அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் : பாகம் 20

காலமும் மனிதனும்
அ. அனிக்கின்
அ.அனிக்கின்

பொருளாதார நிகழ்வுப் போக்குகளில் இருக்கின்ற புறவயமான விதிகளை வாணிப ஊக்கக் கொள்கையினர் பார்க்கவில்லை. பொருளாதார நிகழ்வுப் போக்குகளில் ஒழுங்கை ஏற்படுத்துவதும் கட்டுப்படுத்துவதும் ஆட்சியிலிருப்போரின் மனதை மட்டுமே பொறுத்திருக்கிறது என்று அவர்கள் கருதினார்கள். பொருளாதாரத்தில் இன்று நாம் ‘விருப்பச் செயல்முறை’ என்று சொல்வது வாணிப ஊக்கக் கொள்கையினரின் தனிச்சிறப்பான அம்சமாக இருந்தது.

பொருளாதாரத்தில் புறவயமான, புலனறிவுக்கு உட்பட்ட விதிகள் இருக்கின்றன என்ற கருத்தை முதன்முறையாக வெளியிட்டவர் பெட்டி; அவர் இந்த விதிகளை இயற்கையின் விதிகளுக்கு ஒப்பிட்டு இயற்கையான விதிகள் என்று பெயரிட்டார். அரசியல் பொருளாதாரம் ஒரு விஞ்ஞானமாக வளர்ச்சியடைவதில் முன் எடுத்து வைக்கப்பட்ட மாபெரும் காலடி என்றே இதைக் கூற வேண்டும்.

உற்பத்தி, பகிர்ந்தளிப்பு, பரிவர்த்தனை, செலாவணி போன்ற அடிப்படையான பொருளாதார நிகழ்வுப் போக்குகள் முறையான, பெருந்திரளான வடிவத்தைப் பெறுகின்றவரை, மனித உறவுகள் பண்ட -பணத் தன்மையைப் பெற்று மேலோங்குகிற வரை பொருளாதார விதி என்ற உண்மையான கருத்து ஏற்பட முடியாது.

பண்டங்களை வாங்குவதும் விற்பதும், உழைப்பை விலைக்குப் பெறுதல், நிலத்தைக் குத்தகைக்கு விடுதல், பணவியல் செலாவணி ஆகிய உறவுகள் ஒப்பளவில் முழுமையாக வளர்ச்சி அடைந்தாலொழிய, இவை அனைத்தும் புறவயமான விதிகளின் இயக்கத்தை வெளிப்படுத்துகின்றன என்ற முடிவுக்கு மக்கள் வரமுடியாது, வாணிப ஊக்கக் கொள்கையினர் பொருளாதார நடவடிக்கையின் ஒரு துறையில் அந்நிய வர்த்தகம் என்ற துறையில் மட்டுமே மிகவும் அதிகமான அக்கறை காட்டினர். ஆனால் பெட்டி இதற்கு மாறாக நடந்து கொண்டார்; அவர் அந்நிய வர்த்தகத்தைப் பற்றி எத்தகைய அக்கறையும் காட்டவில்லை. அவர் கூலி முன்னேற்றம், நில வாரம், இன்னும் வரி விதிப்பு முதலியவற்றை நிர்ணயிக்கின்ற, அடிக்கடி ஏற்படுகின்ற விதிகளுக்கு உட்பட்ட நிகழ்வுப் போக்குகளில் அக்கறை காட்டினார்.

17-ம் நூற்றாண்டின் இறுதியில் இங்கிலாந்து அதிகமான வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடாக மாறியிருந்தது – இது அடிப்படையில் முதலாளித்துவ வளர்ச்சியில் பட்டறைத் தொழில் கட்டம்.  இந்தக் கட்டத்தில் அதன் வளர்ச்சி புதிய இயந்திரங்களை உபயோகிப்பதாலும் புதிய உற்பத்தி முறைகளைப் பின்பற்றுவதாலும் ஏற்பட்டதல்ல; பழைய தொழில் நுட்பத்தின் அடிப்படையில் முதலாளித்துவ வேலைப் பிரிவினையை விரிவாக்கியதன் மூலம் அதன் வளர்ச்சி சாத்தியமாயிற்று.

உதாரணமாக, ஒரு தொழிலாளி ஒரு குறிப்பிட்ட வேலையைச் சிறப்புச் செயலாகச் செய்கிற பொழுது அதில் அதிகமான திறமையைப் பெறுகிறார்; எனவே உற்பத்தித் திறன் அதிகரிக்கிறது. அரசியல் பொருளாதாரத்தில் வேலைப் பிரிவினையை உயர்வாகப் பாராட்டுகின்ற வழக்கத்தைப் பெட்டி தொடங்கினார். அவர் கடிகாரம் செய்கின்ற உதாரணத்தின் மூலம் அதன் திறமையை விளக்கினார். ஆடம் ஸ்மித் அதை வன்மையாக ஆதரித்ததோடு அதையே தன்னுடைய முறையின் அடிப்படையாக ஆக்கினார்.

படிக்க:
முதலாளித்துவம் பெற்றெடுக்கும் பாசிசம் – புதிய தொடர்
♦ நூல் அறிமுகம் : பண்பாட்டுக் களத்தில் …

பெட்டியின் காலத்தில் தொழில்துறை உற்பத்தி, விவசாய உற்பத்தி ஆகிய இரண்டுமே பெருமளவுக்கு முதலாளித்துவ அடிப்படையில் நடைபெற்று வந்தன. கைத் தொழில்களையும், சிறு அளவு விவசாயத்தையும் மூலதனத்துக்கு உட்படுத்துவது மெதுவாகவே நடைபெற்றது; பல்வேறு பிரிவுகளிலும் பகுதிகளிலும் அது வெவ்வேறு வழிகளில் நடைபெற்றது. விரிவான பகுதிகளில் முதலாளித்வத்துக்கு முந்திய உற்பத்தி வடிவங்கள் இன்னும் இருந்தன. ஆனால் இந்த வளர்ச்சியின் போக்கு அப்பொழுதே தோன்றிவிட்டது; இதை முதலில் கவனித்தவர்களில் பெட்டியும் ஒருவர்.

இங்கிலாந்தின் பொருளாதாரம், வர்த்தகத்தின் அடிப்படையாக இன்னும் இருந்து வந்த கம்பளித் தொழிலோடு சேர்ந்து நிலக்கரி வெட்டுதலும், இரும்பு, எஃகு தயாரிக்கும் தொழில்களும் வளர்ச்சியடைந்தன. 1680 -களில் 30 லட்சம் டன் நிலக்கரி வருடந்தோறும் வெட்டியெடுக்கப்பட்டது. அதற்கு முந்திய நூற்றாண்டின் மத்தியில் 2 லட்சம் டன் மட்டுமே வெட்டியெடுக்கப்பட்டது. (ஆனால் நிலக்கரி இன்னும் எரிபொருளாக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தது. நிலக்கரியைச் சுட்டுப் பயன்படுத்துகின்ற முறை இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே கரியை உபயோகித்து உருக்கு தயாரிக்கப்பட்டது. இதனால் காடுகள் அழிக்கப்பட்டன.) இந்தத் துறைகள் ஆரம்பத்திலிருந்தே முதலாளித்துவ ரீதியில் வளர்ச்சியடைந்தன.

நாட்டுப்புறங்களிலும் மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டிருந்தன. இயற்கையான பொருளியல் அமைப்பும் சிறு அளவில் பண்ட உற்பத்தியும் செய்து வந்த சிறு நிலவுடைமையாளர்களின் வர்க்கம் படிப்படியாக மறைந்து கொண்டிருந்தது. அவர்களுடைய சிறு நிலவுடைமைகளும் கிராமப் பொது நிலமும் பெரிய நிலவுடைமையாளர்களிடம் மென்மேலும் குவிந்து கொண்டிருந்தன; அவர்கள் இந்த நிலங்களை விவசாயிகளிடம் குத்தகைக்கு விட்டனர். அதிகப் பணமுள்ள விவசாயிகள் கூலி உழைப்பைப் பயன்படுத்தி முதலாளித்துவ விவசாயத்தை நடத்தத் தொடங்கியிருந்தனர்.

பெட்டியும் ஒரு பெரிய நிலவுடைமையாளரே என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். எனினும், ஒரு சில விதிவிலக்குகளைத் தவிர, அவர் தம்முடைய எழுத்துக்களில் நிலப்பிரபுக்களின் நலன்களை வெளிப்படுத்தவில்லை. லேவ் தல்ஸ்தோய் பற்றிக் கூறும் பொழுது, இலக்கியத்தில் சரியான விவசாயியின் படத்தை இந்தப் பிரபுவுக்கு முன்பாக யாரும் சித்திரிக்கவில்லை என்றார் லெனின், அதைப் போலவே அரசியல் பொருளாதாரத்தில் சரியான முதலாளியின் படத்தை இந்த நிலவுடைமையாளருக்கு முன்பாக, யாரும் சித்திரிக்கவில்லை.

முதலாளித்துவ வளர்ச்சியால் மட்டுமே “நாட்டின் செல்வத்தைப்” பெருக்க முடியும் என்பதைப் பெட்டி தெளிவாகப் புரிந்து கொண்டிருந்தார், அவர் தமக்குச் சொந்தமான பண்ணைகளில் இந்தக் கருத்துக்களை ஓரளவுக்கு அமுலாக்கினார். தன்னுடைய நிலங்களைக் குத்தகைக்குவிடும் பொழுது விவசாயிகள் நிலத்தையும் அதில் பயிரிடும் முறைகளையும் அபிவிருத்தி செய்வார்கள் என்பதை நன்கு தெரிந்து கொண்ட பிறகே அவர் குத்தகைக்கு விட்டார். தன்னுடைய பண்ணையில் ஆங்கிலக் கைவினைஞர்கள் குடியேற்றத்தையும் அவர் ஏற்படுத்தினார்.

ஒரு நபர் என்ற முறையில் பெட்டியிடம் ஏராளமான முரண்பாடுகள் இருந்தன. பாரபட்சமற்ற வரலாற்றாசிரியருடைய பார்வையில் இந்த மாபெரும் சிந்தனையாளர் சில சமயங்களில் சில்லறைத்தனமான வீர சாகஸக்காரராகவும், இன்னும் சில சமயங்களில் திருப்தியடையாத லாப வேட்டைக்காரர் மற்றும் விடாப்பிடியாக வழக்குத் தொடுப்பவராகவும், வேறு சமயங்களில் சூழ்ச்சிமிக்க அரசவையாளராகவும் தோன்றுகிறார்; சில சமயங்களில் வெகுளித்தனமான தற்பெருமைக்காரராகவும் தோன்றுகிறார்.

அவர் வாழ்க்கையைச் சுவைக்க வேண்டும் என்ற அடக்க முடியாத ஆசை கொண்டவர் என்பது அவருடைய தனிச் சிறப்பான அம்சமாகும். ஆனால் அந்த ஆசை அடைந்த வடிவங்கள் அவர் வாழ்ந்த காலத்திலிருந்த சமூக நிலைமைகளினாலும் சந்தர்ப்பங்களினாலும் ஏற்படுத்தப்பட்டன. ஒரு கோணத்தில் பார்த்தால் செல்வமும் அந்தஸ்தும் அவருடைய ஒரே நோக்கம் என்று கூற முடியாது; ஆனால் அவற்றின் மீது அவருக்கு ஒரு பெருந்தன்மையான அக்கறை இருந்தது. அந்தக் காலத்துக்கும் அன்றைய நிலைமைகளுக்கும் பொருத்தமான வகையில் அவர் காட்டிய சுறுசுறுப்பும் சூழ்ச்சியும் கபடமும் அவருக்கு உள்ளூற திருப்தியைக் கொடுத்தன என்பதில் சந்தேகமில்லை. ஆனால் செல்வமும் பட்டங்களும் அவருடைய வாழ்க்கையையும் சிந்தனைப் போக்கையும் பெருமளவில் பாதிக்கவில்லை.

படிக்க:
விவசாயிகளின் உணர்வுகளைப் பிரதிபலித்த டால்ஸ்டாய் – லெனின்
♦ எத்தனைப்பேர் நம்மை நம்பி கொடுத்துச் சென்ற உணர்ச்சி இது !

லண்டனில் பெட்டியுடன் பழகிய ஜான் எவெலிங் என்பவர் 1675-ம் வருடத்துக்கான தமது குறிப்பில் பிக்காடில்லி என்ற பகுதியிலிருந்த பெட்டியின் மாளிகையில் நடைபெற்ற ஒரு ஆடம்பரமான விருந்தை வர்ணித்திருக்கிறார். “அவரைச் சாதாரணமான நிலைமைகளில் அறிந்த என் போன்றவர்கள் இப்பொழுது அவருடைய சிறப்பான மாளிகையில் அவரைப் பார்க்கும் பொழுது, இவ்வளவு செல்வத்தை அவர் எப்படித் திரட்டினார் என்று வியப்படைவார்கள். ஆனால் அங்கேயிருந்த விலையுயர்ந்த மரச்சாமான்களையும் கலைப் பொருள்களையும் அவர் அதிகமாக மதித்தார் என்று சொல்ல முடியாது; அவருடைய நாகரிகம் நிறைந்த மனைவிக்கு தரக்குறைவான அல்லது நேர்த்தியில்லாத பொருள்களைப் பிடிக்காது. அவர் தன்னைப் பற்றிக் கூட அலட்டிக் கொள்ளாதவர்; உயர்ந்த சமநிலை உடையவர். கடவுளே! எனக்கு இவையெல்லாம் எதற்கு? நான் வைக்கோற் படுக்கையில் இதே திருப்தியோடு உறங்கக் கூடியவன் என்று தான் கூறுவார். அவர் தன்னுடைய வசதிகளைப் பற்றி அதிகமாகக் கவலைப்படாதவர்…” (1)

அவருடைய வாழ்க்கை நெடுகிலும் அவருக்கு எதிரிகள் – பகிரங்கமான எதிரிகளும் இரகசியமான எதிரிகளும் அதிகமே. அவரைக் கண்டு பொறாமைப்பட்டவர்களும் அவருடைய அரசியல் எதிரிகளும் அவரை எதிர்த்தனர். அவர் காரமாக ஈவிரக்கமற்ற வகையில் ஏளனம் செய்வதில் சமர்த்தர். அவருடைய பேச்சினால் புண்பட்டவர்களும் அவருக்கு எதிரிகளானார்கள். சிலர் அவரைத் தீர்த்துக் கட்டிவிட வேண்டுமென்று திட்டம் போட்டார்கள்; வேறு சிலர் மறைமுகமாகச் சதி செய்தார்கள். ஒருநாள் டப்ளின் நகரத்தில் அவர் தெருவில் போய்க் கொண்டிருக்கும் பொழுது, ஒரு கர்னல் இரண்டு  உதவியாளர்களோடு வந்து அவரைத் தாக்கினார். சர் வில்லியம் பெட்டி அவர்களை விரட்டியடித்தார். ஆனால் அந்தக் கர்னலின் கூர்மையான பிரம்பு முனை அவருடைய இடது கண்ணைக் குத்தி அநேகமாக அவரைக் குருடாக்கிவிட்டது. அந்தக் கர்னல் கொடுத்த அடி எளிதில் புண்படக் கூடிய இடத்தில் பட்டுவிட்டது, அதிலும் பெட்டிக்குக் குழந்தைப் பருவத்திலிருந்தே பார்வைக் கோளாறு இருந்தது.

(தொடரும்…)

அடிக்குறிப்புகள் :

(1) The Diary of John Evelyn, London, 1959, p. 610.

தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க:

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்

நூல்: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்
ஆசிரியர் : அ.அனிக்கின்
மொழிபெயர்ப்பு : பேராசிரியர் நா. தர்மராஜன், எம்.ஏ
வெளியீடு :
முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ – 1983

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க