ந்திய சமூகம் பழமையானது. பல இன, மொழி, பண்பாட்டு அடையாளங்களைக் கொண்டது. அறிவியல், தத்துவம், மருத்துவம் போன்ற துறைகளில் உலக அறிஞர்களின் கவனத்திற்கும் ஆராய்ச்சிக்கும் ஆட்பட்டது. வற்றாத வளத்தாலும் தனது வரைபட அமைப்பாலும் பிற நாட்டவர்கள் குடியேறவும், படையெடுப்பாளர்கள் போர் செய்து ஆட்சி அமைக்கவுமான வரலாற்றையும் கொண்டது. அதன் காரணமாகவே பல மதக் கருத்துகளும் அமைப்புகளும் பரவி ஒரு பன்முகச் சமூகமாக அது காட்சியளிக்கிறது. இவையெல்லாம் இந்திய சமூகத்திற்கு பெருமையளிப்பதாயினும் இக்காரணங்களாலேயே இன மத மோதல்களுக்கும் அடிமைத்தனங்களுக்கும் காரணமாகவும் அமைந்துள்ளது.

மார்க்சிய அறிஞர் தேவிபிரசாத் சட்டோபாத்யாயா அவர்கள் பழங்கால இந்திய சமூகத்திற்கும் கிரேக்க சமூகத்திற்கும் உள்ள தொடர்புகளை இச்சிறு நூலில் ஆராய்கிறார். சமூக சிந்தனைகள், மத வழிபாடுகள், மருத்துவக் கூறுகள் அனைத்திலும் இரு சமூகத்திற்குள்ள ஒற்றுமைகளை இச்சிறு நூலில் விளக்கியுள்ளார். (பதிப்பாளர் குறிப்பிலிருந்து…)

இயற்கை அறிவியலை நோக்கி அந்த அற்புதமான முதலடி எடுத்துவைக்கப்பட்டது இந்தியாவில்தான். அநேகமாக அது புத்தரின் காலத்திற்குச் சற்று முன்பாக நடந்தது, என்பதே இந்த ஆய்வுக் கட்டுரையில் நிறுவப்படவிருக்கும் முக்கிய அம்சங்களில் ஒன்றாகும். அதே நேரத்தில், பண்டைய இந்தியாவில் இயற்கை அறிவியல் தொடக்கநிலையை அல்லது தொன்மையான கட்டத்தைத் தாண்டி வளர்ந்துவிடவில்லை என்பதும் உண்மை. அதன் வளர்ச்சியைத் தடுக்கக்கூடிய அளவுக்கு ஏதோவொரு வலுவான காரணக்கூறு இருந்திருக்கிறது என்பது தெளிவு. அந்தக் காரணக்கூறு என்ன?…

பண்டைய மரபுகள் மறைவது கடினமாக இருக்கும் ஒரு தேசத்தில், கடந்த காலத்தைப் பற்றிய ஒரு தெளிவான பார்வை, தற்காலத்தைப் பற்றிய மேம்பட்ட பார்வைக்கு வழிவகுக்கும். வேறு சொற்களில் சொல்வதானால், இயற்கை அறிவியலின் வளர்ச்சிக்குப் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்ற போதிலும், இன்று வஞ்சகமான முறையில் அதன் வளர்ச்சியை முடக்க முனையும் கூறுகளை புரிந்துகொள்ளவும் அது உதவும்.

பண்டைய இந்தியாவில் இயற்கை அறிவியலின் வளர்ச்சிக்கு பகையாக இருந்த சக்தியை அடையாளம் காண இந்த ஆய்வுக் கட்டுரையில் ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. பண்டைய இந்தியாவில் அறிவியலை முடக்கிய முக்கியமான காரணக்கூறு அரசியல்ரீதியானது என்ற வாதமும் இக்கட்டுரையில் முன்வைக்கப்படுகிறது. சொகுசாக அனுபவிக்கும் சிறுபான்மையினராகவும் பாடுபட்டு உழைக்கும் பெரும்பான்மையினராகவும் – இந்தியச் சொல்லாடல்களில் கூறுவதானால் துவிஜர்களாகவும் சூத்திரர்களாகவும் – பிளவுபட்ட ஒரு சமுதாயத்தைப் பராமரிக்கிற, மறு உருவாக்கம் செய்கிற தேவையிலிருந்து அந்தக் காரணக்கூறு வந்தது. இந்தச் சமூக ‘ஒழுங்கமைப்புக்கு’ மிகமிக ஆரவாரமாக, மிகமிக குரூரமாக வக்காலத்து வாங்கியவர்கள் சட்டங்களை இயற்றுகிற இடத்தில் இருந்தவர்கள்தாம். இயற்கை அறிவியலை சாத்தியமானதாக்கக்கூடிய அனைத்துக்கும் எதிராக எல்லாவகையான சட்டங்களையும் பிறப்பித்தவர்கள் அவர்கள்; இதை நாம் பின்னர் காணவிருக்கிறோம்.

படிக்க:
பெண்களின் உயிரை உறிஞ்சும் ஆயத்த ஆடை தொழிற்சாலைகள் !
இந்தி : இந்தியாவை ஒன்றுபடுத்துமா ? பிளவுபடுத்துமா ?

எனினும் சட்டத்தின் மூலம் வலிந்து திணிக்கப்பட்டதை மட்டுமே கவனத்தில் கொள்வது என்பது பண்டைய இந்தியச் சூழலின் ஒரு பகுதியை மட்டுமே பார்ப்பதாகிவிடும். அறிவியலை அழிக்கும் சக்தியாக செயல்பட்ட மற்றொரு காரணக்கூறு, நாட்டில் நிலவிய பொதுவான தத்துவார்த்தச் சூழலை அதே அரசியல் தேவை எப்படி சீர்குலைத்தது என்பதாகும். பண்டைய இந்திய தத்துவார்த்தச் சிந்தனை மரபில் தகுதி வாய்ந்தவர்களாகத் திகழ்ந்த புகழ்பெற்ற ஞானிகள் சிலர் தங்களது அறிவு வளத்தையெல்லாம் இயற்கை அறிவியலின் வளர்ச்சியை முடக்குவதற்கென்றே பயன்படுத்தினார்கள். அறிவியலில் அபாயம் இருப்பதாகக் கருதிய சுயநல சக்திகளின் ஈவிரக்கமற்ற அரசியல் சூதாட்டத்தில் கதியற்ற பகடைக் காய்களாகவே அற்புதத் திறன் வாய்ந்த தத்துவ ஞானிகள் பயன்படுத்தப்பட்டனர். (நூலிலிருந்து பக்.7-8)

பண்டைய இந்தியாவில் சமயச் சார்பின்றி முற்றிலும் உலகியல் சார்ந்ததாக இருந்த, அத்துடன் இயற்கை அறிவியல் குறித்த நவீன புரிதலுக்கான தொடக்கத்தைக் கொண்டிருந்த ஒரே கல்வித்துறை மருத்துவம் மட்டுமே. ஒலியியல், இலக்கணம், சொல் இலக்கணம், அளவையியல், காலமுறை வானியல் ஆகியவை – வரைகணிதமும் கூட – வைதிக வட்டாரங்களில் மிக அதிகமாகப் பேசப்பட்ட இதர கல்வித்துறைகளாகும். கடைசியாகக் குறிப்பிடப்பட்ட கல்வித்துறை கூட சடங்கு நுட்பம் அல்லது கல்பா என்பதன் ஒரு பகுதியாகவே வரையறுக்கப்பட்ட அர்த்தத்தில் இருந்து வந்தது. சடங்கு நுட்பத்தைப் போலவே இவையனைத்தும் சமய அமைப்புகளிலிருந்து துவங்குவனவாக, அவற்றின் வேத ஞானத்தின் பகுதியாக இருந்தன. இவற்றுக்கான பாரம்பரியச் சொல் வேதங்கா என்பதாகும். அதாவது வேதத்தின் அங்கங்கள் என்று பொருள். இவ்வாறாக இந்தக் கல்வித் துறைகளில் மதத்தின் பிறப்படையாளங்கள் பதிந்துள்ளன அல்லது சமயச்சார்பின்மைக்கு எதிரான அடையாளங்கள் உள்ளன. குறிப்பாக பிரம்மகுப்தரின் வானியல் குறித்து ஆய்வாளர் அல்-பெருனி சிறப்பாகக் குறிப்பிடுவதைப்போல, இவை ஆக்கப்பூர்வ அறிவியலாக வளர்வதில் சமாளித்து நிற்கவியலாத கடினமான நிலைமைகளை எதிர்கொள்கின்றன. (நூலிலிருந்து பக்.33-34)

நூல் : அறிவியல் தத்துவம் சமுதாயம்
ஆசிரியர் : தேவிபிரசாத் சட்டோபாத்யாயா
தமிழில் : அ. குமரேசன்

வெளியீடு : அலைகள் வெளியீட்டகம்,
எண் : 5/ 1 ஏ, இரண்டாவது தெரு,
நடேசன் நகர், இராமாபுரம்,
சென்னை – 600 089.
தொலைபேசி எண்: 98417 75112.

பக்கங்கள்: 64
விலை: ரூ 35.00 (முதற் பதிப்பு)

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று

முகவரி :
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு :

வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி : 99623 90277

இணையத்தில் வாங்க : nhm

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க