிய காட்டில் பழங்கால பிர்ச் மரம் போல இருந்தாள் இவள், காற்றுக்கூட இவள் மேல் வீசவில்லை. இப்போதே மரங்கள் வெட்டப்பட்ட காட்டில் உளுத்த கட்டைப் போலத் துருத்திக் கொண்டிருக்கிறாள். இவளுக்கு ஒரே ஆறுதல் இந்தக் கோழிதான். என்ன, பேசாதிருக்கிறாய்? அடே, தூங்கிவிட்டாயா? … நல்லது, உறங்கு, தம்பி, உறங்கு.”
அலெக்ஸேய் உறங்கினான், உறங்காமலும் இருந்தான். அவன் உடல் இல்லாதது போலவும், வெதுவெதுப்பான பஞ்சு வைத்து அடைத்திருப்பது போலவும், அதில் இரத்தம் அதிர்ச்சியுடன் பாய்வது போலவும் இருந்தது. நொருங்கி வீங்கிய கால்கள் அனலாய் காந்தின. உள்ளேயிருந்து குடையும் வலி அவற்றை நோகச் செய்தது. ஆனால் திரும்பவோ அசையவோ திராணி இல்லை.
இந்த அரைத் தூக்கத்தில் நிலவறை வாழ்க்கை அலெக்ஸேயின் உள்ளத்தில் தனித்தனித் துண்டுகளாய்ப் பதிந்தது. இது எதார்த்தமான வாழ்க்கை அல்ல போன்றும், ஒன்றுக்கொன்று தொடர்பு இல்லாத, அசாதாரணமான காட்சிகள் அவனுக்கு முன் திரையில் அலெக்ஸேய் தோன்றி மறைவது போன்றும் இருந்தது.
வசந்த காலம். அகதிக் கிராமத்தினர் மிக கஷ்டமான நாட்களைக் கழித்துக் கொண்டிருந்தனர். விபத்து நேர்வதற்கு முன்பே பழைய கிராமத்திலே தரையில் புதைத்துப் பத்திரப்படுத்தி, எரிந்த ஊரிலிருந்து இரவில் இரகசியமாகத் தோண்டிக் காட்டுக்கு எடுத்து வந்திருந்த உணவுப்பண்டங்களில் கடைசியாக மிஞ்சியிருந்த பகுதியைத் தின்று தீர்த்துக் கொண்டிருந்தார்கள். தரைப் பனி அகன்று இளகலாயிற்று. அவசர அவசரமாகத் தோண்டியிருந்த வளைகள் “கண்ணீர் சிந்தி” ஈரமாயின. கிராமத்துக்கு மேற்கே ஒலேனினோக் காட்டில் கொரில்லாப் போர் புரிந்து கொண்டிருந்த ஆண்கள் முன்பு எப்போதாயினும் ஒரு தரம், தனிமையில், இரவில் தான் என்றாலும், நிலவறைக் கிராமத்துக்கு வந்து போய்க் கொண்டிருந்தார்கள். இப்போது போர் முனை வரிசையால் அவர்கள் துணிக்கப்பட்டுவிட்டார்கள் போலத் தோன்றியது. அவர்களிடமிருந்து ஒரு தகவலும் கிடைக்கவில்லை. ஏற்கனவே துன்பத்தில் வதைபட்டுக் கொண்டிருந்த மாதர்களின் தோள்கள் மீது புதிய சுமை சார்ந்தது. வசந்தம் வந்துவிட்டது, வெண்பனி உருகலாயிற்று, விதைப்பைப் பற்றியும் காய்கறி தோட்டம் பற்றியும் கவலை எடுத்துக் கொள்ள வேண்டுமே.
ஒரு நாள் பகலில் கிழவனார் மனநிறைவுடனும் சிந்தனையில் ஆழ்ந்தவாறும் வீடு திரும்பினார். பசும்புல் செடி ஒன்றை அவர் கொண்டுவந்திருந்தார். கரடு தட்டிய உள்ளங்கையில் அதைப் பதபாகமாக வைத்து அலெக்ஸேய்க்குக் காட்டினார்:
“பார்த்தாயா? வயலிலிருந்து வருகிறேன். நிலம் விழித்துக் கொண்டுவிட்டது, பனிக்கால விதைப்பு, ஆண்டவன் அருளால், மோசமில்லாமல் முளைத்துவிட்டது. வெண்பனி ஏராளம். நான் பார்த்தேன். வசந்தகாலப் பயிர் விளைச்சல் பொய்த்து விட்டாலும் கூட, பனிக்காலப் பயிர் விளைச்சல் ஓரளவு உணவு தரும். நான் போய் பெண்களுக்கு சேதி சொல்கிறேன், சந்தோஷப்படட்டும், பாவங்கள்!”
வயலிலிருந்து எடுத்துவரப்பட்ட பசுந்தாள் மாதர்களுக்குப் புது நம்பிக்கையை ஊட்டிவிட்டது. நிலவறையின் அருகே அவர்கள் வசந்தகாலக் காக்கைக் கூட்டம்போல ஆராவாரித்தார்கள், கத்தினார்கள். மாலையில் மிஹாய்லா தாத்தா மன நிறைவுடன் கைகளைத் தேய்த்துக் கொண்டார்:
“என்னுடைய நீள் முடி மந்திரிகள் சரியாகவே தீர்மானித்திருக்கிறார்கள். கேட்டாயா, அலெக்ஸேய்? ஒரு வேலைக் குழு பசுக்களைக் கட்டி உழும். இந்த உழவு, நீர் தங்கிய தாழ் நிலத்தில் நடக்கும், அங்கே உழவு கடினமானது. பார்க்கப் போனால் நம்மிடம் மிஞ்சியிருப்பவை ஆறே பசுக்கள் தானே, எவ்வளவு உழுதுவிட முடியும்! இரண்டாவது வேலைக் குழுவுக்கு நீர் தங்காத நிலம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. மண்வாரிகளையும் மண்வெட்டிகளையும் கொண்டு பெண்கள் உழுவார்கள். அட ஒன்றுமில்லாவிட்டாலும் தோட்டத்தைக் கொத்திக் காய்கறிகளாவது பயிர் செய்யலாமே. மூன்றாவது வேலைக் குழுவுக்கு மேட்டில் மணற்பாங்கான நிலம் ஒதுக்கியிருக்கிறோம். அங்கே உருளைக் கிழங்கு பயிரிடுவதற்கு நிலத்தை சீர்படுத்துவோம். இந்த வேலை மொத்தத்தில் சுளுவானது. பயல்களை அங்கே மண்வெட்டியால் கொத்தச் செய்வோம். பலவீனமான பெண்களையும் அங்கே அனுப்புவோம். சர்க்காரிடமிருந்து நமக்கு உதவி கிடைக்கும் பார். கிடைக்காவிட்டாலும் ஒன்றும் குடிமுழுகிடாது. நாமே எப்படியாவது சமாளித்துக் கொள்வோம். நிலத்தை பயிரிடாமல் விட்டுவிட மாட்டோம். நல்ல வேளை, ஜெர்மான்காரனை இங்கிருந்து விரட்டியாயிற்று. இப்போது வாழ்க்கை ஒழுங்காக நடக்கும். நமது மக்கள் எஃகு உறுதி படைத்தவர்கள். எந்த சுமையையும் தாங்கிக்கொள்வார்கள்….”
அன்று இரவு அலெக்ஸேய்க்கு உடம்பு மோசமாகி விட்டது.
அவனுடைய உடல் மெதுவாக, மரத்துப் போய் அவிந்து விடும் நிலையில் இருந்தது. கிழவனார் நடத்திய குளியல் அதை உலுக்கி இந்த மரப்பு நிலையிலிருந்து வெளியே கொணர்ந்தது. சோர்வையும் மனித அனுபவத்துக்குப் புறம்பான களைப்பையும் கால்களில் வலியையும் அவன் முன் ஒருபோதும் இல்லாத வன்மையுடன் திடீரென உணர்ந்தான். ஜன்னி கண்ட அரைத் தூக்கத்தில் அவன் மெத்தை மேல் புரண்டான், முனகினான், பற்களை நெறுநெறுத்தான், யாரையோ அழைத்தான், யாருடனோ சச்சரவிட்டான், ஏதோ வேண்டுமென்று கேட்டான்.
படிக்க:
♦ தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத் தியாகிகள் முதலாமாண்டு நினைவேந்தல்
♦ தூத்துக்குடியின் தியாகிகளே | மகஇக பாடல் | காணொளி
பளபளவென்று விடியும் தறுவாயில் கிழவர் படுக்கையை விட்டு எழுந்தார். ஓரளவு அமைதி அடைந்து உறங்கி கொண்டிருந்த அலெக்ஸேய் மீது பார்வை செலுத்தினார், வார்யாவிடம் எதோ கிசுகிசுத்தார், பின்பு வழிச் செல்ல ஆயத்தமானார். மோட்டார் ட்யூபினால் தாமே செய்த பெரிய ரப்பர் காப்பு லோடுகளை நமுதா ஜோடுகள் மேல் மாட்டிக் கொண்டார். மேற்சட்டையை மரவுரி வாரினால் இறுக்கிக் கொண்டார். தம் கையால் இழைத்து மழமழப்பாக்கப்பட்ட ஜூனிப்பர் கழியை எடுத்துக் கொண்டார். நெடுந்தூர நடைப் பயணங்களில் இந்தக் கழி எப்போதும் கிழவருடன் செல்வது வழக்கம்.
அலெக்ஸேயிடம் ஒரு வார்த்தைக் கூடச் சொல்லாமல் கிழவனார் புறப்பட்டுப் போய்விட்டார்.
(தொடரும்)
முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை