மே 22 அன்று தூத்துக்குடியில் 17 வயது சிறுமி ‘தொழில் வளர்ச்சிக்கு எதிராக போராட முன்வந்ததால்’ துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்படுகிறார். ஜூலை 7 அன்று காஷ்மீரில் 16 வயது சிறுமி “தேச நலனுக்கு எதிரானவர்” என முத்திரை குத்தப்பட்டு இந்திய இராணுவத்தின் குண்டுகளால் சாகடிக்கப்படுகிறார்.

ஆம், இன்று அரசின் அத்தனை அட்டூழியங்களும் ‘வளர்ச்சி & தேசநலன்’ என்ற பிராண்டின் பெயர் கொண்டே அரங்கேற்றப்படுகின்றன. பெருந்தனக்காரர்களும் உயர்சாதியினரும் கூடிக் குலாவி அதிகாரத்தில் கும்மாளமிடுகின்றனர்.

இவர்களின் ஆட்டத்தை முடக்கி முடிவுக்கு கொண்டு வருவது ஜனநாயக சக்திகளின் முதன்மைப் பணி. நித்தம் நித்தம் நடைபெறும் போராட்ட அனுபவங்களிலிருந்து படிப்பினைப் பெற்று உரிமைக்கான களத்தினை செறிவாக்கி விரிவுபடுத்த வேண்டியுள்ளது. அத்தகு பணிக்கு உதவியாய் இப்பிரசுரத்தை வெளியிட்டுள்ளோம்.

தமிழக மண்ணில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி 22 ஆண்டுகாலம் தொடர்ந்து மக்களால் நடைபெற்ற இயக்கம் இது. அரசு வன்முறை 13 மனித உயிர்களை பலிகொண்டும், எண்ணற்றோரை முடமாக்கியும் கூட மக்கள் இயக்கம் தற்போது வெற்றி கண்டுள்ளது. உலகமே திரும்பிப் பார்க்கவைத்த இவ்வியக்கத்தின் போராட்ட வரலாற்றை அரசின் வன்முறை வெறியாட்டத்தை மக்கள்திரளின் உணர்வோட்டத்தினை சுருக்கமாக இந்நூல் உள்ளடக்கியுள்ளது. போராடும் இயக்கங்களை அமைப்புகளை மக்களுக்கு எதிராக நிற்கவைக்க அரசு எடுக்கும் நயவஞ்சக செயல்பாடுகளைத் தோலுரித்து காண்பிக்கின்றன இந்நூலில் உள்ள எழுத்துக்கள். (நூலின் முன்னுரையிலிருந்து)

உண்மை அறியும் குழுவின் அறிக்கையிலிருந்து சில பகுதிகள் :

…  போராட்டம் துவங்கிய  நாள் முதற்கொண்டே, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மாவட்டத்தின் நிர்வாக நடுவர் என்ற முறையிலும், தமிழக அரசு உள்துறை செயலாளர், தமிழக காவல் துறைத் தலைவர். டி, ஜி.பி., மாவட்ட காவல் கண்காணிப்பாளர்- எஸ். பி. ஆகியோருடன் கலந்தாலோசித்து, நிலைமையை மதிப்பீடு செய்து நேரடியாக போராட்ட இடத்திற்கே சென்றிருக்க வேண்டும். நிலைமை குறித்த மதிப்பீட்டை அறிக்கையாக முதலமைச்சருக்கும் உள்துறை அமைச்சருக்கும் மேல் நடவடிக்கைக்காக தந்திருக்க வேண்டும். ஆனால், போராட்டத்தின் 100 வது நாள் வரை இது செய்யப்படவில்லை. இத்தகைய கடமை பிறழ்வு, தன்னிச்சையான- நீதிக்கு அப்பாற்பட்ட வகையிலான 13 பேரின் உயிர் பறிப்பு மற்றும் அதிகாரப்பூர்வ ஆவணங்களின் படியே 100 க்கும் மேற்பட்டோரின் காயங்களுக்கும் இட்டுச் சென்றுள்ளது. இது உலகளாவிய அவமானமாகும்.

இக்கொடூரம் நிகழ்கிறவரை முதலமைச்சரோ, மக்கள் பிரதிநிதிகளோ தூத்துக்குடி செல்லவில்லை. போராட்டம் நடந்தேறிய 100 நாட்களும் இவர்கள் செல்லாததால் மக்களோடு சமாதானப் பேச்சுவார்த்தைகளும் நடத்தப்படவில்லை. இதனால்தான் 100 வது நாள் ஓர் பெருந்திரள் பேரணியை நடத்தி கவனத்தை ஈர்க்க வேண்டிய கட்டாயத்திற்கு அம்மக்கள் தள்ளப்பட்டனர் என்று இக்குழு கருதுகிறது.

காவல்துறை மே 22 பேரணியில் பங்கேற்கிற மக்களின் உணர்வுகள், திரள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளைக் கூட மேற்கொள்ளாதது தற்செயலானதா என ஐயம் எழுகிறது.

… பேரணியை ஒழுங்குபடுத்த முன்னேற்பாடுகள் இல்லாததும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் மக்கள் நுழைவதைத் தடுப்பதற்கான ஏற்பாடுகளும் இல்லையென்பது கேள்விகளை எழுப்புகிறது.

சந்தோஷ் என்பவரின் சாட்சியத்தின்படி, மாவட்ட ஆட்சியரகம் அருகில், அவர் காவல்துறையால் கடுமையாகத் தாக்கப்பட்டு, தலைக்காயம், ரத்தக் காயங்களுக்கு ஆளாகிறார். அப்போது அவர் ஒரு வாகனம் நெருப்பிற்கு இரையாவதைப் பார்த்திருக்கிறார். ஆனால் அப்போது மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் வந்திருக்கவில்லை. அப்படியெனில் மாவட்ட ஆட்சியரகத்தில் நெருப்பு வைத்தது யார்?’ என்ற கேள்வி எழுகிறது. இது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு யார் இதைச் செய்தார்கள் என்பது கண்டுபிடிக்க வேண்டும்.

சந்தோஷ் கூற்றின் படியும், ஊடகங்களின் தகவல்கள்படியும் காயமுற்ற அவர் கண்முன்னே ஒருவர் காவல்துறையின் துப்பாக்கித் தோட்டாவிற்கு பலியாகி இருக்கிறார். சந்தோஷ் தனது உயிர் தப்பியதற்கு ஊடகங்களே காரணம் என்றார். அவர் இருமுறை காவல்துறை மக்களை முன்செல்ல அனுமதித்து விட்டு பின்னே இருந்து தாக்கியதைக் கண்டுள்ளார். இது கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்கான சர்வதேச நெறிமுறைகளுக்கு முரணான செயலாகும்.

படிக்க:
மே – 22 : அழுவதற்கும் அனுமதி மறுப்பு ! தடையை மீறி நினைவேந்துவோம் !
இது எங்க நிலம்டா… நீ பாட்டுக்கும் குந்துனாப்ல வந்து குழாய் பதிப்பியா ?

… எந்த முன் அறிவிப்புமின்றி காவல்துறை துப்பாக்கிச் சூட்டைத் துவக்கி நடத்தியுள்ளது. மேலும் இரும்புக் கம்பிகள், மரக்கம்புகள், கற்கள், லத்திகள் கொண்டும் போராட்டக்காரர்களைத் தாக்கியுள்ளது. போராட்டக் குழுவினரின் முடிவின்படி கொடிகள், பதாகைகளுக்கான கம்புகள் கூட இல்லாமல் நிராயுதபாணிகளாக வந்த மக்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள இக்கொடூரம் திட்டமிட்டு போராட்டத்தை ஒடுக்குவதற்காக நிகழ்த்தப்பட்டிருப்பதே ஆகும். இது காவல்துறை நிலையாணை 703-ல் சட்டபூர்வமற்ற மக்கள் திரளைக் கலைப்பதற்காக கூறப்பட்டுள்ள வழிகாட்டல்களை மீறிய செயலாகும்.

… “சட்ட பூர்வமற்ற திரள்” என்ற சொல் பிரயோகம் கூட திரும்ப திரும்ப மாவட்ட நிர்வாகத்தால் நோக்கத்தோடு பயன்படுத்தப்படுவதே ஆகும். உண்மையில் போராட்டக்காரர்கள் மே 22 அன்று மாவட்ட ஆட்சியரிடம் மகஜர் அளிப்பதற்கு பேரணியாய் செல்ல நல்ல கால அவகாசத்தோடு அனுமதி கோரியிருந்தார்கள். எனவே, இதை சட்டபூர்வமற்ற திரள் என்று கூறுவது பொருத்தமானது அல்ல என இக்குழு கருதுகிறது, “புகைப்படங்களின் வாயிலாக இறந்தவர்களுக்கு ஏற்பட்ட காயங்கள், நேரில் சந்தித்த காயமுற்றோரின் ரணங்கள் இவற்றையெல்லாம் பார்க்கும் போது காவல்துறை மக்கள் முதுகின் பின்னிருந்து சுட்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது.

… காவல்துறை என்ன ஆயுதங்களை கலவரங்களின் போது பயன்படுத்தலாம் என்பதற்கான வரையறைகள் இன்சாஸ்-6 (INSAS 6)-ல் தரப்பட்டுள்ளது. அதுவும் ஆயுதப்படையினரால் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். பக்க ஆயுதங்கள் சில RV 65, 68, 43, 77 போன்றவை தற்காப்புக்காகவும், நெருக்கமான வட்டத்திற்குள்ளான பயன்பாட்டிற்கும் மட்டுமே பயன்படுத்த காவல் அலுவலர்களுக்கு வழங்கப்படுகிறது. இங்கு துப்பாக்கி சூட்டிற்கான ஆணை தேர்தல் பணியில் இருந்த சிறப்பு துணைத் தாசில்தாரால் தரப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் தாசில்தார் ஆகியோர் எல்லாம் இருந்தும் இத்தகைய மிக முக்கியமான முடிவு படிநிலையில் கீழுள்ள துணை தாசில்தாரால் எப்படி இதையெல்லாம் மீறி எடுக்கப்பட்டது. அரசு இது பற்றி விளக்காமல் மௌனம் சாதிப்பது சரியல்ல என இக்குழு கருதுகிறது.

… இ.த.ச பிரிவுகளுக்கு மாறாக துப்பாக்கி சூட்டை நடத்தியுள்ளது. மக்கள் திரளைக் கலைந்து போகச் செய்ய எந்த எச்சரிக்கையும் தரப்படவில்லை. திடீரென காவல்துறை துப்பாக்கி சூட்டை மேற்கொண்டுள்ளது. இதை தோட்டாக் காயங்களோடு உயிர் பிழைத்திருப்பவர்கள் உறுதி செய்கிறார்கள். முழங்காலுக்கு கீழே சுடாமல் கழுத்து, தலை என காவல் துறை சுட்டு வீழ்த்தியிருப்பது சட்ட விரோதம் என்பதால் இ.த.ச 302 பிரிவின் கீழ் கொலை வழக்கை பதிவு செய்யலாம்.

… காவல் துறை நிலையாணை 703, ஆயுதமற்ற திரளை கலைந்து போகச் செய்வது தொடர்பானதாகும், தூத்துக்குடி போராட்டக்காரர்களும் ஆயுதமற்றவர்களே. ஆனால் அவர்களை கடுமையாக லத்தி மூலம் கலைந்து போகச் செய்தது தேவையற்றதாகும். இப்பிரிவு வலியுறுத்துவது என்னவெனில், கூட்டத்தைக் கலைக்கிற முடிவு கூட கட்டுப்பாட்டோடு அதன் நோக்கம் நிறைவேறிவிட்டால் உடனே நிறுத்தப்பட வேண்டும். ஆனால் இக்குழு பாதிக்கப்பட்டோரை சந்தித்த பின்னர் என்ன முடிவுக்கு வந்திருக்கிறதெனில், காவல் துறைதான் கட்டுக்கடங்கா கும்பலாக நடந்து கொண்டிருக்கிறார்களே தவிர போராட்டக்காரர்கள் அல்ல. இது தொலைக் காட்சி ஒளிபரப்பிலும் வெளிக் கொணரப்பட்டது. தமிழக அரசோ ஊடக ஒளிபரப்பை தடுக்க ஜாமர்களை பயன்படுத்தியதோடு, சமுக வலைத்தளங்களான பேஸ் புக், வாட்ஸ் அப், ட்விட்டர் ஆகியவற்றை மூன்று நாட்களுக்கு தூத்துக்குடி, விருதுநகர், திருநெல்வேலி மாவட்டங்களில் முடக்கியது.

நூல்:ஸ்டெர்லைட் போராட்டம் அரசு வன்முறை
ஆசிரியர்கள்: உ. வாசுகி & உண்மை அறியும் குழு அறிக்கை

வெளியீடு: பாரதி புத்தகாலயம்,
7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை – 600 018.
தொலைபேசி எண்: 044 – 2433 2424.
மின்னஞ்சல் : thamizhbooks@gmail.com

பக்கங்கள்: 48
விலை: ரூ 35.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று

முகவரி :
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு :

வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி : 99623 90277

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

இணையத்தில் வாங்க: periyarbooks 


தவறாமல் பாருங்க …

தூத்துக்குடியின் தியாகிகளே | மகஇக பாடல் | காணொளி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க