சந்திரமோகன் | சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் | நாடகம் | பாகம் – 18


காட்சி : 25 (தொடர்ச்சி…)

இடம் : தர்பார்
உறுப்பினர்கள் : காகப்பட்டர், ரங்கு பட்டர், தளபதிகள், வீரர்கள், சிவாஜி, மோரோபந்த், சிட்னீஸ்.

காகப்பட்டர் : பட்டாபிஷேகம் பாப காரியம் சாஸ்திரம் சம்மதம் இல்லை துளியும் துருவி துருவிப் பார்த்தும் பலனில்லை. நான் சம்மதிக்க முடியாது சிட்னீஸ்.

சிட்னீஸ் : ஏன்? ஏன் சம்மதிக்க முடியாது? தாங்களே கூறினீரே, சாஸ்திர முறைப்படி பட்டாபிஷேகம் செய்யலாமென்று. இப்போது தாங்களே மறுக்கிறீரே! மராட்டியரின் களிப்பைச் சிதைக்கிறீரே!

காகப்பட்டர் : சாஸ்திரத்தை மீண்டும் பார்த்தேன். சாங்கோ பாங்கமாக தீர்க்கமாக யோசித்தேன். என்ன செய்வேன் சிட்னீஸ்? சிவாஜிக்கு மகுடாபிஷேகம் செய்வது பாபகாரியம் என்றே தோன்றுகிறது. நான் சம்மதிக்க முடியாது.

சிட்னீஸ் : வீணையைக் காட்டி நரம்பை ஒடிக்கிறீரே!

காகப்பட்டர் : ஆர்வம் மிக்கவனே ! ராஜபக்தி, சினேக பக்தி, உனக்கு முக்கியமான குணங்கள் அவை. ஆனால் தேவ பக்தியை நான் இழக்கலாமோ? இவ்வளவு ஏடுகளும் கூறுகின்றனவே பாப காரியம். பாப காரியம் என்று. நான் என்ன செய்ய?

சிட்னீஸ் : இந்த ஏடுகளையெல்லாம் நாடு, ஏற்காது ஸ்வாமி. மராட்டிய மணிமுடியை அவர் தரித்தே ஆக வேண்டும். கண் இருக்கும் போதே அதைக் காண வேண்டும் என்று துடிக்கிறது மராட்டியம்.

காகப்பட்டர் : பரிதாபமாகத்தான் இருக்கு. நான் என்னத்தைச் செய்ய? பாலைவனத்திலே புகுந்த பிறகு தாகவிடாய் ஏற்பட்டால் கஷ்டந்தான்.

சிட்னீஸ் : உவமை கூற இதுவா ஸ்வாமி சமயம்?

காகப்பட்டர் : என்னை என்ன செய்யச் சொல்கிறாய்? உன் நாட்டு மக்களை மகிழ்விப்பதற்காக என்னைப் பாபி ஆகும் படி சொல்கிறாயா? என் தவம், ஞானம், நேமம், நிஷ்டை , அருள் இவைகளையெல்லாம் நாசம் செய்து கொள்ளச் சொல்கிறாயா? சிட்னீஸ்! நீ காகப்பட்டரை நன்னா அறிய மாட்டாய். சாஸ்திர சம்மதமற்றக் காரியத்தைச் செய்யச் சொல்லி சர்வேஸ்வரனே வந்து சொன்னால் கூடச் செய்ய மாட்டேன். ஆகமாதிகளை மேலும் ஆராய்ந்த பிறகுதான் இந்த முடிவுக்கு வந்தேன். மேலும் இந்த மண்டலத்தின் முதன் மந்திரி. முதல் மந்திரி முறையிலே இருக்கிற மோரோ பண்டிதர் என்னும் பிராமணோத்தமர் கூட இதை எதிர்த்தாராமே?

சிட்னீஸ் : ஓஹோ! அவருடைய வேலையா இது? மோரோ பண்டிதரைச் சந்தித்ததின் விளைவா இது?

காகப்பட்டர் : பைத்தியக்காரா? ஏண்டா வீணா அவர் மேலே சந்தேகப்பட்டு பாபத்தை தேடிக் கொள்றே இதோ பார்! டே ரங்கு கொஞ்சம் வெளியே போய் இரு. யாரும் இங்கே வரப்படாது. ஜாக்கிரதை, போ! இதோ பார், சிட்னீஸ் நீ காயஸ்த குலம், க்ஷத்திரியனாகலாம். சிவாஜி க்ஷத்திரியனாக முடியாது. இப்போது சம்மதம்னு சொல்லு. ராஜ்யாபிஷேகம் செய்து வைக்கிறேன். உனக்கு முடி தரித்துக் கொள். மராட்டியத்துக்கு மகாராஜனாக்குகிறேன்.

(பதறி)

சிட்னீஸ் : என்ன, என்ன? எனக்குப் பட்டமா? சிவாஜி சிருஷ்டித்த ராஜ்யத்துக்கு நான் ராஜனாவதா?

காகப்பட்டர் : நான் ஆக்றேண்டா ராஜனா?

சிட்னீஸ்: (ஆத்திரமடைந்து ) சாஸ்திரம் இதற்குச் சம்மதிக்கிறதா? நியாயம், நீதி இதிலே இருக்கிறதா? ஆகமம் இந்த அக்கிரமத்துக்கு ஆதரவு தருகிறதா? ஸ்வாமி! என்னைப் பரீட்சிக்கிறீரா?

காகப்பட்டர் : பைத்தியக்காரா? உண்மையைத் தாண்டா சொல்றேன். உனக்குப் புத்தியிருந்தா பூபதியாகலாம். முறையல்ல, நெறியல்ல, தர்மமல்ல என்றெல்லாம் தயங்கினா பலன் இல்லையே. தர்மம் எது? அதை நான் கவனித்துக் கொள்கிறேன். உனக்குச் சம்மதமா?

சிட்னீஸ் : இந்தச் சதிக்கா? சண்டாளச் செயலுக்கா?

காகப்பட்டர் : மந்த மதியடா உனக்கு.

சிட்னீஸ் : நொந்து கிடக்கும் மனதிலே தீ மூட்டாதீர். சிவாஜிக்கு மகுடாபிஷேகம் செய்ய வந்து, சிவாஜியின் மாளிகையிலே இருந்து கொண்டே, சிவாஜிக்கு உரிய ராஜ்யத்தை, சிவாஜிக்கு சேவை செய்யும் எனக்கு, ஆஹா என்னால் கேட்டுச் சகிக்கவும் முடியவில்லை. இந்தச் செயலால் சிட்னீஸைத் துரோகியாகும்படிச் சொல்கிறீர். தூபமிடுகிறீர். இவ்வளவு ஏடுகளும் உமக்கு இந்த அநீதியையா காட்டுகின்றன?

காகப்பட்டர் : சிட்னீஸ்! சித்தத்திலே சீற்றம் குடிபுகுந்தால் பலன் என்ன? கலக்கம், குழப்பம். இப்படிப்பட்ட சமயத்திலே வரத்தான் செய்யும். தர்மமா? அதர்மமா? பாபமா? புண்ணியமா? என்றெல்லாம் எண்ணிக் குழப்பம் அடையறே. சிவாஜி நம்முடைய உயிர்த் தோழனாயிற்றே, அவனுக்குத் துரோகம் செய்யலாமான்னு எண்ணித் திகைப்பு அடையறே.. குருக்ஷேத்திர பூமியிலே இதே நிலை அர்ச்சுனனுக்கு ஏற்பட்டது. காண்டீபத்தைக் கீழே போட்டுவிட்டான். பரந்தாமன் சொன்னார் ‘பார்த்திபா அண்ணன் தம்பிகள் என்றும், பந்து மித்திரர்கள் என்றும் எண்ணிக் கலங்காதே, என் மேலே பாரத்தைப் போட்டுவிடு, ஆரம்பி யுத்தத்தை என்று. கீதா வாக்கியம் தெரியுமா சிட்னீஸ் உனக்கு? என் மீது பாரத்தைப் போட்டுவிட்டு தைரியமாகச் சம்மதித்துவிடு.

சிட்னீஸ் : வேதியரே! எனக்கு உம்மைப் பார்க்கவும் கூசுகிறது.

காகப்பட்டர் : முட்டாளே! முடியடா முடி மராட்டிய மண்டலத்தின் மணிமுடி . சாம்ராஜ்யம், செங்கோல், சிம்மாசனம். ராஜயோகம் மன்னனாக வேண்டிய சிவாஜியும், அவனைச் சேர்ந்தவாளும் எதிர்ப்பாரே என்ற பயமா? நானிருக்கப் பயமேன்? நாட்டு மக்களைக் கூட்டி உன் பக்கம் நிற்கச் செய்கிறேன்.

சிட்னீஸ்: போதுமையா உமது போதனை. சிங்கத்தின் உணவைத் திருடும் சிறுநரி என்று எண்ணினீரோ என்னை?

காகப்பட்டர் : நரிக்குப் புத்தி உண்டு நீ மகா மண்டு போடா.

சிட்னீஸ் : உன் எதிரே நிற்பது கூடப் பாபம். என் வாழ்நாளில் நான் இப்படிப்பட்ட வஞ்சகத்தைக் கண்டதே இல்லை.

(போகிறான்; ரங்கு வருதல்)

ரங்கு : என்ன ஸ்வாமி இது? புயல் கிளப்பி விட்டீரோ?

காகப்பட்டர் : புயல் என் கோபம் ; தென்றல் என் சிரிப்பு ; மண்டலம் நம் கமண்டலத்துக்குள் அடக்கம்.

ரங்குப்பட்டர் : ஸ்வாமி, சிட்னீஸ் உம்முடைய திட்டத்தை ஏற்றுக் கொள்ளமாட்டேன்னு பிடிவாதமா சொல்லி விட்டானே?

காகப்பட்டர் : ஆமாம் அவனுக்கு என்ன ஆத்திரம், அழுகை வந்தது தெரியுமோ? சரியான பயல்களெல்லாம் கிடைத்திருக்காண்டா இந்த சிவாஜிக்கு.

படிக்க:
குஜராத் விவசாயிகள் மீது பெப்சி நிறுவனம் தொடுத்த போர் !
பேராசிரியர் சாய்பாபாவை வதைக்கும் சிறை நிர்வாகம் !

ரங்குப்பட்டர் : இப்ப அவன் இருக்கிற நிலையை கவனிச்சா அவனாலே ஏதாவது வம்பு வருமோன்னு தோன்றது ஸ்வாமி.

காகப்பட்டர் : நானும் கூடத்தான் அப்படி எண்றேன். இனி நாமும் முடிவுக்கு வந்தாகணும்.

ரங்குப்பட்டர் : ஆமாம் ஸ்வாமி இப்படிச் சதா ஊஞ்சல் ஆடுகிற மாதிரி இருந்தா ……

காகப்பட்டர் : திடீர்னு அறுந்து போனாலும் போகும்.

ரங்குப்பட்டர் : ஆமாம், சிட்னீஸ் சீறினதைப் பார்த்தா இனித் தங்களுடைய சம்மதத்தைக் கேட்காமலே கூட பட்டாபிஷேகத்தை நடத்திவிடுவான் போல இருக்கு.

காகப்பட்டர் : அப்படிச் செய்யமாட்டான்! சரி, எதற்கும் இனி கால தாமதம் செய்யக்கூடாது. நீ சென்று மோரோபந்தைக் கண்டு அவரிடம் சொல்லிவிடு . குரு பலமான சாஸ்திர விசாரணைக்குப் பிறகு சிவாஜிக்குப் பட்டம் சூட்டிவிடுவதுண்ணு தீர்மானித்து விட்டார். ஆரிய தர்மத்தைக் காப்பற்ற அதுதான் சிறந்த மார்க்கம் என்று குரு நம்பறார். உம்மிடம் சொல்லச் சொன்னார். விசாரப்பட வேண்டாம்; பயமும் வேண்டாம்ணு. அவரிடம் வினயமாய்ச் சொல்லிவிடு. டே ரங்கு என் ஏற்பாட்டிற்கு அவரையும் சம்மதிக்கச் சொல்லு.

ரங்குப்பட்டர் : ஆகட்டும். இதோ போகிறேன்.

காகப்பட்டர் : அங்கு எங்காவது அழுது கொண்டிருப்பான். அந்த அசட்டுச் சிட்னீஸ். அவனிடம் சொல்லு. உன் ராஜ் விசுவாசத்தையும், திடமனதையும் உத்தம் குணத்தையும் மெச்சிண்டிருக்கிறார். உன்னைக் குரு சோதிச்சுப் பார்த்தார். நீ துளி கூட சத்தியத்திலே இருந்து தவறாமல், துளி கூட மனமயக்கமே காட்டாததைப் பார்த்து பூரிச்சுப் போனார். பட்டாபிஷேகத்துக்கான காரியத்தைத் துரிதப்படுத்தப் சொன்னார். அப்படீன்னு சொல்லுடா.

ரங்குப்பட்டர் : ஸ்வாமி! இப்ப முடிவான தீர்மானமாயிடுத்துன்னு அர்த்தமோ?

காகப்பட்டர் : ஆமா! சிவாஜிக்குத்தாண்டா பட்டாபிஷேகம்.

ரங்குப்பட்டர் : குருதேவர் முதலில் முடியாது என்றீர். பிறகு சம்மதம்ணு சொன்னீர். மறுபடியும் முடியாதுண்ணு சொல்லி விட்டீர். இப்படி மறுபடியும் சம்மதம்ணு சொல்றா.

காகப்பட்டர் : நாலு முறை கர்ணம் அடித்தேன்னு சொல்றியோ!

ரங்குப்பட்டர் : கர்ணம் போட்டதாகச் சொல்வேனா குரு

காகப்பட்டர் : சீடனல்லவா சொல்லமாட்ட டே ரங்கு! நாலு கர்ணம்தான் அடித்தேன். அதிலேதப்பு என்னடா? நமக்கு இருப்பது நாலு வேதம்டா, நாலு. தெரியுமோ? போ, போ போய்ச் சொன்னதைச் செய்யடா.

(போகிறான்)

(தொடரும்)

நன்றி: Project Madurai

முந்தைய பகுதி: சந்திரமோகன் | சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க