அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் : பாகம் 25

தத்துவாசிரியர்
அ.அனிக்கின்

னக்கு முன்பிருந்த பொருளியலாளர்கள் அனைவரையும் போலவே புவாகில்பேர் தன்னுடைய தத்துவக் கட்டிடத்தைச் செய்முறைக்கு – தான் முன் வைத்த கொள்கையை வலியுறுத்துவதற்கு – உட்படுத்தினார். அவர் தம்முடைய சீர்திருத்தங்களை ஒரே இணைப்பான முறையாக இருந்த அவருடைய தத்துவ ரீதியான கருத்துக்களின் அடிப்படையில் அமைத்திருந்தார். பொருளாதார விஞ்ஞானத்தை நிறுவியவர்களில் ஒருவர் என்ற முறையில் அவருடைய பாத்திரத்தை நிர்ணயிப்பது இதுவே.

அவருடைய தர்க்கரீதியான சிந்தனை பெட்டியைப் போலவே இருந்திருக்கலாம். ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை எது நிர்ணயிக்கிறது என்ற கேள்வியை அவர் கேட்டார்; பிரெஞ்சுப் பொருளாதாரத்தின் தேக்கம், நலிவுக்குரிய காரணங்களைப் பற்றி விசேஷமான அக்கறை எடுத்துக் கொண்டார். இந்த இடத்திலிருந்து அவர் ஒரு பொதுவான கேள்வியை நோக்கி முன்னேறினார். தேசியப் பொருளாதாரத்தை இயக்குகின்ற, அதன் வளர்ச்சியை உறுதிப்படுத்துகின்ற விதிகள் எவை?

பொருளாதாரத் தத்துவத்தில் விலைகளின் உருவாக்கத்தையும் அவை மாற்றமடைவதையும் நிர்ணயிக்கும் விதிகளைக் கண்டு பிடிக்க வேண்டுமென்ற ஆசையே அரிஸ்டாட்டில் காலம் முதலாக இருந்திருக்கிறது என்று லெனின் கூறியதை நாம் முன்பே மேற்கோள் காட்டியிருக்கிறோம். நெடுங்காலமாக நடைபெற்று வருகின்ற இந்தத் தேடலுக்கு புவாகில்பேர் தற்சிந்தனை மிக்க கருத்துரையை வழங்கினார்.

நாம் இன்று “உசிதமான விலை உருவாக்கம்” என்று சொல்லக் கூடிய கருத்து நிலையிலிருந்து அவர் இந்தப் பிரச்சினையை அணுகினார். பொருளாதார சமநிலைக்கும் முன்னேற்றத்துக்கும் மிக முக்கியமான நிபந்தனை அளவு விகிதத்திலுள்ள விலைகள் அல்லது சகஜமான விலைகள் என்று அவர் எழுதினார்.

இந்த விலைகள் எப்படிப்பட்டவை? முதலாவதாகவும் முதன்மையாகவும், ஒவ்வொரு துறையிலும் சராசரியாக உற்பத்திச் செலவுகளை ஈடு செய்து, குறிப்பிட்ட அளவு லாபத்துக்கு இடமளித்து நிகர வருமானத்தைக் கொடுக்கின்ற விலைகள் இவை. மேலும் இந்த விலைகள் பண்ட விற்பனை எத்தகைய தடையும் இல்லாமல் நடைபெறுவதற்கும் நுகர்வு செய்வோர் நிலையாக வாங்கிக் கொண்டிருப்பது நீடிப்பதற்கும் உதவுகின்றன. கடைசியாக, இந்த விலைகளின் கீழ் பணம் “அதன் இடத்தில் இருக்கும்”; அது வழங்கீடுகள் செய்வதற்கு உதவியாக இருக்குமே தவிர மக்கள் மீது கொடுங்கோன்மையான ஆதிக்கம் செலுத்தாது.

புவாகில்பேர் விலைகளின் விதியை, அதாவது சாராம்சத்தில் மதிப்பின் விதியைப், பொருளாதாரத்திலுள்ள அளவு விகிதத் தன்மையின் வெளிப்பாடு என்று விளக்கியது அந்தக் காலத்தில் முற்றிலும் புதுமையானதாகவும் துணிச்சலானதாகவும் இருந்தது. அவருடைய தத்துவத்திலுள்ள அடிப்படையான மற்ற கருத்துக்கள் இந்தக் கருத்தோடு சம்பந்தப்பட்டவையாகும். விலைகளை இப்படி அணுகியதும் பொருளாதாரத்தில் ”உசிதமான விலைகளை” ஏற்படுத்துவது எப்படி என்ற கேள்வி இயற்கையாகவே எழுந்தது. இந்த விலை அமைப்பு சுதந்திரமான போட்டி நடைபெறும் பொழுது இயற்கையாகவே வளர்ச்சி அடையும் என்று புவாகில்பேர் கருதினார்.

தானியத்துக்கு சாத்தியமான உச்ச விலைகளை நிர்ணயித்தது போட்டியிடுகின்ற சுதந்திரத்தைப் பிரதானமாக மீறியதாகும் என்று அவர் கருதினார். தானியத்தின் உச்ச விலைகளை ரத்துச் செய்தால் அதன் சந்தை விலைகள் அதிகரிக்கும்; அதன் மூலம் விவசாயிகளின் வருமானம் கூடுதலாகும்; தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படுகின்ற பொருள்களின் தேவை அதிகரிக்கும்; அவற்றின் உற்பத்தி பெருகும். இதரவை, சங்கிலித் தொடர் போன்ற இந்த விளைவுகளினால் எங்கும் “அளவு விகித மான விலைகள்” ஏற்படுவதும் பொருளாதாரம் ஓங்கித் தழைப்பதும் உறுதியாகும்.

Laissez faire, laissez passer (1) என்ற பிரபலமான சொற்றொடரை முதலில் சொன்னது யார் என்பது இன்னும் விவாதிக்கப்பட்டு வருகிறது. பிற்காலத்தில் இச்சொற்றொடர் சுதந்திரமான வர்த்தகத்துக்கும் பொருளாதாரத்தில் அரசு தலையிடாமல் இருப்பதற்கும் பின்பற்றப்படும் பொன் மொழியாயிற்று; அதன் காரணமாக மூலச் சிறப்புடைய அரசியல் பொருளாதாரத்தின் வழிகாட்டும் கோட்பாடாயிற்று.

இதை முழுமையாகவோ பகுதியாகவோ கூறியதாக பதினான்காம் லுயீயின் காலத்தில் வாழ்ந்த பணக்கார வியாபாரியான பிரான்சுவா லெஜான்ர், மர்கீஸ் ட அர்ஜன்சோன் (1730 -க்களில்), வர்த்தக மேற்பார்வையாளரும் டியுர்கோவின் நண்பருமான வென்சான் குர்னே ஆகியோரைக் கூறுகிறார்கள். புவாகில்பேர் இந்தச் சொற்றொடரைக் கையாளாவிட்டாலும் அதிலடங்கியிருக்கும் கருத்தை மிகத் தெளிவாகச் சொன்னது அவரே. ”இயற்கைச் சக்திகளை இயங்க அனுமதிக்க வேண்டும்…” என்று அவர் எழுதினார்.

Laissez faire, laissez passer என்ற சொற்றொடருக்கு முதலாளித்துவத் தொழில்துறை உரிமையாளரின் தன்னகங்காரமான கருத்தை புவாகில்பேர் கொடுக்கவில்லை என்பதை மார்க்ஸ் சுட்டிக்காட்டினார். பிற்காலத்தில் தான் இந்த அர்த்தம் அதற்கு ஏற்பட்டது. அவருடைய எழுத்தில் இந்தக் கருத்து மனிதாபிமான மற்றும் முக்கியத்துவமான ஏதோ ஒன்றைக் கொண்டிருக்கிறது. இயற்கைக்குப் புறம்பான வழிகளில் வருமானத்தைப் பெருக்குவதற்கு முயன்று கொண்டிருந்த பழைய அரசின் பொருளாதாரத்துக்கு மாறுபட்டிருந்த வகையில் அது மனிதாபிமானமுடையது. முதலாளித்துவ வாழ்க்கையை விடுவிப்பதற்குச் செய்யப்பட்ட முதல் முயற்சி என்ற வகையில் அது முக்கியத்துவமானது. அது எப்படிப்பட்டது என்று காட்டுவதற்காக அதை விடுவிக்க வேண்டியிருந்தது”. (2)

அதே சமயத்தில் புவாகில்பேர் அரசின் பொருளாதாரக் கடமைகளை நிராகரிக்கவில்லை. அவரைப் போல யதார்த்த உணர்வும், செய்முறைத் தன்மையும் கொண்ட ஒருவர் அவ் வாறு நிராகரிப்பதை நினைத்துப் பார்க்கவும் முடியாது.

படிக்க:
♦ உங்களுக்குத் தேவை அறிவியல்பூர்வமான கல்வியா – அய்யர்களை குஷிப்படுத்தும் கல்வியா ?
♦ உலகப் பொருளாதாரம் : பொது அறிவு வினாடி வினா – 20

அரசு – குறிப்பாக பொருத்தமான வரி விதிப்புக் கொள்கையின் உதவியோடு- அதிகமான நுகர்வையும் பொருள்களின் விற்பனையையும் நாட்டில் ஊக்குவிக்க முடியும் என்று அவர் அனுமானித்தார். நுகர்வுச் செலவு குறைகிற பொழுது பண்டங்களின் உற்பத்தியும் விற்பனையும் தவிர்க்க முடியாதபடி குறைகிறதென்பதை அவர் உணர்ந்தார். ஏழை மக்களின் ஊதியம் அதிகரித்து அவர்கள் செலுத்த வேண்டிய வரிகளும் குறைக்கப்படுகிற பொழுது அது குறையாது; ஏனென்றால் அவர்கள் தங்களுடைய வருமானங்களைச் சீக்கிரமாகச் செலவழித்துவிடக் கூடியவர்கள். இதற்கு மாறான வகையில் பணக்காரர்கள் தங்கள் வருமானத்தைச் சேமித்து வைக்கும் பழக்கம் உடையவர்களாதலால் உற்பத்திப் பொருள்களை விற்பனை செய்வதிலுள்ள கஷ்டங்கள் தீவிரமடைகின்றன.

இத்தகைய கருத்துவாதப் போக்கு இனி வரப்போகும் நூற்றாண்டுகளில் பொருளாதாரச் சிந்தனையின் வளர்ச்சியில் முக்கியமானதாகும். முதலாளித்துவ சமூகத்தில் உற்பத்தி மற்றும் செல்வத்தின் வளர்ச்சிக்குரிய முக்கியமான காரணிகளைப் பற்றி இரண்டு கருத்துப் போக்குகள் முதலாளித்துவ அரசியல் பொருளாதாரத்தில் தோன்றின. இவை அடிப்படையில் வெவ்வேறானவையாகும். முதலாவது போக்கு, சுருக்கமாகச் சொல்வதென்றால் உற்பத்தியின் வளர்ச்சியை நிர்ணயிப்பது திரட்சியின் அளவு மட்டுமே (அதாவது சேமிப்பும் முதலீடு செய்யப்படும் மூலதனமும்) என்பது. தேவைகளைத் தீர்ப்பதற்குரிய பணவசதியைப் பொறுத்தவரை, இது “தானாகவே ஏற்படும்” என்று கூறப்பட்டது. இந்தக் கருதுகோள் பொதுவான மிகை உற்பத்தியினால் பொருளாதார நெருக்கடிகள் ஏற்படக்கூடும் என்பதை நிராகரிப் பதற்குத் தர்க்க ரீதியாக இட்டுச் சென்றது. இரண்டாவது போக்கு, அதிகமான விகிதத்தில் உற்பத்தி வளர்ச்சி ஏற்பட நுகர்வுத் தேவை ஒரு காரணியென்று வற்புறுத்தியது. இந்தக் கருத்தின் முன்னோடியாக புவாகில் பேர் ஓரளவுக்கு இருந்தார். முதல் கருத்துக்கு மாறான வகையில் இது பொரு ளாதார நெருக்கடிகளைப் பற்றிய பிரச்சினைக்குத் தர்க்க ரீதியாக இட்டுச் சென்றது.

புவாகில்பேர்

புவாகில்பேர் “நெருக்கடிகளை” (நெருக்கடிகள் முதலாளித்துவ வளர்ச்சியின் பிந்தைய கட்டத்துக்கு மட்டுமே உரியவை என்பதால், இங்கே நெருக்கடிகளைப் போன்ற பொருளாதார நிகழ்வுகள் என்று சொல்லலாம்) மோசமான அரசாங்கக் கொள்கையோடு இணைத்தாரே தவிர, பொருளாதாரத்தின் உள் விதிகளோடு இணைக்கவில்லை என்பது உண்மையே.

சரியான கொள்கையைப் பின்பற்றினால் குறைவான தேவை மற்றும் நெருக்கடிகளைத் தவிர்ப்பது சாத்தியம் என்று அவர் சொல்வதாகக் கருதலாம்.(3) இது எப்படியிருந்த போதிலும் செல்வம், பணம், வரிகளைப் பற்றிய ஆராய்ச்சியுரை என்று அவர் எழுதிய முக்கியமான தத்துவப் புத்தகத்தில் ஒரு பொருளாதார நெருக்கடியில் என்ன நடைபெறுகிறது என்பதை அவர் தெளிவாகவும் தத்ரூபமாகவும் வர்ணிக்கிறார். பொருள்களின் பற்றாக்குறையினால் மக்கள் செத்துப் போகலாம்; அதைப் போலவே பொருள்கள் மிகவும் அதிகமாக இருந்தாலும் மக்கள் செத்துப் போகலாம்! பத்து அல்லது பன்னிரண்டு நபர்களை ஒருவருக்கொருவர் சற்றுத் தள்ளி – மரங்களோடு சேர்த்துச் சங்கிலி போட்டுக் கட்டியிருப்பதாக நினைத்துக் கொள்ளுங்கள் என்று எழுதுகிறார். ஒருவரிடம் ஏராளமான உணவு இருக்கிறது; ஆனால் அதைத்தவிர வேறு எதுவுமில்லை.

இன்னொருவரிடம் அதிகமான துணிகளும் இன்னொருவரிடம் அதிகமான குடிநீரும் இதரவைகளும் இருக்கின்றன. ஆனால் அவர்கள் ஒருவரோடொருவர் பொருள்களைப் பரிவர்த்தனை செய்ய முடியாது. அவர்களைக் கட்டி வைத்திருக்கும் சங்கிலிகள்தான் பொருளாதார நெருக்கடிகளை ஏற்படுத்துகின்ற வெளிப்புறப் பொருளாதார சக்திகள். இவற்றை மனிதன் புரிந்து கொள்ள முடிவதில்லை. அபரிமிதமான பொருள்களுக்கு மத்தியில் பெருந்துன்பத்தைப் பற்றிய இந்தச் சித்திரம் இருபதாம் நூற்றாண்டை நமக்கு நினைவூட்டுகிறது. ஏழ்மையும் வேலையில்லாத் திண்டாட்டமும் இருக்கின்ற பொழுதே இங்கு பால், கடலில் கொட்டப்படுகிறது; சரக்கு வண்டிகளில் இருக்கும் தானிய மூட்டைகளை வண்டிகளோடு சேர்த்து நெருப்பு வைத்து அழிக்கிறார்கள்.

படிக்க:
♦ முசுலீம்களுக்கு விடிவைத் தருமா மத்தியப் பிரதேச அரசின் பசுவதை சட்டதிருத்தம் ?
♦ இரான் : அமெரிக்கப் பயங்கரவாதத்தின் அடுத்த இலக்கு !

புவாகில்பேரின் கருத்து நிலை – தத்துவத்திலும் கொள்கையிலும் – வாணிப ஊக்கக் கொள்கையினரின் கருத்துக்களிலிருந்து வேறுபடுகிறது: பெருமளவுக்கு அவர்களுக்கு எதிராகவும் இருக்கிறது. அவர் பொருளாதார விதிகளை செலாவணியின் வட்டத்தில் தேடவில்லை; பொருளாதாரத்தின் அடிப்படை விவசாயமே என்று கருதி உற்பத்தியின் வட்டத்துக்குள்ளாகவே தேடினார்.

தேசத்தின் செல்வம் பணத்திலிருப்பதாக அவர் கருதவில்லை; அவர் பணத்தையும் பண்டங்களின் வடிவத்திலிருக்கும் உண்மையான செல்வத்தையும் வேறுபடுத்திக் கண்டதோடு பணத்துக்குக் கொடுக்கப்பட்ட உயர்ந்த நிலையிலிருந்து அதைக் கீழே இழுப்பதற்கு முயற்சித்தார். கடைசியாக, அவர் பொருளாதார சுதந்திரத்தை வலியுறுத்தினார். இது வாணிப ஊக்கக் கொள்கையிலிருந்து நேரடியாகவே முறித்துக் கொண்டதாகும்.

(தொடரும்…)

அடிக்குறிப்புகள் :

(1) “சுதந்திரமான உற்பத்தி, சுதந்திரமான விநியோகம்” என்பது இச்சொற்றொடரின் கருத்தாகும். 19ம் நூற்றாண்டின் இறுதியில் ஜெர்மன் அறிஞரான ஒளகுஸ்ட் ஓன்கென், இந்தச் சொற்றொடரின் முற்பகுதி சுதந்திரமானஉற்பத்தியையும், பிற்பகுதி சுதந்திரமான வர்த்தகத்தையும் குறிப்பிடுகிறது என்ற கருத்தை வெளியிட்டார்.

(2) K. Marx, F. Engels, Historisch-kritische Gesamtausgabe, Werke, Schriften, Briefe, Moskau u. a., Abt. I, Bd, 3, S. 575.

(3) இந்தப் பிரச்சினை பற்றி புவாகில்பேரின் கருத்துக்கள் அரைகுறையாகவும் முரண்பாடுடைய தாகவும் இருக்கின்றபடியால் பொருளாதாரச் சிந்தனை வரலாற்று ஆசிரியர்கள் அவருடைய பாத்திரத்தைப் பற்றி மாறுபட்ட கருத்துக்களைக் கூறுகிறார்கள். சுதந்திரமான போட்டிச் சூழ்நிலையில் நெருக்கடிகள் ஏற்பட முடியாது என்பது புவாகில்பேரின் கருதுகோளின் பொருள். எனவே “பொருள்களின் சுதந்திரமான பரிவர்த்தனையை அடிப்படையாகக் கொண்ட ஒரு அமைப்பில் பொருள்களின் மிகை உற்பத்தி என்ற பொதுவான நிலை ஒரு போதும் இருக்க முடியாது என்று ழான் படீஸ்ட் ஸேய் கூறியதாகச் சொல்லப்படும் பிரபலமான ”சந்தைகளின் விதியை” புவா கில்பேரின் கருத்து (முன்னமேயே கொண்டிருக்கவில்லை யென்றால்) தயாரித்தளித்தது” என்று பிரெஞ்சுப் பொருளியலாளரான அன்ரீ டெனிஸ் எழுதுகிறார் (H, Denis, Histoire de la pensie economique, Paris, 1967, p. 151), ஷம் பீட்டர் இதற்கு மாறான கருத்தைக் கூறுகிறார். புவாகில்பேர் நுகர்வோர் தேவை குறைவதும் மிகை சேமிப்பும் முதலாளித்துவப் பொருளாதாரத்தின் நிலையான தன்மைக்கு ஆபத்தானதாகவும், நெருக்கடிகளுக்கு அது காரணமென்றும் கருதினார்; எனவே அவர் “ஸேயின் விதியைக்” குறை கூறுபவர்களுக்கு, குறிப்பாகக் கெய்ன்சுக்கு ஒரு முன்னோடி என்று வலியுறுத்துகிறார். (3, Schumpeter, History of Economic Arnalysis, p. 285-287).

தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க:

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்

நூல்: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்
ஆசிரியர் : அ.அனிக்கின்
மொழிபெயர்ப்பு : பேராசிரியர் நா. தர்மராஜன், எம்.ஏ
வெளியீடு :
முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ – 1983

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க