“டண்டண்டண்…… ஊர் மக்களுக்கு ஒரு அறிவிப்பு. இதனால் தெரிவிப்பது என்னென்னா ஊர் பொது குளத்துல தண்ணி வத்திப் போனதால நாளைக்கி பொது மீன்பிடிப்பு செய்யலாமுன்னு ஊர் முடிவெடுத்துருக்கு. மீன் புடிக்கிற ஊர் பொதுமக்கள் காத்தாலயே குளக்கரைக்கி வந்துரனு….ம் டண்டண்டண்……”

முப்பது வருசத்துக்கு முன்ன கிராமப்புற கோடைத் திருவிழா காலம் முடிஞ்சதும் இப்புடி ஒரு மீன்பிடி தண்டோரா சத்தம் கேக்கும். இந்த சத்தத்த கேட்டா ஊர் பொடுசுங்க அப்புடியே… குதூகலிக்கும். பெருசுங்க எல்லாம் மீனப் புடிச்சுட்டு கரையேறுனதும், உயிர் தப்புன மீனுங்க துள்ள, வெய்யிலுக்கு சூடு தாங்காமெ சேத்துல கெடந்து முண்டும். பசங்க அப்புடியே பொசுக்குன்னு சேத்துல பாஞ்சு, விழுந்து பொறண்டு, விறால்குட்டிய புடிச்ச வீரனா ஒடம்பு முழுக்க சேறோட பல்லு மட்டும் பளிச்சுன்னு தெரிய எந்திரிச்சு நிப்பாங்க.

கிராமங்களில் நடைபெரும் மீன்பிடி திருவிழா (மாதிரிப் படம்)

கிராமத்து ஏரி குளமெல்லாம் ஒன்னு ஊருக்கு சொந்தமா இருக்கும், இல்ல கோயிலுக்கு சொந்தமா இருக்கும். ஏரிப் பாசன வசதிக்கும் குளம் கோயில் பக்தருங்க தேவைக்கானதா இருந்துச்சு. ஆடு, மாடு, மனுசங்க குளிக்க, தொவைக்க அத்தனையும் இதுலதான் அடங்கும்.

ஊர் பொதுவான இந்த நீர்நிலைகள ஊரு மக்களே பராமரிச்சு ஆத்துல தண்ணி வந்ததும் இட்டு நெரப்பி வைப்பாங்க. அதுல வளரும் மீன, தண்ணி வத்துன கோடை காலத்துல கிராமத்து மக்கள் பொதுவுல புடிச்சுப்பாங்க. இதுபோல பொது நீர்நிலைக்கு எந்த பங்கமும் வராம பாதுகாக்க கிராமங்கள்ள தனி சட்டதிட்டமே இருக்கும். ஊருக்கூரு வரைமுறைங்க மாறுபடுமே தவிர தண்ணிக்கான தனி கவுரவம் இருக்கத்தான் செஞ்சது.

இந்த நிலைமாறி குளங்கள ஏலமிட்டு அந்தக் காச கோயில் வரவுசெலவுக்கு சேத்துக்கிட்டாங்க. ஊர் பொதுக்குளம் தனிநபர் கையில போனதும் பிறகு வளர்ப்பு மீன் முறை உருவானது. திருச்சி, தஞ்சை, திருவாரூர், மன்னார்குடி போன்ற டெல்டா பகுதியில தண்ணி பாயாத தரிசு நிலத்துல பண்ணை குட்டை அமைக்க அரசு, மானிய கடனுதவி செஞ்சு மீன் வளர்ப்ப ஊக்குவிச்சது.

படிக்க:
காவிரி டெல்டா – துயரம் துரத்தும் நிலம் | வில்லவன்
♦ ஓபசமுத்திரம் கிராம மக்களின் இறால் பண்ணை அழிப்பு போராட்டம் !

காவிரி தண்ணி தட்டுப்பாடு ஏற்பட்ட 20 வருசத்துக்கு முன்ன நஞ்சை நிலத்துலயும் குளம் வெட்ட ஆரம்பிச்சாங்க விவசாயிங்க. கடைமடை வரை தலக்குப்புற தண்ணி பாஞ்ச டெல்டா பகுதி விவசாய நிலத்துக்கு மத்தியில புதுசு புதுசா குளங்களும் உருவாச்சு. ஒரு விவசாயத்துக்கு மத்தியில இன்னோரு ஊடுபயிர் விவசாயம் செய்றாப்போல நாலாப் பக்கமும் நடவு; நடுவுல மீனுங்கற கணக்குல நன்னீர் மீன் வளர்ப்பு உருவானது.

மானியத்துல பண்ணை குட்டை மீன் வளர்ப்பு அதிக லாபம், அப்புடி… இப்புடின்னு உசுப்பேத்தி விவசாயி மனசுல ஒரமேத்திச்சு வேளாண்மைத்துறை. ஆத்துல தண்ணி ஒரு வருசம் வந்தா மறு வருசம் வர்ல. வர்ர தண்ணியும் பயிரு பருவம் வரும்போது பாத்து பல்ல இளிச்சுடும். அணையப் போட்டு ஆத்த அடச்சுருவாங்க. அல்லோலப்பட்ட விவசாயிங்க சிலபேரு பரவாயில்லன்னு நெனச்சு மெல்ல எறங்குனதுதான் மீன் வளர்ப்புக் குளம்.

ஆத்துல வர்ற தண்ணிய பயன்படுத்தி குளத்துல விட்டு நெரப்பி மீன் வளப்பாங்க. கரையில தென்னமரமும், பரங்கி பூசணின்னு ஊடு பயிரும் போட்டாங்க. அங்கொன்னும் இங்கொன்னுமா தோண்டுன குளம் பொறவு பெருவாரியா வெட்ட தொடங்குனதும் இப்ப அதோட எண்ணிக்கை வியப்படைய வைக்கிது.

இன்னைக்கி கிராமங்கள்ள பாத்தோம்ன்னா கோடை, அக்கினி வெய்யிலு காலத்துல குளம் வத்திப்னப்ப வாராவாரம் கேட்ட மீன்பிடி தண்டோரா சத்தம் இப்ப இல்லை. ஊருக்கும் கோயிலுக்கும் சொந்தமாயிருந்த குளங்களப் போல சொந்த நிலத்துல விவசாயிங்களே குளம் வெட்ட ஆரம்பிச்சதும் லாபம் மட்டுமே நோக்கமாயிடுச்சு.

வயல்களுக்கு நடுவில் அமைக்கப்பட்டுள்ள மீன்வளர்ப்பு குளங்கள் (மாதிரிப் படம்)

குளத்துத் தண்ணி எடுத்து தைப்பொங்கல் வைக்கிற வழக்கத்த வச்சுருந்த கிராமத்து ஜனம், இன்னைக்கி கால் நனைக்க பயப்படுது. அந்த அளவு தண்ணி தரங்கெட்டு போயிடுச்சு. பிராய்லர் கோழிபோல மீனு பெருசா வரனும்னு மாட்டு சாணிய வண்டி வண்டியா கொட்றாங்க. மாட்டுக்கு போடும் புண்ணாக்கு தவிடோட சேத்து ரேசன் அரிசிய தெனமும் பொங்கி போட்றாங்க. ஆத்து நீருல வரும் ஆத்து மீனு முட்டைங்கள அழிக்க ரசாயன உரம் போடுறாங்க.

இதெல்லாம் போக மீனுக்கு என்னமோ ஊசியே போட்றாங்க. குளமுன்னா கரையோரமெல்லாம் கொடியும், கோரையும், நாணலும், பாசியும் படந்துருந்தத பாத்துருப்போம். இன்னைக்கி தாங்கா முடியாத ரசாயனத்தால தண்ணி தரங்கெட்டுப்போயி தங்கமாட்டம் மின்னுது. இதுக்கு விவசாயிய மட்டும் குத்தஞ்சொல்ல முடியாது. பசுமை புரட்சின்னு சொல்லி அவங்கள இப்படி ஆச காட்டி பழக்கினது இந்த அரசுதான்.

பசியாத்தும் விவசாயிங்க தண்ணி தட்டுப்பாட்டுல கூட அரும்பாடு பட்டு ராப்பகலா வேலசெஞ்சு வெளைய வைக்கிற வெள்ளாமைக்கி சரியான விலை தரமாட்டேங்கிறாங்க. ஒன்னுக்குப் பாதி விளையிறதையும் ஈரப்பதம், கலப்பு, கருக்கான்னு சரியான நேரத்துல எடுக்காமெ அலக்கழிக்கிறாங்க. எப்படியாவது முன்னேற மாட்டமா..ங்குற நிலையில விவசாயி இந்த மீன் வளர்ப்புக்கு போகவேண்டியிருக்கு.

ஒரு கிராமத்து மனிதனோட வாழ்க்கையும், விளையாட்டும், சந்தோசமும் நீர்நிலை இல்லாம இருந்துருக்கவே முடியாது. வெளியூருக்கார வியாபாரிங்க சுமைய நிறுத்தி வச்சுட்டு வெய்யிலுக்கு விழுந்து குளிச்சுட்டு இளைப்பாறிட்டுதான் போவாங்க. தடுக்கி விழுந்தா தண்ணி இருந்த ஊருல வயக்காட்டுக்கு ஒதுங்கப் போகனுன்னா கூட கையில சொம்போட போற அவலத்த என்னன்னு சொல்ல.

ஒரு குளக்கரையில கிராமத்து முழு சமூக அமைப்பையே பாத்துரலாம். ஒரு படித்துறையில சலவைத் தொழிலாளி குடும்பமா தொழில் செய்வாரு; முடி வெட்றவரு கிண்ணத்துல தண்ணியோட கத்தியும் கையுமா ஆலமரத்தடியில உக்காந்துருப்பாரு; மறுபக்க களத்து மேட்டு கரையில வெளஞ்ச நெல்ல வண்டியில ஏத்தும் ஆண்ட சாதியும்; அறுப்புக்கான கூலியில படி நெல்லு கூட கெடைக்காதான்னு பண்ணையாளும் காத்துருப்பாங்க.

பக்கத்துலேயே தற்காலிக குடிசையில பஞ்சம் பொழைக்க வந்த கழைக்கூத்தாடி; கொட்டாங்குச்சி நெல்லுக்கு ஒரு ஐஸ்சு குடுக்க தயாரா நிக்கும் ஐஸ்க்காரரு. ஒட்டமுடியாத ஒத்துமையோட ஒன்னா கூடிநிக்கும் சமத்துவப்புரம் போல கிராமத்து குளத்துக்கரையில அத்தன சாதி – வர்க்க பிரிவையும் ஒன்னா பாக்கலாம். வேறுபட்ட சாதி எல்லாம் ஒன்னுபட்டு நிக்க வேண்டிருந்தது விவசாயத்துக்காக.

படிக்க:
சோழ நாடு சேர நாடு பாண்டிய நாடு வட மாநிலங்கள் சங்கமிக்கும் அம்மா உணவகம்
♦ “The Hour of Lynching” – ரக்பர்கான் படுகொலையை மறக்கக் கூடாது !

இன்னைக்கு சேவைச்சாதி மக்கள் தன்மானத்தோட நகரத்துக்கு போயி வாழ ஆரம்பிச்சாட்டங்க. சாதியோட இறுக்கம் கொஞ்சம் தளர்ந்துருச்சுன்னு கூட சொல்லலாம். அப்டிப் பாத்தா குளத்தோட இருந்த சாதி சடங்கு சம்பிரதாயங்களுக்கு இப்ப தண்ணி இல்லாததால வழியில்லாமப் போச்சு. ஆனா எல்லா கிராமத்து மக்ககிட்டயும் ஊர் குளத்த பத்தி விசாரிச்சிங்கன்னா அனைத்து சாதி மக்களும் அதோட அருமை பெருமையை சொல்லி புலம்புவாங்க. பொதுக்குளம் இல்லாம வாழ்க்கை இல்லை.

வறண்டு வற்றிப் போன மீன் வளர்ப்பு குளம் (படம் – சரசம்மா)

விவசாயத்த சக உயிரா நெனச்சு பாதுகாத்த விவசாயிக்கி எப்படி இப்படி வயல்ல மீன் வளர்க்க மனசு வரும். இராப்பகலா வயல்ல கெடந்து குடும்பமா வேல செஞ்சாலும் வீட்டுல நின்ன ஒரு ஜோடி உழவு மாட்ட சந்தையில வித்துட்டுதான் மகளோட மகப்பேறு செலவு பாக்க வேண்டியிருக்கும் ஒரு விவசாயியால.

எதத் தின்னா பித்து தெளியும்னு இருக்கவங்களுக்கு நிலம் குளமா மாறும்போது தண்ணி தட்டுப்பாட்டுக்கு ஏதுவான ஒன்னா தெரிஞ்சது.

கடந்த இருபது வருசமா விவசாயத்துல ஏற்பட்ட அழிவால கிராமத்துல பாதி பேரு வேற.. வேற தொழில தேடி நகரத்துப் பக்கம் போயிட்டாங்க. மிச்சமிருக்கவங்க நிக்கவும் முடியாம, நிலத்த விட்டுட்டு ஓடவும் முடியாம பாவப்பட்ட விவசாயத்த தன்மானமா நெனச்சு பல்ல கடிச்சுட்டு செய்றாங்க.

மழையும், காவிரியும் கைவிரிச்சிருச்சதும் விவசாயம் எப்புடி ஆழ்துளை கிணத்த நம்பி நடக்குதோ அதே போல, இப்ப மீன் வளர்ப்பு குளமும் ஆழ்துளை கிணத்த நம்பிதான் இருக்கு. நிலத்தடி நீரெடுத்துதான் குளத்துல இட்டு நெரப்புறாங்க. இந்த வசதி இல்லாத சிறு விவசாயிங்க வெட்டுன குளமெல்லாம் பயனற்றதா மாறுது. கிட்டதட்ட இறால் பண்ணை நிலமதான். பிள்ளையாரு பிடிக்கப் போயி குரங்கு வந்த கதையாருக்கு, விவசாயிங்க பாடு.

உள்மாவட்ட மக்களுக்கு கடல் மீனை விட ஆத்து மீனுதான் பிடிக்கும். அதுவும் மீனு உசுரோட இருந்தாத்தான் வாங்கவே செய்வாங்க. ஆழ்கடல்ல பிடிக்கிற சத்தான மீன்கள் ஐஸ்ல வெச்சுத்தான் கரை திரும்பும். சிம்லாவுல பறிக்கிற ஆப்பிள் நம்ம சந்தைக்கு வந்து சேர பல நாள் ஆகும். இதையெல்லாம் தெரியாம ஃபிரஷ்ஷா வாங்குறோம்கிற விவசாயிகளோட தப்பான பழக்கம் ஆட்டுக்கறி வாங்குற மாதிரி மீனுலயும் வந்துருச்சு. ஒரு புறம் கடல் மீனுங்களுக்கு உள்நாட்டு சந்தை இல்லாம ஏற்றுமதியாக, மறுபுறம் விவசாயத்தை காவு கொடுத்துட்டு நன்னீர் மீன் பண்ணைங்க வந்து போச்சு.

டெல்டாவுல இனி பொங்கல்ங்குற விவசாயப் பண்டிகைக்கு தேவையே இல்லாத நிலை வந்துருமோன்னு பயமாயிருக்கு!

சரசம்மா

1 மறுமொழி

  1. மக்கள் அதே பழைய வாழ்க்கை முறையை தொடர சொல்கிறீர்களா? என்னே உங்கள் விளக்கம்!!!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க