அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை தொடர் | பகுதி – 03
கல்வி கேள்விகளிற் சிறந்தவர்களும், ஆராய்ச்சி வசதி நிறைந்தவர்களுமாவது, இந்தத் துறையிலே சற்று உழைப்பார்களானால், திராவிட இனம் உய்ய வழி உண்டு. இல்லையேல் உலகிலே பல இனங்கள் பாழ்பட்டு மறைந்து போனது போல் ஒரு காலத்தில் உலகப் புகழ் வாய்ந்த திராவிட இனமும் அழிந்தேதான் போகும்! எந்த இனம் தனது பண்பை இழந்து, பண்டைய பெருமையை மறந்து எதிரியிடம் அடைக்கலம் புகுந்து விடுகிறதோ அந்த இனம் அழிவுக் குழிக்கு அவசர அவசரமாக நடக்கிறது என்றுதான் பொருள்.
“எமை நத்துவாய் என எதிரிகள்கோடி
இட்டழைத்தாலும் தொடேன்”
என்று இன எழுச்சியே உருவானது போன்று நம் கவிஞர் கனக சுப்புரத்தினம் (பாரதிதாசன்) பாடுகிறார்! தொடேன் என்று, உறுதியும் ஆவேசமும் மிளிர அந்தப் பதம் உயிர்க்கவியின் உள்ளத்திலிருந்து பீறிட்டுக் கொண்டு வெளிக்கிளம்புகிறது ! எதிரிக்கு அடிமையாக மாட்டேன், கோடி தரினும் என்று கூறுகிறார். கோடி ரூபாய் – பவுன், வைரக்கற்கள், நவரத்தினக் குவியல், எதை நீ கோடியாகக் குவித்து என் எதிரே வைத்தாலும் சரியே, உன்னிடம் நான் அடிவருடியாக மாட்டேன் என்று கவி கூறுகிறார். கோடி என்ற பதத்துடன், வேறு பொருளைக் குறிக்கும் எப்பதத்தையும் அவர் இணைத்தாரில்லை! ஏன்? இன்ன பொருள் என்று குறித்து விட்டால், சரி வேறு பொருள் தருகிறேன் என்று எதிரி கேட்க இடமுண்டல்லவா? கோடி கோடி ரூபாய் தருகிறேன் என்று எதிரி கூறுகிறான்; தமிழன் வேண்டேன் என்று மறுக்கிறான். உடனே தந்திரமுள்ள எதிரி கோடி வராகன் தருகிறேன் என்று கூறலாமல்லவா? அந்தப் பேரப் பேச்சுக்கே கவி இடங்கொடுக்கவில்லை. எதுவாகவேனும் இருக்கட்டுமய்யா, கோடி குவித்தாலும் வேண்டாம் என்று முடிவாகக் கூறுகிறார். ‘தொடேன்’ என்று கவி கூறியதிலே, கையினால் தொடேன் என்ற பொருள் தொக்கியிருக்கிறது. இப்போது மறுமுறை கூறிப்பாருங்கள் அந்தக் கவிதையை .
“எமை நத்துவாய் என எதிரிகள்கோடி
இட்டழைத்தாலும் தொடேன்.”
இந்த உணர்ச்சியும் உறுதியும், சுயநலத்தைப் பற்றித் துளி நினைப்பும் இல்லாத மனப்பான்மையும், சபலத்திற்கு இடங்கொடுக்காத தன்மையும் வீரமும் இருப்பின், கோடி ஈட்டிகள் தமிழரின் மார்புக்கு நேரே நீட்டப்பட்டாலும், எதிரி வெல்ல முடியாதே! எங்கே காண்கிறோம் அந்த உறுதியை? எவரிடம் கேட்கிறோம் இத்தகைய வீரப் பேச்சினை?
‘நமக்கென்ன’ என்று கூறும் சுயநலமிகளும், ‘நம்மால் ஆகுமா?’ என்று பேசும் தொடை நடுங்கிகளும், ‘ஏன் வீண் வம்பு’ என்று சொல்லும் கோழைகளும், ‘எனக்கு இது பிடித்தமில்லை’ என்று மிடுக்காகக் கூறும் கோடரிகளும் தமிழகத்திலே உலவக் காண்கிறோம்!
“மான மொன்றே நல்வாழ்வெனக் கொண்டு
வாழ்ந்த என் மறவேந்தர்
பூனைகள் அல்லர், அவர் வழிவந்தோர்
புலிநிகர் தமிழ்மாந்தர்!”
என்ற வீர முழக்கம், என்று தமிழர் மனைதோறும் கேட்கிறதோ, என்றைய தினம் தமிழர் உள்ளம் இந்த நிலை பெறுகிறதோ, அன்றே ஆரியர், கனக விசயனைக் கல்லெடுக்க வைத்த சேரன் மரபினர் மீண்டும் தமிழராயினர்; இனி நமது கடை நடவாது என்பது தெரிந்து பல்லெல்லாம் தெரியக் காட்டி நிற்பர்! பணிவர்! பகைவரை அடுத்துக் கெடுத்ததன்றிப் போரிட்டு அடக்கிய வரலாறே ஆரியருக்குக் கிடையாது. பெரிய போர்களிலே, அவர்களுடைய பெயர் சம்பந்தப் பட்டதே கிடையாது. புராண இதிகாசங்களிலே நடைபெற்றதாகக் கூறப்படும் போர்கள், வெறும் புளுகு என்றபோதிலும், அதிலும் வீரத்தால் வெற்றி கிடைத்ததாகக் கதை கிடையாது. வேள்விகளால் வெற்றி, பரமன் அருளால் பலம், மாய அஸ்திரங்களால் எதிரி தோற்றான் என்றுதான் இருக்கும்.
திராவிட வரலாறுகளிலே, வீரமே முதலிடம் பெற்றிருக்கும்! ஆரிய இனம் போரிட்டுப் புகழ் ஈட்டியதில்லை; பிறரின் புத்தி கெட்டபோதுதான் ஆரியரின் கொட்டம் வளரும்!
போதை ஏறியவன் கல் தடுக்கியோ, காற்று அடிப்பதாலோ கீழே வீழ்வான். ஆரியரும், திராவிட இனத்தாரிடையே கருத்தில் போதை மூண்டிடச் செய்துவிட்டுப் பிறகு கீழே உருட்டி விட்டனர். திராவிடன் ஆரிய வீரத்தால் வீழ்த்தப்படவில்லை. ஆரியக் கருத்தினைத் தாங்கும் சுமை தாங்கியானான். சோர்ந்தான். சுருண்டான். இந்தச் சூட்சுமத்தை உணராதார் தமிழர் வரலாறு அறியாதாரே.
‘ஐயன்மீர்! இப்போது நீவிர் வணங்கும் உருவாரங்கள் ஆரியக் கற்பனை என்று கூறுவோரை, மேதாவிகளென்று தம்மை எண்ணிக் கொண்டுள்ள தமிழர்கள் நம்புவதில்லை; நையாண்டி செய்கின்றனர்! எதற்கெடுத்தாலும் ஆரியச் சூது, ஆரியச் சதி, புரட்டு என்று கசடர்கள் கூறுகிறார்கள்’ என்று இந்த மேதாவிகள் கூறுகின்றனர். மழையாம் மழை! மழை நம்மை என்ன செய்யும்? என்று எருமை கூறுவதில்லை. அதன் நடவடிக்கை, அதனுடைய நினைப்பை நமக்குக் காட்டுகிறது. தமிழரிலே தடித்த தோளார் உளர். நாற்காற் பிராணிகளிலே எருமை இருத்தலைப் போல!
வீணான மனப் பிராந்தியால் சிலர் இது போல ஆரியர் -திராவிடர் என்று பிதற்றுகின்றனர் என்று கூறும் ஏமாளிகளுக்கு எத்தனை ஏடுகளைக் காட்டினாலும் கருத்துத் துலங்குவதில்லை. சுயமரியாதைக்காரர்களுக்குத்தான் ஆரியரின் வீணான துவேஷமிருக்கிறது என்று எளிதில் கூறிவிடுகிறார்கள். சுயமரியாதை இயக்க சம்பந்தமே இல்லாத, அறிவுத்துறையிலே ஈடுபட்டுள்ள பேராசிரியர்களின் கருத்துரைக்கு, என்ன குற்றங் கூற முடியும்?
ஆரியர், தங்களுடைய கருத்துக்களையும் கடவுட் கதைகளையுங் கூறிவரும்போது அறிவுக்கு இவை பொருந்துமா? ஆராய்ச்சிக்கு ஈடு கொடுக்குமா? என்பன பற்றிக் கவலையே கொள்ளவில்லை. ஆண்டை , அடிமைக்குக் காரணம் கூறிக் கொண்டிருப்பானோ? குழந்தையை மிரட்டக் கிழவர்கள் ஐந்து கண்ணனைப் பற்றியும், ஆறு காலனைப் பற்றியும் கதை கூறும்போது, குழந்தைகள் மிரட்சியுடன் கேட்டு வாய் பொத்திக் கொண்டிருக்குமேயன்றி, ‘தாத்தா, இதை நான் நம்பமுடியாது’ என்று கூறுவதுண்டா ? குழந்தைப் பருவம் மனித சமுதாயத்திற்கு இருந்த போதுதான், இடி தேவன், மின்னல் மாதா, மழை மாகாளி, தீக் கடவுள் எனக் கடவுட் கதைகள் கட்டிவிடப்பட்டன.
உலகிலே இது போலத் தோன்றிய கதைகள், அறிவுப் பருவத்தை அவனியோர் பெற்றதும் மறையலாயின! ஆனால் இங்கு மட்டும் ஆரியர் அந்த நாள் ஆபாசத்தை இன்றும் விடாப்பிடியாக வைத்துக் கொண்டிருப்பதுடன் அதே கருத்துக்களை மக்களிடையே பரப்புவதையே தங்கள் பிழைப்பாக வைத்துக் கொண்டுள்ளனர். அதனாலேயே, அறிவு சூன்யமே ஞானமென்றும், இருப்பதை இல்லையென்று கூறுவதே வேதாந்தமென்றும், இல்லாததை உண்டு என்று நம்பச் செய்வதே மார்க்கமென்றும் போதிக்கப்பட்டு விட்டது. அபின் விற்று வாழுபவன், போதை கூடாது என்று பிரசங்கம் புரிவானா?
படிக்க:
♦ தாகூருக்கு காவி வண்ணம் பூசும் சங் பரிவாரங்கள் !
♦ புதிய கல்விக் கொள்கை மனுநீதி 2.0 ! அச்சுநூல்
மற்ற மக்களுக்குத் தெரியாதது தங்கட்குத் தெரியுமென்றும், மற்றவர்களால் சாதிக்க முடியாததைத் தாங்கள் சாதிக்க முடியுமென்றுங் கூறிடுபவனை, ஆராய்ச்சியுடையோர் அவன் ஒரு புரட்டன் என்று ஏசி ஒதுக்குவர். ஆராயுந் திறனற்றாரோ, ‘அப்படியா!’ என்று ஆச்சரியத்தால் வாய் பிளக்க நின்று கேட்பர், கைகூப்புவர். இந்த முறையிலே, ஆரியம் தமிழரிலே தன்னுணர்வு, அறிவு நுணுக்கம் அற்றவர்களைப் பலி கொண்டது. வீராவேசங் கொண்ட வேங்கையானாலும், சதுப்பு நிலத்திலே – குழியிலே – வீழ்ந்து விட்டால் சாகத்தானே வேண்டும்! நீள் வையம் எதிர்த்தாலும், எமக்கு நிகர் இல்லை என்று கூறிப் போரிடும் மறத்தமிழரும், ஆரிய மதப் படுகுழியிலே வீழ்ந்ததால் அறிவு, ஆற்றல், ஆண்மை, மானம் எனும் பண்புகளை இழக்க வேண்டி நேரிட்டது!
(தொடரும்)
அண்ணாவின் ஆரிய மாயை
பக்கங்கள் : 64
விலை : ரூ. 40.00
வெளியீடு : திராவிடர் கழகம்
நூல் கிடைக்குமிடம் : கீழைக்காற்று வெளியீட்டகம்.
ஆரிய மாயை என்னும் இந்நூல் கா.ந. அண்ணாதுரை (அண்ணா) எழுதிய சிறு நூலாகும். அண்ணாவின் படைப்புகளில் மிகுந்த சர்ச்சைகளை ஏற்படுத்திய சில நூல்களுள் இதுவும் ஒன்று. இந்நூலில் பார்ப்பனியத்தின் கொடுங்கோன்மை பற்றியும், பார்ப்பனர்களின் சிறுமதி குறித்தும் அங்குலம் அங்குலமாக அலசி ஆராய்ந்து அம்பலப்படுத்தியிருக்கிறார். இக்காரணங்களுக்காக, அவருக்கு ரூபாய் 700 அபராதம் மற்றும் 6 மாதங்கள் சிறைத் தண்டனையும் சென்னை மாநில அரசால் அண்ணாவுக்கு அளிக்கப்பட்டது.
முந்தைய பகுதிகள் : அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை
அம்பேத்கர் ஆரிய திராவிட வாதம் பொய் பித்தலாட்டம் என்கிறார் …பல ஆதாரங்கள் தருகிறார்…. உங்கள் நிலை என்ன? தமிழகத்தில் திராவிடம் பேசுவதும் தமிழகத்துக்கு வெளியே வேறு பேசுவதுமா
அம்பேத்கர் இந்து மதம் என்பதே பித்தலாட்டம் என்கிறார். இந்து மதத்தின் அபத்தங்களுக்கும், கொடுங்கோன்மைக்கும் பல ஆதாரங்கள் தருகிறார். இந்து மதம் என்பது விதந்தோதப்படும் இனவாதம் என்றும் நான் இந்துவாக சாகமாட்டேன் என்றும் கூடத்தான் அம்பேத்கர் சொல்லியிருக்கிறார்.
அறிவியலின் ஒளியில் வரலாற்றை அணுகும் இந்தக் கட்டுரைய படித்துப் பாருங்கள் :
https://www.vinavu.com/2017/06/23/tamil-translation-of-how-genetics-is-settling-the-aryan-migration-debate/