ம்பதுகளின் துவக்கத்திலிருக்கும் அமெரிக்கரான அந்தோனி ஆண்ட்ரூஸ் விபத்தின் பின்விளைவாய் ஏற்படும் நாட்பட்ட மூளை பாதிப்புக்கு (chronic traumatic encephalopathy) ஆளானவர். அவர் தனது பள்ளி நாட்களில் பெரும்பாலான அமெரிக்க மாணவர்களைப் போன்றே அமெரிக்க கால்பந்தாட்டம் விளையாடியவர்.

அமெரிக்க கால்பந்தாட்டம் பொதுவான கால்பந்தாட்டத்தை விட முற்றிலும் மாறுபட்டது. எதிரணி வீரரோடு நேருக்கு நேர் மோதுவது, பந்தை கையால் தூக்கி எரிவது, அப்படி எரிய முயலும் வீரரை எதிரணி வீரர்கள் மொத்தமாக சூழ்ந்து கொண்டு மேலே விழுந்து அழுத்துவது என அதன் விதிகள் பொதுவாக நாம் அறிந்துள்ள காலபந்தாட்டத்தின் விதிகளில் இருந்து பெரிதும் மாறுபட்டது.

அந்த விளையாட்டில் அடிபட்டுக் கொள்வது – குறிப்பாக தலையில் – மிகச் சாதாரணம் என்பதோடு அடிபட்ட வீரர்கள் அதை கவுரவமாகவும் கருதிக் கொள்வர். வீரர்களின் தலைக்கவசங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொள்ளும் போது அவர்களின் மண்டை ஓட்டினுள் இருக்கும் மூளை ஒரு திடீர் அதிர்ச்சிக்கு உள்ளாகிறது. இதன் விளைவாக மூளையைத் தாங்கி நிற்கும் நரம்பிழைகள் (axon) ரப்பரைப் போல் முன்னும் பின்னும் இழுக்கப்படுகின்றது.

நரம்பிழைகள் இழுக்கப்படுவதன் காரணமாக மூளைக்கு முக்கியமான இரசாயனங்களை எடுத்துச் செல்லும் மெல்லிய குழாய்கள் அறுபடும் வாய்ப்பு உள்ளது. அதே போல் நரம்பிழைகளை அதனிடத்தில் இருத்தும் வேலையைச் செய்யும் டௌ புரதம் ஆங்காங்கே கட்டிக் கொண்டு முக்கியமான இடங்களில் அடைத்துக் கொள்கிறது. சிலருக்கு இவ்வாறு டௌ புரதம் கட்டிக் கொள்வது வளர்ந்து செல்களின் இறப்பு, மூளை சுருக்கம் அல்லது நினைவிழப்பு (டெமென்ஷியா) ஆகிய சிக்கல்களுக்கு காரணமாகி விடுகின்றது.

படிக்க:
எச்சரிக்கை ! விரைவில் உங்கள் மூளையின் நினைவுகள் கடத்தப்படலாம் !
♦ கேள்வி பதில் : வேலையில்லா திண்டாட்டம் தீர்க்க என்ன வழி ?

அந்தோனி ஆண்ட்ரூவிடம் ஏற்பட்ட பாதிப்புகளை முதலில் கவனித்தது அவரது மனைவி. இருவருமாகச் சேர்ந்து நிதி மேலாண்மை நிறுவனம் ஒன்றை நடத்தி வருகின்றனர். வாடிக்கையாளர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை மறந்து விடுவது, திட்டமிட்ட பயணங்களை மறந்து விடுவது என அவ்வப்போது ஆண்ட்ரூ விசயங்களை “மறந்துவிடுவதை” கவனித்த அவரது மனைவி மோனா, முதலில் இதையெல்லாம் வேண்டுமென்றே செய்கிறாரோ என சந்தேகப்பட்டுள்ளார். பின்னர் ஒரு கட்டத்தில் மருத்துவரை அணுக முடிவெடுத்துள்ளனர்.

நான்காண்டுகளுக்கு முன்பு இதே போன்ற காந்த அதிர்வு படிமமாக்கச் சோதனை (Magnetic resonance imaging – MRI) ஒன்றை ஆண்ட்ரூ மேற்கொண்டிருந்தார். அப்போது அவரது மூளையில் எந்த சிக்கலும் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். எனினும், மீண்டும் அதே சோதனையை ஒரு முறை செய்து பார்த்து விட முடிவு செய்துள்ளார் அவரது மனைவி மோனா. அதன்படி ஆண்ட்ரூவின் மூளையை காந்த அதிர்வு படிமமாக்கச் சோதனைக்கு உட்படுத்தினர் மருத்துவர்கள். தற்போதைய பரிசோதனை முடிவுகளை ஆய்வு செய்த மருத்துவர்கள், மூளையில் கட்டிகளோ அல்லது இரத்தக்கசிவோ, அல்லது சிதைவுற்ற பகுதியோ இல்லை என்பதை உறுதி செய்ததோடு மூளை ஆரோக்கியமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

ஆண்ட்ரு அவரது மனைவி மோனா.

இவ்விரு பரிசோதனை அறிக்கைகளையும் எடுத்துக் கொண்டு வாஷிங்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நரம்பியல் வல்லுநர்களான மெரில் மற்றும் அவரது சகா சைரஸ் ராஜியை அணுகியுள்ளார் மோனா. ஆண்ட்ரூவின் பழைய மற்றும் புதிய பரிசோதனை முடிவுகளை நியூரோரீடர் எனும் மென்பொருளைக் கொண்டு ஒப்பிட்டுப் பார்த்த வல்லுநர்கள், அவர் அதிர்ச்சியின் விளைவாய் ஏற்படும் நாள்பட்ட மூளை பாதிப்பு நோய்க்கு (chronic traumatic encephalopathy – CTE) ஆளாகியுள்ளார் என்பதைக் கண்டுபிடித்தனர். இவ்வகையான மூளைபாதிப்பானது தலையில் ஏற்படும் தாக்குதல்களின் விளைவாய் மெல்ல மெல்ல மூளையின் திறன் பாதிப்புக்கு உள்ளாவதால் ஏற்படுகின்றது. பெரும்பாலும் அமெரிக்க கால்பாந்தாட்ட விளையாட்டு வீரர்கள் மற்றும் குத்துச்சண்டை வீரர்கள் இந்த நோய்க்கு ஆளாகின்றனர்.

பொதுவாக, அதிர்ச்சியால் விளையும் நாள்பட்ட மூளை பாதிப்பை கண்டறிவது மிகவும் கடினம். பல சந்தர்ப்பங்களில் அதை அல்சைமர் அல்லது டெமென்ஷியா என மருத்துவர்கள் முடிவு கட்டி தவறான சிகிச்சையை மேற்கொண்டு பாதிப்புகள் அதிகரிப்பது உண்டு. ஏற்பட்டிருப்பது சி.டி.ஈ தான் என்பதைக் கண்டறிய மூளையின் திசுக்களை வெட்டியெடுத்து பரிசோதனை செய்வதே உத்திரவாதமான வழிமுறையாக இதுவரை கருதப்பட்டு வந்த நிலையில், நியூரோரீடர் ஒரு வரப்பிரசாதம்.

ஆண்ட்ரூ நான்காண்டுகளுக்கு முன் எடுத்திருந்த எம்.ஆர்.ஐ சோதனையின் முடிவுகளையும் தற்போது எடுத்திருந்த அதே சோதனையின் முடிவுகளையும் மிக நுணுக்கமாக ஆராய்ந்தது நியூரோரீடர். பொதுவாக எம்.ஆர்.ஐ சோதனை அறிக்கையை மருத்துவர்கள் பரிசோதிப்பர்; பின், அதில் ஏதும் மாறுபாடுகள் தட்டுப்பட்டால் அது தொடர்பான சிகிச்சையை பரிந்துரை செய்வர்.

நியூரோரீடர் மென்பொருள் ஒருவரிடம் வெவ்வேறு சந்தர்பங்களில் எடுக்கப்பட்ட எம்.ஆர்.ஐ சோதனையின் முடிவுகளை ஒப்பிட்டுப் பார்க்கிறது. பழைய மற்றும் புதிய முடிவுகளில் வெளிப்படும் மிக நுணுக்கமான மாறுபாடுகளை கண்டறிந்து மருத்துவரிடம் சொல்லி விடுகிறது. அதன் பின் அறிவாற்றல் சோதனைகள் (Cognitive Tests) உள்ளிட்ட வழமையான சோதனைகளை மேற்கொள்ளும் மருத்துவர்களால் ஓரளவுக்குத் துல்லியமாக மூளையில் ஏற்பட்டுள்ள பாதிப்பின் தன்மையை கண்டறிந்து அதற்கேற்ப சிகிச்சை முறையைத் தீர்மானிக்க முடிகிறது.

படிக்க:
ஆர்.எஸ்.எஸ். கூறும் இந்து ராஷ்டிரத்தின் இறுதி நோக்கம்தான் என்ன ?
♦ செயற்கை நுண்ணறிவு : நவீன அடிமை யுகம் – புதிய கலாச்சாரம் சிறப்பு வெளியீடு

சாதாரண மனிதக் கண்களுக்குத் தட்டுப்படாத மிகச் சிறிய மாற்றங்களைக் கூட நியூரோரீடர் போன்ற மென்பொருட்கள் கண்டறிந்து விடுவதால் மேற்கொண்டு சோதனை செய்ய வேண்டியதன் பரப்பளவு வெகுவாக குறைந்து விடுகிறது. நியூரோரீடர் இன்னமும் பரவலாக பயன்பாட்டுக்கு வரவில்லை என்பதோடு இதைப் போன்ற மென்பொருட்கள் இன்னமும் சோதனைக் கட்டத்திலேயே உள்ளது.

மூளை மற்றும் நரம்பு மண்டலத்தைப் பரிசோதிக்கும் கணினி மென்பொருட்களின் துல்லியம் இன்னமும் நூறு சதவீதத்தை எட்டவில்லை என்பதும் நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டிய அம்சம். இன்றைய அளவில் இது போன்ற மென்பொருட்கள் மருத்துவர்களுக்கு உதவி புரியும் ஒரு கருவி என்கிற அளவிலேயே இருக்கின்றது.

எனினும், மூளையைப் பரிசோதிக்கும் மென்பொருட்களுக்கு – குறிப்பாக சி.டி.ஈ போன்ற நோய்களைக் கண்டறிவதற்காக பயன்படுத்துவதை – எதிர்க்கும் மருத்துவர்களும் இருக்கவே செய்கின்றனர். பாஸ்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நரம்பியல் வல்லுநரும் அப்பல்கலைக்கழகத்தின் சி.டி.இ மையத்தின் இயக்குநருமான மருத்துவர் ஆன் மெக்கேய் ஆண்ட்ரூவின் நோய் கண்டறியப்பட்டதைக் குறித்த சந்தேகத்தை வெளிப்படுத்துகிறார்.

ஆண்ட்ரூவிற்கு ஏற்பட்டுள்ள நோய் அறிகுறிகளுக்கு வேறு பல காரணங்களுக்கும் இருக்க வாய்ப்புள்ளது எனக் குறிப்பிடும் ஆன், இன்னமும் மூளையின் திசுக்களை பரிசோதிப்பதே சி.டி.ஈ பாதிப்பைக் கண்டறியும் உத்திரவாதமான வழி என்கிறார்.

சைரஸ் ராஜி மற்றும் அவரது சகா மெரில் (வலது)

எம்.ஆர்.ஐ பரிசோதனையின் முடிவுகளை நியூரோரீடர் கொண்டு ஆராய்வது முழுமையாக துல்லியத்தன்மையை எட்டவில்லை என்பதை மருத்துவர் ராஜியும் அங்கீகரிக்கிறார். “எந்த ஒரு சோதனை முடிவுகளும் அறுதியானது அல்ல – அப்படி இருக்கவும் கூடாது. பல்வேறு தரவுகளைக் கூட்டாக பரிசீலிப்பதன் வழியேதான் நோயின் மூலத்தைக் குறித்த சரியான அனுமானத்திற்கு வந்து சேர முடியும்” என்கிறார் ராஜி. மேலும் சோதனை முடிவுகளை தொடர்ச்சியான கால இடைவெளியில் ஒப்பீடு செய்வதன் மூலம் ஒரு குறிப்பிட்ட நோயாளிக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் சரியான திசை வழியில் முன்னேறிக் கொண்டுள்ளதா என்பதையும் அவதானிக்க முடியும் என்கிறார் ராஜி.

அல்ஜீமர், டெமென்ஷியா உள்ளிட்ட பல்வேறு மூளை பாதிப்புக்கு உள்ளான நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகளின் விளைவுகளை தொடர்ச்சியான கால இடைவெளியில் எடுக்கப்படும் எம்.ஆர்.ஐ சோதனை முடிவுகளை ஒப்பிட்டு புரிந்து கொள்ள முடிகிறது என்கின்றனர், அதற்கான மென்பொருட்களைப் பயன்படுத்தும் மருத்துவர்கள். குறிப்பாக ஆண்ட்ரூவின் விசயத்தையே எடுத்துக் கொண்டால், அவரது நோயின் காரணத்தைக் கண்டறிந்த பின் அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் எதிர்பார்த்த பலன்களை அளிப்பதை அவரது எம்.ஆர்.ஐ சோதனை முடிவுகளை நியூரோரீடர் மென்பொருளின் மூலம் ஆய்வு செய்த போது மருத்துவர்கள் அறிந்துள்ளனர்.

ஆண்ட்ரூவின் சிகிச்சை மற்றும் அதற்காக பயன்படுத்தப்படும் மென்பொருள் குறித்து அவரது ஒப்புதலுடன் ஒரு கட்டுரையை எழுதிய மெரில் மற்றும் ராஜி ஆகியோர் அதை மருத்துவ பத்திரிகை ஒன்றில் வெளியிட்டனர். அந்தக் கட்டுரை வெளியான பின் இந்த மென்பொருள் பயன்பாட்டை ஆதரித்தும் விமரிசித்தும் நரம்பியல் மருத்துவ உலகம் விவாதித்து வருகின்றது. எப்படிப் பார்த்தாலும், எதிர்காலத்தில் மனித உடலைப் பரிசோதிக்க ஒரு உத்திரவாதமான கருவியாக கணினிகள் வளர்ந்து வருவதை முற்றிலுமாக மறுத்து விட முடியாது.

சாக்கியன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க