அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை தொடர் | பகுதி – 08

பாணர் எழுதிய ஹர்ஷ சரித்திரத்தைப் படிப்போர், ஹர்ஷரின் வீரத்தை உணர்வர். கனோஜ் நகரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட ஹர்ஷர், ஆறு ஆண்டுகள் வாளை உறையிலிடாது போர் புரிந்த வீரர், எத்தனையோ வெற்றிகள் கண்டவர். அவர் தோற்று தமது உறைவாளை உறையிலிட்டு ஓடியது, திராவிட நாட்டு எல்லையில்தான்! நருமதைக்குத் தெற்கேதான்! இரண்டாம் புலிகேசி எனும் இரணகளச் சூரன் ஹர்ஷனைத் தோற்கடித்தான்.

இங்ஙனம் வடநாட்டில் ஆரியர் நிறுவிய எந்த வல்லரசும் விந்தியத்திற்குக் கீழே வந்ததில்லை. ‘வீராதி வீரர்கள்’ வாழ்ந்த போதெல்லாம் திராவிடம் தனி நாடாகவே இருந்தது; தனிச் சிறப்புடனே விளங்கிற்று:

கஜினி, கோரி, குத்புதீன், அலாவுதீன், துக்ளக், பாபர், அக்பர், அவுரங்கசீப் ஆகியோர் காலத்திலும் திராவிடத்தை எந்த வல்லரசும் அடக்கி அழிக்க முடியாது போயிற்று!

ஏன்? திராவிடம் ஆண்டவனின் அவதார புருடர்களை மட்டுமே நம்பிக்கொண்டு வாழ்ந்ததா? அற்புதங்களை, யோகங்களை நம்பிக்கொண்டு வாழ்ந்ததா? இல்லை இல்லை ! வீரத்துடன் இருந்தது.

“மிளையும் கிடங்கும் வளைவிற் பொறியும்
கருவிரலூகமும் கல்லிமிழ் கவணும்
பரிவுறு வெந்நெயும் பாடு குநிசியும்!
கால்பொன் னுலையும் கல்லிடு கூடையும்
தூண்டிலும் தொடக்கும் ஆண்டலை யடுப்பும்
கவையும் கழுவும் புதையும் புழையும்
ஐயூவித் துலாமும் கைபெய ருசியும்
சென்றெறி சிரலும் பன்றியும் பணையும்
எழுவும் சீப்பும் முழுவிறற் கணையமும்
கோலும் குந்தமும் வேலும் பிறவும்…”  கொண்டு போரிடும் வீர மரபினராகத் திராவிடர் இருந்ததால், அம்பெய்யும் பொறி, கரிய விரலையுடைய குரங்கு போன்ற கடிக்கும் பொறி, கல்லெறியும் கவண், கோட்டை மீதேற முயலும் எதிரி மீது காய்ச்சி ஊற்றும் எண்ணெய். அவ்விதமான எண்ணெய் முதலியன ஊற்றுதற்கான பாத்திரம். இரும்புக் கம்பிகளைக் காய்ச்சும் உலை, கல்லும் கவணும் வைக்கும் கூடை, கோட்டை மதில்மீது ஏற முயலும் எதிரிமீது மாட்டி வலிக்கும் தூண்டில் போன்ற கருவி, சங்கிலி , எதிரியின் மீது வீசச் சேவல் தலை போன்ற பொறி , அகழியைத் தாண்டி மேலே ஏறும் எதிரியைத் தாக்கிக் கீழே தள்ள இரும்பு உலக்கை அம்புக்கூட்டம், எதிரிகள் மீது தீ வீசும் பொறி, சிற்றம்புகள் எய்யும் யந்திரம், மதின் மேற்புறத்து உச்சியில் ஏறும் எதிரியின் கைகளைக் குத்தும் ஊசிகள், மதிலில் ஏறினவன் உடலைக் கிழிக்கும் இரும்பாற் செய்த பன்றி உருவுடைய யந்திரம். மூங்கில் போன்ற உருவுடைய இரும்புக் கம்பிகள், கோட்டைக்கு ஆதரவாகப் போடப்படும் பெரிய மரக்கட்டைகள், அவற்றுக்குக் குறுக்கே போடும் உத்திரங்கள், தடி, ஈட்டி, வேல், வாள் வீசும் பொறி முதலியன கொண்டு போரிட்டனர் திராவிடர்.

சிலப்பதிகாரத்தைப் படிப்போர், இந்த நெஞ்சை அள்ளும் சேதியைக் காண்பர்.

அன்று திராவிடர், ஆரியர்போல் “அரி அர மாயை” மேக வாயுவாஸ்திரம், சித்து முதலியன ஜாலங்களை, கட்டுக் கதைகளைப் புனைந்து கொண்டு வாழவில்லை. வீரத்தோடு வாழ்ந்தனர். தனித்து நின்று தனிச்சிறப்புப் பெற்றனர்.

திராவிட நாடு இங்ஙனம் இருக்கவில்லை என்று இந்து மகா சபையினர் கூற முடியுமா? அத்தகைய நாடு மீண்டும் தனிநாடானால், பண்டைக் காலத்திற்கேற்ற பொறிகள், போர்க்கருவிகள் கொண்டு தம்மைத் தாம் பாதுகாத்துக் கொண்டதுடன், வடக்கே ஆரியர் ஏற்படுத்திய எந்த வல்லரசுக்கும் தலைவணங்காது வாழ்ந்தது போலவே, இக்காலப் போர்க்கருவிகளான துப்பாக்கி, தோட்டா, பீரங்கி, வேட்டு, டாங்கி, டார்பிடோ, விமானம், வெடிகுண்டு, கப்பல், சப்மெரைன் முதலியன கொண்டு வல்லரசுகளுக்கு இரையாகாமல் வாகை சூடி வாழ முடியாதா என்பதைத்தான் திருப்பாவை பாடும் திவான்பகதூர் யோசித்துப் பார்த்துப் பதில் கூற வேண்டுகிறோம். கூறுவாரா?

திவான் பகதூர் இராமசாமி சாஸ்திரி.

திராவிடம் தனிநாடாகவே இருந்து வந்தது என்பதைச் சரித்திர, இலக்கிய ஆதாரங்களைக் கொண்டு நாம் விளக்கினோம். ஆனால், அது திவான் பகதூர் இராமசாமி சாஸ்திரி போன்றோர்க்கு விளக்கம் தராது!

”ஆரியர் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள், திராவிடர் இங்கேயே தோன்றினவர் என்றுரைக்கிறார்கள். இதுவும் தவறு” என்று சாஸ்திரியார் மதுரை மாநாட்டிலே கூறினார். அவருக்குத் ததாஸ்து கூறும் பேர்வழிகளைப் பற்றி நமக்குக் கவலையில்லை. ஆனால் சாஸ்திரியாரும் அவரது சீடர்களும் இங்ஙனம் கூறினாலும், அவர்கள் பிள்ளைகள் இன்று பள்ளிக் கூடங்களில் படிப்பது, ‘ஆரியர் வெளிநாட்டார் – திராவிடர் பூர்வகுடிகள் – திராவிடரை ஆரியர் தஸ்யூக்கள் என்று இழிவாகக் கூறினர்’ என்பதுதான். சிறு பிள்ளைகள் உள்ளத்திலே இந்த உண்மை இடம்பெறும்போது நரைத்த நடுங்கிகள் வேறுவிதமாக நாவசைப்பது பற்றி நமக்கென்ன கவலை!

“இந்துக்கள் பெருந்தன்மையான, உதாரணமான நோக்கமுள்ளவர்கள்” என்று சாஸ்திரியார் கூறுகிறார். இது உண்மை என்று சேரியை ஒருமுறை கண்ட எவரேனும் ஒப்புக்கொள்ள முடியுமா? கொடுங்கோன்மைக்கு, மக்களை மக்கள் கசக்கிப் பிழிவதற்கு, மிருகத்தனமாக நடத்துவதற்கு, மனுவை விடச் சிறந்த குரு வேறு எங்கும் இராரே, மனு ஆரிய சிரோமணி! ‘இந்து’ பெருந்தன்மை அதிலே தெரிகிறதே தெளிவாக! இன்னமுமா, ஏய்க்கப் பார்ப்பது?

மலத்தை மிதித்துவிட்டால் காலைக் கழுவினாலே போதும்; மனிதனை (ஆதிதிராவிடனை)த் தீண்டிவிட்டால், குளிக்க வேண்டுமே! பிராயச்சித்தம் செய்து கொள்ள வேண்டுமே பிராமண குலோத்தமர்கள்! இதுதான் தாராளம், பெருந்தன்மை!

இங்ஙனம் வீணுரை நிகழ்த்திக் கொண்டு, வெந்த புண்ணில் வேல் நுழைக்க வேண்டாம். மிதிபடும் புழுவும் சில சமயம் கொட்டும் என்று நாம் சாஸ்திரியாருக்குக் கூறுகிறோம்.

சனாதனத்துக்கு, வைதீகத்துக்கு புதுத் தத்துவார்த்தப் பொருள் கொடுத்துவிட்டால் போதாது. “என் இராமன் வேறு, என் வர்ணாஸ்ரமம் வேறு” என்று காந்தியார் கூறுவது போல், ‘சனாதனி பல ஜாதி இருக்க வேண்டுமெனக் கூறலாகாது!’ என்று கூறிவிட்டால் போதாது, தாம் உழைப்பதுதான் சனாதனம், வழக்கத்தில் நடைமுறையில் இருப்பது உண்மையான சனாதனமாகாது என்று திவான் பகதூர் சாஸ்திரியார் உள்ளபடி ‘இருதயப் பூர்வமாக! நம்பினால், இன்று முதல் உண்மைக்கு மாறானது என்று அவர் கருதும்படி இருக்கும். சனாதனத்தை அழிக்க முற்படட்டும், அது வீரம்! அது ஆண்மகன் செயல்!

படிக்க:
நாசா அதிர்ச்சி : மீனாட்சி அம்மன் கோவிலின் விண்வெளி அதிசயங்கள் !
இந்து தீவிரவாத இயக்கங்களுக்கு ஆதரவாக இந்திய அரசு : அமெரிக்கா அறிக்கை !

”முஸ்லீம் லீக் பாகிஸ்தான் கேட்கத் தொடங்கியதைப் பார்த்துப் பெரியார் இராமசாமி நாயக்கரும் அவருடைய கட்சியைச் சார்ந்தவர்களும், தமிழ்நாடு திராவிடநாடு என்றும், அதை வேறு தேசமாகப் பிரித்துவிட வேண்டும், அதிலிருந்து ஆரியர்களை நீக்கிவிட வேண்டும் என்றும் ஆரம்பித்தார்கள்’’ என்று சாஸ்திரியார் கூறுகிறார்.

பாகிஸ்தான் என்பதின் எதிரொலியல்ல, “திராவிடஸ்தான்” என்ற முழக்கம். மூலம் திராவிடஸ்தான் என்ற முழக்கமே! அதன் வடநாட்டுப் பதிப்பே பாகிஸ்தான் என்ற முழக்கம். பாகிஸ்தான், லாகூர் லீக் மாநாட்டில் எழும்பியது 22-3-40-ல். திராவிட நாட்டைத் தனி நாடாக்க வேண்டும் என்பது ஜஸ்டிஸ் கட்சி மாநாடு சென்னையில் கூடிய போது பெரியாரின் பேருரையிலிருப்பது. இது 1938 டிசம்பரில்! இந்த ஆண்டு வித்தியாசங் கூடச் சாஸ்தியாருக்குத் தெரியாமற் போனது அதிசயமே!

(தொடரும்)

அண்ணாவின் ஆரிய மாயை
பக்கங்கள் : 64
விலை : ரூ. 40.00
வெளியீடு : திராவிடர் கழகம்
நூல் கிடைக்குமிடம் : கீழைக்காற்று வெளியீட்டகம்.

ஆரிய மாயை என்னும் இந்நூல் கா.ந. அண்ணாதுரை (அண்ணா) எழுதிய சிறு நூலாகும். அண்ணாவின் படைப்புகளில் மிகுந்த சர்ச்சைகளை ஏற்படுத்திய சில நூல்களுள் இதுவும் ஒன்று. இந்நூலில் பார்ப்பனியத்தின் கொடுங்கோன்மை பற்றியும், பார்ப்பனர்களின் சிறுமதி குறித்தும் அங்குலம் அங்குலமாக அலசி ஆராய்ந்து அம்பலப்படுத்தியிருக்கிறார். இக்காரணங்களுக்காக, அவருக்கு ரூபாய் 700 அபராதம் மற்றும் 6 மாதங்கள் சிறைத் தண்டனையும் சென்னை மாநில அரசால் அண்ணாவுக்கு அளிக்கப்பட்டது.

முந்தைய பகுதிகள் : அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க