பரீஸ் பொலெவோய்

உண்மை மனிதனின் கதை | இரண்டாம் பாகம் | அத்தியாயம் – 5

முடிவில் அந்த நாளும் வந்து விட்டது. தமது தினப்படிப் பார்வையீட்டின் போது வஸிலிய் வஸீலியெவிச், அலெக்ஸேயின் கறுத்த, ஸ்பரிசத்தை உணராத பாதங்களை நெடு நேரம் தொட்டுத் தடவிப் பார்த்துவிட்டு, சட்டென நிமிர்ந்து அவனை விழி பொருந்த நோக்கி, “வெட்டிவிட வேண்டியதுதான்!” என்றார். வெளிறிப்போன அலெக்ஸேய் எதுவும் பதில் சொல்வதற்குள்ளேயே அவர் முன்கோபம் தொனிக்க, “வெட்டிவிட வேண்டியதுதான் – மறு பேச்சே கூடாது, கேட்டாயா? இல்லாவிட்டால் மண்டையைப் போட்டுவிடுவாய்! புரிந்து கொண்டாயா?” என்றார்.

தமது துணையாளர்களைத் திரும்பிப் பார்க்காமலே அறையை விட்டு வெளியே போய்விட்டார் தலைமை மருத்துவர். வார்டில் ஏக்கம் செறிந்த மௌனம் குடிகொண்டது. அலெக்ஸேய் உணர்வற்றுக் கல்லாய்ச் சமைந்த முகத்துடன் விழிகளைத் திறந்தவாறு கிடந்தான். தனது ஊரின் நொண்டிப் படகோட்டியின் நீலம் பாரித்த, அலங்கோலமான வெட்டுக் கால்கள் அவன் முன்னே மூடுபனியில் போல மங்கலாகக் காட்சி தந்தன. படகோட்டி உடைகளைக் களைந்துவிட்டுக் குரங்கு போலக் கைகளை ஊன்றி ஈர மணலில் தத்தித் தவழ்ந்து நீரை நோக்கிச் செல்வதை அலெக்ஸேய் மீண்டும் கண்டான்.

“அலெக்ஸேய்” என்று மெள்ள அழைத்தார் கமிஸார்.

“என்ன?” என்று எங்கோ தொலைவிலிருந்து கேட்பது போன்ற ஈனக்குரலில் சொன்னான் அலெக்ஸேய்.

“இப்படிச் செய்யாமல் தீராது, தம்பி.”

படகோட்டி அல்ல, தானே வெட்டுண்ட கால்களுடன் ஊர்வது போலவும் தன்னுடைய காதலி, ஓல்கா, பல் வண்ண உடைக் காற்றில் பறக்க, ஒயிலும் ஒளியும் எழிலும் சுடர்விட மணலில் நின்று கொண்டு, உதட்டைக் கடித்தவாறு தன்னை வேதனையுடன் நோக்குவது போலவும் அந்தக் கணத்தில் அலெக்ஸேய்க்குத் தோன்றியது. இப்படித்தான் நேரும்! அவன் தலையணையில் முகத்தைப் புதைத்துக் கொண்டு உடல் முழுவதும் அதிர்ந்து குலுங்க, ஓசையின்றிப் பொங்கிப் பொங்கி அழுதான். எல்லோருக்கும் பயங்கரமாக இருந்தது. ஸ்தெபான் இவானவிச் தொண்டையைக் கனைத்துக் கொண்டு கட்டிலிலிருந்து இறங்கி நீளங்கியை மாட்டிக் கொண்டு அறைச் செருப்புகள் சடசடக்க, கட்டிலின் பின்புறத்தைக் கைகளால் தாங்கலாகப் பிடித்துக் கொண்டு அலெக்ஸேயிடம் சென்றார். ஆனால் கமிஸார் வேண்டாம் என்று சைகை செய்து அவரைத் தடுத்துவிட்டார் – அழட்டும், குறுக்கிடாதேயும் என்பது போல.

உண்மையாகவே அலெக்ஸேய்க்குச் சுமை இறங்கியது போல் இருந்தது. விரைவில் அவன் நிம்மதி அடைந்தான். தன்னை நெடுங்காலமாக வதைக்கும் பிரச்சினைக்கு முடிவில் தீர்வு கண்டதும் மனிதனுக்கு எப்போதும் ஏற்படுவது போன்ற ஆறுதலைக்கூட அவன் உணர்ந்தான். மாலையில் மருத்துவமனை ஊழியர்கள் அறுவை அறைக்கு அவனை இட்டுச் செல்லும் வரை அவன் பேசாதிருந்தான். கண்களைக் கூசச் செய்யும்படி ஒளிர்ந்த வெண்மையான அறையிலும் அவன் ஒரு வார்த்தை பேசவில்லை. முழு மயக்கமருந்து கொடுப்பதற்கு அவனுடைய இருதய நிலை இடந்தரவில்லை என்றும் ஓரிட உணர்வுநீக்க ஊசி போட்டு அறுவை செய்ய வேண்டியிருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டபோது கூட அவன் வெறுமே தலையசைக்க மட்டுமே செய்தான். அறுவை நடந்தபோது அவன் கத்தவோ முனகவோ இல்லை. சிக்கலற்ற இந்த அறுவையை வஸீலிய் வஸீலியெவிச் தாமே செய்தார். தமது வழக்கத்துக்கிணங்க அப்போது அவர் நர்சுகள் மீதும் துணை மருத்துவர்கள் மீதும் சள்ளுப் புள்ளென்று விழுந்தார். நோயாளி அறுவையின் போதே மரித்துவிட்டானா என்று பார்க்கும்படி அவர் தமது துணைவனிடம் பலமுறை கூறினார்.

எலும்பு அறுக்கப்பட்டபோது மிகக் கொடிய வேதனை உண்டாயிற்று. ஆனால், துன்பத்தைத் தாங்கிக் கொள்ள அலெக்ஸேய் பழகியிருந்தான். வெள்ளை நீளங்கிகளும் சல்லாத் துணி முகத்திரைகளும் அணிந்த இந்த மனிதர்கள் தன் கால்களுக்கருகே என்ன செய்கிறார்கள் என்பது அவனுக்கு சரியாக விளங்கவில்லை.

வார்டில்தான் அவன் உணர்வுக்கு வந்தான். அங்கே அவன் முதலில் கண்டது அறைத் தாதி க்ளாவ்தியா மிஹாய்லவ்னாவின் கவலை தோய்ந்த முகம். விந்தை என்னவெனில் அவனுக்கு ஒன்றுமே நினைவு இல்லை. இனிமையும் பரிவும் உள்ள இந்த வெண்முடி மாதின் முகத்தில் இத்தகைய கிளர்ச்சியும் கேள்விக்குறியும் காணப்படுவது ஏன் என்று அவன் வியந்தான். அவன் கண் விழித்ததைக் கண்டதும் அவள் முகம் சுடர் விட்டது. போர்வைக்கு அடியில் அவன் கையை மெதுவாக அழுத்தினாள்.

“நீங்கள் அருமையானவர்!“ என்று பாராட்டிவிட்டு அப்போதே நாடிப்பிடித்துப் பார்த்தாள்.

“இவள் என்ன இப்படி?” என்று எண்ணினான் அலெக்ஸேய். கால்கள் முன்னை விட மேலே எங்கோ வலிப்பதை அவன் உணர்ந்தான். வலியும் முன்போலக் காந்தி எரியும், சுண்டி இழுக்கும் வேதனையாக இல்லை. கணைக்காலுக்கு மேல் கால்கள் கயிறுகளால் இறுகக் கட்டியிருப்பது போன்று ஊமையான, துடிப்பற்ற வலியாக இருந்தது. போர்வை மடிப்புகளைக் கொண்டு தன் உடல் நீளம் குறைந்துவிட்டதை அவன் திடீரெனக் கவனித்தான். வெள்ளை அறையின் கண்கூசும் பளிச்சிடலும், வஸீலிய் வஸீலியெவிச்சின் உக்கிரமான சிடுசிடுப்பும், எனாமல் வாளியில் மந்தமான மோதல் ஒலியும் சட்டென அவன் நினைவுக்கு வந்தன. “ஆகிவிட்டதா அதற்குள்” என்று உற்சாகமின்றி வியந்தான். புன்னகை செய்ய முயன்றவாறு மருத்துவத் தாதியிடம், “நான் குட்டை ஆகிவிட்டேன் போலிருக்கிறது” என்றான்.

படிக்க:
“அவர்கள் யாரை அழிக்க நினைக்கிறார்கள்” : காவிகளை எதிர்த்த கிரிஷ் கர்னாட் !
மனம் ஓட ஓடத் துரத்துகிறது என்றால் , நாம் ஏன் ஓட வேண்டும் ?

புன்னகை நன்றாக வாய்க்கவில்லை. வேதனையால் முகஞ்சுளிப்பது போன்று இருந்தது. க்ளாவ்தியா மிஹாய்லவ்னா பரிவுடன் அவன் தலைமயிரைக் கோதிவிட்டாள்.

“பரவாயில்லை, பரவாயில்லை. அன்பரே. இனி உமக்கு லேசாயிருக்கும்.”

“ஆமாம், லேசுதான். எத்தனை கிலோகிராம்?”

“வேண்டாம், அன்பரே, வேண்டாம். நீர் அருமையான ஆள். மற்றவர்கள் கத்துவார்கள். மற்றவர்களை வாரினால் இறுக்கிக் கட்டுவதோடு பிடித்துக்கொள்ளவும் வேண்டியிருக்கும். நீரோ முணுக்கென்று கூட வாய் திறக்கவில்லை….. அட யுத்தம், பாழும் யுத்தம்!”

அப்பொழுது வார்டின் மாலை அரை இருளில் கமிஸாரின் கோபக்குரல் ஒலித்தது:

“நீங்கள் என்ன, அங்கே இறுதிச் சடங்கு தொடங்கி விட்டீர்கள்? இதோ இந்தக் கடிதங்களை அவனிடம் கொடுங்கள், அம்மா. இவன் அதிர்ஷ்டமே அதிர்ஷ்டம். எனக்குக் கூடப் பொறாமையாக இருக்கிறது. அவனுக்கு எத்தனை கடிதங்கள் !”

கமிஸார் ஒரு கட்டுக் கடிதங்களை அலெக்ஸேய்க்குக் கொடுக்கச் சொன்னார். இவை அவனுடைய ரெஜிமெண்டிலிருந்து வந்திருந்தன. வெவ்வேறு தேதிகள் இட்ட கடிதங்கள் அவை. ஆனால் எதனாலோ ஒரே மொத்தமாக வந்திருந்தன. வெட்டி எடுக்கப்பட்ட கால்களுடன் படுத்தவாறு இப்போது அலெக்ஸேய் நட்பு நிறைந்த இந்தக் கடிதங்களை ஒன்றன் பின் ஒன்றாகப் படித்தான். தொலைவிலுள்ள, உழைப்பும் அசெளகரியங்களும் அபாயங்களும் நிறைந்த, அடக்க முடியாமல் தன்பால் ஈர்க்கும் வாழ்க்கை பற்றி விவரித்தன இவை.

கடிதங்களில் ஒரேயடியாக ஈடுபட்டு விட்டதால் தேதிகளில் இருந்த வேறுபாட்டை அலெக்ஸேய் கவனிக்கவில்லை. கமிஸார் மருத்துவத்தாதியை நோக்கிக் கண் சிமிட்டி தன் பக்கம் சுட்டியதையும் அவன் காணவில்லை. கமிஸார் அவளிடம், “உங்களுடைய இந்த லூமினால்கள், வெரோனால்கள், எல்லாவற்றையும் விட என்னுடைய மருந்து எவ்வளவோ மேலானது” என்று தணிவாகக் கிசுகிசுத்தார். அலெக்ஸேய்க்கு வந்த கடிதங்களில் ஒரு பகுதியைக் கமிஸார் முன்யோசனையுடன் மறைத்து வைத்திருந்தார் – அவன் வாழ்வில் மிகப் பயங்கரமான இந்த நாளில், அவனது விமான நிலையத்திலிருந்து வந்த நட்பார்ந்த வாழ்த்துக்களையும் செய்திகளையும் கொடுத்து இந்தப் பெருந்தாக்கின் கடுமையைக் குறைக்கும் நோக்கத்துடன். ஆனால், இந்த விஷயம் அலெக்ஸேய்க்கு ஒருபோதும் தெரியவில்லை. கமிஸார் அனுபவம் முதிர்ந்த படைவீரர். கவனமில்லாமல் அவசரமாகக் கிறுக்கப்பட்ட இந்தக் காகிதத் துண்டுகளின் பேராற்றலை அவர் அறிந்திருந்தார். போர் முனையில் இவை மருந்துகளையும் தின்பண்டங்களையும் விடச் சில வேளைகளில் அதிக முக்கியமானவையாக இருக்கின்றன என்பது அவருக்குத் தெரியும்.

(தொடரும்)

முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க