உண்மை மனிதனின் கதை | இரண்டாம் பாகம் | அத்தியாயம் – 6

றுவைக்குப் பிறகு அலெக்ஸேய் மெரேஸ்யெவின் இயல்பில், இத்தகைய சூழ்நிலையில் ஏற்படக்கூடிய மிகப் பயங்கரமான மாற்றம் ஒன்று நிகழ்ந்தது. அவன் தனக்குள் ஒடுங்கிவிட்டான். அவன் குறை சொல்லவோ, அழவோ, சிடுசிடுக்கவோ இல்லை. அவன் மௌனம் சாதித்தான்.

தனது ரெஜிமெண்டுக்கு, விமானி வேலைக்கு, பொதுவாகவே போர் முனைக்கு அவன் இனி ஒருபோதும் திரும்பப் போவதில்லை. விமானத்தை உயரே கிளப்பிக் கொண்டு போகவும் விமானப் போரில் கலந்து கொள்ளவும் இனி அவனுக்கு இயலாது! இப்போது அவன் அங்கஹீனன்; விருப்பிற்குகந்த பணியிலிருந்து அகன்று விட்டவன்; ஓரிடத்தில் கட்டுண்டவன்; குடும்பத்தினருக்குச் சுமை, வாழ்வுக்குத் தேவை அற்றவன். இதை நேராக்க முடியாது, வாழ்நாள் முழுவதும் இது இப்படியே இருக்கும்.

நாள் முழுவதும் அசையாமல் நிமிர்ந்து படுத்து, மோட்டிலிருந்து நெளிந்த வெடிப்பையே நிலைக்குத்திட்டு நோக்கியவாறு கிடப்பான் அலெக்ஸேய். தோழர்கள் அவனிடம் பேச்சுக் கொடுத்தால் “ஆமாம்”, “இல்லை” என்று – அதுவும் அடிக்கடி பொருத்தம் இன்றி -விடையளித்துவிட்டு மீண்டும் மௌனத்தில் ஆழ்ந்து விடுவான். மருத்துவர்கள் குறித்த சிகிச்சை முறைகளை எல்லாம் அவன் பணிவுடன் கடைபிடிப்பான், அவர்கள் எழுதிக் கொடுத்த மருந்துகளை எல்லாம் சாப்பிடுவான், தாமதமாக, பசியே இன்றி உணவு கொள்வான், பின்பு மறுபடி நிமிர்ந்து படுத்துவிடுவான்.

“டேய், தாடி, என்ன யோசனை பலமாயிருக்கிறது?” என்று அவனிடம் பேச்சு கொடுத்தார் கமிஸார்.

அலெக்ஸேய் அவர் புறம் முகத்தைத் திருப்பினான், அவரைக் காணவே இல்லை போன்ற தோற்றத்துடன்.

“என்ன யோசனை பலமாயிருக்கிறது என்று கேட்டேன்.”

“ஒன்றுமில்லை.”

ஒரு முறை வஸீலிய் வஸீலியயெவிச் வார்டுக்கு வந்தார்.

சிறந்த தேர்ச்சியுடன் செய்யப்பட்ட அறுவையை அவன் எஃகு சரீரம் எளிதில் தாங்கிக்கொண்டது. காயங்கள் விரைவாக ஆறிக் கொண்டு வந்தன. எனினும் அவன் வெளிப்படையாக தெரியும் அளவுக்குப் பலவீனம் அடைந்தான்.

“என்ன, ஊர்வான், உயிரோடு இருக்கிறாயா? என்ன சமாச்சாரம்? வீரன்தான் நீ, முணுக்கென்று கூடக் கத்தவில்லை! நீ ஜெர்மானியர்களிடமிருந்து தப்பி, பதினெட்டு நாட்கள் தவழ்ந்து, ஊர்ந்து வெளியேறினாய் என்பதை இப்போது நம்புகிறேன், தம்பி. என் வாழ்நாளில் நான் எத்தனை படைவீரர்களைக் கண்டிருக்கிறேனோ, அத்தனை உருளைக் கிழங்குகளைக்கூட நீ தின்றிருக்க மாட்டாய். ஆனால் உன் போன்றவனுக்கு அறுவை செய்ய இதுவரை வாய்க்கவில்லை” தலைமை மருத்துவர் ரசக்கற்பூரத்தால் அரிக்கப்பட்ட நகங்களைக் கொண்ட, தோலுரியும் சிவந்த கைகளைத் தேய்த்துக் கொண்டார். “என்ன உர்ரென்று முகத்தை வைத்துக் கொள்கிறாய்? இவனைப் புகழ்கிறேன், இவன் முகத்தைச் சுளிக்கிறான். நான் மருத்துவ லெப்டினன்ட் ஜெனரலாக்கும். தெரியுமா? உத்தரவிடுகிறேன் ! ஊர்ந்தும் வந்திருக்கிருக்கவே வேண்டாமே! ரிவால்வரில் மூன்று குண்டுகள் பாக்கியிருந்தனவே.”

தடையரண்களால் சூழப்பட்டுக் கடுகடுப்புடன் போர்க்கோலம் பூண்டிருந்த மாஸ்கோவில் எங்கிருந்தோ எப்படியோ தளிர்த்திருந்த தூவி வில்லோக் கிளைகள் சிலவற்றைக் க்ளோவ்தியா மிஹாய்லவ்னா கொண்டுவந்தாள். ஒவ்வொரு நோயாளியின் சிறு மேஜை மீதும் ஒரு வில்லோக் கொம்பைக் கண்ணாடித் தம்ளர்களில் வைத்தாள். செம்மையோடிய கொம்புகளில் வெள்ளிய தூவியடர்ந்த இலை மொக்குகள் சிறு நூல் பந்துகள் போலக் காட்சி தந்தன. வசந்தகாலமே நாற்பத்து இரண்டாம் வார்டுக்குள் வந்துவிட்டது போன்ற புத்துணர்ச்சி அவற்றிலிருந்து எங்கும் பரவியது. அன்று எல்லோருமே இன்பக் கிளர்ச்சி கொண்டிருந்தார்கள். வாய் மூடி டாங்கிவீரன் கூட கட்டுகள் போட்ட முகமும் தானுமாகச் சில வார்த்தைகளைக் கலகலத்தான்.

அலெக்ஸேய் படுத்தபடியே எண்ணமிட்டான்: கமீஷினில் இப்போது கலங்கல் நீரோடைகள் சேறு படிந்து நடக்கிட்டிருக்கும் நடைபாதைகளின் ஓரமாக சாலைகளில் பரவிய பளிச்சிடும் கூழாங்கற்கள் மேல் பாய்ந்தோடும். வெப்பமடைந்த தரை, குளுமையான ஈரிப்பு, குதிரைச் சாணம் இவற்றின் வாடை கலந்து வீசும். இந்த மாதிரி ஒரு நாளில்தான், வோல்கா ஆற்றின் செங்குத்தான கரைமீது அவனும் ஓல்காவும் நின்றார்கள். வானம்பாடிகளின் குரல்கள் வெள்ளி மணிகள்போல ஒலித்தன.

படிக்க:
கோயிலுக்குள் நுழைந்த தலித் சிறுவனை கொதிக்கும் வெயிலில் தள்ளிய சாதிவெறி !
ஜெயமோகன் : மாவு புளிச்சிடுச்சு ! ஃபேஸ்புக் பொங்கிடுச்சு !

மற்றபடி எங்கும் ஆழ்ந்த அமைதி வீற்றிருந்தது. இத்தகைய சூழ்நிலையில் வோல்கா ஆற்றின் கண்ணுக்கெட்டாத அகல் பரப்பின் மீது ஓசையின்றி மிதந்து சென்றன. ஆற்றோட்டத்துடன் பனிக்கட்டிப் பாளங்கள் மிதந்து செல்லவில்லை நெளிநெளியாக அலைகளை எழுப்பியவாறு விரைந்து பாயும் ஆற்றின் பெருக்குக்கு எதிராக ஓல்காவும் அவனும் மிதந்து செல்வது போலவும் அவர்களுக்குப் பிரமை உண்டாயிற்று. அவர்கள் பேசாமல் நின்று கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு முன்னே அளவற்ற இன்பம் காட்சி தந்தது. அந்த இன்பத் திளைப்பில், வோல்கா ஆற்றுப் பரப்பிற்கு மேலே, விட்டு விட்டு வீசிய இளவேனில் காற்றில் அவர்களுக்கு மூச்சு திணறுவது போலிருந்தது. இத்தகைய இன்பக் கணங்கள் இனி என்றுமே வராது. அவள் அவனிடமிருந்து முகத்தைத் திருப்பிக் கொள்வாள். திருப்பிக் கொள்ளவில்லை என்றாலும் இந்தத் தியாகத்தை அவனால் ஏற்றுக் கொள்ள முடியுமா? அழகு ஒளி மற்றும் வடிவமைப்புடன் திகழும் ஓல்கா, கட்டைக் கால்களில் விந்தி விந்தி நடக்கும் தன் அருகே செல்ல அனுமதிப்பதற்கு அவனுக்கு உரிமை உண்டா?… வசந்தகாலத்தின் அந்த எளியநினைவுச் சின்னத்தை மேஜையிலிருந்து அகற்றி விடும்படி அவன் மருத்துவத்தாதியை வேண்டிக்கொண்டான்.

தூவி வில்லோக் கொம்பு அகற்றப்பட்டுவிட்டது, ஆனால், துன்ப நினைவுகளிலிருந்து விடுபடுவது கடினமாயிருந்தது. அவன் காலற்ற முடவன் ஆகிவிட்டான் என்று அறிந்ததும் ஓல்கா என்ன சொல்லுவாள்? போய்விடுவாளா, மறந்து விடுவாளா, தன் வாழ்க்கையிலிருந்து அவனை அகற்றித் துடைத்துவிடுவாளா? அலெக்ஸேயின் உள்ளமும் ஆன்மாவும் இதை எதிர்த்தன. இல்லை, அவள் அப்படிப்பட்டவள் அல்ல. அவள் அவனை ஒதுக்கிவிட மாட்டாள், முகத்தைத் திருப்பிக் கொள்ள மாட்டாள்! இது இன்னும் மோசம். பெருந்தன்மை காரணமாக அவள் அவனை மணந்துகொள்வாள், நொண்டிக்கு வாழ்க்கைப்படுவாள், இந்தக் காரணத்தால் உயர் தொழில்நுட்பக் கல்வி பெறும் தனது கனவை விட்டுவிடுவாள், தன்னையும் அங்கவீனமான கணவனையும், யார் கண்டது, குழந்தையையுங்கூடப் பராமரிப்பதற்காக வேலை நுகத்தில் கழுத்தை மாட்டிக் கொள்வாள் – இவ்வாறு எண்ணிப் பார்த்தான் அலெக்ஸேய்.

இந்தத் தியாகத்தை ஏற்றுக்கொள்ள அவனுக்கு உரிமை உண்டா? அவர்கள் இன்னும் எவ்விதத்திலும் கட்டுப்பட்டவர்கள் அல்லவே. அவள் அவனுடைய மணப்பெண்தானே தவிர மனைவி அல்லவே. அவன் அவளைக் காதலித்தான், மனமாரக் காதலித்தான். ஆனால் அவளை மனைவி ஆக்கிக்கொள்ளத் தனக்கு உரிமை கிடையாது என்று அவன் தீர்மானித்தான். தங்களை ஒருவருடன் ஒருவர் இணைக்கும் எல்லாத் தொடர்புகளையும் தானே அறுத்து விட வேண்டும், அதுவும் சட்டென்று அறுத்துவிட வேண்டும் – துயர் நிறைந்த வருங்காலத்திலிருந்து மட்டுமல்ல, தயக்கத்தின் சித்தரவதையிலிருந்து அவளுக்கு விடுதலை அளிக்கும் பொருட்டு – என நிச்சயித்தான்.

ஆனால் “கமீஷின்” என்ற முத்திரை பதிந்த கடிதங்கள் வந்து இந்தத் தீர்மானங்களை எல்லாம் அழித்துத் துடைத்து விட்டன. ஒல்காவின் கடிதம் மறைமுகமான ஏதோ கலவரத்தால் நிறைந்திருந்தது. துன்பம் வரப்போவதை முன்னுணர்ந்தவள் போல அவனுக்கு என்னதான் நேர்ந்தாலும் தான் எப்போதும் அவனுடன் இருக்கப்போவதாக அவள் எழுதியிருந்தாள்.

அவன் அவளைக் காதலித்தான், மனமாரக் காதலித்தான். ஆனால் அவளை மனைவி ஆக்கிக்கொள்ளத் தனக்கு உரிமை கிடையாது என்று அவன் தீர்மானித்தான்.

சொந்த ஊரிலிருந்து வந்த கடிதங்கள் முதல் முறையாக அலெக்ஸேய்க்குக் களிப்பூட்டவில்லை. அவன் உள்ளத்தில் அவை புதிய தடுமாற்றத்தை விளைத்தன. இங்குதான் அவன் தவறு செய்தான் – வருங்காலத்தில் அவனுக்கு எவ்வளவோ வேதனை உண்டாகக் காரணமாயிருந்த தவறு செய்தான். தன் கால்கள் வெட்டி எடுக்கப்பட்டு விட்டன என்ற சேதியை கமீஷிக்னுக்குத் தெரிவிக்க அவனுக்கு துணிவு வரவில்லை.

அலெக்ஸேய் மெரேஸ்யேவின் மருத்துவமனை நாட்கள் களிப்பற்ற சிந்தனையில் அலுப்பூட்டும் வகையில் கழிந்தன. சிறந்த தேர்ச்சியுடன் செய்யப்பட்ட அறுவையை அவன் எஃகு சரீரம் எளிதில் தாங்கிக்கொண்டது. காயங்கள் விரைவாக ஆறிக் கொண்டு வந்தன. எனினும் அவன் வெளிப்படையாக தெரியும் அளவுக்குப் பலவீனம் அடைந்தான். மருத்துவர்கள் எத்தனையோ சிகிச்சை முறைகளை மேற்கொண்ட பின்னரும் அவன் கண்ணெதிரே நாளுக்கு நாள் இளைத்து வாடிப்போனான்.

(தொடரும்)

முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க