சந்திரமோகன் | சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் | நாடகம் | இறுதிப் பாகம்


காட்சி : 28

இடம் : வீதி
உறுப்பினர்கள் : சாது, ரங்குப்பட்டர்.

(சாது பாடிக்கொண்டு வர, ரங்கு எதிரே வந்து)

ரங்குப்பட்டர் : இது யாருடைய பாடல்?

சாது : ஐயனுடைய பாடல்?

ரங்குப்பட்டர் : அது யாருடா அவன் ஐயனும் மெய்யனும்?

சாது : கோபமாகப் பேசும் தங்களையும், சாமான்யனான என்னையும் எவன் படைத்தானோ அவனே சர்வ லோகங்களிலும் நடக்கும் காரியத்துக்குக் கர்த்தா. அவன் அருளால் இந்தக் கீதம் பாடினேன். ஆகவேதான் தாங்கள் யாருடைய பாடல் என்று கேட்டவுடன் ஐயனுடைய பாடல் என்று சொன்னேன்.

ரங்குப்பட்டர் : ஏண்டா நீ பெரிய வாயாடியா இருப்ப போல இருக்கே. சமஸ்கிருதம் தெரியுமோ, நோக்கு ?

சாது : தெரியாது.

ரங்குப்பட்டர் : காயத்திரி தெரியுமோ?

சாது : தெரியாதய்யா.

ரங்குப்பட்டர் : டே ஐயா பட்டம் போடாதே. இனி என்னை ஸ்வாமி என்று அழைக்கணும்.

சாது : ஐயன் கட்டளையோ?

ரங்குப்பட்டர் : இந்த ஐயன் கட்டளை. ஏன் கேக்கப்படாதோ? இந்த ஐயனின் குரு பிறப்பித்த கட்டளையைக் கேட்டு இந்த மண்டலாதிபதி அதன்படி நடந்தான் தெரியுமோ நோக்கு. நான் யார் தெரியுமோ? சாட்சாத் காகப்பட்டருடைய சீடனாக்கும்.

சாது : ஐயா! சாதிப் பித்தம் உள்ளவரிடம் இதைப் போய்க் கூறும்.

ரங்குப்பட்டர் : நீ மகா மேதாவியோ? சாதி ஆச்சாரத்தை ஒழிக்கப் போறியோ? அட, மண்டு மன்னாதி மன்னர்களெல்லாம் இந்த மடி சஞ்சியிடம் பயபக்தியுடன் இருக்கா. நோக்கு ஏண்டா இந்த மண்ட கெர்வம்?

சாது : மன்னாதி மன்னர்களெல்லாம் தனது மண்டலங்களையும் மற்ற மண்டலங்களையும் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற ஆசைக்கும், அச்சத்துக்கும் அடிமைப்பட வேண்டியிருக்கிறது. எனக்கு அவ்விதமில்லை. இந்தப் பூலோகம் முழுவதும் என் ராஜ்யம். எனக்கு யாரும் அடிமையில்லை. நான் யாருக்கும் அடிமையில்லை.

ரங்குப்பட்டர் : ஓஹோஹோ அந்தப் பயல் ஒருவன் இது போலத்தான் கொக்கரிச்சான். என்ன நடந்தது தெரியுமோ? தேசப்பிரஷ்டம்.

சாது : யாரோ தங்களை ஏமாற்றியிருக்கிறார்கள்.

ரங்குப்பட்டர் : இந்த ரெண்டு கண்ணாலேயும் பார்த்தது.

சாது : உண்மை அதுதான். சந்திரமோகனை அறிவுப்படை திரட்டி வரும்படி மன்னர் அனுப்பியிருக்கிறார். சமரசத்தின் தூதுவனாக அவன் விளங்க அனுப்பியிருக்கிறார்.

ரங்குப்பட்டர் : பித்தன்! ஏதோ உளறிண்டிருக்கான்.

(போகிறான்)

♦ ♦ ♦ 

காட்சி : 29
இடம் : மன்றம்
உறுப்பினர்கள் : சிவாஜி, மோகன், இந்து, சாந்தாஜி.

இந்து : அப்பா வாள் ஏந்தக் கூடாது, வாள் ஏந்தக் கூடாது என்று கூவினார். தண்டனையும் அதுபோலவே ஆகிவிட்டது.

மோகன் : இந்து அவர் உன் க்ஷேமத்தைக் கருதி அவ்வாறு கூறி வந்தார். நீயும் ஒரு நாள் வாள் – கேவலம். ஒரு இரும்புத்துண்டு என்று கூறினாய். நிலைமையும் அப்படித்தான் ஆகிவிட்டது. நான் மராட்டியத்தின் மானத்தை மீட்கப் போர் புரிய வாள் ஏந்தி நின்றேன். மன்னன் ஆரிய குருவுக்கு அடி பணிந்துவிட்டார். இனி யார் வாளேந்தி என்ன பயன்? மராட்டிய வீரனுக்கு வாள் இருப்பது புகழ் தரும். ஆரிய ஏவலராக மராட்டியர் ஆன பிறகு வாள் எதற்கு?

(இந்து போக, மன்னர் வருதல் மோகன் தாள் பணிந்து)

மகராஜ் மகராஜ்! தாங்களா?

(மண்டியிட்ட மோகனைத் தூக்கி)

சிவாஜி : மங்காத மராட்டியமே எழுந்திரு உன்னை நான் இழக்க வேண்டிய அளவுக்கு என் நிலை ஆகிவிட்டது. தோழா! உன்னை நான் தண்டித்தேன். என்றுதானே கருதிக் கொண்டாய்? தண்டனையல்லடா தம்பி அது. சாந்தாஜி யின் மகளை நீ அடைய, உனக்கு விடுதலை தந்தேன். என் பொருட்டு அல்லவா இந்துவை நீ இழக்க இருந்தாய்.

மோகன் : மகராஜ் என்ன இது என் தண்டனை ரத்தாகிவிட்டதா? இனி நான் வாள் ஏந்தலாமா?

படிக்க:
வைப்பு நிதியில் போடும் பணம் குறையுமா – இனி குறைந்தாலும் குறையும் !
தூத்துக்குடி தியாகிகளுக்கு நினைவேந்தல் நடத்தினால் எடப்பாடிக்கு என்ன பிரச்சினை ?

சிவாஜி : இனி நீ வாள் ஏந்திப் பலன் என்ன? மோகனா! பழமையின் தாள் ஏந்திய மன்னனிடம் இனி வாள் ஏந்துவோர் இருந்து பலன் இல்லை. ஆம் ! இவ்வளவு வயது வரை போரிட்டுப் போரிட்டு சிருஷ்டித்த ராஜ்யத்தை நான் ஆசி பெறாமல் ஆள முடியாத அளவுக்கு மக்களிடம் மனமயக்கம் இருக்கிறது. மோகன், நாம் மன்னர்களை எதிர்க்கலாம்; எதிரிகளை அடக்கலாம்; ஆனால் நம் மக்களையே என் மீது ஏவி விட முடியும் அவர்களால், இன்றைய நிலையிலே! ஆகவேதான் நான் பணிந்தேன்.

மோகன் : ஆகா, மகராஜ் நான் எதிர்ப்பார்த்தபடியே இருக்கிறது.

சிவாஜி : மோகன் நான் ஏற்படுத்திய ராஜ்யம் நிலைக்கும் என்று நான் நினைக்கவில்லை. சந்தர்! மராட்டிய மண்டலத்திலே ஏரி, குளம், குட்டை , ஆறு, மடு எல்லாம் வறண்டுவிட்டன. வயல்கள் வெடித்து கிடக்கின்றன. போர் செயலினால் மக்கள் ஏழைகளாயினர். இந்த நிலையிலே – வறுமை தாண்டவமாடும் இந்த நேரத்திலே பதினோராயிரம் பிராமணர் குடும்பங்களுக்கு நான்கு மாதங்கள் சமாராதனை, தங்கள் உயிரை எனக்காக அரசுக்காக அளித்த மராட்டிய வீரருக்கு, என்னால் விருந்திட முடியவில்லை. என் செலவில் வீணர்கள் உண்டு, கொழுத்தனர். துலாபாரம், அதனால் வேறு செலவு.

சந்திரமோகன்! என் அரசு ஆரம்பமாகும் போதே பொக்கிஷம் சூன்யமாகிவிட்டது. ஒரு கோடியே நாற்பத்து எட்டு இலட்சமடா நான் கொட்டி அழுதேன். நம் தரணி இப் பாரத்தைத் தாங்காது. ஆகவே வீரனே! அஞ்சா நெஞ்சு படைத்த நீ. மக்களிடம் பரவி இருக்கும் மயக்கத்தைப் போக்கு, வாளால் அரசுகளை அமைத்து விடலாம். ஆனால் அது நிலைக்க அறிவு தேவை. அந்த ஆயுதத்தை வீசு . நாடு முழுவதும் வீசு . பட்டித் தொட்டிகளெல்லாம் வீசு, மக்களை வீரர்களாக்கும். சந்திரமோகனா சகலரையும் சந்திரமோகன்களாக்கு போய் வா! ஜெயம் பெறுவாய்.

(சிவாஜி போக, சாந்தாஜி, இந்து வருதல். சாந்தாஜி மோகனிடம் மாலையைத் தருதல் இந்துவும் மோகனும் மாலை மாற்றிக் கொண்டு பாட்டு)

(முற்றும்)

நன்றி: Project Madurai

முந்தைய பகுதி: சந்திரமோகன் | சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க