சென்னை செங்குன்றத்தை அடுத்துள்ள பூதூர் ஊராட்சிக்குட்பட்ட கொக்குமேடு என்ற கிராமம் ஆண்டுக்கு 3 போகம் விளையும் பசுமையான கிராமம். தென்னை, நெல் உள்ளிட்டு பலவகை விவசாயம் செழிப்பாக நடந்துவந்த பகுதி. இப்போது நிலத்தடி நீர், கிணற்றுநீர் மட்டம் குறைந்து வருவதால் அப்பகுதி மக்கள் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தங்கள் வாழ்வாதாரத்தையே இழந்துள்ளதுடன் குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
இதற்கு என்ன காரணம்?
சென்னையில் ஏற்பட்டுள்ள தண்ணீர் தட்டுப்பாட்டால் சுற்றுவட்டார கிராமத்திலிருந்து நீரை உறிஞ்சி கல்லாகட்டும் தண்ணீர் திருடன்கள், கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக அப்பகுதி மக்களின் விவசாயத்துக்கும், மக்கள் வாழ்வாதாரத்துக்கும் தேவையான தண்ணீரை 11 ஆழ்துளைக் கிணறுகள் மூலம் திருடிவருவதே இந்த நிலைக்குக் காரணம். இந்த கிராமத்தில் உள்ள ஒரு பகுதியில் மட்டும் சதீஷ், கார்த்தி, பழனி, ரவி ஆகிய 4 தண்ணீர் திருடர்கள் 11 ஆழ்துளைக் கிணறுகள் மூலம் டேங்கர் லாரிகளில் ஒரு நாளைக்கு சராசரியாக 8 லாரிகளுக்கும் மேலாக தண்ணீரைத் திருடுகின்றனர். இப்படித் திருடும் தண்ணீரை நகர்ப்பகுதிகளில் உள்ள அமைச்சர்களின் வீடுகள், ஷாப்பிங் மால்கள், பெரிய ஹோட்டல்கள் ஆகியவற்றுக்குச் சப்ளை செய்வதாக அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள். இதன் காரணமாக விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதோடு வருங்காலத்தில் குடிக்கக் கூட தண்ணீர் இல்லாமல் போகும் நிலை தங்களுக்கு உருவாகும் என்ற அச்சத்தில் அம்மக்கள் சாலையில் இறங்கிப் போராடி வருகின்றனர்.
தண்ணீர் திருட்டு! துணைபோகும் அரசு நிர்வாகம்!
6 மாத காலமாக நடக்கும் இந்தத் தண்ணீர்த் திருட்டை மக்கள் தொடர்ந்து கண்டித்து வந்துள்ளனர். கடந்த சில மாதங்களாக கிணறுகளில் தண்ணீர் குறைவதும், நிலத்தடி நீர் மட்டம் குறைவதனாலும், தங்கள் விவசாயம் பாதிக்கப்படுவதிலிருந்து இதைத் தடுத்து நிறுத்த வேண்டுமென கலெக்டர், தாசில்தார் ஆகியோரிடம் தொடர்ந்து மனு கொடுத்துள்ளனர்.
இதில் எந்தப் பலனும் ஏற்படாததை உணர்ந்து அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலரே தண்ணீர் எடுத்துச்செல்லும் டேங்கர் லாரிகளை இரவோடு இரவாக 11 மணியளவில் வழிமறித்து தடுத்துநிறுத்த முயன்றுள்ளனர். ஆனால் தண்ணீர் திருடர்கள் “நாங்கள் கலெக்டரிடம் அனுமதி வாங்கித்தான் இதைச் செய்வதாக” அந்த இளைஞர்களை மிரட்டிவிட்டுத் தப்பியுள்ளனர். இப்படி வழிமறித்த இளைஞர்கள் மீது “எங்களை அடிக்க முயன்றார்கள்” என்பது போன்ற பொய்யான குற்றச்சாட்டுகளின் பேரில் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இரவு 1 மணிக்கு கொடுத்த புகாருக்காக அதிகாலை 5 மணிக்கே ஊருக்குள் புகுந்து போராடிய இளைஞர்களைக் கைதுசெய்து அழைத்துச் சென்றுள்ளது போலீசு.
இந்த சட்டவிரோதக் கைதைக் கண்டித்து அப்பகுதி மக்கள் வீதியில் இறங்கி சாலைமறியலில் ஈடுபடுகிறார்கள். அந்தப் போராட்டத்துக்குப் பணிந்தும், இந்தத் தண்ணீர் திருட்டு வெளியில் அம்பலப்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவும், தான் கைதுசெய்த 11 இளைஞர்களையும் விடுவிக்கிறது போலீசு. இதற்கு முன்பும் பின்புமாக 6 முறை தாசில்தாரிடம் மனுக்கொடுத்தும் பயனில்லை. தண்ணீரை எடுக்க முடியாதவாறு மக்களே குழாய்களுக்கு கேட்வால் போட்டும் தடுக்க முயன்றுள்ளனர். இவையனைத்தையும் மீறி இந்தக் கும்பல் தொடர்ந்து தனது தண்ணீர் திருட்டை நடத்தி வருகிறது.
இளைஞர்கள், ஆண்கள் போராடினால், காவல்துறை ”வழக்குப் போடுவேன் எதிர்காலத்தை அழித்துவிடுவேன்” என அச்சுறுத்துவதாலும் இந்தத் திருட்டுக் கும்பல் கொலைமிரட்டல் விடுவதாலும் அப்பகுதியிலுள்ள பெண்கள் வீதியில் இறங்கிப் போராடத் தொடங்கினர். ஆனால் அவர்களையும் போராட்டக் களத்திலேயே தனித்தனியாக அழைத்து “குழந்தைகளுடன் உன்னைத் தூக்கி உள்ளே வைத்துவிடுவேன்” என மிரட்டியுள்ளது போலீசு. மேலும் இந்தத் திருட்டு கும்பலும் அவர்களின் அடியாட்களும் இந்தப் போராட்டத்தில் முன்னணியில் நின்ற பெண்களை ஆளில்லா நேரத்தில் வீடுபுகுந்து மிரட்டுவது, தாக்க முயல்வது போன்றவற்றைத் தொடர்ந்து செய்து வருகின்றனர். இதற்காக பாதிக்கப்பட்ட பெண்கள் இரவு நேரத்தில் காவல்துறையில் புகார்கொடுத்துள்ளனர்.
தண்ணீர் திருடன்களுக்காக அதிகாலை 5 மணிக்கு வந்த போலீசு “யாருமில்லாத நேரத்தில் வந்து மிரட்டுகிறார்கள். தாங்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தவிர வேறுவழியில்லை” என கதறியபோதும் இதுவரை இப்பெண்களைக் கண்டுகொள்ளவே இல்லை. அந்தக் கும்பல் மீதும் போலீசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
படிக்க:
♦ உங்களுக்குத் தேவை அறிவியல்பூர்வமான கல்வியா – அய்யர்களை குஷிப்படுத்தும் கல்வியா ?
♦ போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் : தி. நகர் பணிமனை ஊழியர்கள் கருத்து !
மக்கள் உறங்கும் இரவு நேரத்தில் 3 மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் துண்டிக்கப்படுவதாகவும் அந்த நேரத்தில் ஜெனரேட்டர்களைப் பயன்படுத்தி தண்ணீரை திருடிச் செல்வதாகவும் கூறுகிறார்கள். இதற்கு அந்தப் பகுதியிலுள்ள மின்வாரிய அதிகாரியும் உடந்தையாக உள்ளதாகக் கூறுகிறார்கள். மின்வாரிய அதிகாரியும் இந்தத் திருட்டு கும்பலும் கூடிக் குலாவுவதையும் ஒன்றாக அமர்ந்து பிரியாணி தின்பதையும் மக்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
முன்னுதாரணமான போராட்டம்:
இப்படி தாசில்தார், கலெக்டர், போலீசு, மின்வாரிய அதிகாரிகள் என ஒட்டுமொத்த அரசு நிர்வாகத்தின் துணையுடன் இந்தத் தண்ணீர்த் திருட்டு அமோகமாக நடந்துவருகிறது. இந்த அரசின் எந்த நிறுவனத்தின் மூலமும் தங்கள் பிரச்சினை தீராததை, சொந்த முறையில் உணர்ந்த மக்கள் பாதிப்படையும் 7 கிராம மக்களிடமும் பிரசுரங்கள் மூலம் இப்பிரச்சனையின் தீவிரத்தை உணர்த்தி ஒன்றுதிரட்டியுள்ளனர்.
இவ்வாறு திரண்ட கிராம மக்கள் தண்ணீர் எடுக்கும் பகுதியில் குவிந்து, தங்கள் கைகளில் கிடைத்த கற்களையும் கட்டையையும் கொண்டு ஆழ்துளைக் குழாய்களை நேற்று (02-07-19) உடைத்துள்ளனர். இப்படி தொடர்ந்து அச்சுறுத்தல்களுக்கும் மிரட்டல்களுக்கும் அடிபணியாமல் போராடிவருகின்றனர்.
இதைத்தான் மக்கள் அதிகாரம் என்கிறோம். ஒரு திருட்டு கும்பல் தண்ணீர் எடுப்பதைத் தடுக்கவே மக்கள் ”குழாய்களை உடைக்கும் போராட்டத்தை” நடத்துவதைத் தவிர வேறு வழியில்லை என்றானபோது மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற நாசகரத் திட்டங்களை அரசே அமல்படுத்துவதை வேறு எவ்வாறு தடுத்து நிறுத்துவது?
வினவு செய்தியாளர்
சென்னையின் எங்கள் பகுதியில் தண்ணீர் சேமித்து வைத்துக் கொள்ள முடியாத குடியிருப்புகள்உணவகங்கள் ஒரு லிட்டர் 1ரூ வீதம் வாங்கும் கட்டாயத்துக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
குடிக்க தண்ணீர் கேன்கள் வாங்கப்போனால் 5 லிட்டர் ரூ 70.00 ஒரு லிட்டர் 14 ரூபாய்.
குடிதண்ணீரைக் காசாக்க தனியார்களை அனுமதித்தபோதே மக்களின் அடிப்படையான
தண்ணீர் உரிமை தனியாருக்கு விற்கப்பட்டுவிட்டது. அது பூதாகாரமாகி பன்னாட்டுக்
கம்பெனிகளுக்கு தண்ணீர் நிர்வாகம் விற்கப்படும்.
‘ஒரு விரல் புரட்சி’ ஒரு மயிரும் புடுங்காது என்று மக்களுக்குப் புரியம்வரை லோல்பட்டுத்
தான் தீர வேண்டும்.