ணக்கம். இந்த ஒளிப்பதிவில் மாரடைப்பு பற்றிய சந்தேகங்களுக்கு, கேள்வி பதில்கள் மூலம் நாங்கள் விடை அளிக்க முயற்சிக்கிறோம்.

கேள்வி 1 : எனது உறவினர் ஒருவர் தனக்கு நெஞ்சுவலி இருப்பதாகக் கூறுகிறார். அவர் உடனடியாக செய்ய வேண்டியது என்ன?

விடை : இது பொதுவாகவே எல்லோரும் எழுப்பக்கூடிய கேள்விதான். முதலில் நாம் இது இருதய வலியாக இருக்க வாய்ப்புகள் உண்டா என பார்க்க வேண்டும்.
அவருக்கு புகைப் பழக்கம், நீரிழிவு நோய், இரத்தக் கொதிப்பு,  உடல் பருமன் முதலிய பிரச்சினைகள் இருந்தால், இது இருதய வலியாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். அதைப்போல் வலியானது வந்தவுடன் போய்விடுகிறது என்றால் நாம் அதை பெரிதுபடுத்தத் தேவையில்லை. அதுவே தொடர்ந்து 15-20 நிமிடத்திற்கு மேல் வலியானது நீடிக்கிறது என்றால்? இதுவும் இருதய வலியாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

நாம் என்ன செய்யவேண்டும் என்றால் முதலில் பாதிக்கப்பட்டோரை சாந்தப்படுத்த வேண்டும். காரணம் அவர்கள் அதிகமாக பதட்டம் அடைவார்கள். அடுத்ததாக ஆஸ்பிரின் என்ற ஒரு மாத்திரை. இது டிஸ்பிரின் முதலிய பல பெயர்களில் கிடைக்கிறது.  இந்த மாத்திரையை 300 அல்லது 400 கிராம் தண்ணீரில் கலந்து அவரை குடிக்க வைக்க வேண்டும். மாரடைப்பினால் வரும் இறப்பானது இந்த மாத்திரையின் பலனால் மூன்றில் ஒரு பங்கு குறைந்துள்ளது என்பது அறிவியல்பூர்வமான உண்மை.  இதைத் தவிர வேறு ஏதும் பெரிதாக நம்மால் செய்ய இயலாது.

அவரை விரைவாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று ஈ.சி.ஜி எடுத்து என்ன பிரச்சினை என்று பார்ப்பதுதான் அடுத்த கட்டம். இதைவிடுத்து கஷாயம் அல்லது வேறு ஏதாவது கொடுத்து வீட்டிலேயே இருக்க வைப்பது மிகவும் தவறான செயல். எப்போது, இது மாரடைப்புக்கான வலி என நமக்கு சந்தேகம் ஏற்படுகிறதோ, அப்போதே பாதிக்கப்பட்டோரை சாந்தப்படுத்தி, இந்த மாத்திரையை நீரில் கலந்து கொடுப்பதே சரியான ஒன்று.

கேள்வி 2 :    குடல்புண் உள்ளவர்களுக்கு, அதற்குண்டான மாத்திரைகள் இருக்கும் அவர்கள் அதை எந்நேரமும் கையில் வைத்திருப்பார்கள். ஆனால் இந்த ஆஸ்பிரின் மாத்திரையை யாரும் கையில் வைத்து இருப்பதில்லை. இது நாம் கவனிக்கத்தக்க ஒன்று. குடல்புண் உள்ளவருக்கு நெஞ்சுவலி ஏற்படுகிறது, அது அசிடிட்டியினால் உண்டாகக்கூடிய வலி என்றால், நாம் தவறி ஆஸ்பிரின் மாத்திரை உண்பதினால் குடல் புண்ணானது அதிகம் அடைய வாய்ப்பு உள்ளது என கருதுகிறீர்களா?

விடை : இல்லை. ஆஸ்பிரின் மாத்திரை, உயிரை காப்பாற்றக் கூடிய ஒன்று, நாம் ஒரு மாத்திரை எடுப்பதனால் குடல்புண் உள்ளவர்களுக்கு எந்தவித பாதிப்பும் பெரிய அளவில் நேர்ந்துவிடாது. அதுவே அந்த நெஞ்சு வலியானது அசிடிட்டியில்லாமல் மாரடைப்புக்கான நெஞ்சு வலியாக இருந்தால், இந்த ஆஸ்பிரினின் பங்கானது விலைமதிப்பற்றது. எனவே எந்த வகையான வலியாக இருந்தாலும் நாம் மருத்துவமனைக்கு சென்று தெளிவுபடுத்திக் கொள்ளப் போகிறோம். அதற்கு முன் இந்த ஆஸ்பிரின் மாத்திரை எடுத்துக்கொள்வது எந்தவித பக்க விளைவையும் ஏற்படுத்தாது.

இந்த மாத்திரைகள் மட்டுமல்லாது க்ளோடிங்கோஸ், ஸ்டேட்டின் போன்ற பிற மாத்திரைகளும் உள்ளன. இவற்றையெல்லாம், வீட்டிலேயே பயன்படுத்த வேண்டும் என கண்டிப்பு கிடையாது. நாம் மருத்துவமனைக்குச் சென்றாலும் மருத்துவர்கள் இவற்றையே வழங்குவார்கள்.

மற்றொருபுறம் இந்த மாத்திரைகளை சாப்பிடுவதன் மூலம் மாரடைப்பை தள்ளிப் போடலாம் என சிலர் கூறுகிறார்கள். இது தவறு, தள்ளிப்போட முடியாது. நாம் திரும்பத் திரும்ப வலியுறுத்துவது இதைத்தான், மாரடைப்பு என சந்தேகம் வந்தாலே மருத்துவமனைக்கு விரைவாகச் செல்ல வேண்டும்.

கேள்வி 3 : மாரடைப்பு எனத் தெரிந்தால் ஏன் விரைவாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்?

விடை : Time is muscle. இதன் பொருள் நாம், எவ்வளவு விரைவாக மருத்துவமனைக்குச் செல்கிறோமோ அவ்வளவு விரைவாக நமக்கு மருந்துகள் வழங்குவார்கள். இதன் மூலம் பெரிய அளவிலான தசைகள் பாதிக்கப்படுவது தவிர்க்கப்படும். நான் முந்தைய வீடியோக்களில் கூறியபடி எவ்வளவு விரைவாக ரத்தக்குழாய் அடைப்பை நீக்குகிறோமோ, அவ்வளவு தசைகள் தப்பிக்கும் இதைத்தான் time is muscle எனக் கூறுகிறார்கள்.

இதற்காகத்தான் வலியுறுத்துகிறோம், வலி ஏற்பட்டவுடன் விரைவாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்று.

கேள்வி 4 : நெஞ்சு வலியானது இல்லாமலேயே மாரடைப்பால் பாதிக்கப்பட்ட பல பேரை நாம் பார்க்கிறோம். அதை பற்றி விளக்க முடியுமா ?

விடை : இதை சைலன்ட் அட்டாக் என கூறுவார்கள். நாம் முந்தைய வீடியோக்களில் பார்த்தது போல், சில பேர் கையில் லேசாக வியர்த்தது என்பார்கள், சில பேர் முதுகு லேசாக வலிக்கிறது என்பார்கள் இப்படி பல காரணங்களை கூறுவார்கள். சில பேர் மூச்சு சரியாகிவிடமுடியவில்லை என்று மருத்துவமனைக்குச் செல்வார்கள்.

ஆனால் மருத்துவர் ஈசிஜி எடுத்த பின்பு உங்களுக்கு ஒரு வாரத்திற்கு முன்பு மாரடைப்பானது வந்துள்ளது என்பர். இருதயத்தில் இருந்து வரும் வலியை   ஏற்படுத்தும் நரம்பு மாரடைப்பு வரும்போது பாதிக்கப்பட்டால், அந்த நபருக்கு வலியை உணர முடியாது. இது யாருக்குப் பொதுவாக இருக்கும் என்றால் நீரிழிவு நோய் உள்ளவர்களுக்குத்தான். நீரிழிவு நோய் இல்லாதவர்களுக்கும் இது நேரிடலாம். ஆனால் நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு தான் இது அதிகம் நேரிட வாய்ப்பு உள்ளது.

இந்த வகை மாரடைப்பானது சிறிய அளவிலும் இருக்கலாம், அல்லது பெரிய அளவிலும் இருந்து உயிரைப் பறிக்கக் கூடிய ஒன்றாகவும் போகலாம்.  எனவே மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்யும்போது மருத்துவர் உங்களுக்கு ஏற்கெனவே முதல் அட்டாக் வந்து இருக்கிறது என்று கூறினால், அதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்; இல்லை என மறுதலிக்கக் கூடாது. காரணம் பிரச்சினை உள்ளது என நாம் கண்டறிந்தால்தான் அதை நாம் முறியடிக்க முயற்சிப்போம்.

படிக்க :
♦ உற்சாகமாய் இருந்தால் உடற்பயிற்சி செய்யலாம் ! உடற்பயிற்சி செய்தால் உற்சாகம் பிறக்கும் !
♦ மாரடைப்பு என்றால் என்ன ? உடனடியாக செய்யவேண்டியது என்ன ? | மருத்துவர் BRJ கண்ணன்

கேள்வி 5 :  ஒருவர் நெஞ்சு வலியோடு வருகிறார். அவருக்கு மாத்திரை மருந்து கொடுத்ததுமே இயல்பு நிலைக்கு திரும்புகிறார். அவருக்கு நாம் ஆஞ்சியோகிராம் பண்ண வேண்டுமா ?

விடை : மாரடைப்புக்கான காரணங்களை துல்லியமாக கண்டுபிடிக்க கூடிய ஒன்றுதான் ஆஞ்சியோகிராம். அதை நாம் பரிசோதிப்பதின் மூலம் மாரடைப்புக்கான காரணங்களை கண்டுபிடித்து அவற்றைக் களைய முடியும்.  ஆஞ்சியோகிராம் என்பது ஒரு பரிசோதனை, அது ஆபரேஷன் கிடையாது.

பரிசோதனை செய்ய நாம் ஏன் அச்சப்பட வேண்டும்? ஒருவர் நெஞ்சுவலி என வருகிறார். அவருக்கு மருந்து, மாத்திரைகள் கொடுத்த பின்பு இயல்பு நிலைக்கு திரும்புகிறார். ஆனால், அதற்கான ரத்தக் குழாயில் ஏற்பட்ட அடைப்பு நீங்கியதா, இல்லையா என நாம் ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்தால் தான் கண்டுபிடிக்க முடியும். மருந்து மாத்திரைக்குப் பின் சிலருக்கு நெஞ்சு வலி குறையும், அவர்கள் இயல்பு நிலைக்குத் திரும்புவார்கள். ஆனால் ரத்தக்குழாயில் அடைப்பு 100% அப்படியே இருக்கும்.

எனவேதான், நாம் ஆஞ்சியோகிராம் பரிசோதனை  நெஞ்சுவலி ஏற்பட்டு சில மணி நேரத்திற்குள் எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம். அதேபோல் ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்தாலே ஆஞ்சியோபிளாஸ்டி ஆபரேஷன் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. ஏனென்றால், ஆஞ்சியோகிராம் மூலம் நாம் பரிசோதித்த பின் அவருக்கு வெறும் 30%தான் அடைப்பு இருக்கிறது என்றால் ஆஞ்சியோபிளாஸ்டிரி ஆப்பரேஷனை தவிர்க்கலாம். நாம் என்ன செய்யவேண்டும் என்று ஆஞ்சியோகிராம் பரிசோதனை மூலம் தெரியவரும் அவ்வளவே.

கேள்வி 6 : சரி இப்போது இரண்டு நபர்கள் வருகிறார்கள். ஒருவருக்கு ஒரு ரத்த குழாயில் 100% அடைப்பு எப்போதும் உள்ளது. மற்றொருவருக்கு ஒரு ரத்த குழாயில் 100% மற்ற இரத்தக் குழாய்களில் 60, 80 சதவீதம் அடைப்பு உள்ளது. இப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்?

விடை : முதலாவதாக நாங்கள் நூறு சதவீதம் அடைப்பு உள்ளவற்றிற்குத்தான் முக்கியத்துவம் தருவோம். அதை எப்படியாவது நீக்க முயற்சிப்போம். 60 – 80 சதவீதம் உள்ள அடைப்பை பிறகுதான் பரிசீலிப்போம்.

கேள்வி 7 : இப்போது மாரடைப்பு வந்து குணமாகிய பலபேர் எழுப்பக்கூடிய கேள்வி ”நான் வெயிட் தூக்கலாமா?” இதற்கு என்ன பதில் ?

விடை : எப்போதும், உடலில் அடிபட்டால் நாம் சிறிது காலம் அந்த  பாகத்துக்கு ஓய்வு கொடுப்போம். அதேபோல் மாரடைப்பானது இருதயத்திற்கு அடிபட்டுள்ளது. அப்படி என்றால் நாம் இருதயத்துக்கு ஒரு சில வாரங்கள் ஓய்வு கொடுக்கவேண்டும் இயல்பான வேலைகளை நாம் செய்யலாம்.

வாரம் ஒருமுறை பரிசோதனை செய்யும்போது மருத்துவர்கள் அறிவுரை வழங்குவார்கள். சிலருக்கு இருதயமானது சிகிச்சைக்கு பிறகு நன்றாக இயங்கும். அப்படி இருப்பவர்களுக்கு, அப்போதே நீங்கள் ஓடலாம், உடற்பயிற்சி செய்யலாம் என அறிவுரை வழங்கவோம். இன்னும் சிலருக்கு இதயம் சரியாக இயங்காமல் இருக்கும் எனவே அவர்கள் தகுந்த சிகிச்சை மேற்கொண்டு, பிறகுதான் உடற்பயிற்சி போன்றவற்றில் ஈடுபட வேண்டும். எனவே மாரடைப்பு வந்தால் இனிமேல் உடற்பயிற்சி செய்யக்கூடாது எனும் வாதம் தவறானது. அவரவர்க்கு இருக்கும் நிலைமையைப் பொறுத்து இந்த விடையானது மாறுபடும். பொதுவாக மாரடைப்பிற்குப்பின் உடற்பயிற்சி மேற்கொள்ள கூடாது எனும் வாதம் தவறானது.

உதாரணத்திற்கு ஒருவர் மாடிப்படி ஏறுகிறார் என்றால்? ஒரு மாடி ஏறிய பின் அவருக்கு மூச்சடைப்பு பெரிதாக இல்லை என்றால், அவர் இரண்டாவது மாடிப்படியும் ஏறலாம். அதுவே முதலாவது மாடி ஏறிய பின் மூச்சடைப்பு ஏற்படுகிறது என்றால்,  அவர்  மாடிப்படி ஏறுவதை தவிர்க்க வேண்டும். இப்படி தங்களுக்கு ஏற்றாற்போல் உடற் பயிற்சியை தாங்களே சீரமைத்துக் கொள்ள முடியும். ஒருவருக்கு உடற்பயிற்சி மேற்கொள்ள கூடாது என அறிவுரை வழங்கப்பட்டால். சில வாரம் மாத்திரை மருந்துகள் எடுத்தபின் அவரால் மூன்று மாடிக்கு மேல் ஏற முடியும்.

என்னிடம் வரும் இருதய நோயாளிகள் சிலர் ஜிம்க்கும் செல்ல நான் அனுமதிப்பது உண்டு. இதற்கான காரணம் என்னவென்றால் இருதயத்தில் ஒரு சிறிய அளவிலான தசைகள் பாதிக்கப்பட்டு இருக்கிறது என்றாலும். மீதி உள்ள தசைகள் வலுவாக வைத்துக் கொள்ளவும், அவை வலுப்பெறுவதால் அவருக்கு உடல்ரீதியான பிரச்சினைகள் மேலும் ஏற்படாமல் இருக்கும். எனவே மாரடைப்பால் பாதிக்கப்பட்டவராக இருந்தாலும் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். அவரது உடல் எதுவரை ஒத்துழைக்கிறதோ, அதுவரையில் உடற்பயிற்சி மேற்கொள்வது நல்லது. பொதுவாக எடை தூக்கக்கூடாது, உடற்பயிற்சி மேற்கொள்ள கூடாது என்னும் வாதம் தவறானது.

கேள்வி 8 : ஆஞ்சியோபிளாஸ்டி மேற்கொண்டவர்கள் உடற்பயிற்சி செய்வது கட்டாயமாகும். ஏனென்றால், உடலின் மற்ற பாகங்களை செயல் இழக்காமல் வைக்க இந்தப் பயிற்சியானது பெரிதும் உதவும். இப்போது நான் முன்னரே கேள்வி எழுப்பியபடி எனது உறவினர் ஒருவர் மருத்துவமனைக்கு வந்து விட்டார். இவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி மேற்கொள்ள வேண்டுமா அல்லது பைபாஸ் மேற்கொள்ள வேண்டுமா என எப்படி முடிவு எடுப்பது.

விடை : இப்போது, இரத்தக் குழாயின் இரு முனைகளிலும் அடைப்பு உள்ளது. ரத்தம் சீராக செல்ல முடியவில்லை. இப்போது நாம் பாதையை கடக்க முயல்கிறோம், ஆனால் இரு பக்கங்களிலும் குப்பையானது தேங்கி நிற்கிறது என்றால். நாம் என்ன செய்வோம் குப்பைகளை இருபுறமும் அகற்ற விரும்புவோம்.  அதேபோல் ரத்தக் குழாயில் ஏற்படும் அடைப்பு ஏற்பட்டு அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி மூலம் சிறிய பாதையில் டியூபை செலுத்தி பலூன்போல் ஊதி இருபுறம் இருக்கும் கொழுப்புகளையும் ரத்தம் பாய ஏற்றவாறு ஒதுக்குவோம்.

ஆனால், ஒதுக்கப்பட்ட கொழுப்புகளானது, மீண்டும் அடைப்பை ஏற்படுத்த முயற்சிக்கும். பலபேர் கூறுவது போல் அது ஒன்றும் சுவற்றில் இருக்கும் அழுக்கு கிடையாது சுரண்டி எடுப்பதற்கு. இந்த கொழுப்புகளானது பல செல்களால் உண்டாகி கெமிக்கல்களால், சேர்ந்து இருக்கக்கூடிய ஒரு கலவையான அமைப்பு. எனவே இந்த கொழுப்புகளானது இஞ்சிச் சாறு குடிப்பதாலும் மற்றவற்றினாலும்  கரையாது. இந்த கொழுப்புகளானது நாம் பலூனை வைத்து ஊதி ஒதுக்கிய பின்பு சிறிது நேரத்திற்குள்ளாகவே மீண்டும் இணைய வல்லது. எனவே அவை மீண்டும் இணைய முடியாதவாறு நடுவில் ஒரு ஸ்டெண்ட் வைத்து அந்த கொழுப்புகளை தடுத்து விடுவோம்.

இந்த ஸ்டென்ட், கோபால்ட் குரோமியம் என்ற தனிமத்தால் உருவாகி இருக்கும் ஒரு கம்பி. இதை வைத்துத்தான் நாம் இந்த கொழுப்புகளை இணையவிடாமல் தடுப்போம். இதற்குள் ஒரு ட்யூபை செலுத்தி ரத்தத்தை அதற்குள் சீராக செல்லும்படி செய்து விடுவோம். இதற்குப் பெயர்தான் ஆஞ்சியோபிளாஸ்டி மற்றும் ஸ்டெண்ட்.

அப்படி என்றால் பைபாஸ் என்றால் என்ன? அதையும் பார்ப்போம்.

நாம் முன்னர் கூறிய உதாரணத்திற்கே வருவோம், நாம் பாதையை கடக்க வேண்டும் இருபுறமும் அடைப்பு உள்ளது. இந்தமுறை பாறாங்கற்கள் ஆக உள்ளது. நம்மால் அவற்றை ஒதுக்க முடியாது. இந்த முறை நாம் என்ன செய்வோம், அந்தப் பாதையை கடக்க முடியாது என்பதால். மாற்றுப் பாதையை தயார் செய்வோம். அதே போல்தான் இங்கும் இந்த கொழுப்புகளை கரைக்க முடியாது என்பதால், வேறு ஒரு பாதையில் ரத்தத்தை இயங்க செய்வோம்.  அதற்குப் பெயர்தான் பைபாஸ்.

பைபாஸ் என்பது ஆங்கில வார்த்தை, ஒருவர் மதுரையில் இருந்து திண்டுக்கல் செல்ல வேண்டும் என்றால் பேருந்து நிலையத்தை அடையாமல் பைபாஸ் வழியாகவே செல்ல முயற்சிப்போம் அல்லவா அதே போல்தான் இங்கும். இருபுறமும் உள்ள கொழுப்பானது, ஒதுக்க முடியாதவாறு அடர்த்தியாக உள்ளது என்றால் என்ன செய்வது ?

நாம், தமணியை எடுத்து மேற்புறத்தில் வைத்து விடுவோம், தமனியின் கீழ் பகுதியின் முனையை, கொழுப்பு அடைந்த கீழ்ப்புறத்தில் தைத்துவிடுவோம். ரத்தமானது இந்த தமனியின் வழியாக சீராக செல்லும். நமக்கு கொழுப்புகள் அடைப்பட்ட  இடத்தைத் தாண்டி இரத்தமானது செல்ல வேண்டும் அவ்வளவே அதற்கு இந்த தமனி உதவும். இதற்குப் பெயர்தான் பைபாஸ் சர்ஜரி.

எனவே இரு புறமும் அடைபட்டுள்ள கொழுப்புகளை ஒதுக்கி வைத்து ரத்தத்தை சீராக செல்ல வைப்பது ஆஞ்சியோபிளாஸ்டி. அதேபோல், தமனிய கொழுப்பு அடைபட்ட தமனிகளின் வெளிப்புறத்தில் தைத்து ரத்தத்தை அதன் வழியாக செல்ல வைப்பது பைபாஸ் சர்ஜரி.

இதற்கு பல காரணிகளை முதன்மையாக வைத்து எந்த வகையான சர்ஜரி சிறந்தது என முடிவுகளை எடுப்போம்.  சில பேருக்கு 4 அடைப்புகள் இருக்கும். ஆனால், அவருக்கு ஆஞ்சியோ பிளாஸ்டி ஸ்டென்ட் வைத்து சரி பண்ணலாம் என முடிவு எடுப்போம். நான்கு ஸ்டெண்ட்கள் வைத்து சரி செய்த ஆட்களும் உள்ளார்கள். ஆனால் சில பேருக்கு இரண்டு அடைப்புதான் இருக்கும் அவர்களை பைபாஸ் சர்ஜரி மேற்கொள்ள வலியுறுத்துவோம்.

ஆஞ்சியோ பிளாஸ்டி அல்லது பைபாஸ் சர்ஜரி இரண்டில் எது நோயாளிக்கு சிறந்தது, விளைவுகளை சிறப்பாக தருவது என்பதைப் பொறுத்தே சிகிச்சையை மேற்கொள்வோம். ஆனால் மக்கள் இதை ஒப்பீடு செய்கிறார்கள். அவர்களுக்கு ஆஞ்சியோபிளாஸ்டி பரிந்துரைத்துவிட்டு எனக்கு  பைபாஸ் சர்ஜரி  மேற்கொள்ள சொல்கிறார்கள். அவருக்கு நான்கு அடைப்பு இருந்தது எனக்கு இரண்டு அடைப்பு தான் உள்ளது.  என மக்கள் ஒப்பீடு செய்கிறார்கள். இது தவறு.

மூன்று நபர்கள் நெஞ்சுவலியால் வருகிறார்கள் என்றால், மூன்று பேருக்கும் நிலைமையைப் பொறுத்து சிகிச்சை மாறுபடும் ஒருவருக்கு மருந்து மாத்திரையே போதுமானதாக இருக்கலாம். ஒருவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி செய்து நான்கு நாட்கள் கழித்து வீட்டுக்கு அனுப்புவேன். மற்றொருவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி செய்து ஒரு சில வாரங்கள் கழித்து பைபாஸ் சர்ஜரியும் மேற்கொள்ளக் கூறுவேன். நெஞ்சு வலியை பொறுத்தது மட்டுமன்றி, அந்த இருதயத்திற்கு ரத்தத்தை எடுத்துச் செல்லக்கூடிய தமனியைப் பொருத்தும் இது மாறுபடும்.

மாரடைப்பு என ஒருவர் வருகிறார் என்றால். அந்த நேரத்தில் ரத்தக் கட்டியை கரைப்பதற்கு உண்டான injection அதற்கடுத்து ஆஞ்சியோபிளாஸ்டிதான் சரியான தீர்வு. அந்த அமர்வில் உடல்நிலை மோசமாக உள்ள தருணத்தில் பைபாஸ் சர்ஜரி  தீர்வு கிடையாது. இப்படி உடனடியாக நாம் மேற்கொள்ள வேண்டியது இந்த ஆஞ்சியோபிளாஸ்டி தான்.

இதற்குப் பிறகு இரண்டு அல்லது மூன்று அடைப்பு உள்ளது என்றால் பிறகு நாம் பைபாஸ் அல்லது ஆஞ்சியோபிளாஸ்டியே தொடரலாமா என முடிவு எடுக்கலாம். ஆனால்,  உடனடியாக நாம் முதல் சிகிச்சை வழங்க வேண்டியது  ஆஞ்சியோபிளாஸ்டிதான்.

நன்றி: மருத்துவர் BRJ கண்ணன்,
இதயத்துறை மருத்துவர், (Senior Interventional Cardiology)
வடமலையான் மருத்துவமனை, மதுரை.

1 மறுமொழி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க