உண்மை மனிதனின் கதை | இரண்டாம் பாகம் | அத்தியாயம் – 4

நாற்பத்து இரண்டாம் வார்டில் புதிய நோயாளி வந்ததுமே (அவரை மற்றவர்கள் எல்லோரும் கமிஸார் என்று அழைக்கலாயினர்) வார்டின் வாழ்க்கை அமைப்பு முழுவதும் மாறிவிட்டது. பாரியான, வலிமையற்ற இந்த மனிதர் மறுநாளே எல்லோரையும் விவரமாக அறிமுகம் செய்து கொண்டார். இவ்வாறு செய்து கொள்கையில், பின்னர் ஸ்தெபான் இவானவிச் கூறியது போல, “ஒவ்வொருவரது உள்ளத்துக்கும் பொருத்தமான சாவியைத் தேர்ந்தெடுக்க” அவருக்கு முடிந்தது.

ஸ்தெபான் இவானவிச்சுவிடம் குதிரைகளையும் வேட்டையையும் பற்றி அவர் ஆசை தீரப் பேசினார். இவ்விரண்டையும் இவர்கள் இருவருமே நன்கு அறிந்திருக்கிறார்கள், பெரிதும் நேசித்தார்கள். போரின் சாராம்சாரத்தை உட்புகுந்து ஆராய்வதில் ஈடுபாடு உள்ள அலெக்ஸேயிடம் விமானப்படையையும் டாங்கிகளையும் பயன்படுத்துவதற்கு உரிய நவீன முறைகள் பற்றி அவர் உற்சாகமாக விவரித்தார். விமானங்களும் டாங்கிகளும் அருமையானவைதாம் என்றாலும் குதிரைகள் பயனற்று போய்விடவில்லை என்றும், குதிரைப்படைப் பிரிவுகளை நன்றாகச் செப்பம் செய்து, இயந்திர வசதிகளால் பலப்படுத்தி, விரிவாக, துணிவுடன் சிந்தனை செய்யும் இளைஞர்களைச் சிறந்த வாட்போர் வீரர்களான முதிய கமாண்டர்களுக்கு உதவியாகப் பயிற்றினால் நமது குதிரைப்படை இன்னும் உலகை பிரமிக்க வைக்கும் என்று ஆர்வம் பொங்க நிரூபித்தார்.

வாய்மூடி டாங்கி வீரனுடனும் பேசுவதற்கு அவருக்கு விஷயம் கிடைத்து விட்டது. அவர் கமிஸாராக இருந்த டிவிஷன் யார்த்ஸெவோ அருகிலும் பின்பு துஹொவ்ஷீனாவிலும், அதாவது டாங்கிவீரன் தன் குழுவுடன் எந்த இடத்தில் – பகைவரின் முற்றுகையைப் பிளந்து வெளியேறினானோ அந்த இடத்திலும், ஜெனரல் கோனெவின் புகழ்பெற்ற எதிர்த்தாக்கில் பங்கு கொண்டு போரிட்டதாம். டாங்கிவீரனுக்கும் தமக்கும் பழக்கமான கிராமங்களின் பெயர்களைக் கமிஸார் உற்சாகமாகக் கூறினார்.

பாசிஸ்டுகளுக்கு எங்கே எப்படி மண்டகப்படி நடந்தது என்று விவரித்தார். டாங்கி வீரன் முன்போன்றே மௌனம் சாதித்தான். ஆனால். இதற்கு முன் செய்த மாதிரி முகத்தைத் திருப்பிக் கொள்ளவில்லை. கட்டுப் போட்டிருந்தபடியால் அவன் முகம் தென்படவில்லை. ஆனால் அவன் இசைவு தெரிவிக்கும் பாவனையில் தலை அசைத்தான். குக்கூஷ்கினைக் கமிஸார் சதுரங்கம் விளையாட அழைத்ததும் அவனுடைய சிடுசிடுப்பின் இடத்தில் கனிவு வந்துவிட்டது. சதுரங்கப் பலகை குக்கூஷ்கினுடைய கட்டிலில் வைக்கப்பட்டது. கமிஸார் மூடிய கண்களுடன் படுத்தபடியே “குருட்டு” ஆட்டம் ஆடி, ஓயாமல் பிணங்கும் லெப்டினன்ட் குக்கூஷ்கினை படுதோல்வி அடையச் செய்தார். இதனாலேயே அவனைத் தம்முடன் சமரசத்துக்கு வரச் செய்துவிட்டார்.

காலை நேரத்தில் அறைத் தாதி பலகணித் திறப்பைத் திறந்து விடுவாள். அப்போது சலிப்பூட்டும் மருத்துவமனை நிசப்தத்தை கலைத்துக் கொண்டு தெருவின் குதூகல இரைச்சலோடு மாஸ்கோவின் முன் வசந்த இளங்காற்று குளுகுளுவென்று உள்ளே வரும். கமிஸார் அந்த வார்டுக்கு வந்தது முதல் இதே போன்ற உற்சாகம் அங்கே குடிகொண்டது. இதற்காக கமிஸார் எவ்விதப் பிரயாசையும் எடுத்துக் கொள்ளவில்லை. அவர் செய்ததெல்லாம் தம்மை வதைத்த வேதனையை மறந்துவிட்டு அல்லது மறக் கடித்துவிட்டு ஆர்வமும் உற்சாகமும் பொங்க வாழ்ந்ததுதான்.

காலையில் கண் விழித்ததும் அவர் கட்டிலில் உட்கார்ந்து கைகளை மேலே தூக்குவார், பக்கங்களில் நீட்டுவார், குனிவார், நிமிர்வார், தலையை லயப் பொருத்தத்துடன் திருப்புவார், தாழ்த்துவார் – இவ்வாறு உடற்பயிற்சி செய்வார். முகங்கழுவ நீர் கொடுக்கப்படுகையில், அவர் குளிர்ந்த நீரை வாங்கிக் கொண்டு, பேசினுக்கு மேலே கவிந்தவாறு நெடுநேரம் தண்ணீரைச் சளசளப் பென்று கொட்டிக் கொள்வதும் செருமுவதுமாக இருப்பார். பின்பு துவாலையால் அவர் துவட்டிக் கொள்ளும் உற்சாகத்தில் அவருடைய வீங்கிய உடல் கன்றிச் சிவந்துவிடும். அவரைப் பார்க்கும் மற்றவர்களுக்கும் அப்படியே செய்ய ஆசை உண்டாகும்.

செய்தித்தாள்கள் கொண்டு வரப்பட்டதும் நர்ஸின் கையிலிருந்து அவற்றை ஆர்வத்துடன் வாங்கி சோவியத் தகவல் இலாக்காவின் செய்தி அறிக்கைகளை முதலில் மளமளவென்று உரக்கப் படிப்பார். பின்பு போர் முனைகளிலிருந்து நிபுணர்களின் செய்திகளை விவரமாக, ஒன்றன் பின் ஒன்றாகப் படிப்பார். தமக்கே உரிய தனிப் பாணியில், ஒரு வகையில் சொன்னால் செயல் துடிப்புடன், படிக்க அவரால் முடிந்தது.

தமக்கு பிடித்த இடத்தைத் தணித்த குரலில் மீண்டும் படிப்பார். “சரி!” என்று வாய்க்குள் சொல்லிக் கொள்வார், எதற்கோ அழுத்தங்கொடுத்து அடிக்கோடு இடுவார். சில வேளைகளில் சினத்துடன் ஆர்ப்பரிப்பார்: “புளுகுகிறான், நாய்ப் பயல்! இவன் போர் முனைக்குப் போனதே இல்லை என்று பீர் புட்டிக்கு எதிராக என் தலையை பணயம் வைக்கிறேன். அட கயவாளிப் பயல்! எழுதக் கிளம்பி விட்டான்!”.  ஒரு முறை ஏதோ பொய்க்கதை அளந்திருந்த நிருபன் மேல் எரிச்சல் கொண்டு செய்தித்தாள் ஆசிரியக்குழுவுக்கு அக்கணமே ஒரு கடிதம் எழுதினார். போரில் இத்தகைய விஷயங்கள் நடக்கவில்லை, நடக்க முடியாது என்று நிருபித்து, எல்லை மீறிவிட்ட புளுகனைச் சரிப்படுத்தும் படி கடிதத்தில் கேட்டுக்கொண்டார்.

கொடிய நோவு
அவரை வதைக்கவே இல்லை
என்பது போல அப்போது தோன்றும்.
மருத்துவர்களிடம்
அவசரமின்றி வார்த்தையாடுவார்.
அவர் உடலில்
வலியுள்ள இடங்களை
அவர்கள் தொட்டுப் பார்க்கையில்
கேலி செய்வார்.

சில வேளைகளில் செய்தித்தாளில் படித்த விவரங்களைப் பற்றி எண்ணமிட்டவாறு தலையணையில் சாய்ந்து திறந்த விழிகளுடன் அப்படியே படுத்திருப்பார். அல்லது திடீரெனத் தமது குதிரைப் படையினரைப் பற்றிச் சுவையான கதைகள் சொல்லத் தொடங்குவார். அவர் சொல்வதைக் கேட்டால் அவர்கள் வீரர்களில் வீரர்கள், சிறந்தவர்களில் சிறந்தவர்கள் என்று தோன்றும். பின்பு மீண்டும் செய்தித்தாள் படிக்க ஆரம்பிப்பார்.

பகலில் இரண்டு மணி நேரம், மதியச் சாப்பாட்டுக்கும் சிகிச்சை நடைமுறைக்கும் இடையே, அவர் ஜெர்மானிய மொழியைக் கற்றுக் கொள்வார், சொற்களை மனப்பாடம் செய்வார், வாக்கியங்கள் அமைப்பார். சில வேளைகளில் வேற்று மொழியின் பொருள் பற்றித் திடீரெனச் சிந்தனை செய்து, சொல்லுவார்.

“ஜெர்மன் பாஷையில் கோழிக்குஞ்சு என்பதற்கு என்ன வார்த்தை தெரியுமா நண்பர்களே? க்யூஹெல்ஹென். அருமை! க்யூஹெல்ஹென் என்னும்போதே, ஏதோ சின்னஞ்சிறிய, தூவி அடர்ந்த, மென்மையான ஒன்று என்பது தொனிக்கிறது. மணி என்பதற்கு வார்த்தை என்ன, தெரியுமா? க்யியோக்ளிங். சொல்லிலே கணீரொலி இருக்கிறது, இல்லையா?“

ஒரு முறை ஸ்தெபான் இவானவிச்சால் பொறுக்க முடியவில்லை .

“தோழர் ரெஜிமெண்டுக் கமிஸார், உங்களுக்கு ஜெர்மன் மொழி எதற்கு? வீணாக ஏன் அலட்டிக் கொள்கிறீர்கள்? சக்தியைப் பேணிக் காத்துக் கொள்ள வேண்டும் நீங்கள்..” என்றார்.

கமிஸார் அந்த முதிய வீரரைத் தந்திரத்துடன் நோக்கினார்.

“அடத் தாடி, ருஷ்ய மனிதனுக்கு இதுவும் ஒரு வாழ்க்கை ஆகுமா? நாம் பெர்லினை அடைந்த பிறகு ஜெர்மானியப் பெண்களுடன் நான் எந்த மொழியில் பேசப் போகிறேன்?”

போர் முனை தற்போதைக்கு மாஸ்கோவின் அருகே உள்ளது என்றும் ஜெர்மானியப் பெண்கள் இன்னும் வெகு தொலைவில் இருக்கிறார்கள் என்றும் வாதிக்க ஸ்தெபான் இவானவிச் விரும்பினார். ஆனால், கமிஸாரின் குரலில் தொனித்த குதூகலம் பொங்கும் நம்பிகைகையைக் கேட்டதும் வெறுமே தொண்டையைக் கனைத்துக் கொண்டு, “அது சரிதான். ஆனாலும் இந்த மாதிரி உள் காயத்துக்குப் பிறகு நீங்கள் ஜாக்கிரதையாக உடம்பைப் பேணிக் கொள்வது நல்லது” என்று காரியரீதியாகச் சொல்லி நிறுத்திக் கொண்டார்.

“பேணிக் காத்த குதிரைதான் முதலில் இடறிவிழும் என்று சொல்வார்கள். நீங்கள் கேட்டதில்லையா? மோசம், தாடி!”

நோயாளிகளில் எவனுமே தாடி வைத்துக் கொண்டிருக்கவில்லை. ஆயினும் கமிஸார் எல்லாரையும் எதனாலோ “தாடி!” என்று அழைத்தார். அவர் இப்படி அழைப்பது வருத்தம் தரவில்லை, களிப்பே ஊட்டியது. இந்த வேடிக்கைப் பெயரைக் கேட்டு எல்லோருக்கும் குதூகலம் உண்டாயிற்று.

அலெக்ஸேய் சில நாட்கள் கமிஸாரை விடாது கவனித்து வந்தான். அவர் கடும் வேதனைப்பட்டார் என்பதில் சந்தேகமில்லை. அவர் உறங்கத் தொடங்கி, தம்மீது கட்டுப்பாட்டை இழக்கவேண்டியதுதான் தாமதம், முனகவும் புரளவும் பற்களை நெறுநெறுக்கவும் ஆரம்பித்துவிடுவார். அவர் முகம் வலிப்பு கண்டு சுளிக்கும். அவருக்கு இந்த விஷயம் தெரிந்திருந்தது போலும். எனவேதான் அவர் பகல் வேளையில் ஏதாவது காரியத்தில் ஈடுபட்டு, தூங்காதிருக்க அவர் முயன்றார். விழித்துக் கொண்டிருக்கையிலோ, அவர் எப்போதும் நிம்மதியாகவும் நிதானமாகவும் இருந்தார்.

கொடிய நோவு அவரை வதைக்கவே இல்லை என்பது போல அப்போது தோன்றும். மருத்துவர்களிடம் அவசரமின்றி வார்த்தையாடுவார். அவர் உடலில் வலியுள்ள இடங்களை அவர்கள் தொட்டுப் பார்க்கையில் கேலி செய்வார். அப்போது அவருடைய கை, துப்பட்டியைப் பற்றிக் கசக்குவதையும் அவரது மூக்குத் தண்டில் பாசி மணிகள் போன்று வியர்வை துளிர்ப்பதையும் கொண்டுதான் வலியைப் பொறுத்துக் கொள்வது அவருக்கு எவ்வளவு கடினமாயிருந்தது என்பதை ஊகிக்க முடிந்தது.

படிக்க:
ஹார்லி டேவிட்சன் பைக் வரி குறைப்பு : மிரட்டும் ட்ரம்ப் ! பம்மிய மோடி !
அமித் ஷாவுக்கு கருப்புக்கொடி காட்டிய மாணவி பல்கலைக் கழகத்திலிருந்து நீக்கம் !

மனிதர் கொடும் வேதனையை எப்படித் தாங்கிக் கொள்கிறார், இவ்வளவு ஆற்றலும் உற்சாகமும் வாழ்க்கை ஆர்வமும் அவரிடம் எங்கிருந்து வந்தன என்பது அலெக்ஸேய்க்கு விளங்கவில்லை. மயக்க மருந்துகள் வர வர அதிக அளவில் கொடுக்கப்பட்டுவந்த போதிலும் அலெக்ஸேய்க்கு இரவில் உறக்கமே பிடிப்பதில்லை. சில நாட்களில் முனகாமல் இருக்கும் பொருட்டுக் கம்பளியைக் கடித்துக் கொண்டு, திறந்த விழிகளுடன் விடியும் வரை படுத்துக்கிடப்பான். எனவே, கமிஸாரின் உற்சாக ஊற்றுக் கண் எது எனப் புரிந்து கொள்ள அவனுக்கு இன்னும் அதிக விருப்பம் உண்டாயிற்று.

(தொடரும்)

முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க