சந்திரமோகன் | சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் | நாடகம் | பாகம் – 16


காட்சி : 24

இடம் : வீதி
உறுப்பினர்கள் : காகப்பட்டர், ரங்குப் பட்டர், வீரர்கள். கேசவப்பட்டர், பாலச்சந்திரப் பட்டர் வாத்திய கோஷ்டி

(கேசவப்பட்டரும், பாலச்சந்திரப்பட்டரும் எதிர்கொண்டு அழைக்கின்றனர். சீடர்கள் சாமரம் வீசுகின்றனர்)

காசிவாசி காகப்பட்டருக்கு ஜே! குரு மகாராஜன் குணசீலன் காகப்பட்டிருக்கு ஜே! சகல சாஸ்திர விற்பன்னர், வேத விற்பன்னர், வேதியகுல வேந்தர் காகப்பட்டருக்கு ஜே!’ என்ற கோஷம்.

தளபதிகள் மாலை மரியாதையுடன் வருகின்றனர். மாலைகளிலே ரங்குப் பட்டர் கங்கா தீர்த்தம் தெளித்து, பிறகு? பிறகு ஏற்றுக் கொள்கிறார். தளபதிகள் பல்லக்கு அருகே சென்று வீழ்ந்து பணிகிறார்கள். ரங்கு அவர்களை விலக்கிச் செல்கிறார். தளபதிகள் பயபக்தியுடன் பின்னால் செல்லுகிறார்கள். மீண்டும் கோஷம் – ஊர்வலம் செல்லுகிறது. ஊர்வலத்தின் கடைசியிலே பதிகள் செல்கின்றனர்.

♦ ♦ ♦ 

காட்சி : 25
இடம் : தர்பார்
உறுப்பினர்கள் : காகப்பட்டர், ரங்கு, பட்டர்கள், தளபதிகள், வீரர்கள், சிவாஜி,
மோரோபந்த், சிட்னீஸ்

(தளபதியிடம் )

காகப்பட்டர் : நாம் நமது சீடருடன் பேச வேண்டும். நீங்கள் போய் வெளியே இருக்கலாம்; பிறகு அழைப்போம்.

(தளபதி சென்ற பிறகு)

ரங்குப்பட்டர் : இப்ப என்ன சொல்றே! நமக்கு நடக்கும் இந்த ராஜோபசாரத்தைப் பார். நமது பாதத்திலே வீழ்ந்து வணங்கினவா ஒவ்வொருவனும் சாமான்யனில்லை. அசகாய சூரர்கள். யுத்தத்திலே ஜெய வீராளா இருப்பவர். அவாளுடைய அதிகாரமும் கீர்த்தியும் அமோகம். ஆனால் நமது அடி பணிந்தார் பார்த்தாயல்லவா?

ரங்குப்பட்டர் : தேவ தேவனைத் தொழும் பக்தனைப் போல் அல்லவா ஸ்வாமி அவர்கள் நடந்து கொண்டார்கள் !

காகப்பட்டர் : இதில் என்னடா ஆச்சரியம்? நாம் யார். பூதேவா! அவர்கள் சூத்திரர்கள். மனுவின் வாக்கியப்படி நமக்குச் சேவை செய்யவே பூலோகத்தில் பிறந்தவர்.

ரங்குப்பட்டர் : மனு நமக்காகச் செய்திருக்கும் ஏற்பாடு மகா மகத்துவம் வாய்ந்தது.

காகப்பட்டர் : சந்தேகமென்ன. சரி இனி இந்தப் பிராயச்சித்தக் காரியப்படி இரண்டு முக்கிய விஷயங்கள் பூர்த்தியாக வேண்டும்.

ரங்குப்பட்டர் : அவைகள்?

காகப்பட்டர் : ஒன்று வீராதி வீரனானாலும் விற்பன்னருக்கு அடங்கியே தீர வேண்டும் என்ற கொள்கையை நிலை நாட்ட வேண்டும். சிவாஜி என்னிடம் ஆசி பெற்று, அனுமதி பெற்று, அடிபணிந்த பிறகே சிம்மாசனம் ஏறுவான். ஆகவே அந்த அபிலாஷை சித்தியாகும்.

ரங்குப்பட்டர் : மற்றொன்று?

காகப்பட்டர் : நமது ஆரியச் சோதராளுக்கு இந்தச் சமயத்திலே கூடுமான சகாயம் செய்ய வேண்டும்.

ரங்குப்பட்டர் : எப்படி ஸ்வாமி, அது சாத்தியமாகும்?

காகப்பட்டர் : எப்படி ஆகாமல் போகிறது பார்ப்போம். நீ போய் வெளியே இரு. அந்தத் தளபதியை வரச்சொல் (ரங்கு போகிறான்)

(சிவாஜி வரக்கண்டு காகப்பட்டர்)
அமருக! அஞ்சாநெஞ்சுடைய ஆரிய சேவா சிம்மமே,
(சிவாஜி அமருகிறார்)

நமது கட்டளையை ஏற்றுக் கொண்டது கண்டு சித்தம் களித்தோம். ஏனெனில் அந்தக் கட்டளையை மீறினால் இம்மையில் இம்சையும், மறுமையில் மாபாவமும் சம்பவிக்கும் என்று மாந்தாதா திருவாய் மலர்ந்தருளி இருக்கிறார்.

சிவாஜி : ஆரியவர்த்தனா! என் பட்டாபிஷேகம் சம்பந்தமாக ஆட்சேபனை கிளம்பிய போது கிளம்பிய புயல் இன்னும் அடங்கவில்லை.

காகப்பட்டர் : புயலா? சனாதன சத்காரியத்தை எதிர்த்திட எந்தச் சண்டமாருதத்தாலும் ஆகாதே.

சிவாஜி : தாங்கள் அறியமாட்டீர்கள் அந்தப் புயலின் வேகத்தை … சூத்திரருக்கு நாடாள ஏன் உரிமையில்லை ? சாஸ்திரம் தடுப்பது ஏன் என்று கேட்கின்றனர். என்னோடு
தோளோடு தோள் நின்று போரிட்ட வீரர்கள்.

காகப்பட்டர் : வீரர்கள் கேட்டனரா? பாவம்! அவர்கள் வீரர்கள் தானே? விவேகிகள் அல்ல பார்!

சிவாஜி : சூத்திரருக்குத் தாழ்நிலைதான் தர்ம சாஸ்திரத் தீர்ப்பா?

காகப்பட்டர் : இன்று நேற்று ஏற்பட்டதல்லவே. இகபர சுகம் இரண்டுக்கு மல்லவோ சாஸ்திரம். அது மனு, பராசரர், பாக்கிய வல்கியர் போன்ற ரிஷி ஸிரேஷ்டர்களின் பாஷ்யங்களோடு ஜொலிக்கின்றன.

ரங்குப்பட்டர் : விளக்கமாகக் கூற வேண்டுகிறேன். சூத்திரருக்கு ஏன் தாழ்நிலை?

காகப்பட்டர் : (புன்சிரிப்புடன்) குழந்தாய்! நீ ஆகமத்தின் அடிச்சுவடையும் அறியவில்லையே. சிருஷ்டிகளின் கர்த்தா பிரம்மதேவன், பிரம்மதேவன் பிரபஞ்சத்தை கிருஷ்டித்தான். அயன் படைப்பு நாலு ஜாதி. நான்முகனுடைய முகத்திலே தோன்றியோர் முப்பிரி தரித்த பூசுரர். தோளிலே தோன்றியோர் க்ஷத்திரியர். வைசியர் தொடையிலே தோன்றினர். பிரம்மனனின் பாதத்தில் தோன்றியோர் சூத்திரர். பிரமகுலம் தேவதாதராகவும், க்ஷத்திரிய குலம் அரச சேவை செய்துக் கொண்டும், வைசிய குலம் செல்வத்தைச் சேகரிக்கும் சேவை செய்துக் கொண்டும் வாழ வேண்டும். சூத்திர குலம் பிரம்ம குலத்துக்குத் தாசராகி சேவை செய்து வரவேண்டும். இது பிரம்மன் கட்டளை.

சிவாஜி : காலிலே தோன்றியதாலா இந்தக் கடும் தண்டனை? காடு, மேடு திருத்திக் கழனியாக்கி நாடு வாழ நற்பணி புரியும் எங்களுக்கு?

காகப்பட்டர் : தண்டனை என்று கூறுவது தவறு; தீர்ப்பு! தேவ கட்டளை; ஆண்டவன் ஆணை; தேவ சாஸ்திர விதி ; குலதர்மம் .

சிவாஜி : நல்ல தர்மம்! நல்ல கட்டளை ! நல்ல ஆணை!

காகப்பட்டர் : சிவாஜி என்னிடம் தர்க்கிக்கவா துணிகிறாய்?

சிவாஜி : நான் தர்கிக்கவில்லை; சந்தேக விளக்கம் கேட்டேன்.

காகப்பட்டர் : சாஸ்திரத்தை சந்தேகிப்பதே பாவம். தெரியுமா உனக்கு? அது கேவலம் நாஸ்திகாளின் செயல். நாஸ்திகளுக்கு என்ன நேரிடும் தெரியுமா? ரெளரவாதி நரகம் சம்பவிக்கும்.

சிவாஜி : அது இறந்த பிறகுதானே?

காகப்பட்டர் : ஆமாம் இங்கேயும் உண்டு இம்மை.

சிவாஜி : நான் பாடுபட்டேன். அதன் பலனை அனுபவிக்க நினைப்பது தவறா? பாவமா? அரசு அமைத்தேன், வாள் பலத்தால் ஆள்வதற்கு மட்டும் ஆரிய பலம் வேண்டுமா என்று கேட்கின்றனர்.

காகப்பட்டர் : நீயேதான் கேளேன் அதனால் என்ன? சிவாஜி வீரன்தான், போர் பல கண்டவன் தான். எதிரியின் மண்டைகள் சிதற, மலைகள் அதிரபோரிட்டவன் தான். ஆயினும் என்ன? அவன் பூசுரனல்லவே. நமது மதக் கோட்பாட்டின் படி க்ஷத்திரியனே மன்னனாக முடியும். சூத்திர சிவாஜி எங்ஙனம் முடிசூட முடியும் என்று நான்
கேட்டதாக நீ கேள்.

ஆட்சிக்கு வருவதென்பது அவ்வளவு கடினமானதல்ல. சதிபல புரிந்து, வாரிசுகளைச் சிதைத்துப் பலர் மன்னராயினர். மன்னரை மயக்கி ஒழித்து, மந்திரிகள் பலர் முடி சூடினர். மன்னரையும், மந்திரியையும் ராணுவத்தைக் காட்டி மிரட்டி, படைத்தலைவன் பீடத்தில் அமர்ந்திருக்கிறான்.

சிவாஜி : நான் சதி செய்தல்ல ராஜ்யம் பெற்றது. வீர வெற்றிகள் பெற்றிருக்கிறேன்.

காகப்பட்டர்: நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆகவேதான் சூத்திர குலத்தில் பிறந்தாலும் உன்னை க்ஷத்திரியனாக்கத் தீர்மானித்திருக்கிறேன். உனக்குப் பெருமை தந்தேன்.

சிவாஜி : அந்தப் பெருமையை என் தளபதிகள் உணரவில்லை.

காகப்பட்டர் : சிவாஜி நீ க்ஷத்திரியனாக்கப்பட்டால் தான் பரத கண்டம் முழுவதும் உள்ள பிராமணோத்தமர்கள் உன்னை ஆசீர்வாதம் செய்வர். அந்த ஆசிர்வத பலம் இல்லாத அரசு ஆண்டவனால் அழிக்கப்பட்டு விடும். இதற்கு ஆதாரம் சாஸ்திரம். மூலம் வேதம், வேதம் அனாதி காலத்தது. தேவன் தந்தது. அதன் பாஷ்யம் கூறும். அருகதை பெற்றவரே ஆரியர். ஆரியர் தேவர்.

சிவாஜி, சாஸ்திரத்தின்படி நடக்கச் சம்மதம் இல்லாவிட்டால் கூறிவிடும். என் காலத்தை வீணாக்காதே. எனக்கு வேலை இருக்கிறது.

சிவாஜி : உமது யோசனையை ஏற்க மறுத்தால்?

காகப்பட்டர் : யோசனையல்ல, கட்டளை !

சிவாஜி : சிவாஜிக்கு கட்டளை பிறப்பிக்கும் துணிவு .. !

காகப்பட்டர் : ஆரியருக்கு உண்டு, அவர்கள் பூதேவரானதால்.

சிவாஜி : கட்டளையை மறுக்க முடியும் என்னால்.

காகப்பட்டர் : முடியாது. மறுத்தால் முடி கிடையாது.

சிவாஜி : முடியாதா? என்னால் முடியாதா? காகப்பட்டரே உற்றுப்பாரும், யார் என்று பாரும் !

காகப்பட்டர் : வீராதி வீரன் அதனால் என்ன? நீ சாஸ்திரத்துக்குச் சம்மதித்தே ஆகவேண்டும்.

சிவாஜி : முடியாது என்றால் என்ன செய்வீர்?

காகப்பட்டர் : நானா! என்ன செய்வேன்? சரி என்று கூறி விட்டுப் போய்விடுவேன். ஆனால் முடியாது என்று சொல்லி வாய்மூடுமுன் தெய்வத்தின் சாபம் உன்னைத் தீண்டும்.

சிவாஜி : என்னை மிரட்டுவது முடியாத காரியம். என் ராஜ்யத்திலே என் இஷ்டப்படி நடக்க எனக்கு உரிமை உண்டு.

காகப்பட்டர் : உண்மை. உதாரணமாக நீ என்னைக் கொன்றுவிடக்கூட அதிகாரம் உண்டு. செய்து பார்.

சிவாஜி : காகப்பட்டரே! சிவாஜியின் சித்தம் கலக்கத்தை அறியாதது. கொன்றால் என்ன நடந்துவிடும்?

காகப்பட்டர் : என்ன நடக்கும் என் உயிர் போகும். ஆனால், என் பிணம் வேகுமுன் உன் ராஜ்யம் சாம்பலாகும்.

சிவாஜி : எவ்வளவு ஆணவம்?

காகப்பட்டர் : யாருக்கு?

(சிவாஜி மெளனமாக)

சிவாஜி : என்னென்ன சடங்குகள் நடைபெறவேண்டும்?

காகப்பட்டர் : பரத கண்டத்திலே பல பாகங்களிலிருந்து பிராமணோத்தமர்களை வரவழைத்துச் சமாராதனை நடத்தி தட்சணை தர வேண்டும்.

சிவாஜி : சாஸ்திர விதிப்படிதானா அதுவும்?

காகப்பட்டர் : ஆம் தானாதி காரியமூலம் ஆசிர்வாதம் பெற உன் பாவத்தை நீ கழுவிக் கொள்ள வேண்டும்.

சிவாஜி : பாவமா? எனக்கா? நான் வஞ்சிக்க வில்லையே. பொய்யனல்லவே. புரட்டனல்லவே?

காகப்பட்டர் : நீ பஞ்சமா பாதகத்திலே மிஞ்சியதாம் கொலை பாதகத்தைச் செய்தவன்.

சிவாஜி : யாரை?

காகப்பட்டர் : களத்திலே பலரை.

சிவாஜி : சரி! பிறகு நடக்க வேண்டியதைக் கூறும்.

காகப்பட்டர்: ஹோமம்,

சிவாஜி : விறகு, நெய்.

காகப்பட்டர் : மலை உயரம் விறகு; மடு ஆழம் நெய்.

சிவாஜி : பிறகு?

படிக்க:
தூத்துக்குடியின் தியாகிகளே | மகஇக பாடல் | காணொளி
அய்யர் சொல்லிட்டா அப்பீல் ஏது ?

காகப்பட்டர் : துலாபாரம்

சிவாஜி : துலாபாரமா?

காகப்பட்டர் : ஆம் உன் எடைக்கு எடை நவரத்தினங்கள், தங்கம், வெள்ளி முதலிய உலோகங்கள், பட்டு முதலியன நிறுத்தி தானம் செய்ய வேண்டும்.

சிவாஜி : யாருக்கு? ஏழைகளுக்கா?

காகப்பட்டர் : இல்லை … பிராமணர்களுக்கு.

(தொடரும்)

நன்றி: Project Madurai

முந்தைய பகுதி: சந்திரமோகன் | சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க