கருத்துரிமையை காலில் மிதிக்கும் போலீசு !

  • ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக துண்டறிக்கை வினியோகித்த விழுப்புரம் மக்கள் அதிகாரம் தோழர்கள் மூவர் கைது – சிறை !
  • தமிழகத்தை கார்ப்பரேட்டுக்கு தாரைவார்க்கும் சதியை முறியடிப்போம் !

மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை,
தொடர்புக்கு : 99623 66321.

*****

மக்களை வாழவிடு! காவிரி டெல்டாவை அழிக்க வரும் ஹைட்ரோகார்பன் திட்டத்தை அனுமதிக்காதே!

அன்பார்ந்த தமிழக மக்களே!

ஹைட்ரோகார்பன் எடுக்க தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் முதல் கடலூர் வரை 1,794 சதுர கி.மீ. பரப்பளவு, பரங்கிப்பேட்டையில் இருந்து வேதாரண்யம் வரை 2,574 சதுர கி.மீ. பரப்பளவு என கடற்கரை ஓரம் இரண்டு மண்டலங்கள் ஸ்டெர்லைட் வேதாந்தத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளன.

குள்ளஞ்சாவடி முதல் தரங்கம்பாடி வரை 231 சதுர கி.மீ. ஒரு மண்டலம் ஓ.என்.ஜி.சி -க்கு கொடுக்கப்பட்டுள்ளது. மீத்தேன் எடுக்க, ஷேல்கேஸ் எடுக்க தனித்தனியாக உரிமம் பெற வேண்டும் என்பதை மாற்றி ஒரே வகையான திறந்தவெளி உரிமத்தைப் பெறுவதன் மூலம் பல ஆயிரம் சதுர கி.மீ பரப்பளவில் பூமிக்கடியில் உள்ள ஹைட்ரோகார்பனில் எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம் என பா.ஜ.க அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக துண்டறிக்கை வினியோகித்ததற்காக கைது செய்யப்பட்ட விழுப்புரம் மக்கள் அதிகாரம் தோழர்கள்.

பூமிக்கடியில் உள்ள மீத்தேன், ஈத்தேன், பியூட்டேன், ஷேல் கேஸ், கச்சா எண்ணெய் ஆகியவற்றின் பொதுப்பெயர் தான் ஹைட்ரோ கார்பன். மூவாயிரம் முதல் ஏழாயிரம் மீட்டர் ஆழம் வரை நிலத்தடி நீரை வெளியேற்றிவிட்டு, பல்வேறு ரசாயனங்களைக் கலந்து, கோடிக்கணக்கான லிட்டர் தண்ணீரை வெளியிலிருந்து பூமிக்கடியில் அழுத்தத்துடன் செலுத்தி நிலத்தின் அடிப்பகுதியில் முறிவை ஏற்படுத்தி, நிலக்கரிப் படிமங்களிலிருந்து மீத்தேனையும், படிமப் பாறைகளிலிருந்து ஷேல்கேஸையும், வெளியே பிரித்து எடுக்கப் போகிறார்கள்.

நீரியல் விரிசல் முறை என்று பெயர். ஒரு முறை ஒரு எண்ணெய்க் கிணற்றில் ஹைட்ரோகார்பன் எடுக்க, நீரியல் விரிசல் முறையில் 12 கோடி லிட்டர் தண்ணீர் தேவை. 400 டன் மணல் தேவை. 5 லட்சம் லிட்டர் ரசாயனக் கலவைகள் பயன்படுத்தப்படும். வெளியேறும் ரசாயனம் கலந்த கழிவு நீரால் விளைநிலங்கள் பாழாகும்.

ஜெர்மனி, பிரான்ஸ், கனடா, அமெரிக்கா ஐரோப்பிய நாடுகளில் நீரியல் விரிசல் முறை தடை செய்யப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் மக்கள் போராடுகிறார்கள். இங்கிலாந்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் ஹைட்ரோ கார்பன் திட்டம் கைவிடப்பட்டது. மேலும் குடியிருப்பு, விவசாய நிலங்களுக்கு அருகில் எடுக்க எந்த நாட்டிலும் அனுமதி இல்லை. ஆந்திராவில் கோதாவரிப் படுகையில் எரிவாயு, எண்ணெய் எடுத்ததால் நிலப்பரப்பு 5 அடி அளவிற்கு தாழ்ந்து கடல் நீர் உட்புகுந்து விட்டது.

இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டால் காவிரி டெல்டா விவசாயம் அழிவது மட்டுமல்ல, கடுமையான குடிநீர் பஞ்சமும் ஏற்படும். நிலத்தடி நீர் முற்றிலும் உறிஞ்சப்பட்டு நிலம் பாலைவனமாகும். கடல் நீர் உட்புகுந்துவிடும். பல லட்சம் மக்கள் அகதிகளாக்கப்படுவார்கள். மீன்வளம் அழிந்து மீனவர்கள் கடற்கரையிலிருந்து விரட்டி அடிக்கப்பட்டார்கள்.

படிக்க:
ஹைட்ரோ கார்பன் : தமிழகத்தைச் சுடுகாடாக்க மீண்டும் நுழைகிறது வேதாந்தா !
♦ நூல் அறிமுகம் : ஹைட்ரோகார்பன் – ஆழத்தில் புதைந்திருக்கும் பேரபாயம் !

காவிரி டெல்டா படுகை அடுத்த சில ஆண்டுகளுக்கு பிறகு கனரக லாரிகள், ரசாயன தொழிற்சாலைகள், நிலக்கரிச் சுரங்கம், எரிவாயு எண்ணெய் ஏற்றுமதி, பெரிய துறைமுகங்கள், விமானத்தளம், ராணுவ வாகனங்கள் என தமிழகமே கார்ப்பரேட்டுகளின் வேட்டைக்காடாக மாற்றப்படும். பல ஆயிரம் ஆண்டுகள் பாரம்பரிய காவிரி டெல்டா விவசாயம் என்பது நாளடைவில் அழிந்து உணவுக்காக வெளிநாடுகளில் தமிழகம் கையேந்தும் நிலை ஏற்படும்.

ஹைட்ரோ கார்பன், பெட்ரோலிய கெமிக்கல் முதலீட்டு மண்டலம் ஆகியவற்றோடு இந்தியா முழுமைக்கும் கொண்டுவரப்படும் சாகர்மாலா திட்டத்தையும் இணைத்து பார்க்க வேண்டும். மேற்கே குஜராத் முதல் கிழக்கே வங்காளம் வரை கடல் மாலைபோல் உருவாக்குவது சாகர்மாலா திட்டம். பல ஆயிரம் கி.மீ. கடற்கரையில் சாலை, கடல் வழித்தடம், ரயில் வழித்தடம், ஆற்று வழித்தடம், பல ஆயிரம் கி.மீ. எண்ணெய் எரிவாயுக் குழாய்கள், தமிழகத்தில் சீர்காழி, இணையம் உட்பட நாடு முழுவதும் 6 துறைமுகங்கள். இராணுவ போர் விமானங்கள் இறங்கி செல்லவும், இராணுவ டாங்கிகள் தாராளமாக செல்லவும் பல நூறு மீட்டர் அகலமான சாலைகள் என சாகர்மாலா ஆங்கில படத்தை மிஞ்சும் பிரம்மாண்டத்தோடு வரவுள்ளது.

இவற்றால் பெரும்பான்மை மக்களுக்கு ஒரு பயனும் இல்லை. சுற்றுச்சூழல் மாசடைந்து பேரழிவுதான் நடக்கும். பல ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் கையகப்படுத்தப்படும். மீனவர்கள் கடற்கரையிலிருந்து அப்புறப்படுத்தப்படுவார்கள். காவிரிப் படுகையில் உள்ள நிலக்கரி, கச்சா எண்ணெய், எரிவாயுவைக் கொள்ளையடித்து வெளிநாடுகளுக்கு கப்பல் வழியாக ஏற்றுமதி செய்யப் போகிறார்கள்.

மேலும் கடலூர், சிதம்பரம், சீர்காழி, தரங்கம்பாடி ஆகிய வட்டாரங்களில் உள்ள சுமார் 49 கிராமங்களில் 57,000 ஏக்கர் பரப்பளவில் ரூ. 92,000 கோடி முதலீட்டில் பெட்ரோலிய சுத்திகரிப்பு ரசாயனத் தொழிற்சாலைகளையும் அமைக்க உள்ளார்கள். கடலூர் முதல் கிழக்குக் கடற்கரை முழுவதும் அனல்மின் நிலையங்கள், துறைமுகம், உரத்தொழிற்சாலை, ஹைட்ரோ கார்பன், சாயப் பட்டறைகள், பெட்ரோலிய கெமிக்கல் தொழிற்சாலைகள் என கார்ப்பரேட் கொள்ளைகளுக்கான திட்டங்கள்தான் அமல்படுத்தப்பட இருக்கின்றன. பாஜக அரசின் வளர்ச்சித் திட்டங்களால் வேலை இழந்தவர்கள்தான் அதிகம். இருக்கும் வாழ்வை இழந்தவர்கள் மிக அதிகம். சில ஆயிரம் பேர் வளர்ச்சியின் பயனை அனுபவிக்க பெரும்பான்மை மக்கள் சாக வேண்டுமா? தமிழகத்தின் சுற்றுச்சூழலை சீர்குலைக்க அனுமதிக்கக்கூடாது.

காவிரி டெல்டாவை நம் கண்முன்னே அழிக்க வருகிறார்கள். நாம் போராடாமல் அமைதி காக்க முடியுமா? தீர்ப்புகள், சட்டங்கள், விதிமுறைகள், சுற்றுச்சூழல், மக்களின் சுகாதாரம் என எதையும் மயிரளவும் மதிக்காதவர்கள்தான் கார்ப்பரேட் கம்பெனிகள். விவசாயம், வேலைவாய்ப்பு, இயற்கை வளங்கள் மீதான உரிமை, கல்வி, மருத்துவம், சுகாதாரம் போன்ற அனைத்திலும் மத்திய – மாநில அரசுகளின் கொள்கை முடிவை தீர்மானிப்பதில் பெரும்பான்மை மக்களுக்கு உரிமை வேண்டும். நம்மை கேட்காமல் பாஜக பெட்ரோலிய அமைச்சர் டெல்லியில் ஸ்டெர்லைட் வேதாந்தா முதலாளியுடன் ஒப்பந்தம் செய்து, நமது விவசாயிகள், நமது மீனவர்களுக்கு எதிராக, நம்ம ஊரில் அமல்படுத்துவதை எப்படி ஏற்க முடியும்? உழைத்து வாழும் கோடிக்கணக்கான மக்கள் இவர்களுக்கு அடிமைகளும் அல்ல; பிழைக்க வந்த அகதிகளும் அல்ல.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தினால் விவசாயிகள், மீனவர்கள் மட்டுமல்ல அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்படுவார்கள். வாழத்தகுதியற்ற நிலைக்கு நிலம், நீர், காற்று மாறிவிட்டால் என்ன செய்ய முடியும்? மூட்டை முடிச்சை கட்டிக்கொண்டு கால்நடைகளுடன் அகதிகளாக ஓடுவதைத் தவிர வேறு வழி இல்லை. உணவு உற்பத்தியில் – சுயசார்பு தன்னிறைவு என்பதை புறக்கணித்து, சுற்றுச்சூழலை சீர்குலைத்து, சில ஆயிரம் பேர் மட்டுமே பயனடையும் ஹைட்ரோ கார்பன் போன்ற எதையும் வளர்ச்சி என்ற பெயரில் கொண்டு வருவதை ஏற்க முடியாது.

கார்ப்பரேட் கம்பெனிகள் எதிர்த்து ஒன்றிணைந்த மக்கள் போராட்டங்கள் வெற்றி பெற்றுள்ளன. ஒடிசா பழங்குடியின மக்கள் வேதாந்தாவின் பாக்சைட் சுரங்கத்திற்கு எதிராகப் போராடி துரத்தி அடித்துள்ளனர். நெடுவாசல் மக்கள் மீத்தேன் திட்டத்தை விரட்டி உள்ளனர். கதிராமங்கலம் பகுதி மக்கள் போராடி பல இடங்களில் ஓ.என்.ஜி.சியின் அத்துமீறலை தடுத்துள்ளனர். தூத்துக்குடி மக்கள் பல ஆண்டுகள் போராடி தங்கள் உயிரைத் தியாகம் செய்து ஸ்டெர்லைட் ஆலையை மூடி உள்ளனர். சேலம் 8 வழிச்சாலைக்கு எதிராக, மக்கள் போலீசாரின் அடக்குமுறைகளை தன்னந்தனியாக எதிர்த்து நின்று கேள்வி கேட்டு போராடியதால் இத்திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டுக்கு தடை வந்தபோது தமிழகமே டெல்லிக்கு எதிராக எழுந்து நின்று உரிமையை நிலைநாட்டியது.

எதிரியை வெற்றி கொள்ள முடியுமா என்ற முன்நிபந்தனையோடு உலகில் எந்த மக்கள் போராட்டங்களும் துவங்குவதில்லை. மக்களுக்கான நியாயமான கோரிக்கைதான் போராட்டத்திற்கு தேவை. காவிரி டெல்டாவை பாலைவனமாக்கும் ஹைட்ரோகார்பன் திட்டத்தை முறியடிப்போம். மண்ணையும் மக்களையும் காக்க எந்தவித தியாகத்திற்கும் தயங்காமல் போராடினால் எத்தகைய அரசுகளையும் பணிய வைக்க முடியும்.

  • விவசாயிகள், மீனவர்கள் வாழ்வை சூறையாட வரும் ஹைட்ரோகார்பன், பெட்ரோ கெமிக்கல் மண்டலம், சாகர்மாலா திட்டங்களை அனுமதிக்காதே!
  • காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிக்க நடவடிக்கை எடு!
  • பாசன வாய்க்கால்கள், ஏரி குளங்களை தூர்வார மக்கள் பங்களிப்போடு, அவர்கள் கண்காணிப்பில் திட்டங்களை அமல்படுத்து!
  • காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் போதிய தடுப்பணைகளை கட்டுவதற்கு உடனே ஆவண செய்!
  • உணவு உற்பத்தியில் சுயசார்பு, தன்னிறைவு என்ற அடிப்படையில் பெரும்பான்மை மக்களுக்கு ஆதரவான புதிய விவசாய கொள்கையை உருவாக்கு!

மக்கள் அதிகாரம் அமைப்பின் உறுப்பினராக இணையுங்கள்!

மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை,
தொடர்புக்கு : 99623 66321.
ppchennaimu@gmail.com
fb.com/ppchennaimu


நாள் : 9-6-2019

பத்திரிகைச் செய்தி

மிழக டெல்டாவில் பேரழிவை ஏற்படுத்தும் ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஜுன் 12 அன்று நடைபெறும் மனித சங்கிலி போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதுடன், அதில் மக்கள் அதிகாரம் அமைப்பும் பங்கேற்கும்.

தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் முதல் நாகை மாவட்டம் வேதாரண்யம் வரை சுமார் 5,000 சதுர கி.மீ. பரப்பளவில் ஹைட்ரோகார்பன் எடுக்க பன்னாட்டு நிறுவனமான வேதாந்தா (ஸ்டெர்லைட்டின் தாய் நிறுவனம்) மற்றும் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கு பா.ஜ.க. மோடி அரசும், அதிமுக எடப்பாடி அரசும் தமிழக மக்களின் எதிர்ப்புகளையும் மீறி அனுமதி அளித்துள்ளன. போராடுபவர்களை பல வகைகளில் அச்சுறுத்தி ஒடுக்க முயல்கின்றன.

ஏழாயிரம் அடிவரை நிலத்தடி நீரை வெளியேற்றி கோடிக்கணக்கான லிட்டர் நீரில் பல்வேறு ரசாயனங்களைக் கலந்து பூமிக்கடியில் அழுத்தத்துடன் செலுத்தி நிலத்தின் அடிப்பகுதியில் முறிவை ஏற்படுத்தி நிலக்கரி படிமங்களிலிருந்து மீத்தேனையும், படிமப்பாறைகளிலிருந்து ஷேல்கேசையும் நீரியில் விரிசல் முறையில் வெளியே பிரித்து எடுக்கப்போகிறார்கள்.

இதன் மூலம் தமிழகத்தின் நெற்களஞ்சியமான காவிரி டெல்டாவே பாலைவனமாகும். கடல் மீன்வளம் அழியும். பிச்சாவரம் அலையாத்திக் காடுகள் அழியும். நிலப்பகுதியில் கடல் நீர் உட்புகும். எதிர்காலத்தில் காவிரிப்படுகை மக்கள் வாழத் தகுதியற்ற பகுதியாக மாறும். இப்போது போராடி தடுத்து நிறுத்தாவிட்டால் நம் எதிர்காலத் தலைமுறையினர் மோசமான அழிவில் தள்ளப்படுவார்கள்.

இந்நிலையில் பேரழிப்பிற்கு எதிரான பேரியக்கம் சார்பில் வருகிற 12.6.2019 புதன் கிழமை மாலை 5:30 மணி முதல் 6:00 மணி வரை விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் முதல் இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் வரை 596 கி.மீ. தூரம் மனித சங்கிலி போராட்டம் நடத்த அறிவித்துள்ளது.

கிழக்குக் கடற்கரை சாலையில் நடைபெற உள்ள மனிதச் சங்கிலி போராட்டத்தை மக்கள் அதிகாரம் அமைப்பு ஆதரிப்பதுடன் அதில் பங்கேற்கும். அனைவரும் பெரும் திரளாக பங்கேற்று தமிழகத்தின் எதிர்ப்பை வலிமையாகப் பதிவு செய்ய வேண்டும் என கோருகிறோம்.

தோழமையுடன்
வழக்குரைஞர் இராஜூ
மாநில ஒருங்கிணைப்பாளர்
மக்கள் அதிகாரம்
9962366321

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க