பரீஸ் பொலெவோய்

உண்மை மனிதனின் கதை | இரண்டாம் பாகம் | அத்தியாயம் – 2

‘கர்னல்கள் வார்டு’ என அழைக்கப்பட்ட வார்டு ஒப்பு நோக்கில் சிறிய அறைதான். பிளாச்சுத் தரையில் பதிந்திருந்த கரும்பழுப்புத் தடங்களைக் கொண்டு போருக்கு முன் அதில் இரண்டு மஞ்சங்களும் இரண்டு சிறு மேஜைகளும் நடுவே ஒரு பெரிய மேஜையும் இருந்தன என்று அனுமானிக்க முடிந்தது. இப்போது அறையில் நான்கு கட்டில்கள் இருந்தன. ஒன்றில் தலையோடு காலாகப் பட்டித்துணி கட்டப்பட்டு, துணியால் சுருட்டப்பட்ட புதிதாய்ப் பிறந்த குழந்தை போலக் காணப்பட்ட காயமடைந்த வீரன். அவன் எப்போதும் நிமிர்ந்து படுத்து, பட்டித்துணிகளின் ஊடாக விட்டத்தை அசைவற்ற உணர்வற்ற விழிகளால் வெறித்தே நோக்கிக்கொண்டிருந்தான். அலெக்ஸேயின் கட்டிலுக்குப் பக்கத்தில் இருந்த மற்றொரு கட்டிலில் படுத்திருந்தவர் துடியான ஆள். அம்மைத்தழும்புள்ள அவரது திரைத்த முகம் படைவீரத் தோற்றம் கொண்டிருந்தது. அரும்பு மீசை வெளேரென்று நரைத்திருந்தது. பிறருக்கு உதவும் சுபாவமுள்ள கலகலப்பான மனிதர் அவர்.

மருத்துவமனையில் ஆட்கள் விரைவில் பழகிவிடுவார்கள். அம்மைத் தழும்புக்காரர் சைபீரியாவாசி; அரசாங்கப் பண்ணைத் தலைவராக இருந்தவர், போர்த் தொழிலில் ஸ்னைப்பர் எனப்படும் குறிதவறாது சுடும் மறைமுகத் தாக்குவீரர்; வெற்றிகரமான தாக்குவீரர் என்ற விவரங்களை எல்லாம் அலெக்ஸேய் மாலை நேரத்துக்குள் தெரிந்து கொண்டுவிட்டான். அந்த மனிதர் “சோவியத் யூனியனின் வீரர்” என்ற பட்டம் பெற்றவர். தமது குலப்பெயரைக் கூறியதுமே அலெக்ஸேய் அவருடைய எளிய உருவத்தை ஆவலுடன் நோக்கினான். அந்த நாட்களில் இப்பெயர் இராணுவத்தில் விரிவாகப் பிரபலமாயிருந்தது. பெரிய செய்தித் தாள்கள் இவரைப் பற்றித் தலையங்கங்கள் கூட எழுதியிருந்தன. மருத்துவமனையில் யாவரும் – மருத்துவத்தாதிகளும் மருத்துவர்களும் வஸீலிய் வஸீலியெவிச்சுமே கூட – அவரை ஸ்தெபான் இவானவிச் என்று மரியாதையுடன் அழைத்தார்கள்.

பட்டித்துணிக் கட்டுகளுடன் கிடந்த நான்காவது ஆள் நாள் பூராவும் தன்னைப் பற்றி ஒரு வார்த்தைகூடச் சொல்லவில்லை. பொதுவாகவே அவன் வாய்மூடி மெளனியாக இருந்தான். ஆனால், உலக நடப்பை எல்லாம் அறிந்த ஸ்தெபான் இவான்விச் அவனுடைய வரலாற்றை அலெக்ஸேய்க்குக் கொஞ்சங்கொஞ்சமாக விவரித்தார். இவன் பெயர் கிரிகோரிவ் க்வோஸ்தயேவ். அவன் டாங்கிப் படை லெப்டினென்ட், அவனும் “சோவியத் யூனியனின் வீரன்” என்ற பட்டம் பெற்றவன். டாங்கிப் பயிற்சிக் கல்லூரியிலிருந்து நேரே இராணுவத்துக்கு வந்திருந்தான்.

போர் தொடங்கிய நாள் முதலே சண்டையில் பங்கு கொண்டான். பெலஸ்தோக் என்னும் இடத்தின் அருகே நடந்த புகழ் பெற்ற டாங்கிப் போரில் தனது டாங்கியை இழந்துவிட்டான். அக்கணமே அவன் கமாண்டரை இழந்த மற்றொரு டாங்கியில் ஏறிக் கொண்டு, டிவிஷனின் எஞ்சிய டாங்கிகளுடன் பகைவரைத் தாக்கி, மீன்ஸ்க் நகரை நோக்கிப் பின்வாங்கிய சோவியத் படைகளுக்குக் காப்பு அளித்தான். பூக் ஆற்றின் கரையில் நடந்த போரில் அவன் இரண்டாவது டாங்கியையும் பறி கொடுத்து விட்டான், தானும் காயமடைந்தான். எனினும், மற்றொரு டாங்கியில் ஏறிக் கொண்டு கொல்லப்பட்ட கமாண்டரின் இடத்தில் டாங்கிக் கம்பெனியின் தலைமையை ஏற்றான். பிறகு ஜெர்மானியரின் பின்புலத்தைச் சேர்ந்து மூன்று டாங்கிகள் கொண்ட இயங்கும் படைப்பிரிவை அமைத்து ஜெர்மானியரின் பின்புலத்துக்குள் வெகுதூரம் புகுந்து சென்று வண்டித் தொடர்களையும் படையணிகளையும் தாக்கியவாறு சுற்றித் திரிந்தான்.

அவன் பிறந்த இடம் தரகபூஷ் என்ற நகர்புறத்தில் இருந்தது. சோவியத் தகவல் நிலையத்தின் வாயிலாக டாங்கி வீரர்கள் ஒழுங்காகக் கேட்டு வந்தார்கள். போர்முனை தனது சொந்த ஊர் வரை சென்றுவிட்டது என்பதை அந்த செய்தி அறிக்கைகள் மூலம் க்வோஸ்தயேவ் தெரிந்து கொண்டதும் அவனால் தாங்க முடியவில்லை. தனது மூன்று டாங்கிகளையும் வெடிவைத்து தகர்த்துவிட்டு எஞ்சியிருந்த எட்டு படைவீரர்களுடன் காடுகள் வழியே ஊரை நோக்கி நடந்தான்.

போர் தொடங்குவதற்கு சற்று முன் அவன் தன் ஊரை அடைந்தான். கிராமப் பள்ளி ஆசிரியையான அவன் தாய் கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்தாள். முதிய விவசாய நிபுணரும் உழைப்பாளிப் பிரநிதிகளின் மாவட்ட சோவியத் உறுப்பினருமான அவனுடைய தந்தை மகனை இராணுவத்திலிருந்து திரும்பும்படி அழைத்திருந்தார்.

ஊரை நெருங்குகையில் க்லோஸ்தியேவ் தனது வீட்டையும் பழைய காட்சிகளையும் நினைவுபடுத்திக் கொண்டான். அவனது உயரமற்ற மரவீடு பள்ளியின் அருகே இருந்தது. சிறுகூடான மெலிந்த மேனியளான அவனது தாய் பழைய சோபாவில் ஒன்றும் ஏலாத நிலையில் படுத்திருப்பாள். தகப்பனார் பழைய மோஸ்தரில் தைத்த டஸ்ஸோர் பட்டுக் கோட்டு அணிந்து, நோயாளியின் சோபா அருகே அமர்ந்து கவலையுடன் இருமியவாறு நரைத்த தாடியை உருவிக்கொண்டிருப்பார். சிறுமிகளான மூன்று தங்கைகள் சிறு கூடான மேனிகளும் சமாள நிறமுமாக அம்மாவையே உரித்து வைத்தாற் போல் இருப்பார்கள். கிராம உதவி மருத்துவப் பெண் ஷேன்யாவையும் அவன் நினைவுக்கூர்ந்தான். அவள் நீல விழியாள். ஒடிசலாக இருப்பாள். ரெயில் நிலையம் வரை வண்டியில் வந்து அவனை வழியனுப்பினாள் அவள். தினந்தோறும் அவளுக்குக் கடிதம் எழுதுவதாக அவன் வாக்களித்தான்…

இப்போது ஊரில் க்யோஸ்தியேவ் கண்ட காட்சி மிகத் துயர் நிறைந்த அனுமானங்களை விடப் பயங்கரமாக இருந்தது. வீட்டையோ கிராமத்தையோ அவன் காணவில்லை. எரிந்து கரிந்த அழிபாடுகளின் இடையே தத்திக் குதிப்பதும் முணுமுணுப்பதுமாகவும் ஓரளவு மூளை புரண்டும் இருந்த ஒரு கிழவியிடமிருந்து கிராமத்தில் நடந்தவற்றை கேட்டுத் தெரிந்து கொண்டான் க்யோஸ்தியேவ்.

புகையினால் அவர்களுக்கு மூச்சுத் திணறியது. பழுக்கக் காய்ந்த கவசமூடி அவர்களைப் பொசுக்கியது. அவர்களுடைய உடைகள் எரிந்து கருகின. ஆயினும் அவர்கள் விடாது போரிட்டார்கள்.

ஜெர்மானியர் நெருங்கிவந்த சமயத்தில் பள்ளி ஆசிரியையின் உடல்நிலை மிகவும் மோசமாயிருந்ததால் அவளை வெளியே இட்டுச் செல்லவும் முடியாமல் கிராமத்திலேயே விடவும் மனமின்றி விவசாய நிபுணரும் புதல்விகளும் தயங்கிக் கொண்டிருந்தார்களாம். உழைப்பாளிப் பிரதிநிதிகளின் மாவட்ட சோவியத் உறுப்பினருடைய குடும்பம் கிராமத்தில் தங்கியிருப்பதை ஹிட்லர் படையினர் தெரிந்து கொண்டார்களாம். குடும்பத்தினரைப் பிடித்து வீட்டின் பக்கத்திலிருந்த பிர்ச் மரத்தில் அன்று இரவே தூக்கு போட்டுவிட்டு வீட்டை எரித்துவிட்டார்களாம். க்யோஸ்தியேவ் குடும்பத்தினருக்காக வேண்டிக்கொள்ளும் பொருட்டு ஷேன்யா தலைமை ஜெர்மான் அதிகாரியிடம் போனாளாம். அவள் வெகு நெரம் சித்திரவதை செய்யப்பட்டதாகவும் ஜெர்மன் அதிகாரி அவளைத் தன் ஆசைக்கிழத்தி ஆக்கிக்கொள்ள முயன்றதாகவும் ஜனங்கள் பேசிக்கொண்டார்களாம்.

உண்மையில் என்ன நடந்தது என்பது கிழவிக்குத் தெரியாதாம். அதிகாரி தங்கியிருந்த வீட்டிலிருந்து ஷேன்யாவின் பிணம் மறு நாள் வெளியே கொண்டுவரப்பட்டதாம். இரண்டு நாட்கள் ஆற்றின் அருகே கிடந்ததாம்.

கிழவி கூறியதைக் கேட்ட க்யோஸ்தியேவ் ஒரு வார்த்தை பேசவில்லை, ஒரு சொட்டுக் கண்ணீர் விடவில்லை.

ஜூன் மாதக்கடைசியில், ஜெனரல் கோனெவின் சேனை மேற்குப் போர்முனையில் தாக்கு நடத்திய சமயத்தில், கிரிகோரிய் க்யோஸ்தியேவ் தனது படைவீரர்களுடன் ஜெர்மன் முனையைப் பிளந்து ஊடுருவி விட்டான். ஆகஸ்டு மாதம் அவனுக்கு புதிய டாங்கி, புகழ்பெற்ற “டி-34” ரக டாங்கி, தரப்பட்டது. குளிர் காலத்துக்குள் அவன் “அளவு மீறிய” மனிதன் என்று பெயர் வாங்கிவிட்டான். அவனைப் பற்றிக் கதைகள் சொல்லப்பட்டன, பத்திரிக்கைகள் எழுதின. இவை நம்ப முடியாதவையாகத் தோன்றின என்றாலும் உண்மையில் நிகழ்ந்திருந்தன.

உதாரணமாக அவன் ஒரு முறை வேவு பார்க்க அனுப்பப்பட்டான். இரவில் ஜெர்மானியக் காப்பரண்களின் ஊடாகத் தனது டாங்கியில் முழு வேகத்துடன் புகுந்து, சுரங்க வெடிகள் புதைக்கப் பட்டிருந்த திடலை விபத்தின்றிக் கடந்து, ஜெர்மானியர் வசமிருந்த நகருக்குள் குண்டுகளைப் பொழிந்து பீதியைக் கிளப்பியவாறு தாக்கி நுழைந்தான். செஞ்சேனைப் பிரிவுகள் அந்நகரை அரை வளைவில் இறுக்கிக் கொண்டிருந்தன. கயோஸ்தியேவ் ஜெர்மானியரைக் கதி கலங்க அடித்தவாறு நகரை ஊடுருவி, மறுகோடியில் இருந்த சோவியத் படைகளைச் சேர்ந்துவிட்டான். இன்னொரு தடவை, ஜெர்மானியப் பின்புலத்தில் பதுங்குக்கிடங்கிலிருந்து திடீரெனப் பாய்ந்து குதிரை வண்டித் தொடர் மீது டாங்கியை மோதிப் பட்டைச் சக்கரங்களால் நொறுக்கித் துவைத்துவிட்டான்.

குளிர்காலத்தில் ஒரு சிறு டாங்கிப் பிரிவுக்குத் தலைமை ஏற்று, ஷெவ் நகரின் அருகில் அரண் செய்யப்பட்ட கிராமத்தின் காவற்படையை அவன் தாக்கினான். வெளிப் புறத்திலேயே, தற்காப்புப் பகுதியை டாங்கிகள் கடக்கும்போது திரவ எரிபொருள் குப்பி ஒன்று அவனது டாங்கிக்குள் படாரென்று வெடித்தது. புகை மண்டிய, மூச்சு முட்டச் செய்யும் தழல், டாங்கியைச் சூழ்ந்து மூடியது. ஆனால், டாங்கி வீரர்கள் தொடர்ந்து போரிட்டார்கள். க்யோஸ்தியேவும் முற்றுகையைப் பிளந்து தன்னுடன் வெளியேறியவர்களிலிருந்து அவன் பொறுக்கி எடுத்திருந்த துணைவீரர்களும் பெட்ரோல் தொட்டியோ குண்டுகளோ வெடிப்பதனால் தாங்கள் எக்கணமும் சாக நேரிடும் என்பதை அறிந்திருந்தார்கள்.

புகையினால் அவர்களுக்கு மூச்சுத் திணறியது. பழுக்கக் காய்ந்த கவசமூடி அவர்களைப் பொசுக்கியது. அவர்களுடைய உடைகள் எரிந்து கருகின. ஆயினும் அவர்கள் விடாது போரிட்டார்கள். டாங்கியின் பட்டைச் சக்கரங்கள் அருகே வெடித்த கனத்த குண்டு டாங்கியைக் குப்புறக் கவிழ்த்து விட்டது. வெடிப்பு அலை காரணமாக வெடியால் கிளத்தப்பட்ட மணலும் வெண்பனியும் காரணமாகவோ டாங்கியில் எரிந்த தழல் அணைந்துவிட்டது. உடம்பெல்லாம் எரிந்து அழன்ற நிலையில் க்யோஸ்தியேவ் டாங்கியிலிருந்து வெளியே எடுக்கப்பட்டான். கொல்லப்பட்ட பீரங்கி வீரன் அருகே, அவன் இடத்தை தான் ஏற்றுக் கொண்டு டாங்கியின் பீரங்கிமேடையில் உட்கார்ந்திருந்தான்….

அவன் மருத்துவமனைக்கு வந்து ஒரு மாதத்துக்கு மேலாகிவிட்டது. வாழ்வுக்கும் சாவுக்கும் இடையே அவன் இத்தனை நாட்களாக ஊசலாடிக் கொண்டிருந்தான். உடல்நிலை சீர்படும் என்ற நம்பிக்கையே அவனுக்கு இல்லை, எதிலும் அக்கறையோ ஆர்வமோ இல்லை. சில வேளைகளில் நாள் பூராவும் ஒரு வார்த்தைகூடப் பேசாமல் இருந்துவிடுவான்.

படுகாயம் அடைந்தவர்களின் உலகம் வழக்கமாக வார்டின் நான்கு சுவர்களுக்குள் அடங்கிவிடும். தவிரவும் படுகாயமுற்றவனுக்கு அலுப்பூட்டும்படி மெதுவாக நகரும் மருத்துவமனை நாட்களை முற்றாக எப்போதும் நிறைத்திருப்பது, அவனுடைய எண்ணங்களைத் தன்னுடன் பிணித்திருப்பது அவனது காயம்தான். இந்தக் காயம், வீக்கம் அல்லது அங்க முறிவைப் பற்றி எண்ணியவாறே அவன் உறங்குகிறான், கனவில் இவற்றையே காண்கிறான், கண்விழித்ததுமே வீக்கம் குறைந்து விட்டதா, சிவப்பு நிறம் போய்விட்டதா, காய்ச்சல் அதிகமாகி இருக்கின்றதா தணிந்துவிட்டதா என்று அறியப் பதைபதைப்புடன் முற்படுகிறான். இரவின் நிசப்தத்தில் கூர்ந்து கவனிக்கும் காது ஒவ்வொரு சரசரப்பையும் பன்மடங்காகப் பெருக்கிக்கொள்வது போலவே இங்கே தனது உடல் நலக்கேடு பற்றிய ஒரு முனைப்பான தியானம் காயங்களை இன்னும் வேதனை தருபவை ஆக்கிற்று. மிகத்திண்மையும் மனவுறுதியும் உள்ளவர்களைக்கூட, போரில் சாவைக் கலங்காமல் நேரிட்டு நோக்கியவர்களைக்கூட, தலைமை மருத்துவரின் குரலில் ஒலிக்கும் சின்னஞ்சிறு வேறுபாடுகளைக் கூடத் திகிலுடன் உற்றுக் கேட்கும்படியும், நோயின் போக்கு பற்றி வஸீலிய் வஸீலியெச்சின் கருத்தை அவரது முகத் தோற்றத்தைக் கொண்டு ஊகிக்க பதைக்கும் நெஞ்சுடன் முயலவும் அது கட்டாயப்படுத்தியது.

தன் மனம் படும் பாட்டை மெரேஸ்யெவ் கவனத்துடன் மறைத்தான். மருத்துவர்களின் உரையாடலில் தனக்கு அக்கறை இல்லை போலக் காட்டிக் கொண்டான். எனினும் மின்னோட்டம் பாய்ச்சுவதற்காகக் கால் கட்டுகள் அவிழ்க்கப்பட்ட ஒவ்வொரு தடவையும் துரோகத் தன்மை கொண்ட கருஞ்சிவப்பு நிறமும் புறவடிகளில் வர வர மேலே மேலே ஏறி வருவதைக் கண்டு, அச்சத்தால் அவன் கண்கள் பரக்க விழிக்கும்.

முதிய படகோட்டி அர்க்காஷா மாமா போல நொண்டியாகக் கட்டைக் கால்களுடன் காலந்தள்ள வேண்டிவருமோ? ஆற்றில் குளிப்பதற்கு, அவரைப் போலவே கட்டைக் கால்களைக் கழற்றிக் கரையில் வைத்துவிட்டுக் குரங்கு போலக் கைகளை ஊன்றி நகர்ந்து நீரில் விழ வேண்டியிருக்குமோ?..

அவனுடைய சுபாவத்தில் நிம்மதியின்மையும் ஏக்கமும் நிறைந்து விட்டன. கண்டிப்பான, கொஞ்சங் கொஞ்சமாக அதிகரித்த சிறந்த மருத்துவமனை உணவு அவனுடைய சக்தியை விரைவாக முன்னிலைக்குக் கொண்டுவந்துவிட்டது என்பது உண்மையே. கட்டுகளை மாற்றும் போதும் கதிர்வீச்சுச் சிகிச்சை அளிக்கும் போதும் அவனுடைய நொய்ந்த உடலைக் கண்டு பயிற்சி மருத்துவ யுவதிகள் முன்போல அரண்டு விழிப்பதில்லை.

ஆனால், அவன் உடம்பு எவ்வளவு விரைவாக வலுவடைந்ததோ அவ்வளவு விரைவாக அவனுடைய கால்கள் மோசமாகிக் கொண்டு போயின. சிவப்பு நிறம் புறவடிகளைக் கடந்து கணுக்கால்கள் வழியே மேலே பரவியது. விரல்கள் முற்றிலும் உணர்வு இழந்துவிட்டன. மருத்துவர்கள் அவற்றை ஊசிகளால் குத்தினார்கள். இந்த ஊசிகள் உடம்புக்குள் நுழைந்தன, எனினும் அலெக்ஸேய்க்கு வலியை உண்டாகவில்லை. வீக்கம் பரவுவதை ‘முற்றுகை’ என்ற விந்தைப் பெயரால் அழைக்கப்பட்ட புது முறையால் மருத்துவர்கள் தடுத்துவிட்டார்கள். ஆனால், வலி அதிகரித்தது. அது தாங்கவே முடியாதது ஆகிவிட்டது. பகலில் அலெக்ஸேய் தலையணையில் முகத்தைப் புதைத்துக் கொண்டு சத்தமில்லாமல் படுத்திருப்பான். இரவில் வார்டு மருத்துவத்தாதி க்ளாவ்தியா மிஹாய்லவ்னா அவனுக்கு மோர்பியா இஞ்செக்ஷன் கொடுப்பாள்.

மருத்துவர்களின் உரையாடல்களில் ”அறுத்து அகற்றி விடுதல்” என்ற சொற்றொடர் மிக அடிக்கடி கேட்கலாயிற்று. வஸிலிய் வஸிலியெவ்ச் சில வேளைகளில் அலெக்ஸேயின் கட்டில் அருகே நின்று, “என்ன, ஊர்வான், வலிக்கிறதோ? வெட்டி எடுத்து விடுவோமா, ஊம்? ‘சரக்’ – தீர்ந்தது காரியம் என்பார்.”

அலெக்ஸேயின் உடல் முழுவதும் உறைந்து குறுகிவிடும். வாய்விட்டுக் கத்தாமல் இருப்பதற்காகப் பற்களை இறுக்கிக் கொண்டு அவன் தலையை அசைக்க மட்டும் செய்வான்.

“நல்லது, துன்பப்படு துன்பப்படு, உன் பாடு. இதோ அதையும் செய்து பார்ப்போம்” என்று கோபத்துடன் முணுமுணுத்துப் புதிய சிகிச்சை முறையைக் குறிப்பார் தலைமை மருத்துவர்.

வார்டிலிருந்து அவர் சென்றதும் கதவு சாத்தப்படும், ஆளோடியில் மருத்துவர்களது காலடிச் சத்தம் அடங்கிவிடும், அலெக்ஸேயோ மூடிய விழிகளுடன் படுத்தவாறே “கால்கள், கால்கள், என் கால்கள்…” என்று எண்ணமிடுவான். கால்களை இழந்துவிட நேருமோ? தன் ஊர் கமீஷினில் இருக்கும் முதிய படகோட்டி அர்க்காஷா மாமா போல நொண்டியாகக் கட்டைக் கால்களுடன் காலந்தள்ள வேண்டிவருமோ? ஆற்றில் குளிப்பதற்கு, அவரைப் போலவே கட்டைக் கால்களைக் கழற்றிக் கரையில் வைத்துவிட்டுக் குரங்கு போலக் கைகளை ஊன்றி நகர்ந்து நீரில் விழ வேண்டியிருக்குமோ?..

இந்த மனத் துன்பம் வேறு ஒரு நிலைமை காரணமாக இன்னும் அதிகமாயிற்று. மருத்துவமனையில் சேர்ந்த முதல் நாளே அவனுக்குக் கமீஷினிலிருந்து சில கடிதங்கள் கிடைத்தன. தாயாரின் முக்கோண மடிப்புக் கடிதங்கள் பொதுவாகத் தாயாரின் எல்லாக் கடிதங்களையும் போலவே சுருக்கமாக இருந்தன. அவற்றில் பாதிக்குமேல் உறவினர்களின் வணக்கங்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன. வீட்டில் எல்லாம் கடவுள் அருளால் நலம் என்றும், அலெக்ஸேய் தாயாரைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம் என்றும் தேறுதல் அளிக்கும் உறுதி சொற்கள் எழுதப்பட்டிருந்தன. மறுபாதியில், தன்னை ஜாக்கிரதையாகப் பேணிக்கொள்ளும்படியும், குளிர் தாக்க இடங்கொடுக்காமல் இருக்கும்படியும், கால்களை நனைத்துக் கொள்ளாமல் இருக்கும் படியும், அபாயமான இடங்களுக்குப் போகாதிருக்கும் படியும் பகைவனின் துரோகம் பற்றி எச்சரிக்கையாக இருக்கும்படியும் அலெக்ஸேயிடம் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.

மாணவர்கள் போன்று கொட்டை கொட்டையான உருண்டை எழுத்துக்களில் எழுதப்பட்டிருந்த நீல உறைகளில் தொழிற்சாலைக் கல்லூரியில் அலெக்ஸேயுடன் படித்த மாணவியின் கடிதங்கள் இருந்தன. அவள் பெயர் ஓல்கா. கமீஷினில் உள்ள மரத் தொழிற்சாலையில் தொழில்நுட்ப நிபுணியாக அவள் இப்போது வேலை செய்து வந்தாள். புத்திளமைப் பருவத்தில் அலெக்ஸேயும் இதே தொழிற்சாலையில் உலோகக் கடைச்சற்காரனாக வேலைப் பார்த்திருந்தான். இந்த யுவதி பிள்ளைப்பருவத் தோழி மட்டும் அல்ல. அவளுடைய கடிதங்களும் அசாதரணமானவையாக, தனிச் சிறப்பு உள்ளவையாக இருந்தன. அலெக்ஸேய் அவற்றைப் பல தடவை படித்தான். மறுபடி மறுபடி அவற்றைக் கவனமாகப் படித்து, மிக மிகச் சாதாரணமான வரிகளில் தனக்கே முழுமையாக விளங்காத, களி நிறைந்த, உள்ளர்த்தத்தைத் தேடுவான்.

அதிகாரி தங்கியிருந்த வீட்டிலிருந்து ஷேன்யாவின் பிணம் மறுநாள் வெளியே கொண்டுவரப்பட்டதாம். இரண்டு நாட்கள் ஆற்றின் அருகே கிடந்ததாம். கிழவி கூறியதைக் கேட்ட க்யோஸ்தியேவ் ஒரு வார்த்தை பேசவில்லை, ஒரு சொட்டுக் கண்ணீர் விடவில்லை.

தனக்கு வேலை ஒரேயடியாக நெரிவாகவும், அப்போது இரவில் உறங்குவதற்குக் கூடத் தான் வீட்டுக்குப் போவதில்லை என்றும், நேரத்தை வீணாக்காமல் இருக்கும் பொருட்டு அலுவலகத்திலேயே உறங்கி விடுவதாகவும், தனது தொழிற்சாலையை இப்பொழுது அலெக்ஸேயால் அடையாளமே கண்டுகொள்ள முடியாது என்றும் தற்போது தொழிற்சாலையில் என்ன உற்பத்தி செய்யப்படுகிறது என்பதை அறிந்தால் அவன் பிரமித்துப் போய், சந்தோஷ மிகுதியால் வெறி கொண்டுவிடுவான் என்றும் எழுதியிருந்தாள் ஓல்கா.

தனக்கு ஓய்வு நாட்கள் மாதத்துக்கு ஒரு தடவைக்கு மேல் கிடைப்பதில்லை என்றும் அந்த நாட்களில் அவனுடைய தாயாரைப் போய்ப் பார்ப்பதாகவும், அலெக்ஸேயின் அண்ணன்மாரிடமிருந்து ஒரு தகவலும் இல்லை என்றும் எனவே முதிய தாயின் உடல்நிலை மோசமாக இருப்பதாகவும், தாயாரின் வாழ்க்கை கடினமாக இருக்கிறது என்றும், சமீபத்தில் அவள் அடிக்கடி நோய்வாய்படுவதாகவும் ஓல்கா நடுவில் குறித்திருந்தாள். தாயாருக்கு மிக நிறைய எழுதும்படியும் கெட்ட செய்திகளால் அவளைக் கலவரப்படுத்தாமல் இருக்கும்படியும் ஏனெனில், இப்போது தாயின் ஒரே நம்பிக்கையாக இருப்பவன் அவன்தான் என்றும் அவள் அலெக்ஸேயைக் கேட்டுக்கொண்டிருந்தாள்.

படிக்க:
பழங்குடிகளின் நிலம் , மொழி , பண்பாட்டைக் காக்கும் நக்சல்கள் !
மாட்டிறைச்சியின் பெயரால் காவி குண்டர் படையின் வெறியாட்டம் தொடங்கியது !

ஆகவே, மருத்துவர்களின் பேச்சில் “அறுத்து அகற்றி விடுதல்” என்ற சொற்கள் அடிக்கடி அடிபடத் தொடங்கவே அவன் திகில் அடைந்தான். நொண்டியாக அவன் ஊருக்கு எப்படிப் போவான்? தனது கட்டைக்கால்களை ஓல்காவுக்கு எப்படிக் காட்டுவான்? போர் முனையில் புதல்வர்களையும் பறிகொடுத்துவிட்டு, கடைசி மகனான அலெக்ஸேயை எதிர்பார்க்கும் தாயாருக்கு அவன் எப்படி அதிர்ச்சி உண்டாக்குவான்?

“அறுத்து அகற்றுவதா? இல்லை, அது மட்டும் வேண்டாம். இதை விடச் சாவே மேல்… எத்தகைய கொடூரமான, முள்ளாய் தைக்கும் சொல்! அறுத்து அகற்றுதல்! கூடவே கூடாது. இது மட்டும் நடக்கவிடக்கூடாது!” என எண்ணிக் கொண்டான் அலெக்ஸேய். சற்று பொறுத்திருப்பது என்று தீர்மானித்து, தான் செளகரியமாக வாழ்வதாகவும், போர் நெருக்கடி அற்ற பகுதிக்கு மாற்றப்பட்டிருப்பதாகவும் தாயாருக்கும் ஓல்காவுக்கும் எழுதினான். முகவரி மாற்றத்துக்கு காரணம் கற்பிப்பதற்காக, உண்மைபோல் தோன்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் பின்புலத்தில் பணியாற்றுவதாகவும் விசேஷப் பொறுப்பு ஒன்றை நிறைவேற்றுவதாகவும், இங்கே இன்னும் நீண்ட காலம் இருக்க வேண்டும் போல் தோன்றுவதாகவும் தெரிவித்தான்.

(தொடரும்)

முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க