மீத்தேன் வாயு என்பது நாம் சமையலுக்கு உபயோகிக்கும் இயற்கை எரிவாயு போன்ற வாயுதான். தற்பொழுது உபயோகித்து வரும் படிம எரிபொருள் வாயுக்கள் தீர்ந்து வருகின்றன. இது நீண்ட நாட்களுக்கு இருக்காது. மேலும் எரிவாயுவின் தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் விலையேற்றமும் அதிகரித்து வருகிறது. இந்தக் காரணங்களால் வரக்கூடிய காலகட்டத்தில் மீத்தேன் வாயு எரிவாயு பிரச்சினையைத் தீர்க்க உதவும் என்று சொல்லப்படுகிறது. இந்த மீத்தேன் வாயு பூமிக்கடியில் சில நூறு அடிகள் ஆழத்தில் நிலக்கரி படுகைகளில் அமிழ்ந்து கிடக்கிறது.

தமிழ்நாட்டில் காவிரி டெல்டா பகுதியில் நிலக்கரி வயல்களின் ஊடே மீத்தேன் வாயு இருக்கிறது என்பது சில ஆய்வுகளில் மீது கண்டறியப்பட்டிருக்கிறது. இதையடுத்து மீத்தேனை வெளியில் கொண்டுவர பல்வேறு பணிகளுக்கான திட்ட வரைவுகளை மத்திய அரசு தயார் நிலையில் வைத்துள்ளது… (நூலின் முன்னுரையிலிருந்து…)

ன்னார்குடி பகுதியில் 1970-களில் தொடங்கிய நிலத்தடி ஆய்வில் இந்தப் பகுதியில் ஏராளமான நிலக்கரிப் படிமங்கள் இருப்பதாக கண்டறியப்பட்டது. இது ஆசியாவிலேயே மிகப்பெரிய நிலக்கரிப் படிமமாக (19500 மில்லியன் டன்) கூறப்படுகிறது. இந்த நிலக்கரிப் பகுதி ஆறு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது… இந்தப் பகுதி மண்ணியல் தன்மை அமெரிக்காவின் வயாமிங் (wyoming) மற்றும் மாண்டேனோ (Montanno) மாகாணங்களுக்கு இடையே அமைந்துள்ள பவுடர் ரிவர் பேஸின் (Powder River Basin) மண்ணியல் தன்மையை ஒத்ததாக மத்திய அரசு செய்திக் குறிப்பு கூறுகிறது. (நூலிலிருந்து பக்.5-6)

நிலக்கரிப் படுகை மீத்தேன் எடுப்பதால் எழும் பிரச்சினைகளில் மூன்று முக்கியமானவை என்று கருதப்படுகிறது. முன்னரே கண்டபடி மீத்தேன் வாயுவை அதைச் சுற்றியுள்ள நீர்தான் அழுத்தி அதன் இடத்தில் இறுத்தி வைத்துள்ளது. மீத்தேன் எடுக்க வேண்டுமென்றால் ஆழ்துளைக் கிணற்றின் மூலம் இந்த நீரை முதலில் வெளியேற்ற வேண்டும். இந்த நீர் மிகவும் அதிக அளவில் வரக்கூடியது மட்டுமல்ல; மிக அதிகமான உப்புகள் உள்ள உப்புநீர். புரடுயூஸ்டு வாட்டர் என அழைக்கப்படும் இந்த கழிவு நீர்தான் பெரும் பிரச்சினை. இந்தக் கழிவுநீரில் உள்ள உப்புகளும் தனிமங்களும் மண்வளத்தைப் பாழாக்கக்கூடியவை.

இவை நிலத்தில் சேர்ந்தால் பயிர்கள் தம் வளர்ச்சிக்கான தாது உப்புகள் அடங்கிய நீரை உறிஞ்சுவது சாத்தியமில்லாது போகும் எனத் தெரிகின்றது. வெளியேற்றப்படும் நீர் எவ்வாறு கையாளப்படும் என கிரேட் ஈஸ்டர்ன் நிறுவனமோ அரசாங்கமோ தெளிவாகக் கூறவில்லை. வெளியேற்றப்படும் நீர் பாலி எத்திலின் பரப்பபட்ட குளங்களில் சேமித்து வைக்கப்படும்; சூரிய ஒளியில் ஆவியாக்கப்படும்; எஞ்சிய உப்புகள் திடக்கழிவு மேலாண்மை முறைபாட்டின்படி கையாளப்படும் என மேம்போக்காகக் கூறப்பட்டுள்ளது. ஒரு தொழிற்சாலை வளாகத்திற்குள்ளேயே இது முழுமையாக நம்பக்கூடிய முறையல்ல. பரந்துபட்ட கிராமப்புறத்தில் இதனை எப்படி பாதுகாப்பது? எப்படி கண்காணிப்பது? எப்படி பராமரிப்பது? என்பதெல்லாம் விடை இல்லாத கேள்விகளாகவே இருக்கின்றன.

படிக்க:
‘ஜெய் ஸ்ரீ ராம்’ சொல்ல மறுத்த சிறுவனைத் தாக்கிய காவி குண்டர்கள் !
இரான் : அமெரிக்கப் பயங்கரவாதத்தின் அடுத்த இலக்கு !

இரண்டாவதாக ஒரு குறிப்பிட்ட ஆழத்தில் இருக்கும் மீத்தேன் வாயுவை எடுப்பதற்காக அங்கிருக்கும் நீரை வெளியேற்றும் பொழுது அதற்கும் மேலே உள்ள நீராதாரங்கள் கீழ் நோக்கி இறங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக மன்னார்குடி பகுதியில் சராசரியாக குடிநீர் மற்றும் பாசனத்திற்காக உபயோகப்படுத்தப்படும் ஆழ்துளைக் கிணறுகளில் நீர்மட்டம் என்பது 200 அடியிலிருந்து 300 அடிவரை உள்ளது. இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டால் 500 அடியிலிருந்து 1800 அடி வரை உள்ள நீரை எடுக்கும் பொழுது மேல்மட்ட நீர் ஊற்றுகளாகிய 300 அடி வரை உள்ள நீரூற்றுகள் கீழே இறங்குவதற்கான வாய்ப்பு உள்ளது.

மூன்றாவதாக இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு நீரியல் கரைசல் (Hydro Fracturing) என்கிற முறை சர்வதேச அளவில் பயன்படுத்தப்படுகிறது. இதற்காக மணலுடன் பல்வேறு விதமான வேதிப் பொருட்களைக் கலந்த கரைசலை நிலக்கரிப் படுகையின் அருகே கொண்டு சென்று மிக வேகமான அழுத்தத்துடன் செலுத்துவார்கள். அப்படி உபயோகப்படுத்தக்கூடிய வேதிப்பொருட்கள் மீண்டும் வெளியேற்றக்கூடிய நீருடன் சேர்ந்து வெளியில் வரும். இந்த வேதிப்பொருட்கள் சுற்றுச்சூழலை கடுமையாகப் பாதிக்கும் விலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் கடுமையான வியாதிகளை ஏற்படுத்தும் என்று கூறி சர்வதேச நாடுகளில் இதற்கு வலுவான எதிர்ப்பு இயக்கங்கள் நடைபெறுகின்றன. (நூலிலிருந்து பக்.11-12)

காவிரி டெல்டா என்றால் என்ன? என்பதில் தொடங்கி, மீத்தேன், நிலக்கரிப் படுகை மீத்தேன் என்பது என்ன? இது எவ்வாறு உருவாகின்றது? மீத்தேன் எடுப்பதால் என்ன பாதிப்பு? நிலக்கரிப் படுகை மீத்தேன் எடுப்பதால் என்ன பாதகம் ஏற்பட்டுவிடும்? மீத்தேன் எடுக்கப்படுவது எப்படி? இத்திட்டத்திற்கு எதிராக உள்ள வழக்கின் இன்றைய நிலை என்ன? நாம் என்ன செய்ய வேண்டும்? என்பது வரையிலான இயல்பாய் எழும் பல்வேறு கேள்விகளுக்கு எளிமையான முறையில் விடையளிக்கிறது, இச்சிறுநூல்.

நூல் : காவிரி டெல்டா மீத்தேன் திட்டம் (விளக்க கையேடு)
ஆசிரியர் : சேதுராமன், தேவதாஸ், ப.கு.ராஜன்

வெளியீடு : அறிவியல் வெளியீடு,
245, அவ்வை சண்முகம் சாலை, கோபாலபுரம், சென்னை – 600 086.
தொலைபேசி எண்: 044 – 2811 3630.

பக்கங்கள்: 32
விலை: ரூ 15.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று

முகவரி :
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு :

வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி : 99623 90277

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க